காசாவின் சாம்பலில் இருந்து அழிவியும் அரபு வசந்தமும் பூதமாய் எழுமா?

0 178

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

அல்-­நக்பா என்ற அரபு வார்த்­தைக்கு அழிவி என்று தமி­ழிலே பொருள். 1948ல் இஸ்­ர­வேலின் பயங்­க­ர­வாதக் குழுக்­க­ளாலும் இரா­ணுவப் படை­யி­னாலும் பலஸ்­தீன மக்­க­ளுக்­கெ­தி­ராக அவிழ்த்­து­வி­டப்­பட்ட வன்­செ­யல்­களும் கொலை­களும் சுமார் 750,000 அரபு மக்­களை தமது கிரா­மங்­க­ளையும் இல்­லங்­க­ளையும் விட்டு வெளி­யேற்­றப்­பட்டு அவர்­களை அக­தி­க­ளாக லெப­னா­னிலும் எகிப்­திலும் பலஸ்­தீனின் இதர பகு­தி­க­ளிலும் தஞ்­சம்­புக வைத்­தன. அந்த நிகழ்வே அல்-­நக்பா என்று வர­லாற்றில் இடம்­பெற்­றுள்­ளது. அதே போன்று அரபு வசந்தம் என்­பது 2011ல் எகிப்தின் கைரோவில் (அல்-­கா­ஹி­ராவில்) ஆரம்­ப­மாகி அரபு நாடு­க­ளெங்கும் பர­விய ஜன­நா­யகப் போராட்­டத்தை குறிக்கும். இந்த இரண்டு நிகழ்­வு­க­ளையும் தொடர்­பு­ப­டுத்தி இப்­போது காசாவை குண்டு வீசித் தகர்த்து குழந்­தை­களும் உட்­பட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களைக் கொன்று குவித்து அதனை ஒரு மயா­ன­பூ­மி­யாக்கி இறு­தியில் காசா­வையும் தன்­னுடன் இணைத்­துக்­கொள்ள இஸ்­ரவேல் நடத்தும் இனச்­சுத்­தி­க­ரிப்புப் போரின் விளை­வு­க­ளைப்­பற்றி வாச­கர்­க­ளுடன் சில கருத்­துக்­களை பகிர்ந்து கொள்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம்.

கடந்த மாதம் ஏழாம் திகதி ஹமாஸ் விடு­தலை இயக்கம் இஸ்­ர­வேலை நோக்கி வீசிய ரொக்கற் வெடி­க­ணைகள் நூற்­றுக்­க­ணக்­கான இஸ்­ரே­லிய உயிர்­களைப் பலி கொண்­டன என்­பதை மறுக்­கவும் இல்லை, கொண்­டா­டவும் இல்லை. எந்த ஓர் உயி­ரையும் திட்­ட­மிட்டுக் கொலை­செய்­வதை மனி­தா­பி­மா­ன­முள்ள எவரும் வர­வேற்க முடி­யாது. ஆனால் அந்த நிகழ்­வுதான் இன்­றைய போரை ஆரம்­பித்­தது என்று இஸ்­ரவேல் கூறு­வதை அமெ­ரிக்­காவும் மேற்கு நாடு­களும் ஆமோ­தித்து இஸ்­ர­வே­லுக்கு தன்­னைப்­ப­து­காக்கும் உரிமை உண்டு என்ற அடிப்­ப­டையில் அது விரும்­பி­ய­வாறு காசா மக்­களை கொன்று குவிப்­ப­தற்கும் காசாவை ஒரு மயான பூமி­யாக்கி அந்த நிலத்தை இஸ்­ர­வே­லுடன் இணைப்­ப­தற்கும் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­யதை ஹிட்­லரை உரு­வாக்­கிய அதே மேற்கு நாக­ரி­கத்தின் இன்னோர் அசிங்கம் எனக் கரு­தலாம்.

