ஆர­வா­ர­மற்ற ஆளுமை உஸ்தாத் முனீர்

0 143

ஸபானா சுகைப் (இஸ்லாஹி)

இறை வேதத்தை தன் வாழ்க்கை நெறி­யாக ஏற்று இறுதி மூச்­சு­வரை அத­னையே போதித்த ஒரு ஆத்மா தன் வாழ்வை நிறைவு செய்­தி­ருக்­கி­றது. மிகச் சிறந்த ஆர­வா­ர­மற்ற ஓர் ஆளு­மையை இந்த தேசம் இழந்­தி­ருக்­கி­றது.
உஸ்தாத் முனீர் அவர்கள் தான் பொறுப்­பேற்ற பணி­களில் வினைத்­தி­ற­னா­கவும் மிகுந்த ஈடு­பாட்­டு­டனும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் பொறுப்­பு­ணர்­வுடன் உளத்­தூய்­மை­யுடன் இறு­தி­வரை இறை­வ­னுக்­காக பணி­யாற்றி மர­ணித்த ஒரு பன்­முக ஆளுமை கொண்ட ஒரு மனிதர்.

உஸ்தாத் ஹதிய்­யத்­துல்லாஹ் முஹம்­மது முனீர் 1964ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி புத்­த­ளத்தில் சன்­மார்க்க அறிவுப் பின்­பு­லத்­தைக கொண்ட குடும்­பத்தில் பிறந்தார். அவ­ரது தாயாரின் தந்தை மஹ்மூத் ஆலிம் 1985ஆம் ஆண்டு வரை நீண்ட காலம் புத்­தளம் காஸி­மிய்யா அரபுக் கல்­லூ­ரியின் அதி­ப­ராகக் கட­மை­யாற்­றி­யவர். தாயாரின் இளைய சகோ­தரர் அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் புத்­தளம் மாவட்ட ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர். காஸி­மி­யயா அரபுக் கல்­லூ­ரியின் தற்­போ­தைய அதிபர்.

உஸ்தாத் முனீர் தனது ஆரம்ப கல்­வியை புத்­தளம் ஸாஹிரா கல்­லூ­ரியில் பெற்றார். பின் 1984 முதல் 1990 வரை ஷரீஆ கல்­வியை பாகிஸ்­தானில் ஜாமிஆ அபீ பக்ர் (கராச்சி) மற்றும் ஜாமிஆ முஹம்­ம­தியா (குஜ­ரன்­வாலா) ஆகிய கல்­லூ­ரி­களில் கற்றார். ஜாமிஆ முஹம்­ம­தி­யாவில் ஹதீஸ் துறையில் அவர் பெற்ற பட்டம் பாகிஸ்தான் பல்­கலைக் கழ­கங்­களால் முது­மாணி பட்­டத்­துக்குச் சம­மா­ன­தாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

அவர் 1990 -– 2005ஆம் ஆண்­டு­வரை புத்­தளம் காஸி­மிய்யா அர­புக்­கல்­லூ­ரியில் முழு­நே­ர­மா­கவும் புத்­தளம் இஸ்­லா­ஹிய்யா பெண்கள் அரபுக் கல்­லூ­ரியில் பகு­தி­நே­ர­மா­கவும் விரி­வு­ரை­யா­ள­ராக கட­மை­யாற்­றினார். 2005ஆம் ஆண்டு புத்­தளம் இஸ்­லா­ஹிய்யா பெண்கள் அர­புக்­கல்­லூ­ரியின் அதி­ப­ராக பொறுப்­பேற்று சிறப்­பாக வழி­ந­டாத்­தினார்.

2016 ஆம் ஆண்டு பிற்­ப­கு­தி­யி­லி­ருந்து சுமார் ஒரு வருடம் மருத்­துவ விடு­மு­றை­யி­லி­ருந்த அவர் மீண்டும் அப்­பொ­றுப்பை ஏற்று 2023 டிசம்பர் மாதம் 19ஆம் திகதி வரை தனது பணியை வினைத்­தி­ற­னாக செய்து மர­ணித்­தார்கள்.
மர­ணிக்கும் வரை உஸ்தாத் முனீர் அவர்கள் இஸ்­லா­ஹிய்யா பெண்கள் அரபுக் கல்­லூ­ரியின் அதி­ப­ராக தனது பணி­களை ஆற்­றினார். இஸ்­லா­ஹிய்­யாவை தன் உள்­ளத்தில் சுமந்­தார்கள். வஹியின் ஒளியில் அதனை வழி நடத்­தி­னார்கள். சமூகச் சீர­மைப்பில் பெண்­களின் வகி­பங்கின் முக்­கி­யத்­து­வத்­தையும் தேவை­யையும் மிகத் தெளி­வாகத் தெரிந்து அதற்­கேற்ற வகையில் ஒரு மாணவச் சமூ­கத்தை உரு­வாக்க அரும்­பா­டு­பட்­டார்கள்.

