தேசிய மக்கள் சக்தியும் கூண்டுப் பொருளாதாரமும்

0 207

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

இக்­கட்­டுரை பொரு­ளியல் கற்கும் மாண­வர்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி வரை­யப்­பட்­டி­ருந்­தாலும் சாதா­ரண வாச­கர்­க­ளும்­கூட விளங்­கக்­கூ­டிய வகையில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­கட்­டு­ரையில் கூண்டு என்­பது பறவைக் கூண்­டையே குறிக்­கின்­றது. இந்த விப­ர­ணத்தை முதலில் அறிமு­கப்­ப­டுத்­தி­யவர் சீனப் பொரு­ளி­ய­லாளர் சென் யுன் என்­ப­வ­ராவர். அவர் சீனப் பொது­வு­டமைக் கட்சித் தலைவர் மா சே துங் அவர்­களின் பொலிட்­பீ­ரோவின் அங்­கத்­த­வ­ராக 1934 தொடக்கம் 1987வரை பணி­யாற்­றி­யவர். அக்­கா­லப்­ப­கு­தியில் சீன ­வி­வ­சாய உற்­பத்­திக் ­கு­றைவும் அதனால் நாட்டில் நில­விய பசியும் பட்­டி­னியும் கோடிக்­க­ணக்­கான சீன மக்­களை காலத்­துக்குக் காலம் பஞ்­சத்­துக்குள் தள்­ளி­யது. உதா­ர­ண­மாக, 1959க்கும் 1961க்கும் இடையில் ஏற்­பட்ட பஞ்­சத்தில் சுமார் 45கோடி மக்கள் இறந்­தனர் எனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில் உணவு உற்­பத்­தியை எவ்­வாறு பெருக்­கு­வது என்­ப­து­ பற்­றிய பொலிட்­பீரோ விவா­தத்தில் தலைவர் மா சே துங் மக்­களின் புரட்­சித்­தா­கமே உற்­பத்­தியைப் பெருக்கும் என்று கரு­தினார். அந்தக் கருத்தை எதிர்த்து சந்தைச் சக்­தி­களே உற்­பத்­தியை ஊக்­கு­விக்கும் என வாதிட்­டவர் யுன். சந்தைச் சக்தி ஒரு பறவை அதனை ஐந்­தாண்டுத் திட்டம் என்ற கூட்­டுக்குள் பறக்­க­வி­ட­வேண்டும் என்­று­கூறி கூண்டுப் பொரு­ளா­தாரம் என்ற ஒரு பொரு­ளா­தார மாதி­ரி­யையும் அவர் அறி­மு­கப்­ப­டுத்­தினார். மா சே துங் இறந்­த­பின்பு ஆட்­சிக்கு வந்த டென் சியாவோ பெங் அந்த மாதி­ரியின் அடிப்­ப­டை­யி­லேயே சில துறை­களில் சந்தைச் சக்­தி­களை நுழை­ய­விட்­ட­தனால் இன்று சீனப் பொரு­ளா­தாரம் உல­கத்­தி­லேயே இரண்­டா­வது பொரு­ளா­தா­ர­மாக அதன் 14ஆவது ஐந்­தாண்டுத் திட்டத்­துடன் மிளிர்­கி­றது.

பொது­வாக இன்­றைய சீனப் பொரு­ளா­தா­ரத்தை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு திறந்த பொரு­ளா­தா­ரம் என்று கரு­து­வ­திலும் தவ­றில்லை. எனவே கூண்டுப் பொருளா­தார மாதிரி சீனா­வுக்குப் பொருந்­து­மென்றால் இலங்­கை­ போன்ற வங்­கு­ரோத்­த­டைந்த பொரு­ளா­தா­ரங்­க­ளுக்கு ஏன் பொருந்­தாது என்ற கேள்­வியில் நியாயம் இருக்­காதா? சந்தைச் சக்­தி­களின் சுதந்­தி­ரத்­துடன் திறந்த பொரு­ளா­தாரம் வேண்­டு­மென வாதி­டு­கின்­ற­வர்கள் 200கோடிச் சீன­மக்­களை பொரு­ளா­தார அடிமட்டத்­தி­லி­ருந்து உயர்த்­தி­விட்ட கூண்டுப் பொரு­ளா­தா­ரத்தின் சாத­னையை எவ்­வாறு சரி காண்­பரோ? எனவே ஒரு பெரும்­பாகப் பொரு­ளா­தாரத் திட்­டத்­தின்கீழ் சந்தைச் சக்­தி­களை நுழை­ய­விட்டு பல நுண்­பாகத் துறை­களை வழிப்­ப­டுத்தி நாட்டை வளர்ப்­பதே கூண்டுப் பொரு­ளா­தார மாதி­ரியின் இர­க­சியம். இதனைப் பின்­ன­ணி­யாகக் கொண்டே தேசிய மக்­கள் ­சக்திக் கட்­சியின் பொரு­ளா­தாரக் கொள்­கை­களை நோக்க வேண்டும். அதற்கு முன்னர் இக்­கட்­சி­யைப்­ பற்­றிய சில அவ­தூ­றான குற்­றச்­சாட்­டு­க­ளுக்குப் பதில் கூற­வேண்­டி­யுள்­ளது.