அதைத்தான் ஐ. நாவின் செய­லாளர் நாய­கமும் சில தினங்­க­ளுக்­குமுன் ஹமாஸின் வெடி­க­ணை­க­ளுக்குப் பின்­ன­ணி­யாக காசாவில் ஐம்­பத்­தாறு வரு­ட­கால இஸ்­ர­வேலின் அடக்­கு­மு­றையும் அதனால் அம்­மக்­களின் மூச்­சு­வி­ட­மு­டி­யாத திண­றலும் உண்டு என்ற கருத்தை ஐ. நா. சபையில் வெளி­யிட்டுச் சர்ச்­சைக்­குள்­ளானார். ஆனால் அதுதான் உண்மை என்­பதை மறுக்க முடி­யாது. இதற்­கி­டையில் இன்­னுமோர் உண்­மை­யையும் மறந்­து­வி­டக்­கூ­டாது. அதா­வது ஹமாஸ் இஸ்­ர­வேலின் உள­வுத்­துறை மோஸாத்தின் ஒரு படைப்பு. பலஸ்­தீன அதி­காரி நாயகம் மஹ்மூத் அப்பாஸ் பலஸ்­தீன அரசு ஒன்றை நிறுவ எடுத்த முயற்­சி­களை முறி­ய­டிப்­ப­தற்­காக அவ­ருக்கு ஓர் எதி­ரி­யாக மோஸாத்­தினால் உரு­வாக்­கப்­பட்­டதே ஹமாஸ் இயக்கம். ஆனால் அரபு நாடுகள் பலஸ்­தீனப் பிரச்­சி­னையை அம்போ எனக் கைவிட்டு இஸ்­ர­வே­லுடன் நல்­லு­றவை ஏற்­ப­டுத்த அமெ­ரிக்­காவின் அனு­ச­ர­ணை­யுடன் முய­லு­கின்ற ஒரு சூழலில், அர­பாத்தின் பலஸ்­தீன விடு­தலை இயக்­கமும் அப்­பாஸின் தலை­மையில் ஊழல்கள் நிறைந்த ஒன்­றாக மாறவே பலஸ்­தீ­னத்­துக்­காகத் தன்னை அர்ப்­ப­ணித்து காசா மக்­களின் இத­யத்தில் இடம்­பி­டித்த இயக்­கமே ஹமாஸ். வளர்த்த கடா மார்பில் பாய்­வ­து­போன்று இன்று அது இஸ்­ர­வேலின் பரம எதி­ரி­யாக மாறி­யதால் இஸ்­ரவேல் தான் பெற்ற குழந்­தை­யையும் அதனை வளர்ப்­போ­ரையும் பூண்­டோடு அழிப்­ப­தற்­காகப் போர் தொடுத்­துள்­ளது. இந்த வர­லாற்றை இன்­றைக்கு இஸ்­ர­வே­லுக்கு ஆத­ர­வ­ளிக்கும் நாடுகள் தந்­தி­ர­மாக மூடி­ம­றைப்­ப­தேனோ?

ஒக்­டோபர் ஏழாம் திக­திக்கு முன்­னரும் பல முறை ஹமாஸ் ரொக்கற் வெடி­க­ணை­களை தெல் அவிவ் நகரை நோக்கி வீசி­யுள்­ளது. அவை ஒவ்­வொன்றும் இஸ்­ர­வேலின் அடக்­கு­மு­றைக்கு எதி­ராக பலஸ்­தீன விடு­த­லையை முன்­வைத்து நடத்­தப்­ப­பட்ட வன்­செ­யல்கள். இன்­றைக்கு இஸ்­ரவேல் அவிழ்த்­து­விட்­டி­ருக்கும் கொலை பாத­கங்­க­ளையும் திட்­ட­மிட்ட அழி­வு­க­ளையும் கைகொட்டி வர­வேற்கும் அமெ­ரிக்­காவும் அதன் அடி­வ­ரு­டி­களும் காசா­மக்­கள்மேல் ஒக்­டோ­ப­ருக்கு முன்னர் வரு­டக்­க­ணக்­காக இஸ்­ரவேல் செய்த கொலை­க­ளையும் அட்­டு­ழி­யங்­க­ளையும் கண்டும் காணா­த­துபோல் இருந்­த­தேன்? அதற்குக் காரணம் இஸ்­ரவேல் முற்­றாகப் பலஸ்­தீ­னத்தை தன் ஆட்­சிக்குள் கொண்­டு­வர வேண்டும் என்­பதை அவர்கள் ஆத­ரிப்­ப­த­னா­லேயே. அமெ­ரிக்க கிறித்­த­வர்­களுள் ஒரு சாரார் இஸ்­ரவேல் முழு பலஸ்­தீ­னத்­தையும் கைப்­பற்றி ஆண்­ட­பி­ன­னர்தான் நபி ஈசா மீண்டும் பூவு­ல­குக்கு வருவார் என்ற ஒரு நம்­பிக்­கையும் உண்டு. ஒரு பக்­கத்தில் பலஸ்­தீ­னத்தை இரண்டு அர­சு­களைக் கொண்ட பிர­தே­ச­மாக ஆக்குவதே எங்­களின் நோக்கம் என்று உலகை ஏமாற்றிக் கொண்டு மறு­பக்­கத்தில் அந்த முழுப்­பி­ர­தே­சத்­தையும் இஸ்­ரவேல்; ஆள­வி­ரும்­பு­வதை ஆமோ­தித்து அது பூர்த்­தி­யா­கு­வ­தற்கு அவர்கள் போடும் நாட­கத்தின் இன்­னொரு காட்­சி­யையே இப்­பொ­ழுது நடை­பெறும் போரிலும் காண்­கிறோம்.

