மதீனா தேசிய பாடசாலை அதிபர் விவகாரம்: மாணவர்களின் கல்வியோடு விளையாடுவது யார்?

0 130

எப்.அய்னா

குரு­ணாகல் மாவட்டம் கிரி உல்ல கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ,மதீனா தேசிய பாட­சா­லையின் பிரச்­சினை இந்த வாரம் முழு­வதும் சமூ­கத்தில் மிகப் பெரும் பேசு­பொ­ரு­ளாக பேசப்­பட்டு வரு­கின்­றது. சுமார் 2500 மாண­வர்கள் வரை கல்வி பயிலும் முன்­னணி பாட­சா­லை­யான இந்த தேசிய பாட­சா­லையில் கல்வி பயிலும் ஒரு மாணவர் கூட, கடந்த 17 மற்றும் 19 ஆம் திக­தி­களில் பாட­சாலை செல்­லாமை அதற்­கான பிர­தான கார­ணி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தலாம். இத­னை­விட சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ மதீனா தேசிய பாட­சா­லையின் பழைய மாண­வர்கள், அபி­வி­ருத்தி சங்கம், பெற்றோர் என அனை­வரும் ஒன்­றி­ணைந்து பாரிய ஆர்ப்­பாட்டப் பேர­ணி­க­ளையும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளையும் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இது குறித்த விவ­காரம் பாரா­ளு­மன்றம் வரை கவ­னத்தை ஈர்த்­துள்ள நிலை­யி­லேயே உண்­மையில் இந்த விட­யத்தின் பின்­னணி என்ன என்­பது குறித்து இந்த கட்­டுரை ஆராய்­கி­றது.

பிரச்­சினை என்ன?
மதீனா தேசிய பாட­சா­லையின் தற்­போ­தைய அதி­ப­ராக கல்வி நிர்­வாக சேவையை சேர்ந்த ஹைதர் அலி என்­பவர் கட­மை­யாற்­று­கின்றார். இவ்­வா­றான பின்­ன­ணியில், கல்வி அமைச்சின் செய­லாளர் ஊடாக இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐ சேர்ந்த அமீர் என்­ப­வ­ருக்கு அப்­பா­ட­சா­லையின் அதி­ப­ராக பொறுப்­பேற்­கு­மாறு நிய­மனக் கடிதம் அனுப்­பப்­பட்­டுள்­ளது. இது தான் பிரச்­சி­னையின் அடிப்­படை.

பின்­னணி:
பல கல்­வி­மான்­களை உரு­வாக்­கிய நாட­ளா­விய ரீதியில் பிர­ப­ல­மான மதீனா தேசிய பாட­சாலை கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் வீழ்ச்சிப் பாதையில் பய­ணிக்­க­லா­னது. இரு வரு­டங்­க­ளுக்கு மேலாக நிரந்­தர அதிபர் ஒருவர் இன்றி பாட­சா­லை­யா­னது அதன் கல்வி வர­லாற்று பின்­ன­ணியை மறந்து பய­ணிக்­க­லா­னது. இவ்­வா­றான பின்­ன­ணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்வி நிர்­வாக சேவையை சேர்ந்த அப்­போது சம்­மாந்­துறை கல்வி வல­யத்தின் திட்டப் பணிப்­பா­ள­ரா­க­வி­ருந்த ஹைதர் அலி என்­ப­வரை, பாட­சாலை சமூகம் கல்வி அமைச்சின் ஒப்­பு­த­லுடன் அவர்கள் ஊடாக பாட­சா­லையின் அதி­ப­ராக நிய­மித்து, பாட­சா­லையை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் பொறுப்பை கைய­ளித்­தனர்.

அதன் பெறு­பேறு, கடந்த க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சையில் தமிழ் மொழி மூலத்தின் பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில், சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ மதீனா தேசிய பாட­சாலை முதல் 10 இடங்­க­ளுக்குள் இடம் பிடித்­தது. இத­னை­விட பாட­சா­லையின் நிர்­வாக கட்­ட­மைப்பு, புத்­தகக் கல்­விக்கு மேல­தி­க­மாக மாண­வர்­களின் இணை பாட விதா­னங்­களில் விருத்தி என பல மாற்­றங்­களை அப்­பா­ட­சாலை சமூகம் உணர்ந்­தது.

இவ்­வா­றான நிலையில் தான் வெற்றிப் பாதையில் காலடி எடுத்து பய­ணிக்க ஆரம்­பிக்கும் போது புதிய அதி­பரை நிய­மிக்க எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாட­சாலை சமூகம் எதிர்ப்பு வெளி­யிட்டு, ஆர்ப்­பாட்டம், புறக்­க­ணிப்பு போராட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.

புதிய அதிபர் நிய­மனம் ஏன்?
இந்த தேசிய பாட­சா­லையில் 2500 இற்கும் மேற்­பட்ட மாண­வர்கள் கற்­றாலும், இது­வரை அப்­பா­ட­சா­லைக்­கு­ரிய அதிபர், அதிபர் சேவையின் தரம் 1 இற்­கு­ரி­ய­வ­ரா­கவே இருந்து வரு­கின்றார். அத­னா­லேயே கல்வி நிர்­வாக சேவையை சேர்ந்த அதிபர் ஒருவர் கட­மை­களை முன்­னெ­டுக்கும் பின்­ன­ணியில் இலங்கை அதிபர் சேவையை சேர்ந்த ஒருவர் வெற்­றி­டத்தின் அடிப்­ப­டையில் பொதுச் சேவை ஆணைக் குழு­வினால் நிய­மிக்­கப்­பட்­ட­தாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த குறிப்­பிட்­டுள்ளார்.

