புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்

0 160
  • அமைதியின்மைக்கு இடமளிக்காதீர் என ஜனாதிபதி
    ரணில் மேற்கு நாடுகளிடம் கோரிக்கை
  • பாகிஸ்தான் ஜெனீவாவில் கொண்டுவரும் பிரேரணைக்கு இலங்கை ஒத்துழைக்கும் என்கிறார்

 

சுவீ­டனில் புனித குர்ஆன் எரிக்­கப்­பட்­டதை தாம் வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாகத் தெரி­வித்த ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, கருத்துச் சுதந்­திரம் என்ற போர்­வையில் அமை­தி­யின்­மைக்கு இட­ம­ளிக்க வேண்டாம் என்றும், தெற்கின் பூகோள விழு­மி­யங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கு­மாறும் மேற்­கத்­தேய நாடு­களைக் கேட்டுக் கொண்டார்.

இரத்­தி­ன­புரி புதிய நீதி­மன்ற கட்­டடத் தொகு­தியை நேற்­று­முன்­தினம் பிற்­பகல் திறந்து வைத்து உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க இதனைக் குறிப்­பிட்டார். இங்கு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க மேலும் குறிப்பிடுகையில்,
நமது நாட்டின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தின்­படி, மக்கள் இறை­யாண்­மையும், சட்­டத்தின் ஆட்­சியும் கைகோர்த்துச் செல்­கின்­றன. ஒரு­போதும் அதி­லி­ருந்து விலக வழி­யில்லை.

அப்­ப­டி­யானால் அனை­வரும் அதற்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும். நமது பிர­தம நீதி­ய­ரசர் கூறி­யது போல், 200 ஆண்­டு­க­ளுக்கும் மேலான பழ­மை­யான நீதி­மன்ற முறையே எம்­மிடம் உள்­ளது. அப்­படிப் பார்க்கும் போது ஆசி­யா­வி­லேயே மிகப் பழ­மை­யான சட்டக் கட்­ட­மைப்பு இலங்­கை­யி­லேயே உள்­ளது. நீதி அமைச்­சரும், பிர­தம நீதி­ய­ர­சரும் குறிப்­பிட்­டது போன்று சட்­டத்தின் தாமதம் இன்று பெரும் பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது. அதற்­கான தீர்­வு­களை உட­ன­டி­யாகக் காண வேண்டும். ஒரு நாடு முன்­னேற வேண்­டு­மானால், சட்­டத்தில் தாமதம் இருக்கக்கூடாது.

இன்று இந்­த­நி­கழ்வு மதக்­கி­ரி­யை­க­ளுடன் ஆரம்­ப­மா­னது. இது நம் நாட்டில் உள்ள மதப்­பற்றை மட்­டு­மல்ல, மதச் சுதந்­திரம் ஒரு அடிப்­படை உரி­மை­யாக பாது­காக்­கப்­ப­டு­வ­தையும் எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

மதத்தைப் பின்­பற்றும் உரிமை தொடர்­பான முழு கருத்­தி­யலும் தற்­போது சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அண்­மையில் சல்வான் மோமிகா (Salwan Momika) என்­பவர் சுவீ­டனில் உள்ள துருக்கி தூத­ரகம் முன் குர்­ஆனை எரிக்க அனு­மதி கோரி நீதி­மன்­றத்தை நாடினார். பொலிஸார் அதற்கு அனு­மதி மறுத்­தாலும் அது, கருத்து தெரி­விக்கும் உரிமை என்று உயர்­நீ­தி­மன்றம் அறி­வித்­தி­ருந்­தது.

மதச் சுதந்­தி­ரத்தின் அடிப்­ப­டை­யிலே பொலிஸார் செயல்­பட்­டார்கள். அது கருத்து தெரி­விக்கும் உரிமை என்று உயர் நீதி­மன்றம் அறி­வித்­தது. புனித குர்ஆன் எரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­ப­கு­தியில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. சுவீ­ட­னுக்கு அனைத்து நாடு­க­ளாலும் அழுத்தம் விடுக்­கப்­பட்­டது.