மனி­தா­பி­மானம் கொண்ட கோடிக்­க­ணக்­கான மக்கள் (யூதர்கள் உட்­பட) உலகின் பல பாகங்­க­ளி­லு­மி­ருந்து உட­ன­டி­யாக இப்­போரை நிறுத்­தும்­ப­டியும் காசா மக்­க­ளுக்கு வாழ்­வா­தாரம் வழங்­கும்­ப­டியும் கோரிக்கை விடுக்க, அதற்குப் பதி­லாக, போரை நிறுத்த மாட்டோம் என்று பிர­தமர் நெத்­தன்­யாகு கூறி­யி­ருப்­பதை அமெ­ரிக்­காவும் அதன் சகாக்­களும் சரி­காண்­பதை எந்தப் போர் தர்­மத்தில் சேர்ப்­பதோ? ஒட்­டு­மொத்­தத்தில் காசா­மக்­களை முற்­றாகத் துரத்­தி­ய­டித்தோ கொன்று குவித்தோ அந்த நிலத்தை முற்­றாகக் கைப்­பற்­று­வதே இந்தப் போரின் அந்­த­ரங்கம். ஆனாலும் காசாவின் இனச்­சுத்­தி­க­ரிப்பை பிர­தமர் நெத்­தன்­யாகு ஒரு மதக் கடமை என வலி­யு­றுத்தி அதற்கு பைபி­ளி­லி­ருந்து ஆதா­ரங்­களை காட்­டி­யி­ருப்­பது கவ­னிக்­கற்­பா­லது.

நெத்­தன்­யாகு இந்தப் போரை “இஸ்­ர­வேலின் இரண்­டா­வது விடு­தலைப் போர்” என அழைத்­தி­ருப்­பதை வாச­கர்கள் கவ­னிக்க வேண்டும். முத­லா­வது விடு­த­லைப்போர் 1948ல் நடை­பெற்­றது என்­ப­தையும் அதன் விளை­வாக முத­லா­வது அழிவி இடம்­பெற்­றது என்­ப­தையும் ஏற்­க­னவே அறிந்தோம். அதே­போன்று இரண்­டா­வது விடு­தலைப் போரும் இரண்­டா­வது அழி­வியில் முடி­வ­டையும் என்­பதை இக்­கட்­டுரை திட­மாக நம்­பு­கி­றது. காசா மக்­களை அதன் வடக்­கி­லி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறு இஸ்­ரே­லிய இரா­ணுவத் தலைவன் கட்­ட­ளை­யிட்­டி­ருப்­பது அந்த அழி­வியின் முத­லா­வது கட்­ட­மெனக் கரு­தலாம்.

ஆனால் முத­லா­வது அழி­விபோல் அல்­லாது இரண்­டா­வது அழிவி கோடிக்­க­ணக்­கான அரபு மக்­களை வெயி­யேற்றும் என்­ப­தையும் மறுக்க முடி­யாது. ஏனெனில், ஏறக்­கு­றைய இரண்­டு­கோடி மக்­களை உள்­ள­டக்­கிய பகுதி காசா. இன்று காசா, நாளை மேற்­குக்­கரை என்­ற­வாறு முழு பலஸ்­தீ­ன­முமே ஒரு நாள் அகன்ற இஸ்­ர­வே­லாகும் என்­பதை இக்­கட்­டுரை ஹேஷ்யம் கூறு­கி­றது. முஸ்லிம் மக்­களின் மூன்­றா­வது வணக்­கஸ்­த­ல­மா­கிய அல்-­அக்ஸா பள்­ளி­வா­சலின் அடித்­தளம் அகழ்­வா­ராய்ச்சி என்ற போர்­வையில் இஸ்­ரவேல் நடத்­திய தோண்­டு­தல்­களால் நலி­வ­டைந்­துள்­ள­மை­யையும் வாச­கர்கள் மறந்­து­வி­டக்­கூ­டாது. இரண்­டா­வது அழிவி ஏற்­பட்டால் அதன் அடுத்த விளைவு என்ன என்­பதை இனி அல­சுவோம்.