இஸ்­லா­ஹிய்யா பெண்கள் அரபுக் கல்­லூ­ரியில் பெண்கள் கல்வி, பெண் ஆளுமை உரு­வாக்கம், சன்­மார்க்க போத­னை­க­ளோடு அவர்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரத்தை பெற்றுக் கொடுக்­கவும் தன்­னா­லான அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டு அதற்கு பங்­க­ளிப்புச் செய்யும் பெண் ஆளு­மை­க­ளையும் வழி­ந­டத்­தி­னார்கள்.

அதிபர் என்ற பதவி ஸ்தானத்­திற்­கப்பால் அவரால் கல்­லூ­ரிக்கு எது­வெல்லாம் செய்ய முடி­யுமோ அதை­யெல்லாம் செய்­தி­ருக்­கின்றார். அத்­தனை பணி­களின் பின்னால் நின்றும் தன்னால் இயன்ற பங்­க­ளிப்பைக் கல்­லூ­ரிக்குச் செய்­யக்­கூ­டி­யவர். அர்ப்­ப­ணிப்­போடும் தியா­கத்­தோடும் தனது சேவையை இறை­வ­னுக்­காக உளத்­தூய்­மை­யோடு நிறை­வேற்­றி­யவர்.

இஸ்­லா­ஹிய்­யாவை உள்­வா­ரி­யாக கற்­ற­லுக்­காக வரு­ப­வர்கள் மாத்­திரம் பய­ன­டையும் வளா­க­மாக மட்­டு­மன்றி பெண்கள் தொடர்­பான சகல விட­யங்­க­ளுக்­கு­மான சிந்­த­னை­களை சமூக ரீதி­யாக எல்லா மட்­டங்­க­ளிலும் இருப்­ப­வர்கள் பய­ன­டையும் தள­மாக மாற்­று­வ­தென்­பது அண்­மைக்­கா­ல­மாக அவ­ரது நோக்­க­மாக இருந்­தது.

பல்­துறை சார்ந்த ஆளு­மை­க­ளு­ட­னான அவ­ரது அறி­முகம் மற்றும் உற­வா­டலின் மூலம் கல்­லூ­ரியின் மாண­வி­களும் பயன்­பெற தன்­னா­லான எல்லா முயற்­சி­க­ளிலும் ஈடு­பட்டு வள­வா­ளர்கள் பல­ரையும் அழைத்து வரு­வதும், புத்­த­ளத்­திற்கு வருகை தரும் ஆளு­மை­களை இனம் கண்டு அவர்­க­ளையும் அழைத்து மாண­விகள் பயன் தரும் அமர்­வு­க­ளாக பயன்­ப­டுத்திக் கொள்வார். மாண­வி­களின் ஒழுக்கம் பண்­பாட்டு விட­யங்­களில் மிகவும் கண்­டிப்­பா­ன­வ­ராக இருந்து நெறி பிற­ழாத ஒழுக்க விழு­மி­யங்­க­ளுடன் வழி­ந­டத்­தினார். பெண் பிள்­ளை­களின் எதிர்­காலம் என்ற வகையில் கல்­லூ­ரிக்குள் அவர்கள் விடும் தவ­று­களைக் கூட மிகவும் பக்­கு­வ­மான முறையில் வழிப்­ப­டுத்­து­வார்.
ஆய்­வுகள், ஆவ­ணப்­ப­டுத்தல்,புத்­த­கங்கள் எழு­துதல், அது சார்ந்த காட்­சிப்­ப­டுத்­தல்கள் போன்­ற­வற்றில் அதீத ஆர்வம் கொண்­டவர். அது தொடர்­பான அறி­விப்­பு­லனை தன்­ன­கத்தே கொண்டு மாண­வி­க­ளுக்கும் சிறந்த வழி­காட்­டல்­களை வழங்­கி­யுள்ளார். அந்த வழி­காட்­ட­லிற்­கி­ணங்க கல்­லூ­ரியில் பல நூல்­களும் வெளி­வந்­தி­ருக்­கின்­றன. இன்னும் சிலர் அந்த முயற்­சியில் ஈடு­பட்டுக் கொண்டும் இருக்­கின்­றனர். சம­கால சிந்­த­னை­களை சூழலிற்கு ஏற்ப முன்­வைக்கும் திறன் மிக்­கவர்.

