(இக்கட்டுரை பொருளியல் கற்கும் மாணவர்களுக்காக வரையப்பட்டது. இது பல மணித்தியாலப் பல்கலைக்கழக விரிவுரைகளின் சுருக்கம். இலங்கையை மையப்படுத்தி விளக்குகிறது.)
சுதந்திர இலங்கையின் வரலாற்றிலே என்றும் ஏற்படாத ஒரு பொருளாதார வங்குரோத்தை 2022 இல் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியதால் பதினேழாவது முறையாக சர்வதேச நாணய நிதியின் கடன் உதவியையும் பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமான ஆலோசனைகளையும் இலங்கை அரசு நாடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மொத்தம் சுமார் மூவாயிரம் கோடி டொலர்களை ஒன்பது தவணைகளில் கடனாக வழங்க இணங்கிய அந்நிதி ஒவ்வொரு தவணையும் கடனின் ஒரு பகுதியைப் பெறுமுன் அது சிபார்சு செய்யும் சில நடவடிக்கைகளை அரசு நிறைவேற்றி இருக்க வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது. அதற்கிணங்க இலங்கை அரசும் தனது வருடாந்த வரவு செலவு அறிக்கைகளை தயார் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படலாயிற்று. 2022-–23, 2023-–24 வரவு செலவு அறிக்கைகள் அவ்வாறு தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டவையே. இருந்தும் சர்வதேச நாணய நிதி நிறுவனத்தின் உதவியும் ஆலோசனைகளும் இடிந்து விழுந்து கிடக்கும் இலங்கைப் பொருளாதாரக் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா? இதற்கு முன்னரும் சுமார் 35 குறைவு விருத்தி நாடுகள் தமது பொருளாதாரச் சரிவை நிறுத்த அந்நிதியின் உதவியைப்பெற்று அதன் கட்டளைகளுக்குப் பணிந்து முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் அவை தொடர்ந்தும் குறைவு விருத்தி நாடுகளாகவே இருப்பதேனோ? இவ்வினாவுக்குரிய விடையை அந்நிதி நிறுவனம் அமைக்கப்பட்ட நோக்கத்தை விளங்குவதன்மூலம் புரிந்து கொள்ளலாம்.
1929ல் ஆரம்பித்த உலகப் பொருளாதார மந்தம் வளர்ச்சிகண்ட பல பொருளாதாரங்களைச் சீரழித்து 1939வரை நீடிக்க, அதனைத் தொடர்ந்து இரண்டாவது உலகப் போர் ஆரம்பமாகி அமெரிக்கா தவிர்ந்த ஏனைய மேற்கு நாடுகள் எல்லாவற்றையும் சீர்குலைத்து 1944ல் முடிவடைய, பொதுவுடமைவாத சோவியத் தலைமையிலான உலகுக்கும் தனியுடைமைவாத அமெரிக்கா தலைமையிலான சந்தைப் பொருளாதார உலகுக்குமிடையே பனிப்போர் ஆரம்பமாகியது. அந்தச் சூழலில் சந்தைப் பொருளாதாரங்கள் சரிந்துவிடாமல் இருப்பதற்கும் வறிய நாடுகள் பொதுவுடமைவாதக் கொள்கைகளைத் தழுவி சோவியத் தலைமையை நாடாமல் இருப்பதற்குமாக அமெரிக்காவின் தலைமையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதலாவதாக, 1944ல் அதாவது யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போதே அமெரிக்காவின் பிரட்டன்வூட்ஸ் என்னும் நகரின் உணவுவிடுதி ஒன்றில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா அடங்கிய 44 நாடுகளின் 730 பிரதிநிதிகளுடன் ஒரு மகாநாடு நடைபெற்றது. அதில் பல பொருளியல், நிதியியல் நிபுணர்கள் பங்குபற்றினர். அவர்களுள் ஒருவரின் பெயரை பொருளியல் என்றும் மறக்காது. அவர்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோன் மெய்னாட் கீன்ஸ். அந்த நிபுணர்களின் சிபார்சில் இரண்டு சர்வதேச நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் சர்வதேச