இந்தப் போரில் இஸ்­ரவேல் அதன் நோக்­கங்­களை எல்லாம் நிறை­வேற்றி வெற்­றி­கண்டால் அது முதற்கண் 19 அரபு நாடு­களின் கையா­லா­காத நிலை­யையும் அதற்­க­டுத்து ஐ. நா. பொதுச்­ச­பையில் அங்கம் வகிக்கும் 48 முஸ்லிம் நாடு­களின் பல­ஹீ­னத்­தையும் அதற்கும் மேலாக உலக சனத்­தொ­கையில் கால்­வா­சி­ய­ளவு வளர்ந்­துள்ள முஸ்லிம் உலகின் பரி­தாப நிலை­யையும் அவ்­வ­வற்றின் நிர்­வாண கோலத்தில் இஸ்­ர­வேலின் வெற்றி படம்­பி­டித்துக் காட்டும். மொத்தம் 48 முஸ்லிம் நாடுகள் ஐ. நா. சபை­யி­லி­ருந்தும்; அவை தமது எண்­ணிக்­கையை ராஜ­தந்­தி­ரத்­துடன் உப­யோ­கித்­தி­ருந்தால் எத்­த­னையோ அழி­வு­களை தடுத்­தி­ருக்­கலாம். உதா­ர­ண­மாக, 2002ல் அன்­றைய அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோர்ஜ் புஷ் ஈராக்கை குண்­டு­வீசித் தகர்க்க உலக நாடு­களின் சம்­மதம் கேட்டு ஐ. நா. சபையில் உரை­யாற்ற எழுந்­த­போது அத்­தனை முஸ்லிம் நாடு­களும் அமை­தி­யாக வெளி­ந­டப்புச் செய்­தி­ருந்தால் ஜனா­தி­பதி அவ­ரது போர் நட­வ­டிக்­கையைச் சற்றுப் பின்­போட்­டா­வது இருந்­தி­ருக்­க­மாட்­டாரா? ஆனால் முஸ்லிம் நாடு­க­ளி­டையே ஒற்­றுமை என்­பது கிடை­யவே கிடை­யாது. மத­வா­ரி­யா­கவும் இன­வா­ரி­யா­கவும் குழு­வா­ரி­யா­கவும் பிள­வு­பட அந்­தப்­பி­ளவை வல்­ல­ர­சுகள் தமது ஏகா­தி­பத்­தியத் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக மிகத் தந்­தி­ர­மாகப் பயன்­ப­டுத்­து­கின்­றன. அத­னா­லேதான் பலஸ்­தீ­னமும் அரபு நாட்டு அர­சு­களின் கைக­ளை­விட்டும் விலகி ஹமாஸ்­போன்ற போராட்டக் குழுக்­களின் கைகளிற் சிக்கி இன்று இஸ்­ர­வேலின் குண்­டு­வீச்­சுக்கு ஆளாகி அழி­கின்­றது. ஆனால் இரண்­டா­வது அழி­வியின் கோலத்தை சாதா­ரண அரபு மக்கள் நேரிலே பார்க்­கும்­போது அவர்­களின் மனோ நிலை எவ்­வாறு மாறுமோ? அந்த மாற்றம் இரண்­டா­வது அரபு வசந்­தத்­துக்கு வழி­வ­குக்­காதா? இந்தக் கேள்­விக்­கான விடையைச் சற்று ஆழ­மாக நோக்­குவோம்.