இக்­கட்சி மொத்தம் இரு­பத்­தொரு வெவ்­வேறு இயக்­கங்­களின் ஒரு கூட்டு. அவற்றுள் பெரும்­பான்­மை­யா­னது அனுர குமார திஸா­நா­ய­கவின் தலை­மையில் இயங்கும் தேசிய விடு­தலை முன்­னணி (ஜே.வி.பி). இம்­முன்­ன­ணியின் ஆரம்பம் 1970ஐ நோக்கிப் பின்­செல்லும். அப்­போ­தி­ருந்த அதன் தலைவர் 1980ல் இலங்கை அர­சினால் கொலை செய்யப்­பட்ட ரோஹண விஜே­வீர. அந்த அர­சியற் கொந்­த­ளிப்புச் சூழலை இங்கே விப­ரிக்கத் தேவை­யில்லை. ஆனால் அப்­போ­தையத் தலை­வரும் அவரின் சகாக்­களும் போரா­ளி­களும் ஆயுதப் புரட்­சி­மூலம் இலங்­கையின் ஆட்­சியைக் கைப்­பற்ற முயற்­சித்துத் தோல்வி கண்­ட­வர்கள் என்­பதை மட்டும் ஞாப­கப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. அந்த ஆண்டில் ஜே.வி.பி.யின் இன்­றையத் தலைவர் திஸ­ாநா­ய­க­வுக்கு வயசு இரண்டு. அவ­ருடன் கட்சித் தோழர்­க­ளாக இன்று இயங்கும் அத்­த­னை­பேரும் அனு­ர­வுக்குப் பின்­னரோ அல்­லது சம­கா­லத்­திலோ பிறந்­த­வர்­களே. சுருக்­க­மாகச் சொல்­வ­தாயின் இன்­றைய ஜே.வி.பியினர் ஒரு புதிய சந்­த­தியைச் சேர்ந்­த­வர்கள். இச்­சந்­ததி புரட்­சி­வாதச் சித்­தாந்­தங்­களை அறிந்­து­வைத்­தி­ருப்­ப­தோடு அவை­யெல்லாம் இன்று காலா­வ­தி­யா­கி­விட்­டவை என்­ப­தையும் உணர்வர். 1980களுக்குப் பின்னர் உரு­வா­கிய பூகோ­ள­ம­ய­வாக்­கத்தின் மடியில் அன்­றைய புரட்­சி­வாதத் தத்­து­வங்­களும் அதனைப் பின்­பற்றி ஆண்ட அர­சு­களும் பெரும்­பாலும் மறைந்­து­விட்­டன என்­ப­தையும் அவர்கள் அறி­யா­ம­லில்லை. என­வேதான் திஸா­நா­ய­கவும் அவரின் தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்­தியும் பொது­ஜன வாக்குச் சாவ­டி­க­ளையும் மக்­களின் வெகு­ஜன ஆத­ர­வையும் குறி­வைத்து தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்­ளனர். ஆனால் அவர்­களின் எதி­ரி­களோ இன்னும் பழைய ஜே.வி.பி யையே மக்­க­ளுக்கு ஞாப­க­மூட்டி திஸா­நா­ய­க­வைப்­ பற்­றியும் அவரின் கட்­சியைப் பற்­றியும் மக்­க­ளுக்கு வெறுப்­பூட்டும் அள­வுக்கு அவர்­களை பயங்­க­ர­வா­தி­ளாகச் சித்­த­ரிக்க விளை­கின்­றனர். அதற்கு இரண்டு கார­ணங்­க­ளுண்டு. ஒன்று மக்­க­ளி­டையே அக்­கட்­சிக்­கு­ரிய ஆத­ரவு தொடர்ந்து பெரு­கு­வது. இரண்­டா­வது, தேசிய மக்கள் சக்­தியின் கூண்டுப் பொரு­ளா­தாரக் கொள்­கைக்கு நிக­ரான ஒரு செயற்­திட்டம் ஏனைய எந்­த­வொரு எதிர்க்­கட்­சி­யி­டமும் இல்லை என்­பது.

