சிறுமி ஆயிஷா வழக்கு: மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்!

0 117

ஏ.ஆர்.ஏ.பரீல்

பண்­டா­ர­கம – அட்­டு­லு­க­மயைச் சேர்ந்த ஒன்­பதே வய­தான சிறுமி ஆயிஷா கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்டு 21 மாதங்கள் கடந்­து­விட்­ட­போ­திலும் இக் கொடூ­ரத்தை இல­குவில் மறந்­து­விட முடி­யாது.

இந்தக் கொடூர கொலையைச் செய்த குற்­றத்­திற்­காக அச்­சி­று­மியின் தந்­தையின் நண்­ப­ரென அறி­யப்­படும் அதே பகு­தியைச் சேர்ந்த 30 வய­தான மொஹமட் பாரூக் எனும் நப­ருக்கு பாணந்­துறை மேல் நீதி­மன்றம் 27 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. எனினும் இத்­தண்­ட­னைக்கும் மேலாக மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டு­மென்றே சமூகம் கரு­து­கி­றது.
திட்­ட­மி­டப்­ப­டாத படு­கொலை மற்றும் சட்­ட­ரீ­தி­யான பாது­காப்­பி­லி­ருந்து சிறு­மியைக் கடத்­தி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டு­களின் கீழான இவ்­வ­ழக்கில் குற்­ற­வாளி குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­ட­தாலே இவ்­வா­றான தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

பண்­டா­ர­கம பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட அட்­டு­லு­கம 7 கிராம சேவை­யாளர் பிரி­வு­களை உள்­ள­டக்­கி­ய­தாகும். முஸ்லிம் கொல­னியும், கல்­கே­மன்­டி­யவும் இதனைச் சேர்ந்­த­தாகும். படு­கொலை செய்­யப்­பட்ட பாத்­திமா ஆயி­ஷாவும், அவ­ளது பெற்­றோரும் கல்­கே­மன்­டிய கிரா­மத்­திலே வசித்து வந்­தார்கள்.
பாத்­திமா ஆயிஷா கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி காலை 10 மணி­ய­ளவில் காணாமல் போனாள். ஆயி­ஷாவின் தாயார் அவளை கோழி இறைச்சி வாங்­கு­வ­தற்­காக கடைக்கு அனுப்­பி­யி­ருந்தார். கோழி இறைச்சி வாங்கச் சென்ற ஆயிஷா நீண்ட நேர­மா­கியும் வீடு திரும்­ப­வில்லை. மாலை­யா­கியும் அவள் திரும்பி வரா­மையால் அவ­ளது பெற்றோர் பீதி­ய­டைந்­தனர். அவளைத் தேடியும் கிடைக்­காத நிலையில் ஆயிஷா காணாமற் போய்­விட்­ட­தாக பண்­டா­ர­கம பொலிஸில் முறை­யிட்­டார்கள்.

தாயாரின் முறைப்­பாட்­டி­னை­ய­டுத்து பண்­டா­ர­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ராஜ­பக்ஷ பாணந்­துறை பிராந்­தி­யத்­துக்கு அப்­போது பொறுப்­பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் சரத் குமா­ர­வுக்கு இது தொடர்பில் அறி­வு­றுத்­தி­ய­துடன் அவ­ரது ஆலோ­ச­னை­க­ளுக்கு அமைய விசா­ர­ணை­களை ஆரம்­பித்தார்.

பொலிஸார் சிறு­மியின் தாயார் மற்றும் தந்­தை­யிடம் இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டும் எவ்­வித தக­வல்­களும் கிடைக்­க­வில்லை. இதன்­பின்பு பொலிஸார் சிசி­ரிவி கமெரா பதி­வுகள் மீது கவனம் செலுத்­தி­னார்கள்.

பாத்­திமா ஆயிஷா வீட்­டி­லி­ருந்து கோழி இறைச்சி கடைக்குச் சென்ற பாதையில் எங்கும் சிசி­ரிவி கமெரா இருக்­க­வில்லை. என்­றாலும் கோழி இறைச்சி கடைக்கு எதிரே இருந்த பாம­சியின் சிசி­ரிவி கமெரா பொலி­ஸாரின் விசா­ர­ணைக்கு உத­வி­யது. கமெரா பதிவில் அன்­றைய தினம் காலை 10.09 மணிக்கு கோழி இறைச்சிக் கடைக்குச் சென்ற ஆயிஷா அங்­கி­ருந்து 10.20க்கு வெளி­யேறிச் செல்­வது பதி­வா­கி­யி­ருந்­தது.