அரபு நாடு­களைப் பொறுத்­த­வரை அவற்றின் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் மக்­க­ளுக்­க­கு­மி­டையே விரிந்த இடை­வெ­ளி­யுண்டு. ஏனெனில் இந்த ஆட­சி­யா­ளர்கள் மக்­களால் தெரி­வு­செய்­யப்­ப­ட­வில்லை. மன்­னர்­களும் சுல்­தான்­களும் அமீர்­களும் இரா­ணுவத் தலை­வர்­களும் என்று குடும்ப வாரி­யா­கவும் படை­பலம் மூல­ம­ாகவும் ஆட்­சி­செய்யும் சர்­வா­தி­கா­ரிகள். ஆவர்­களின் ஆட்­சி­யைப்­பா­து­காக்கப் படை­ப­லமும் வல்­ல­ர­சு­களின் தயவும் இருந்தால் போதும் என்­பதே அந்த ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் சூத்­திரம். அதனால் அவர்­க­ளது ஆட்­சி­யின்மேல் மக்­க­ளது வெறுப்பு வெளிப்­பட்­டுக்­கொண்டே இருக்­கி­றது. அவ்­வாறு வெளி­பட்­டதன் விளை­வுதான் 2011ல் ஏற்­பட்ட அரபு வசந்தம். அந்தப் புரட்­சியை சில நாடுகள் படை­கொண்டு முறி­ய­டித்­தன. எண்ணெய் வள நாடு­களோ பணத்தை வீசி அடக்­கின. ஆனால் மக்­களின் வெறுப்பு இன்னும் புகைந்­து­கொண்டே இருக்­கி­றது. இன்று இஸ்­ரவேல் பலஸ்­தீ­னத்தில் நடத்தும் கொலை­வெறி ஆட்­டத்­தையும் அதைத்­த­டுக்க வலு­வி­ழந்து நிற்கும் அர­பு­நாட்டுத் தலை­வர்­க­ளையும் அரபு மக்கள் மட்­டு­மல்ல ஏனைய உலக முஸ்­லிம்­களும் ஏமாற்­றத்­துடன் அவ­தா­னித்­த­வண்ணம் இருக்­கின்­றனர். இஸ்­ர­வே­லு­ட­னான பொரு­ளா­தார வர்த்­தக ராஜ­ரீகத் தொடர்­பு­களை அரபு நாடுகள் துண்­டிக்க வேண்­டு­மென மக்கள் விரும்ப ஆட்­சி­யா­ளர்­களோ அமெ­ரிக்­கா­வு­டனும் இஸ்­ர­வே­லு­டனும் தேன்­நி­லவு கொண்­டாட விளை­கின்­றனர். கேவலம், ஒரு சிறிய நாடான பொலி­வி­யா­வுக்­குள்ள துணிவும் இவர்­க­ளுக்குக் கிடை­யாதா?

ஒக்­டோபர் 7ஆம் திகதி தொடக்கம் ஒவ்­வொரு பள்­ளி­வா­சல்­க­ளிலும் ஐவேளைத் தொழு­கையின் பின்னர் தெய்வ அரு­ளுக்­காக முஸ்­லிம்கள் கண்­ணீ­ருடன் கையேந்­தி­ய­வண்ணம் இருக்கின்றனர். வெள்ளிக்கிழமை குத்பாக்களும் பலஸ்தீன மக்கள் படும் பரிதாபத்தைப்பற்றியே பிரஸ்தாபிக்கின்றன. வாரமுடிவு நாட்களில் உலகெங்கும் பலஸ்தீன மக்களுக்காக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சூழலில் தங்களது நாடுகளின் ஆட்சிமுறையில் மாற்றம் ஏற்படாதவரை பலஸ்தீனப் பிரச்சினைக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம்களின் ஈடேற்றத்துக்கும் வழிபிறக்காது என்ற எண்ணம் அரபு மக்களிடையே தோன்றாதா? காசாவிலிருந்து ஆரம்பமாகும் இரண்டாவது அழிவியை அவர்கள் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் புதினத் தாள்களிலும் கண்டும் கேட்டும் வாசித்தும் அறியும்போது அது இன்னுமொரு அரபு வசந்தத்துக்கு வழிவகுக்காதா? அந்த வசந்தம் ஏற்கனவே பிறந்த வசந்தம்போல் அமைதியானதாக இருக்குமென்று யாராலும் உறுதி கூற முடியுமா?

எந்த இனமும் தன்னைத்தானே மாற்றாதவரை இறைவனும் மாற்ற மாட்டான் என்ற திருமறையின் போதனையை இன்னும் முஸ்லிம்கள் உதாசீனம் செய்தால் அது நபி பெருமானாருக்கு அவர்கள் செய்யும் துரோகம் என்றே இக்கட்டுரை கருதுகின்றது.

“எந்த இனத்தின் இள உள்ளம் எஃகாய்மாறி இருந்திடுமோ
அந்த இனத்துக்கேன் வாளும் அதனைத் தாங்கும் கோழைகளும்?”
(அல்லாமா இக்பால்)

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.