தேசிய மக்கள் சக்­தியின் பொரு­ளா­தாரக் கொள்கைப் பிர­க­ட­னங்­களைக் கூர்ந்து நோக்­கினால் பின்­வரும் அம்சங்கள் பிர­தா­ன­மாக வெளிப்­ப­டு­கின்­றன: சந்தைச் சக்­தி­க­ளுக்கு இட­ம­ளித்தல், வெளி­நாட்டு மூல­த­னங்­களை வர­வேற்றல், சர்­வ­தேச நாணய நிதி­யுடன் இணைந்து பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­புதல் என்­ப­னவே அவை­யாகும். எனவே இவை­க­ளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு எதி­ரி­யல்ல என்­பது புல­னா­கின்­றது. ஆனால் அவற்றை வர­வேற்கும் அதே­வேளை அவற்றை எந்தக் கட்­டுப்­பா­டு­மின்றி சுதந்­தி­ர­மாக இயங்­கு­வ­தற்கு தேசிய மக்கள் சக்தி அரசு இட­ம­ளிக்­காது என்­பதை வலி­யு­றுத்­த­வேண்டி உள்­ளது. இதற்­கொரு முக்­கிய காரணம் உண்டு.

இலங்கைப் பொரு­ளா­தா­ரத்தின் பலம் என்ன பல­வீனம் என்ன என்­ப­தைப்­ பற்­றிய விப­ரங்­களைக் கொண்ட ஒரு பெரும்­பாகத் திட்­டத்தை பொரு­ளியல், நிதி­இயல், சமூ­க­வியல் போன்ற பிர­தான துறை­களின் விற்­பன்­னர்­க­ளைக்­கொண்டு உரு­வாக்கி அந்தத் திட்­டத்­துக்­க­மைய சந்­தை­யையும், மூல­த­னத்­தையும் ஏன் சர்வதேச நாணய நிதி­யை­யும்­கூட வழிப்­ப­டுத்தல் அரசின் கடமை. அந்தத் திட்­டத்தின் கூண்­டுக்­குள்­ளேதான் அவை பறக்­க­ வேண்­டுமே ஒழிய தன்­னிச்­சைப்­படி பறக்­க­மு­டி­யாது. அதைத்தான் சீனா இன்­று­வரை கடைப்­பி­டிக்­கி­றது. அதி­லென்ன தவறோ? உண்மை என்­ன­வென்றால் 1980களுக்­குப்­பின்பு பனிப்போர் முடி­வ­டைந்து முத­லா­ளித்­து­வமும் தாராண்மைப் பொரு­ளி­யல்­வா­தமும் பூகோ­ள­ம­ய­மா­கி­யதன் பின்னர் அர­சாங்­கங்­களின் பெரும்­பாகத் திட்­ட­மி­டுதல் என்ற கொள்கை தவ­றா­னது என்ற ஒரு கருத்தை முத­லா­ளித்­துவப் பொரு­ளியற் பண்­டி­தர்கள் வளர்த்­து­விட்­டனர். ஆனால் அதே பண்­டி­தர்கள் தனியார் பொரு­ளா­தார நிறு­வ­னங்கள் தமது இலா­பத்தைப் பெருக்­கு­தற்­காக நீண்­ட­கால, குறுங்­காலத் திட்­டங்­களை வகுத்­தலைப் போற்றி ஆத­ரித்­தனர். திட்­ட­மி­டுதல் தனி­யா­ருக்கு அழ­கென்றால் ஏன் அது தேசிய மட்­டத்தில் அர­சுக்குப் பொருத்­த­மற்­ற­தாகும்? இன்று சீனாவின் ஐந்­தாண்டுத் திட்­டங்கள் இப்­பண்­டி­தர்­களின் வாதங்­களை பொய்­யாக்கி விட்­டமை புல­னா­க­வில்­லையா? ஆனால் அவ்­வா­றான ஒரு திட்டம் மட்டும் இன்­றைய நிலையில் இலங்­கையின் பொரு­ளா­தாரச் சீர­ழிவை நிறுத்தி வளம்­பெறச் செய்­ய­மு­டி­யாது. அதற்­கு­ரிய கார­ணத்­தையும் தேசிய மக்கள் சக்தி சுட்­டிக்­காட்டி உள்­ளது. அதை விளங்­கு­வற்கு முன்னர் திட்­ட­மி­டல்­பற்­றிய இலங்­கையின் பழைய கசப்­பான அனு­பவம் ஒன்­றையும் இங்கே ஞாப­கப்­ப­டுத்த வேண்டி உள்­ளது.