பாதையில் சிறிது தூரம் பய­ணித்த ஆயி­ஷாவின் உருவம் திடீ­ரென அப்­ப­தி­வி­லி­ருந்தும் மறைந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து பொலி­ஸா­ருக்கு சந்­தேகம் ஏற்­பட்­டது. ஆயி­ஷாவின் வீட்­டுக்கும் பாதைக்கும் இடையில் 150 மீற்றர் தூரத்தில் ஆயி­ஷா­வுக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்­ளதை பொலிஸார் ஊகித்­தனர்.
பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். முன்­னைய தினங்கள் பெய்த கடும் மழையின் கார­ண­மாக அட்­டு­லு­கம முஸ்லிம் கொலனி மற்றும் அண்­மித்த காட்­டுப்­ப­குதி உட்­பட சதுப்பு நிலம். கீரைத் தோட்­டங்கள் நீரினால் நிரம்­பி­யி­ருந்­தன. இந்­நி­லைமை சிறு­மியைத் தேடிக் கண்­டு­பி­டிப்­பதில் சிர­மங்­களை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்­நி­லையில் பொலி­ஸா­ருக்கு இரண்டு தக­வல்கள் கிடைக்­கப்­பெற்­றன. அதில் ஒன்று சிறுமி வாக­ன­மொன்­றினால் கடத்­தப்­பட்டாள் என்­ப­தாகும். அடுத்த தகவல் சிறுமி நப­ரொ­ரு­வரின் கரத்தைப் பற்­றிக்­கொண்டு புறக்­கோட்டைப் பகு­தியில் செல்­வதைக் கண்­ட­தான தக­வ­லாகும். விசா­ரணை அதி­கா­ரிகள் இத்­த­க­வல்கள் தொடர்பில் முயற்­சித்­தாலும் உரிய பலன் கிட்­ட­வில்லை.

அப்­ப­டி­யென்றால் சிறுமி காட்­டுப்­ப­கு­திக்குத் தான் அழைத்துச் செல்­லப்­பட்­டி­ருக்க வேண்டும். சில­வேளை அவள் காட்டுப் பகு­திக்கு கடத்திச் செல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என பண்­டா­ர­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சந்­தே­கித்தார். இதனை கிராம மக்­க­ளி­டமும் தெரி­வித்தார். இத­னை­ய­டுத்து கிரா­ம­வா­சி­களும் பொலி­ஸாரும் காட்டுப் பகு­தியில் சிறு­மியைத் தேடி­னார்கள். இந்­ந­ட­வ­டிக்­கையில் பாணந்­துறை குற்­றத்­த­டுப்பு பொலிஸ் பிரி­வி­னரும் கலந்து கொண்­டனர்.

கிரா­ம­வா­சிகள் சதுப்பு நிலத்தில் இறங்கி தேடுதல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த போது மண்­ணினால் மூடப்­பட்­டி­ருந்த கீரைத் தோட்டம் கண்ணில் பட்­டது. அங்கு சிறு­மியின் செருப்பு ஒன்றும் கிடைக்கப் பெற்­றது. அங்­கி­ருந்தோர் அதிர்ச்­சிக்­குள்­ளா­னார்கள். அல­றி­னார்கள். பொலிஸார் அவர்­களை சமா­தா­னப்­ப­டுத்தி அங்­கி­ருந்தும் வெளி­யேற்­றி­னார்கள்.

சம்­பவம் பொலி­ஸா­ரினால் பாணந்­துறை நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது. மேல­திக நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி இந்­தி­ராணி அத்­து­கோ­ரள ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து விசா­ரணை மேற்­கொண்டு ஜனா­ஸாவை பிரேத பரி­சோ­த­னைக்கு உத்­த­ர­விட்டார்.