நாணய நிதி (International Monetary Fund). அதற்கு வழங்கப்பட்ட கடமை சந்தைப் பொருளாதார நாடுகள் சென்மதி நிலுவையில் தொடர்ச்சியாகப் பற்றாக்குறை கண்டு வங்குரோத்தடையும் ஆபத்தில் சிக்கியிருந்தால் அவற்றிற்கு குறுங்காலக் கடன்வழங்கி மீண்டும் முதலாளித்துவக் கடலில் நீந்துவதற்கு வழிசெய்தலாகும். அடுத்த நிறுவனம் இன்று உலக வங்கியாக இயங்கும் அன்றைய புனருத்தாரண அபிவிருத்திச் சர்வதேச வங்கி (International Bank for Reconstruction and Development). அதன் கடமை வறிய சந்தைப் பொருளாதார நாடுகளின் வளர்ச்சிக்கான நீண்டகால நிதியுதவி வழங்குதல். ஆனால் அந்த உதவியால் அதிக இலாபம் பெற்றவை வளர்ச்சியடைந்த நாடுகளே என்பது வேறு விடயம். இவற்றுடன் 1964ல் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமாக வர்த்தக அபிவிருத்திக்கான ஐக்கியநாடுகள் மகாநாடும் (United Nations Conference on Trade and Development) தோற்றுவிக்கப்பட்டு அது இன்று உலக வாத்தக நிறுவனமாக (World Trade Organization) இயங்குகிறது. அதன் கடமை முதலாளித்துவ சர்வதேச வர்த்தகம் தங்குதடைகளின்றிச் சுழிகளற்ற ஒரு சமுத்திரமாகச் செயற்படச் செய்வதே. சுருக்கமாகச் சொன்னால் இவை மூன்றும் முதலாளித்துவப் பொருளாதார உலகின் முக்கிய தூண்கள். இம்மூன்றினதும் பிரதான கடமை முதலாளித்துவத்தைக் கட்டிக்காப்பது.
மேலே குறிப்பட்ட மூன்று நிறுவனங்களும் ஆரம்பிக்கப்பட்ட பனிப்போர் சூழல் இன்றில்லை. 1980க்குப் பின்னர் பொதுவுடமைப் பொருளாதாரங்கள் வலுவிழக்கத் தொடங்கி பதினொரு ஆண்டுகளின் பின்; 1991ல் பொதுவுடமையின் தாயகமாக விளங்கிய சோவியத் அமைப்பே சீர்குலையலாயிற்று. அதற்கு முன்பே சீனாவும் சந்தைப் பொருளாதாரத்தைச் சீன முகத்துடன் தழுவத் தொடங்கிற்று. அதன்பின்னர் குறைவுவிருத்தி நாடுகள் பொருளாதார வளர்ச்சி காண ஒரே வழி முதலாளித்துவ அடிப்படையில் அமைந்த தடைகளற்ற சந்தைப் பொருளாதாரமே என்ற ஒரு நிலைப்பாடு உருவாகிற்று. அதனால் முதலாளித்துவம் ஒரு பூகோள தத்துவமாக இன்று மாறியுள்ளது. 1978லிருந்து இலங்கையும் திறந்த சந்தைப் பொருளாதார முதலாளித்துப் பாதையிலே காலடி வைத்தது. ஆனால், ஊழல் நிறைந்த இனவாத அரசியல் அமைப்பின் மடியில் தடையற்ற சந்தைப் பொருளாதார அமைப்பைத் தவழவிட்டதன் பலனை இன்று நாடு அனுபவிக்கின்றது. அதனைச் சீர்படுத்தும் பொறுப்பு சர்வதேச நிதி நிறுவனத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இலங்கை ஆட்சியமைப்பின் அடிப்படைப் பேரினவாதச் சித்தாந்தம் நீக்கப்பட்டு இனமதவாதமற்ற ஜனநாயகச் சித்தாந்தத்தில் அரசியல் யாப்பொன்று நடைமுறைக்கு வராவிடில் சர்வதேச நாணய நிதியின் பொருளாதாரப் பரிகாரம் நிரந்தர வளர்ச்சியைத் தராது. அந்த நிதி நிறுவனம் பதினெட்டாவது முறையும் தலையிட வேண்டிய அவசியம் வெகு தூரத்தில் இல்லை.
முதலாளித்துவத்தின் இன்றைய பூகோளக் கதாநாயகன் அமெரிக்கா. அந்த அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் பரவலுக்கும் முதலாளித்துவப் பொருளாதாரப் பூகோளமயவாக்கத்துக்கும் இடையே இணைபிரியாத ஓர் உறவுண்டு. இந்த உறவையும் வலுப்படுத்தப் பாடுபடும் சர்வதேச தாபனங்களுள் சர்வதேச நாணய நிதி முக்கிய இடத்தை வகிக்கிறது.