பழமை வாதத்­திற்கும் புதுமை வாதத்­திற்கும் இடையில் சம­நிலை பேணி கற்றல் கற்­பித்தல் செயற்­பா­டு­களை மேற்­கொள்ளக் கூடி­யவர். நவீன சிந்­த­னை­க­ளையும் தற்­போ­தைய சமூ­கத்­திற்கு ஏற்ற அறிவைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பாடத்­திட்­டங்­க­ளையும் அதற்­கப்பால் தற்­கா­லத்­திற்­கேற்ப நிகழ்­வு­க­ளையும் நல்ல பல அமர்­வு­க­ளையும் மாண­வி­க­ளுக்கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கும் ஏற்­பாடு செய்து கொடுப்பார். அதே­வேளை நெறி பிற­ழாத இஸ்­லா­மிய மார்க்­கத்தில் அவர்­களை வழி­ந­டத்­து­வ­திலும் மிகவும் கவ­ன­மாக இருந்தார். இஸ்­லா­ஹிய்யா பெண்கள் அரபுக் கல்­லூ­ரியில் அதி­ப­ராக அதன் வளர்ச்­சிக்கும் மாண­வி­களின் அறிவு ஆளுமை விருத்­திக்கும் அவர் காட்­டிய கரி­சனை வரி­க­ளுக்குள் அடங்­கா­தவை.

உஸ்தாத் மஸ்­ஜிதைப் போல நூல­கத்­தையும் அதி­க­மாக நேசிக்கக் கூடி­யவர். வாசிப்பின் மீது அலாதி பிரியம் கொண்ட அவர் புத்­த­கங்கள் மீதான தீரா காதலன். அவ­ரது வாசிப்புத் திறனைக் காணும் பலரும் வியந்து போகும் அளவு வாசிப்பின் ஊடான ஆழ்ந்த அறிவுப் புல­மை­யையும் கருத்­தாழமிக்க சிந்­த­னை­யையும் கொண்­டி­ருந்தவர். சில பக்­கங்­களையேனும் வாசிக்­காமல் ஒரு நாளை கடந்து விடா­தீர்கள் என்றும் பெருநாள் தினத்தில் கூட சில பக்­கங்­க­ளை­யா­வது வாசித்து அந்த நாளை பூரணப் படுத்­துங்கள் என்றும் விடு­முறை அமர்வில் நினைவூட்டுவார். அவ­ரு­டை­யது ஆன்­மீக வாசிப்­பாக மட்­டு­மின்றி சர்­வ­தேச அர­சியல் இலக்­கியம் என பரந்து விரிந்த பன்நூல் வாசிப்­பாக இருக்கும்.

வாசிப்பின் ஊடாக கண்ணால் கண்­டி­ராத பழ­கி­டாத பல அறி­ஞர்­க­ளோடு நெருங்­கிய உற­வாக மான­சீ­க­மாக உற­வாடி வாழ்ந்­தி­ருக்­கின்றார் உஸ்தாத் முனீர் அவர்கள். ஆழ­மான வாசிப்பைப் போல சம­கால சூழலுக்­கேற்ற வகை­யி­லான கருத்­தியல் கொண்­டது அவ­ரது எழுத்­துக்கள்.வாசிப்பு எழுத்துத் துறையில் மிகுந்த ஈடு­பாடு உடைய உஸ்தாத் அவர்கள் சஞ்­சிகை ஒன்­றுக்கு தொட­ராக எழு­திய அல்­குர்­ஆ­னிய சிந்­தனை ஆக்­கங்கள் ‘அல்­குர்­ஆ­னிய அமர்­வுகள்’ என்ற நூலின் ஊடாக தொகுத்து வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.
அல்­குர்­ஆனை வெறும் கற்­பித்­த­லுக்­கா­க­வன்றி தனது வாழ்க்கை நெறி­யாக வாழ்ந்து மர­ணித்­ததன் கார­ண­மா­கத்தான் அவர் மறைந்தும் மறை­யாமல் இன்றும் பல்­லா­யிரம் மனங்­களில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றார்.