அனை­வரும் கண்­டனம் தெரி­வித்­தனர். இஸ்ரேல் கூட இதை செய்­யப்­ப­டக்­கூ­டாத ஒன்று என்று கூறி­யது. இது ஏபி­ர­காமின் கடவுள் பற்­றிய புனித நூல் என்றும், இதை அவ­ம­திக்கக் கூடாது என்றும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

புனித குர்­ஆனை எரிப்­பது அரு­வ­ருக்­கத்­தக்க மற்றும் அவ­ம­ரி­யா­தைக்­கு­ரிய மற்றும் தூண்­டி­விடும் செயல் என்றும் சுவீடன் தெரி­வித்­துள்­ளது. ஆனால், கருத்துச் சுதந்­திரம், எதிர்ப்பு தெரி­விக்கும் உரிமை ஆகி­யவை அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­திற்கு அமைய பாது­காக்­கப்­பட வேண்டும் என்றும் கூறி­யது.

இந்த பதிலைத் தொடர்ந்து ஒரு சில மேற்­கத்­தேய அர­சாங்­கங்கள் இது கருத்துச் சுதந்­திரம் என்று கூறின. அவ்­வாறு இதனை கருத்துச் சுதந்­தி­ரத்தின் கீழ் கொண்டு வந்­தனர். இதன் கார­ண­மாக பாகிஸ்தான் தற்­போது ஜெனிவா மனித உரி­மைகள் பேர­வைக்கு சென்­றுள்­ளது.

இது சர்­வ­தேச சட்­டத்தை மீறும் செய­லாகும் என பிரே­ரணை சமர்­ப்பிக்­கப்­பட்­டுள்­ள­தோடு 13 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஜெனீ­வாவில் இது­கு­றித்து கவனம் செலுத்­தப்­பட உள்­ளது. இப்­போது எழும் கேள்வி இதுதான். இது மதச் சுதந்­தி­ரத்தை மீறு­வ­தாக நாம் அனை­வரும் கரு­து­கிறோம். ஆனால் இதை கருத்து சுதந்­தி­ரத்தின் கீழ் கொண்­டு­வர முயற்சி நடக்­கி­றது. எல்­லா­வற்­றையும் கருத்துச் சுதந்­தி­ரத்தின் கீழ் கொண்டு வர முடி­யாது. அதற்கு ஒரு வரை­யறை இருக்க வேண்டும்.

இந்த பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டால் அது மேற்­கு­லக நாடு­க­ளுக்கு பின்­ன­டை­வாக அமையும் என சில அரச சார்­பற்ற சர்­வ­தேச நிறு­வ­னங்கள் கூறு­கின்­றன. இது மேற்கு அல்­லது கிழக்கு அல்­லது வடக்கு அல்­லது தெற்கு பிரச்­சினை அல்ல. இது மதத்தைப் பின்­பற்றும் உரிமை பற்­றிய கேள்­வி­யாகும்.

நான் முஹம்­மது நபியைப் பின்­பற்­று­பவன் அல்ல. ஆனால் திருக்­குர்ஆன் மிகவும் மதிப்­பு­மிக்க நூல் என்று நான் நினைக்­கிறேன். பகவத் கீதை மற்றும் பைபி­ளையும் நாம் அதே­போன்று பயன்­ப­டுத்­தலாம். இதே­போன்று, தம்ம பதத்­திலும் அல்­லது திரி­பி­ட­கத்­திலும் பய­னுள்ள விட­யங்­களைக் கண்­ட­றியும் பௌத்தர் அல்­லா­த­வர்­களும் இருக்­கின்­றனர்.
எனவே நாம் அனை­வரும் இதை மதத்தின் மீதான தாக்­கு­த­லாகக் கரு­து­கிறோம். ஆனால் ஒரு சில மேற்­கத்­தேய நாடு­களின் கருத்­துப்­படி இது ஒரு கருத்துச் சுதந்­தி­ர­மாகும். ஏனென்றால், அவர்கள் குழப்­பத்தை மறைக்க கருத்துத் தெரி­விக்கும் எண்­ணக்­க­ருவை விரி­வு­ப­டுத்த முயற்­சிக்­கி­றார்கள்.

அதனால் மேற்­கத்­தேய விழு­மி­யங்­களை பரப்­பு­வ­தற்­காக கருத்துச் சுதந்­தி­ரத்தை பயன்­ப­டுத்­திக்­கொள்­கிறோம் என்­பதே அவர்­க­ளது நிலைப்­பா­டாக உள்­ளது. அதேபோல் அந்த விழு­மி­யங்­களை உலகம் முழு­வதும் பரப்ப வேண்டும் என்றும் அவர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். நாம் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஜன­நா­ய­கத்தை மதிப்­ப­வர்கள். குறித்த விட­யத்­துடன் தொடர்­பு­டை­ய­தா­கவே மேற்­படி விட­யங்­களை குறிப்­பி­டு­கிறேன். இதன்­போது இலங்கை தொடர்பில் நான் எதுவும் பேசப்­போ­வ­தில்லை. ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லா­ள­ருக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌­ஷ­விற்கும் இடையில் கைசாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்தம் தொடர்­பி­லான விட­யங்­களை நாம் நிறை­வேற்­ற­வில்லை என்­ப­தையும் நான் ஏற்றுக் கொள்­கிறேன்.