அதி­பரை நிய­மிப்­பது யார்:
ஆனால், தேசிய பாட­சா­லைக்கு அதி­பர்­களை நிய­மிக்கும் உண்மை அதி­காரம் பொதுச் சேவை ஆணைக் குழு­வுக்கு இருந்­தாலும், வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக அந்த அதி­கா­ரத்தை அமுல் செய்யும் உத்­தி­யோ­க­பூர்வ அனு­மதி கல்வி அமைச்சின் செய­லா­ள­ருக்கே கொடுக்­கப்­பட்­டுள்­ளது. அப்­படி இருக்­கையில், தற்­போது புதி­தாக நிய­மனக் கடிதம் பெற்­றுள்ள அதிபர் சேவையை சேர்ந்த அதி­பரை, மதீனா தேசிய பாட­சா­லைக்கு நிய­மிக்க வேண்டாம் என அப்­பா­ட­சாலைச் சமூகம் எழுத்து மூலம் கல்வி அமைச்சை கோரி­யி­ருந்த பின்­ன­ணியில் அந்த நிய­மனக் கடிதம் எந்த விசா­ர­ணை­களும் இன்றி கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளமை பாட­சாலை சமூ­கத்தை அதி­ருப்தி அடையச் செய்­துள்­ளது. இத­னா­லேயே அவர்கள் போராட்­டத்தில் குதித்­துள்­ளனர். நிய­மனக் கடி­தத்­துடன் வரும் புதிய அதி­பரை அவர்கள் பாட­சா­லைக்குள் கட­மை­களை பொறுப்­பேற்க அனு­ம­திக்கப் போவ­தில்லை எனக் கூறி தொடர்ச்­சி­யாக பாட­சாலை முன் ஒன்று திரண்டு உள்­ளனர்.

முஸ்லிம் தலை­மைகள் என்ன செய்­கின்­றனர்?:
சுமார் 2500 இற்கும் மேற்­பட்ட முஸ்லிம் மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்ட இந்த விவ­காரம் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் மற்றும் சமூக மட்ட தலை­வர்கள் பலரும் அக்­கறை கொண்­டுள்­ளனர். அதன் வெளிப்­பாடு முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விவ­கா­ரத்தை நடப்பு விவ­கார பிரச்­சி­னை­யாக முன் வைத்து பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன் தினம் செவ்வாய்க் கிழமை கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.
இத­னை­விட அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் இப்­பா­ட­சாலை நிர்­வாக சேவை தரத்தை உடைய அதிபர் ஒருவர் மட்­டுமே கட­மை­யாற்ற முடி­யு­மான அத்­தனை தகை­மை­க­ளையும் கொண்­டுள்­ளதால், அத்­த­ரத்­துக்கு தர­மு­யர்த்­து­வதன் ஊடாக பிரச்­சி­னை­களை தீர்க்­கு­மாறு பாட­சாலைச் சமூ­கத்தின் கோரிக்­கையை கல்வி அமைச்­ச­ரிடம் நேர­டி­யாக கொண்டு சென்­றுள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இஷாக் ரஹ்­மானும் இந்த விவ­கா­ரத்தில் கல்வி அமைச்­ச­ருடன் நேர­டி­யாக கலந்­து­ரை­யாடி உட­னடி தீர்­வினை கோரி­யுள்ளார்.

கல்வி அமைச்சர் சொல்­வ­தென்ன?:
இது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மிக்க கரி­சனை காட்­டு­வ­தாக தெரி­வித்­துள்ளார். குறிப்­பாக தற்­போ­தைய புதிய அதிபர் நிய­ம­னத்தை ரத்து செய்ய தன்னால் தலை­யீடு செய்­வது பொருத்­த­மற்­றது எனவும் இந்த பிரச்­சி­னைக்கு சுமுக தீர்­வொன்­றினை பெற்­றுத்­தர நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் கல்வி நிர்­வாக சேவையை சேர்ந்த ஒரு­வரே அதி­ப­ராக கட­மையாற்ற முடி­யு­ம் வண்ணம் பாட­சா­லையை தர­மு­யர்த்த நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

குறிப்­பாக ஒட்­டு­மொத்த பாட­சாலை சமூ­கமும் எதிர்க்கும் பின்­ன­ணியில் புதிய நிய­மனக் கடிதம் பெற்ற அதிபர் அப்­பா­ட­சா­லையில் கட­மை­களை முன்­னெ­டுத்து செல்­வது சாத்­தி­யமே இல்லை என சுட்­டிக்­காட்டும் கல்வி அமைச்சர், மிக விரைவில் விட­யத்­துக்கு மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் பாதிக்கா வண்ணம் தீர்வு பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டார்.

பின்னணியில் சதி:
சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையின் வெற்றிப் பயணத்தை தடுக்க முன்னெடுக்கப்படும் சதி நடவடிக்கையாகவும் இந்த அதிபர் விவகார பிரச்சினை பார்க்கப்படுகின்றது. எது எவ்வாறாயினும் முஸ்லிம் சமூகத்தின் கல்விச் சொத்துக்களில் ஒன்றான இப்பாடசாலையை கட்டிக் காத்து, அதன் பயனை எதிர்கால சந்ததிக்கு வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. எனவே தனிப்பட்ட நலன்கள், வேறுபாடுகளை மறந்து சமூக நலனை முன்னிறுத்தி இப்பாடசாலையின் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.