அவர் நிரப்ப முடி­யாத தனித்­து­வ­மான இயல்­பு­களைக் கொண்­டவர். அதி­கார தோரணை அற்­றவர். மிகவும் எளி­மை­யான தன்­னி­றை­வான பொருந்திக் கொண்ட வாழ்க்கை முறையை வாழ்ந்திருக்­கின்றார் என்­பதை அவ­ருடன் பழ­கிய அனை­வரும் புரிந்து கொண்­டி­ருப்­பார்கள்.

பல சமயத் தலை­வர்­க­ளு­டனும் பல்­துறை ஆளு­மை­க­ளு­டனும் உஸ்தாத் பேணி வந்த ஆரோக்­கி­ய­மான உற­வுகள் கலந்­து­ரை­யா­டல்கள் ஒரு சிறந்த சமூக சீர­மைப்பைக் கட்டியெழுப்­பு­வதில் அவர் கொண்ட மிகுந்த ஈடு­பாட்­டுக்குச் சான்­றாகும்.

இறை­வஹி அல்­குர்ஆன், தப்ஸீர் வகுப்­புகள், இஸ்­லா­மிய அமர்­வுகள், குத்பா பிர­சங்­கங்கள், சமூக மேம்­பாட்­டுக்­கான கலந்­து­ரை­யா­டல்கள், சர்­வ­தேச அர­சியல் சிந்­த­னைகள் என பல வழி­க­ளிலும் இயன்ற அளவு தன் பங்­க­ளிப்பை சமூ­கத்­திற்கு செய்­தி­ருக்­கின்றார்.

அவரின் ஜும்­ஆக்கள் தனித்­து­வ­மா­ன­வை­யா­கவும் இரத்­தினச் சுருக்­க­மா­கவும் கருத்­துச்­செ­றி­வுடன் சம­கால சூழ்நிலைக்கு பொருத்­த­மா­ன­தாகவும் இருந்­தி­ருக்­கி­றது.

உஸ்தாத் அவர்கள் இஸ்­லா­ஹிய்­யா­வுக்கு வெளி­யிலும் செயற்­பட்டு இருக்­கின்­றார்கள். புத்­தளம் சமூக நல பணி­க­ளிலும் தன்­னா­லான பங்­க­ளிப்பை செய்­தி­ருக்­கின்றார்கள்.

கல்வி மேம்­பாட்­டுக்கும் சீர்­தி­ருத்­தத்­திற்­கு­மான புத்­தளம் கல்­வி­யிய­லா­ளர்கள் மன்­றத்தின் இணைத் தலை­வர்­களுள் ஒரு­வ­ராக இருந்து இறு­தி­வரை சமூக உரு­வாக்­கத்­திற்­காக காத்­தி­ர­மான பங்­க­ளிப்பைச் செய்­தி­ருக்­கின்றார்.
இஸ்­லா­மிய உம்மத் எழுச்சி பெறு­வ­தற்­கான வழி­காட்டல் அமர்­வு­க­ளி­னூ­டாக இஸ்­லா­மிய உம்மத் மீதான கரி­ச­னைகள் உஸ்­தாத்தின் மனதில் அதி­க­மாக இருப்­பதை உணர்ந்­தி­ருக்­கின்றோம்.

இறை நெருக்­கமும் திருப்­தியும் தேடி தெளிந்த மனம் அவ­ரு­டை­யது. கடி­ன­மான சூழ்நிலை­களில் கூட இறை­வனின் விதியில் அதி­ருப்தி அடை­யாமல் பொருந்திக் கொண்டார் என்­பதை மறுக்க முடி­யாது.

2016ஆம் ஆண்டு உஸ்தாத் அவர்கள் ஈரல் புற்று நோயினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டார்­. அவரைக் காப்­பாற்ற முடி­யாது என பல வைத்­தி­யர்­களும் ஒதுங்கிக் கொண்­டனர். ஆனாலும் உஸ்­தாத்­துக்­காக இறை­வ­னிடம் உயர்ந்த பல்­லா­யிரம் கரங்­களின் பிரார்த்­த­னை­க­ளையும் சிந்­திய கண்­ணீ­ரையும் அவர் மீதான சமூகத் தேவை­க­ளையும் இறைவன் பொருந்திக் கொண்டான். சென்­னையில் இருக்கும் பிர­பல ஈரல் புற்­றுநோய் நிபுணர் முஹம்மத் ரிலா அவர்கள் மேற்­கொண்ட நுட்­ப­மான சத்­திர சிகிச்­சையின் விளை­வாக உஸ்தாத் முனீர் அவர்கள் சுகம் பெற்று மீண்­டார்கள்