முதலாளித்துவத்தின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கை நுகர்வோனுக்கும் உற்பத்தியாளனுக்கும் இடையே பாலமாக விளங்கும் சந்தை எந்தத்தடைகளுமின்றி இயங்கவேண்டும் என்பதே. அவ்வாறு இயங்கினால் குறைந்த செலவில் நிறைந்த அளவில் உற்பத்திபெருகி மலிந்த விலையில் நுகர்வோருக்கு விற்கப்படும் என்பதே அந்தக் கொள்கையின் தாரக மந்திரம். பொருளியலின் நிறைபோட்டித் தத்துவம் இதனை துல்லியமாக விளக்கும். இதில் நுகர்வோனையும் உற்பத்தியாளனையும் இணைப்பது பணம். ஆகவே பணம் ஒரு பண்டமாற்று ஊடகம். ஆனால் பணம் ஒரு ஊடகமாக மட்டும் பயன்படவில்லை. காலவோட்டத்தில் பொருளாதாரங்கள் பன்முகப்பட்டவையாக மாற பணமும் ஒரு செல்வத்திரட்டு என்ற உருவத்தையெடுத்து பணமுள்ளவன் சந்தையையே தனது அடிமையாக்கலாம் என்ற ஒரு நிலை தோன்றலாயிற்று. ஆகவே உற்பத்தியைவிட பணம் திரட்டுவதிலேயே முயற்சியாளர்கள் தமது சிந்தனையையும் செயலையும் முடக்கலாயினர். பண்டமாற்றுப் பரிவர்த்தனையை நீக்கி பொருள்களினதும் சேவைகளினதும் உற்பத்தியை இலகுவாக்க எழுந்த பணம் அந்த உற்பத்தியையே விழுங்கியுள்ளதால் பொருளாதாரங்கள் பணவாதாரங்களாக மாறின. வங்கிகள் அந்த மாற்றத்தை முன்னின்று வழிநடத்தின என்றால் அது மிகையாகாது. அதை இங்கே விரிவாக விளக்க கட்டுரை நீளம் இடந்தராது. சுருக்கமாகச் சொன்னால் மனித முயற்சி உற்பத்தி என்ற பெயரில் இன்று பணத்தையே உற்பத்தி செய்கிறது. ஆகவே முதலாளித்துவப் பொருளாதாரம் பணம் திரட்டும் ஒரு பொருளாதாரம் என்பது புலனாகவில்லையா? முதலாளித்துவப் பொருளாதாரத்தின் உயிர் நாடியாக விளங்குவது பணமும் அதனைத் திரட்டுவோனும். இந்தப் பின்னணியில் சர்வதேச நாணய நிதி இலங்கையின் வங்குரோத்தை நீக்கி மீண்டும் துரித வளர்ச்சியை ஏற்படுத்தக் கையாளும் வகைகளை ஆராய்வோம்.
சர்வதேச நாணய நிதியின் பார்வையில் இலங்கையின் பொருளாதாரச் சீரழிவைத் தீர்க்க வேண்டுமாயின் பணக்கார வர்க்கத்தைப் பாதுகாக்க வேண்டும். ஆதலால் இலங்கை மத்திய வங்கியினூடாக நாட்டின் நிதித் துறையை முதலில் சீர்படுத்துவதிலேயே அதன் கவனம் சென்றது. அதற்கு முதற்படியாக அரசாங்க வரவு செலவில் சிக்கனம் கடைப்பிடிக்கப்பட்டு வருமானம் அதிகரித்துச் செலவு குறைக்கப்பட வேண்டுமென அது ஆலோசனை வழங்கியது. ஏனெனில் வரவுக்கு மிஞ்சிய செனவினங்களைச் சமாளிக்க திறைசேரி உண்டியல் மூலம் உள்நாட்டு வங்கிகளிடம் இருந்தோ வெளிநாடுகளிலிருந்தோ கடன்பெறும் தேவை ஏற்பட்டு நாடே கடனாளியாக மாறியுள்ளது. மேலும் அச்செலவினங்கள் கட்டுப்பாடின்றிப் பெருகியுள்ள அரச நிர்வாகிகளின் ஊதியங்களை வழங்குவதற்கும், ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் இளைப்பாற்றுச் சம்பளம் வழங்குவதற்கும், தமிழினத்தை எதிர்த்துப் போராடவென வளர்த்த ஓர் இராணுவப்படையை போர் முடிந்தபின்னும் வைத்துக்கொண்டு அதன் செலவைச் சமாளிப்பதற்கும், கல்வி, சுகாதாரம் போன்ற பொதுச் சேவைகளை வழங்குவதற்கும், இலங்கை விமானச்சேவை, மின்சாரக் கூட்டுத்தாபனம் போன்ற ஊழல்நிறைந்த பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்வதற்குமாகச் செலவழிக்கப்படுவதால் அந்தச் செலவினங்களைக் கட்டுப்படுத்தி வரிவருமானங்களைக் கூட்டவேண்டும். இந்த ஆலோசனைகளின் பின்புலத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறையிடம் கொடுத்துவிட்டால் அவை இலாப நோக்கத்தை மையமாகக்கொண்டு நிர்வகிக்கப்பட்டு திறமையுடன் இயங்கும் என்பது முதலாளித்துவத்தின் முடிவு. சர்வதேச நாணய நிதியும் அதையே வற்புறுத்தியது. தனியார் மயப்படுத்தல் என்ற கோஷம் இந்தத் தத்துவத்தையே உள்ளடக்கியுள்ளது. ஆகவே உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இலங்கையின் பொதுச் சொத்துகள் கைமாறுவதையே சர்வதேச நாணய நிதி விரும்புகிறது என்பது புலனாகவில்லையா?