அதனால் எமது நிலைப்­பாடு எது­வாக இருப்­பினும் பொறுப்­பு­களை நிறை­வேற்­றிக்­கொண்டு முன்­னேறிச் செல்ல வேண்டும். அதனால் ஐக்­கிய நாடுகள் சபை ஏன் அமைதி காக்­கி­றது என்­பதே எமது கேள்­வி­யாகும். அந்த சபை­யினால் இது­கு­றித்த அறிக்­கை­யொன்று வெளி­யி­டப்­ப­டாமல் இருப்­பதன் நோக்கம் என்ன? எதற்­காக வாக்­கெ­டுப்­பொன்று வரும் வரையில் காத்­தி­ருக்க வேண்டும்? இது அனை­வ­ருக்கும் முக்­கி­ய­மான விடயம் என்ற வகையில் நாம் எவ்­வா­றான விழு­மி­யங்­களை பின்­பற்ற வேண்டும் என்­பதை தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

எமது நீதி­மன்­றத்­திற்கு அதி­காரம் மற்றும் இறைமை என்­பன மக்­க­ளி­டத்­தி­லி­ருந்தே கிடைக்­கின்­றன. இருப்­பினும் ஐக்­கிய நாடுகள் சபையின் உறுப்­பி­னர்கள் என்ற வகையில் நாம் மனித உரி­மைகள் தொடர்­பி­லான பிரே­ர­ணையை பின்­பற்ற வேண்டும். அவ்­வா­றாயின் நாம் எவ்­வா­றான விழு­மி­யங்­களை கடைப்­பி­டிக்க வேண்டும். நாம் தற்­போது வரையில் ஐக்­கிய நாடுகள் சபை மனித உரி­மைகள் பேர­வையின் அனைத்து நிய­தி­க­ளையும் பின்­பற்­றி­யுள்ளோம். ஆனால் ஒரு பிரச்­சினை உள்­ளது. அனைத்து விட­யங்­களும் அவர்­க­ளு­டைய நிலைப்­பாட்டின் மீதே தங்­கி­யுள்­ளன.

உங்­க­ளு­டைய கடைப்­பி­டித்­த­லுக்­கான சுதந்­தி­ரத்தை கேள்­விக்­குட்­ப­டுத்த முடி­யாது. அதேபோல் அதற்கு வேறு­வி­த­மாக அர்த்தம் கூறிக்­கொண்டு கருத்துச் சுதந்­திரம் என்ற பெயரில் அதனை தடுக்­கவும் முடி­யாது. ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஜனா­தி­ப­தியும் கருத்துச் சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்த நிலை­யி­லேயே மனித உரி­மைகள் பிர­க­டனம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அவரின் உரையில் இரண்­டா­வது விட­ய­ம் “ஒவ்­வொ­ரு­வரும் தமக்கு விருப்­ப­மான கட­வுளை வணங்­கு­வ­தற்கு சுதந்­திரம் உள்­ளது.” என்­ப­தாகும். ஆனால் மனித உரிமை பிர­க­ட­னத்தில் மதம் – வழி­பா­டுகள் என்ற விட­யங்கள் இரு பகு­தி­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன.

ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­ப­தி­யான ரூஸ்­வேல்டின் கூற்­றுப்­படி, ஒரு­வ­ரு­டைய பின்­பற்றும் உரி­மையை முழு­மை­யாக மறுக்­கப்­பட்­டுள்­ள­தென சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இது கருத்துச் சுதந்­தி­ர­மாக பார்க்­கப்­படும் எனில் நாம் வர­லாற்றை மீண்டும் எழுத வேண்­டிய நிலைமை உரு­வாகும். அனைத்து யூத புத்­தகங்­க­ளையும் வழி­பாட்டுத் தலங்­க­ளையும் எரித்த ஹிட்­லரை நோபல் பரி­சுக்கு தகு­தி­யா­ன­வ­ராக அறி­விக்க நேரிடும். எனவே, மேற்­படி இரு விட­யங்­களில் எதனை செய்ய வேண்டும் என்­பதை நாமே தீர்­மா­னிக்க வேண்டும்.