இருந்த போதிலும் ஏழு வரு­டங்­களின் பின் உஸ்தாத் மீண்டும் நோயுற்றார். புற்­று­நோ­யி­லி­ருந்து முழு­மை­யாக நீங்­கிய போதும் அதன் விளை­வாக ஈரலில் ஏற்­பட்­டி­ருந்த சேதங்­களின் கார­ண­மாக அவ­ரது ஈரல் வாயி நாளத்தில் இரத்த அமுக்கு அதி­க­ரிப்பு (Portal vein hypertension) ஏற்­பட்­டது. அமுக்கு அதி­க­ரிப்பு கார­ண­மாக காலப்­போக்கில் நாளங்கள் வீங்கி நாளச் சுவர் பழு­த­டை­வதால் அகக்­கு­ருதிப் பெருக்கு (Internal bleeding) ஏற்­படும். உஸ்தாத் அவர்­க­ளுக்கு இந்த நிலை ஏற்­பட்­ட­போது இரத்தம் ஏற்­றப்­பட்டு அவ­ரது நிலை சீராக்­கப்­பட்­டது.

புத்­தளம் ஆதார வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த உஸ்தாத் அவர்­க­ளுக்கு endoscopy நுட்ப மதிப்­பீடு தேவைப்­பட்­டது அங்கு அந்த வச­தி­யின்­மையால் அவர் குரு­நா­கலை வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டார். கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அளவு குருதிப் பெருக்கு மீண்டும் ஏற்­பட்­ட­தனால் உஸ்தாத் முனீர் அவர்கள் கடந்த 2023 டிசம்பர் 19ஆம் திகதி வைத்­தி­ய­சா­லை­யி­லேயே மரணம் அடைந்தார். மிகச் சிறந்த ஆளுமை ஒன்று எம்மை விட்டு விடை­பெற்­றது.

இஸ்­லா­மியப் பணியை இத­யத்தால் நேசித்து இறுதி மூச்சு வரை உறு­தி­யாக அதனை சுவா­சித்­தவர். பணி­க­ளையும் பொறுப்­பு­க­ளையும் சுமந்து தன் உடல் ஆரோக்­கி­யத்­தையும் தாண்டி அதற்­காக தன் வாழ்வை அர்ப்­ப­ணித்­தவர். செயல் வீர­ராக இயங்கி பல்­லா­யிரம் இத­யங்­களில் நிலைத்­தி­ருப்­பவர். சிந்­த­னை­க­ளாலும் அறி­வாற்­ற­லாலும் சிறந்த உற­வா­டல்­களால் பல இளை­ஞர்­களின் உள்­ளத்தை அல்­லாஹ்வின் பால் திசை திருப்­பி­யவர்.அல்­குர்­ஆனை கற்­பித்­தவர் இயன்­ற­வரை அதன் போத­னை­களில் வாழ்ந்­தவர் வழி­காட்­டி­யவர் இஸ்­லா­ஹிய்­யாவை அதி­க­ம­திகம் நேசித்­தவர் அதற்­கா­கவே இறு­தி­வரை உழைத்­தவர். நெருக்­க­டி­யான சூழ்நிலை­களில் கூட இறை நிய­தியை திருப்­தியாய் ஏற்றுக் கொண்­டவர்.

சமூ­கத்தில் மட்­டு­மன்றி தனது குடும்­பத்­திலும் மிகச் சிறந்த ஒரு­வ­ராக தனது பணி­களை நிறை­வேற்றியிருக்­கின்றார். அறிவு ஆளுமை ஒழுக்கம் உள்ள ஒரு குடும்­பத்தை நெறிப்­ப­டுத்தி இந்த சமூ­கத்தில் பணி­யாற்­று­வ­தற்­காக அவர்­க­ளையும் செதுக்­கி­யி­ருக்­கின்றார்.தான் பொறுப்­பேற்ற எல்லா நிலை­க­ளிலும் கணி­ச­மான அளவு நல்ல பல விளை­வு­களை தந்­தி­ருக்கின்றார்.

ஸதக்கத்துல் ஜாரியாவாக அவர் கற்பித்தலில் வழிகாட்டலில் உருவாகிய அவரது பிள்ளைகள், உறவுகள், இஸ்லாஹிய்யா மாணவிகள், பயன் பெற்றவர்கள், கற்றவர்கள், சமூகத்தின் பல மட்டங்களில் மனித வளங்களாக தங்களது காத்திரமான பங்களிப்புகளை செய்து வருகின்றார்கள். அதற்கான கூலியையும் நிரப்பமாக அவருக்கு வல்ல ரஹ்மான் வழங்கி வைப்பானாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.