1970ல் ஆட்­சிக்­கு­வந்த சிறி­மாவோ பண்­டா­ர­நா­ய­க்காவின் இடது சாரிக் கூட்­டணி அர­சாங்கம் ஐந்­தாண்டுத் திட்­ட­மொன்றை அறி­மு­கப்­ப­டுத்தி அதனால் பொரு­ளா­தா­ரமே சீர­ழிந்­ததை வர­லாறு மறக்­காது. அந்தச் சீர­ழிவைக் காரணம் காட்­டியே பொரு­ளா­தாரம் என்ற அலா­வு­தீனின் அற்­பு­த­வி­ளக்கை ஜே.ஆர். ஏற்­றிவைத்தார். ஆனால் ஐந்­தாண்டுத் திட்டம் தோல்வி அடைந்­த­மைக்­கான பிர­தான காரணம் ஆட்­சி­யா­ளர்­களின் இறுக்­க­மான பிர­தி­யீட்டுக் கைத்­தொழில் வளர்ச்சித் தத்­துவக் கோட்­பாடும் பொரு­ளா­தா­ரத்தின் தேவைக்­கேற்ப அதன் நிர்­வாகம் வளைந்து கொடுக்கத் தவ­றி­ய­துமே. அதற்கு எடுத்­து­காட்­டாக எத்­த­னையோ சம்­ப­வங்கள் உண்டு. உதா­ர­ணத்­துக்­காக ஒன்றை மட்டும் இங்கே கூறு­வது பொருந்தும். மை ஊற்­றாத பேனா அல்­லது போல் பொய்ன்ற் பேனா உற்­பத்தி தொடங்­கப்­பட்­டது. அந்தப் பேனா இயங்­கு­வ­தற்கு ஒரு சிறிய ஸ்ப்ரிங் தேவைப்­பட்­டது. அதை இறக்­கு­மதி செய்­ய­வேண்­டு­மென உற்­பத்­தி­யா­ளர்கள் வலி­யு­றுத்த திட்­ட­மிடல் கொமிஸன் அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை. உள்­நாட்டில் உற்­பத்தி செய்­யப்­பட்ட ஸ்ப்ரிங் விரைவில் உடை­யத்­தொ­டங்­கி­யதால் அந்தப் பேனாவின் கிராக்கி சரியத் தொடங்கி கறுப்புச் சந்­தையில் பாவ­னை­யா­ளர்கள் வெளி­நாட்டுப் பேனாக்­களை வாங்­கினர். திட்­டத்தை அமுல்படுத்­தி­ய­வர்கள் உற்­பத்தித் தேவைக்­கேற்ப வளைந்து கொடுத்­தி­ருந்தால் கால­வோட்­டத்தில் இப்­பேனா உற்­பத்தி தன்­னி­றைவு கண்­டி­ருக்கும். திட்­ட­மிடல் ஒன்று அதை அமுல்­ப­டுத்­து­வது வேறொன்று. ஒரு தத்­து­வத்தின் இறுக்­க­மான பிடிக்குள் பொரு­ளா­தாரம் சிக்கித் தவித்­ததால் அது முச்­சு­விட முடி­யாமல் திண­றி­யதே ஒழிய திட்­டத்தின் குழ­றுபாட்­டினால் அல்ல.