கொலை­யாளி எவ்­வாறு சிக்­கினார்?
பாத்­திமா ஆயிஷா இவ்­வாறு எப்­படி அகால மர­ணத்­துக்­குள்­ளானார். இந்தக் கொடூர கொலையைச் செய்­தது யார்? ஆயிஷா அங்கு எப்­படிச் சென்றாள்? என்ற கேள்­வி­க­ளுக்கு விசா­ரணை அதி­கா­ரிகள் பதில் தேடி­னார்கள்.
ஆயி­ஷாவின் கொலை மீது முதலில் அவ­ளது தந்தை மீது பொலி­ஸா­ருக்கு சந்­தேகம் ஏற்­பட்­டது. சம்­ப­வ­தி­ன­மன்று அவர் மொரட்­டுவ பகு­திக்கு சென்­றுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து பொலிஸ்­கு­ழு­வொன்று அங்கு சென்­றது. அவர் மொரட்­டுவ பகு­தியில் இருந்­ததால் பொலி­ஸா­ருக்கு அவர் மீதான சந்­தேகம் இல்­லாமற் போனது.

‘இதன் பின்பு நாங்கள் அட்­டு­லு­கம பகு­தியில் போதைப்­பொருள் பாவ­னை­யா­ளர்கள் யார் எனத் தேடினோம். இவ்­வாறு தேடிக்­கொண்­டி­ருக்­கையில் எமக்குத் தகவல் ஒன்று கிடைத்­தது. ஐஸ் போதைப் பொருள் பாவ­னை­யாளர் ஒருவர் பற்­றிய தக­வலே அது. அன்று ஆயி­ஷாவை அந்த நபர் கேலி செய்­துள்­ள­தா­கவும் தகவல் கிடைத்­தது. அந்த நபரை கைது செய்து விசா­ரித்தோம். ஆனால் அவர் இந்தச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­ப­ட­வில்லை என உறு­தி­யா­னது என பண்­டா­ர­கம பொலிஸ் பொறுப்­ப­தி­காரி கூறினார்.

அத்­தோடு எமக்கு மற்­று­மொரு தக­வலும் கிடைத்­தது. சம்­பவ தின­மன்று இரவு ஒரு குழு அட்­டு­லு­கம மைதா­னத்தில் இரவு முழு­வதும் ஐஸ் போதைப் பொருள் பாவ­னையில் இருந்­தார்கள் என்­பதே அந்தத் தகவல். இத­னை­ய­டுத்து நாங்கள் அவர்­களைத் தேடினோம். இச்­சந்­தர்ப்­பத்தில் அந்தக் குழு­வினர் சிறு­மியின் சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இடத்­துக்குச் சென்­றி­ருந்­தார்கள். நாம் அவ்­வி­டத்­துக்குச் சென்று அவர்­களில் ஓரி­ரு­வ­ரிடம் விசா­ரணை மேற்­கொண்டோம். அங்­கேயே அவ்­வி­டத்­திலே பாரூக் என்­ப­வனும் இருந்தான்’ என்றும் அவர் தெரி­வித்தார்.