அதனால் வியா­ழக்­கி­ழமை என்ன நடக்கப் போகி­றது என்­பதை நாம் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும். அழுத்­தங்கள் இன்றி அவர்கள் மேற்­படி விட­யத்தை கருத்துச் சுதந்­திரம் என்று சுட்­டிக்­காட்­டினால் தெற்கு மற்றும் மேற்­கத்­தேய செல்­வந்த நாடு­க­ளுக்கு மத்­தியில் முரண்­பா­டுகள் உரு­வாகும்.

அதேபோல், மேற்­படி விட­யத்தை, பின்­பற்றும் உரிமை என அவர்கள் சுட்­டிக்­காட்­டினால் அதற்­கான வரை­ய­றை­க­ளையும் குறிப்­பிட வேண்டும். இது கருத்துச் சுதந்­திரம் என்­பதை போல மக்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டு­வது தொடர்­பி­லான பிரச்­சி­னை­யு­மாகும். இதன்­போது எவ்­வா­றான விட­யங்­களை கடைப்­பி­டிக்க வேண்டும். இது தொடர்பில் நாம் பொது­ந­ல­வாய நாடு­க­ளுடன் பேச வேண்­டுமா என எமது வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்­ச­ரி­டத்­திலும் வின­வினேன். அத­னை­ய­டுத்து நீதி அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ளும் முன்­பாக பொது­ந­ல­வாய சபையின் செய­லா­ள­ருடன் கலந்­து­ரை­யா­டு­மாறு கூறினேன்.

பொது­ந­ல­வாய சபை, மனித உரி­மைகள் தொடர்­பி­லான பெரும் பங்கை ஆற்றும் என நம்­பு­கிறேன். இதனை தனி­யொரு தரப்­பிற்கு மாத்­திரம் வழங்­கினால் அது அர­சியல் மய­மா­கி­விடும். இது சகல மக்­க­ளி­னதும் உரி­மை­யாக வேண்டும். இது பெரும் சவா­லாகும்.
எனவே மனித உரி­மைகள் பேரவை மக்­களின் கடைப்­பி­டிக்கும் உரி­மை­களை வரை­ய­றுக்க வேண்­டுமா, வேண்­டாமா என்­பதை தீர்­மா­னிக்க வேண்டும். இது ஒரு ஆரம்பம் மாத்­தி­ரமே.

எவ்­வா­றா­யினும் தெற்­கி­லுள்ள நாடு­களின் தனித்­து­வ­மான பெறு­ம­திகள், தெற்­கி­லுள்ள நாடு­களின் விழு­மி­யங்கள் மற்றும் உரி­மை­க­ளுக்கு மனித உரி­மைகள் பேரவை மதிப்­ப­ளிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதனைத் தடுப்­ப­தற்கு அவ­சி­ய­மான அனைத்து முயற்­சி­க­ளையும் புறக்­க­ணிக்­கு­மாறு நான் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்­ச­ருக்கு அறி­வு­றுத்­தி­யுள்ளேன். பொது­ந­ல­வாய நாடுகள் அமைப்பின் அங்­கத்­தவர் என்ற வகையில் பாகிஸ்­தானின் நிலைப்­பாட்­டிற்கு நாம் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.
“அனைத்து மதத் தலை­வர்­க­ளையும் கௌர­வ­மாக நடத்­துங்கள்” என புத்த பெருமான் கூறி­யுள்ளார். பொது­ந­ல­வாயச் சபை­யிலும் குறித்த விட­யத்­தினை ஆராய இருக்­கிறோம்’’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன மற்றும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் வைபவத்தில் உரையாற்றினர்.

ஸ்ரீபாதஸ்தானத்தின் தலைவர், இரத்தினபுரி மகா திசாவின் பிரதான சங்கநாயக்க, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தர், பெல்மடுல்ல ரஜமஹா விகாராதிபதி வண. பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர் உள்ளிட்ட இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, தலதா அத்துகோரல, வாசுதேவ நாணாயக்கார, காமினி வலேபொட, அகில எல்லாவல உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மற்றும் மேல் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற, நீதவான் நீதியரசர்கள் உட்பட சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.