அரசாங்க வருமானத்தை எப்படி அதிகரிப்பது? ஒரே வார்த்தையில் கூறினால், வரிகளால். அரசாங்கம் மக்களிடமிருந்து திரட்டும் வரிகளைக் கொண்டே தனது செலவினங்களைச் சமாளிக்க வேண்டும் என்பது நிதியின் ஆலோசனை. அதில் உண்மையும் உண்டு, ஆனால் பிரச்சினை யாரிடமிருந்து அந்த வரிகளைத் திரட்டுவது என்பதுதான். இங்கேதான் சர்வதேச நாணயநிதியின் முகமூடி களையப்பட்டு அதன் உண்மையான முதலாளித்துவச் சொரூபம் வெளிப்படுகிறது. முதலாளித்துவத்தின் உயிர்நாடி பணக்கார வர்க்கம். அது பொன் முட்டை இடும் வாத்துப் பறவை அல்லவா? அந்த வர்க்கத்தின் முதலீடுகளினால்தானே பொருளாதாரம் இயங்குகிறது? வளர்கிறது? மக்களும் நலன் பெறுகின்றனர்? ஆகவே அதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இந்த உபாயத்தைப்பற்றி அமெரிக்கப் பொருளியல் நிபுணர் கெனத் கல்பிரைத் பின்வருமாறு வருணித்தார். “குதிரைக்குக் கொள்ளுப்போட்டால் அதன் பின் துவாரத்தால் தள்ளப்படும் சாணம் சில பறவைகளுக்கு உணவாகுவதுபோன்றது.” ஆதலால் செல்வந்தர்களின் சொத்துகளுக்கும் வருமானத்துக்கும் பங்கம் ஏற்படாமல் வரிகளைத் திரட்ட வேண்டும். அதற்கு ஒரேவழி வருமான வரி, சொத்து வரி போன்ற நேர்வரிகளைக் குறைத்து நேரில்வரிகளை அதிகரித்தல். அதாவது சாதாரண நுகர்வோர் கொள்வனவு செய்யும் பொருள்கள்மீது வரி விதித்தல். இந்த வரிகளால் பொதுவாக எல்லாப் பொருள்களின் விலைகளுமே உயர்ந்துள்ளன. எப்படி என்பதற்கு ஓர் உதாரணம்: ஒரு பச்சை மிளகாய் 15 ரூபாவுக்கும் ஒரு கிலோ முருங்கக்காய் 2,000 ரூபாவுக்கும் எந்தக் காலத்தில் ஐயா இலங்கையில் விற்கப்பட்டது? இந்த விலையேற்றத்துக்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் நேரில் வரிகள். மரக்கறி வகைகளுக்கு இந்த வரிகள் விதிக்கப்படாவிட்டாலும் விதிக்கப்பட்ட பொருள்களின் விலை உயர்வை அளவுகோலாகக் கொண்டு வியாபாரி எல்லாப் பொருள்களுக்குமே விலையை உயர்த்தியுள்ளான். ஏன் என்று அவனிடம் கேட்டால் உற்பத்தி குறைந்து விட்டது அல்லது டொலர் மதிப்பு அதிகரித்துவிட்டதென சம்பந்தமில்லாத காரணங்களை முன்வைக்கிறான். அதன் விளைவால் சாதாரண கூலித்தொழிலாளிகூட பச்சைமிளகாய் வாங்கும்போது வரி செலுத்துகிறான். அதிலிருந்து தப்புவதற்கு அவனுக்குத் தெரிந்த ஒரே வழி அந்த மிளகாய் இல்லாமல் கறிசமைப்பது, அல்லது கறியே இல்லாமல் சோற்றை மட்டும் உண்பது. இந்த வரியின் பழுவை நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான ஏன் இலட்சக்கணக்கான ரூபா வருமானத்தைப் பெறும் பணக்கார வர்க்கம் உணராது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்களை நாளாந்தம் இலங்கையிலிருந்து அறியக்கூடியதாக இருக்கிறது.எனவே எந்த வர்க்கத்தின் நலனுக்காக சர்வதேச நாணய நிதி செயற்படுகின்றது என்பதை இன்னும் விளக்க வேண்டுமா?
ஆனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பலவிதமான நெருக்கடிகளுள் ஒன்று. அரசாங்க ஊழல், இனவாதம், பொறுப்பற்ற ஆட்சி, நிர்வாகச் சீர்கேடு என்ற பல பிரச்சினைகளால் உருவானதே பொருளாதார நெருக்கடி. இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியை நாடியபோது ஏன் முதலில் மேற்கூறிய பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு வாருங்கள். உதவி தருவோம் என்று கூறவில்லை? ஏனெனில் தவித்த முயலை அடிப்பது இலேசு என்று முதியோர் கூறுவது போல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வலைக்குள் சிக்கவைக்க இதுவல்லவா தருணம்? நழுவ விடலாமா? இந்து சமுத்திரத்தினுள் பெருகும் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த இலங்கை போன்ற கேந்திரமான நாடுகளை மேற்கினுடன் அதிலும் குறிப்பாக அமெரிக்காவுடன் இணைக்கும் தந்திரத்தின் ஒரு அமிசமே அந்நிதியின் பொருளாதாரத் தீர்வு. ஆகவே சர்வதேச நாணய நிதியின் தலையீட்டை வெறுமனே பொருளியல் கண்கொண்டுமட்டும் நோக்கக் கூடாது. அது முதலாளித்துவத்தினதும் அதன் சர்வலோகக் கதாநாயகன் அமெரிக்காவினதும் ஏகாதிபத்தியத்தின் இன்னொரு பக்கம் என்பதை மறுத்தலாகாது.
இந்த நிதி நிறுவனம் முதலாளித்துவத்தின் பங்காளி என்பதற்கு இன்னுமொரு சான்று இலங்கை அரசு உதவி கேட்டபோது அது முன்வைத்த முதலாவது நிபந்தனை கடன்காரர்களுடன் முதலில் ஒரு சமரசத்துக்கு வரவேண்டும் என்பதாகும். அந்தக் கடன்காரர்கள் யார்? சீனா ஒரு புறமிருக்க பாரிஸ் கிளப் என்றழைக்கப்படும் முதலாளித்துவ மேற்கு நிதி நிறுவனங்களின் கூட்டு. ஆகவே சர்வதேச நாணயநிதி யாரின் நலனை முன்வைத்து இலங்கைக்கு உதவ முன்வந்தது என்பதை இன்னுமா விளக்க வேண்டும்? ஏன் அந்தக்கடனை இறுக்கத் தேவையில்லை என்று கூறியிருக்க முடியாது? ஏனெனில் அது முதலாளித்துவ உலகுக்கே சாவுமணி அடிப்பது போலாகிவிடும்.
எனவேதான் இன்றைய எதிர்க்கட்சிகளுள் பெரும்பாலானவை கூறுவதுபோன்று சர்வதேச நாணய நிதியின் சில நிபந்தனைகளை மட்டும் மறுபரிசீலனை செய்து நிதியின் ஒத்துழைப்புடன் மாற்றங்கள் கொண்டுவந்து அதே நிதியின் பொருளாதார மீட்சித் திட்டத்தை அமுல் நடத்துவதால் இலங்கையின் பொருளாதாரச் சீரழிவை நிரந்தரமாக நீக்க முடியாது. நாட்டின் அடிப்படை அரசியல் தத்துவத்தையே மாற்றி அரகலய இளைஞர் கோரியது போன்று ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதே அதற்கான ஒரே வழி. அது என்ன அமைப்பு என்பதை எனது கொழும்பு தெலிகிராப் ஆங்கிலக் கட்டுரைகள் விளக்கியுள்ளன.- Vidivelli