அவன் கைது செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டான். உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஒலு­க­லவும் அவ்­வி­டத்­துக்கு வந்து சேர்ந்தார். அவர் விசா­ரித்தார்.
‘நீர் அன்று எங்கே இருந்தீர்?’
‘நான் காலையில் குஞ்சி ஹாஜி­யாரின் வீட்­டுக்கு குழி­யொன்று அகழ்­வ­தற்கு சென்­றி­ருந்தேன் சேர்.’
‘எத்­தனை மணிக்கு?’
‘காலையில் 9 மணி­ய­ளவில் இருக்கும் சேர்’
‘அதன் பிறகு?’
‘குழி­தோண்டி முடிப்­ப­தற்கு 11.30 மணி­யா­கி­விட்­டது. பின்பு வீட்­டுக்குச் சென்று குளித்து விட்டு பள்­ளி­வா­ச­லுக்குப் போனேன்’
‘ குழி தோண்­டு­வ­தற்கு நீர் என்ன எடுத்துச் சென்றீர்?’
‘ வீல்பர் ஒன்றும் மண்­வெட்­டி­யும் சேர்’
பாரூக்கை விசா­ரித்து விட்டு பாரூக் கூறி­யது உண்­மையா என்­பதை அறிந்து கொள்­வ­தற்­காக உத­வி­பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஹாஜி­யாரின் வீட்­டுக்குச் சென்று விசா­ரித்தார்.
‘தோட்­டத்தில் குழி­யொன்று தோண்­டு­வ­தற்கு பாரூக் வந்­தானா?’
‘பொய் சேர். குழி­யொன்று தோண்­டு­வ­தற்கு நான் பாரூக்கை கூப்­பிட்­டி­ருந்தேன். அன்று முழு நாளும் மழை. மழை கார­ண­மாக குழி தோண்ட வேண்­டி­ய­தில்லை என்று நான் பாரூக்­கிடம் கூறினேன். வேறு ஒரு நாளில் குழி தோண்­டுவோம் எனக் கூறி­விட்டு பாரூக் திரும்பிச் சென்றான் “ என்று ஹாஜியார் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்தார்.
இதன் பின்பே பாரூக்கின் மீது பொலி­ஸாரின் கவனம் திரும்­பி­யது. அப்­போது பாரூக்­கிற்கு வியர்த்­துக்­கொட்­டி­யது. அவன் நடுங்­கினான்.
‘உனது ஷர்ட்டைக் கழற்று’ பொலிஸார் உத்­த­ர­விட்­டனர். பொலிஸார் அவ­னது உடம்பை நோட்டம் விட்­டார்கள். உடம்பில் சில இடங்­களில் கீறல் தழும்­புகள் இருந்­தன.
‘உனது உடம்பில் இருக்கும் கீறல்கள் எதனால்?’
பாரூக் அமை­தி­யாக இருந்தான்.
‘நான் உண்­மையைக் கூறு­கிறேன் சேர்’
அவன் மன்­றா­டினான். பொலிஸார் அவனை நீண்ட நேரம் விசா­ரித்து வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்து கொண்­டார்கள்.
‘இப்­போது உண்­மையைக் கூறு… நீ ஏன் இந்­தப்­பிள்­ளையை கொலை செய்தாய்?’ பாரூக் உண்­மையை கூறினான்.
‘நான் அன்று கூலி­வே­லைக்கு ஹாஜி­யாரின் வீட்­டுக்குச் சென்றேன். வேலை கிடைக்­க­வில்லை. வேறோர் தினத்தில் குழி வெட்­டுவோம் என ஹாஜியார் கூறினார்.

பின்பு நான் வேறு வேலை தேடினேன். கிடைக்­க­வில்லை. பின்பு வீட்டுப் பக்கம் போனேன். பாரூக் கதையைத் தொடர்ந்து கூறினான்.
ஆயிஷா கோழிக் கடைக்கு செல்­வதைக் கண்டேன். அவளைக் கண்­டதும் அவள் மீது எனக்கு ஆசை ஏற்­பட்­டது என்றும் கூறினான். பின்பு பாத்­திமா ஆயி­ஷாவை காட்­டுக்குள் இழுத்துச் சென்­றுள்ளான். அங்­குள்ள சதுப்பு நிலத்­திலே அவள் கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­டுள்ளாள்.

‘சேர் அவ­ளுக்கு ஒன்றும் செய்­ய­வில்லை. அல்­லாஹ்வின் மீது சத்­தி­ய­மாக. நான் அவ­ளுக்கு பலாத்­காரம் செய்­ய­வில்லை’ பாரூக் சத்­தியம் செய்தான்.
பிரேத பரி­சோ­தனை அறிக்கை கிடைக்கும் வரை பொறுத்­தி­ருப்போம். அப்­போதே உண்மை வெளி­வரும் என விசா­ரணை அதி­கா­ரிகள் காத்­தி­ருந்­தார்கள்.
வாய், மூக்கு வழியே சேறு, நீர் என்­பன உட்­சென்று நுரை­யீரல் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் கலந்தமையே மரணத்துக்கான காரணம் என சட்டவைத்திய அதிகாரிகள் குழாம் தீர்மானித்து அறிக்கை சமர்ப்பித்தது. பிரேத பரிசோதனை அறிக்கை மே 30ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை சந்தேக நபரின் வாக்குமூலத்துடன் பொருந்துவதை அவதானித்த பொலிஸார் அவரை பிரதான சந்தேக நபராக அறிவித்து பாணந்துறை நீதிவான் ஜயருவன் திஸா நாயக்க முன்னிலையில் ஆஜர் செய்திருந்தனர்.

இந்நிலையிலே கடந்த 13ஆம் திகதி பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன்குமார பிரதிவாதிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்தார். சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக ஆயிஷாவின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்­கு­வ­தற்கும் உத்­த­ர­வி­டப்­பட்­ட­து. செலுத்த தவறினால் மேலதிகமாக ஆறரை வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவருமெனவும் நீதி­வான் எச்சரித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.