1978க்குப் பின்னர் ஜே. ஆர். ஜெய­வர்த்­த­னாவால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இலங்­கையின் திறந்த சந்தைப் பொரு­ளா­தாரம் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் ஜாம்­ப­வான்­களை ஆட்­சி­யி­ல­மர்த்தி தமது சுய­லா­பத்­துக்­காக நாட்டின் செல்­வத்­தையே சூறை­யாடும் ஒரு கொள்­ளையர் குகை­யாக விளங்­கி­யது. நிர்­வாக ஊழல், செல்வத் திருட்டு, தனி­ம­னித அநீதி என்­பன எந்­தக்­கட்­டுப்­பா­டு­மின்றித் தாண்­ட­வ­மாடும் ஒரு நிர்­வாக மேடை­யிலே அரங்­கேற்­றப்­பட்­டதே திறந்த பொரு­ளா­தார அமைப்பு. திறந்த சந்தைப் பொரு­ளா­தாரம் என்ற பெயரில் மாபி­யாக்­களை அரசே முன்­னின்று வளர்த்­த­மையும், புனித பௌத்­தத்தின் போர்­வைக்குள் ஒழிந்­தி­ருந்து சிறு­பான்­மை­யி­னரின் பொரு­ளா­தார வளங்­களைச் சூறை­யா­டி­ய­மையும், அவ்­வாறு சூறை­யா­டி­ய­வர்கள் சட்­டத்­தின்முன் கொண்­டு­வ­ரப்­பட்டுத் தண்­டிக்­கப்­பட்டால் அவர்­களை ஆட்­சி­யி­லி­ருப்போர் பௌத்­தத்தின் பெயரால் மன்­னித்து விடு­தலை செய்­த­மையும் இப்­பொ­ரு­ளா­தார அரங்கில் மேடை­யேற்­றப்­பட்ட அசிங்­க­மான நாட­கங்கள். எனவே முதலில் இந்தக் குகை­யையும் அதன் அரங்­கத்­தையும் நாட­கங்­க­ளையும் சுத்­தி­க­ரிப்புச் செய்­ய­வேண்­டிய ஒரு நிர்ப்­பந்தம் தேசிய மக்கள் சக்­திக்கு உண்டு. அதனை பல வார்த்­தை­களில் பல சந்­தர்ப்­பங்­களில் அக்­கட்­சியின் தலை­வரும் பிர­தான அங்கத்தினரும் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்தச் சுத்திகரிப்புப் பணிக்கு ஏனைய கட்சிகள் தயாரில்லை. இந்தச் சுத்திகரிப்புக்காவது தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரவேண்டியுள்ளது.

இறுதியாக, ஒரு விடயம். தேசிய மக்கள் சக்தியைத் தவிர மற்றைய எல்லாக் கட்சிகளும், ஜனாதிபதி உட்பட, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்போம் என்று பறை அடிக்கின்றன. ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது தேசிய மெய் உற்பத்தியின் வருடாந்த சதவீத அதிகரிப்பையே குறிப்பிடும் ஒரு பொருளாதார அளவீடு மட்டுமே என்பதை எந்தப் பொருளியல் மாணவரும் அறிந்திருப்பர். அந்த அதிகரிப்பின் உள்ளடக்கம் என்ன, அதற்கு யார் காரணம், அதனால் நன்மையடைவது யார் என்பன பற்றிய தகவல்கள் எவற்றையுமே அந்த அளவீடு விளக்கமாட்டாது. அதனாலேதான் ஐக்கிய நாட்டு அபிவிருத்தி நிகழ்வுநிரல் (UNDP) மனித அபிவிருத்திச் சுட்டெண் (HDI) என்ற ஒரு மாற்று அளவுகோலை அறிமுகப்படுத்தியது. அதில் தேசிய மெய் உற்பத்தி ஓர் அம்சம் மட்டுமே. மொத்தத்தில் தேசிய மக்கள் சக்தியின் கூண்டுப் பொருளாதார மாதிரி தனித்தன்மை கொண்டதும் வெற்றிதரக்கூடியதுமான ஒன்று. எனவே அந்தக்கட்சியின் ஆட்சிக்கு ஒரு சந்தர்ப்பம் அளிப்பது வாக்காளர் கடமை. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.