அரசியல் சதிக்குள் சிக்கி தவிக்கும் தனியார் சட்டம்!

0 188

எஸ்.என்.எம். சுஹைல்

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த விவ­காரம் நீண்ட கால­மாக இழு­பறி நிலை­யி­லேயே இருக்­கி­றது. கிட்­டத்­தட்ட 14 வரு­டங்­க­ளுக்கு மேலாக திருத்த விட­யத்தில் நீடிக்கும் தொடர் முரண்­பா­டுகள் கார­ண­மாக இவ் விவ­காரம் கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது. சோனக அர­சியல் போட்­டி­களும் கருத்து முரண்­பா­டு­களும் விடய தெளி­வின்­மை­யும் நழுவல் போக்­கு­க­ளுமே இந்த இழுத்­த­டிப்­பு­க­ளுக்கு பிர­தான காரணம் என்றே கூறி­யாக வேண்டும்.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்­டத்­தி­லுள்ள சில சரத்­து­களை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை பெண்கள் தரப்பில் மட்­டு­மல்­லாது புத்­தி­ஜீ­விகள் மட்­டத்­திலும் நீண்­ட­கா­ல­மாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

முன்னாள் நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொட 2009 ஆம் ஆண்டு தனியார் சட்ட திருத்­திங்­களை பரிந்­துரை செய்­வ­தற்­காக குழு­வொன்றை நிய­மித்தார். முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழு சுமார் 9 வருடங்களின் பின்னர் தனது அறிக்கையை இரு தரப்பாக பிளவுபட்டே அப்போதைய நீதியமைச்சரிடம் கையளித்தது.
கடந்த 14 வருடத்துக்குள், நீதி­ய­மைச்­சர்­க­ளாக அதா­வுத சென­வி­ரத்ன, ரவூப் ஹக்கீம், விஜ­ய­தாச ராஜ­பக்ஷ, தலதா அத்­து­கோ­ரல, நிமல்­சி­றி­பால டீ சில்வா, அலி சப்ரி என பலரும் பதவி வகித்­துள்­ளனர். மீண்டும் விஜ­ய­தாச ராஜ­பக்ச நீதி­ய­மைச்சை பொறுப்­பேற்­றி­ருக்­கிறார்.

இந்த இழுத்­த­டிப்­பு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்து உட­ன­டி­யாக திருத்­தத்தை மேற்கொள்ள வேண்டும் என தற்­போ­தைய நீதி­ய­மைச்சர் ஆர்வம்காட்டுவதை காண முடிகிறது.

குடுமிச் சண்டை
சோனக அர­சி­யல்­வா­தி­களின் அர­சியல் குடுமிச் சண்­டை­களும் இந்த சட்ட திருத்­தத்தை மேற்­கொள்­வதில் பெரும் தடையாக இருக்­கி­றது எனலாம். குறிப்­பாக அண்மையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தை மையப்­ப­டுத்தி இரு முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது கடும் வாய் தர்க்­கத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் இவ்­வி­வ­காரம் குறித்த கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. மதியம் 1 மணிக்கு இது பற்றி கலந்துரையாடுவதற்­காக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் 2.30 மணிக்கு பின்­னரே இக்­கூட்டம் இடம்­பெற்­றது.
இக்­கூட்­டத்தின் போது முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாட் பதி­யு­தீ­னுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது.

ஒரு­கட்­டத்­தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம், “நான் உனக்கு டிக்கட் தந்­தி­ருக்­கா­விடின் நீ ஒரு மினிஸ்­ட­ரா­கவோ எம்.பி.யாகவோ இருந்­தி­ருக்க மாட்டாய்” என ரிஷாட் பதி­யு­தீனை நோக்கி மிகக் கடு­மை­யாக கூறி­யி­ருந்தார். இதற்கு ரிஷாடும் கடம் தொனியில் பதிலளித்திருந்தார். தொடர்ச்­சி­யாக இரு­வரும் கார­சா­ர­மாக வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­­டனர்.

மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் பாரா­ளு­மன்றில் இடம்­பெற்ற தனியார் சட்ட விவ­காரம் குறித்­த கலந்­து­ரை­யா­ட­லின்­போதும் இது­போன்று இரு­வ­ருக்­கு­மி­டையே வாய்த்­த­ர்க்கம் முற்றியதாக அறி­யக்­கி­டைக்­கி­றது. பாரா­ளு­மன்றில் ஏனைய அர­சி­யல்­வா­தி­கள் இதை பார்த்து ஏள­ன­மாக பேசிக்­கொண்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இரு­வ­ருக்­கு­மி­டை­யிலான அர­சியல் போட்டி முஸ்லிம் சமூக விவகாரங்களை பல்வேறு விதங்களிலும் பாதித்து வருகிறது. அது இப்போது தனியார் சட்ட விவகாரத்தில் வந்து நிற்கிறது.

ஹக்­கீமின் ஆதங்கம்?
தனக்கும் உலமா சபைக்கு மிடையில் கருத்து முரண்­பா­டு­களை பூதா­க­ர­மாக்­கு­வதன் பின்­ன­ணியில் ரிஷாட் பதி­யு­தீன்தான் இருப்­ப­தாக ஹக்கீம் சந்­தே­கிக்கிறார். இது­கு­றித்து, இன்­னு­மொரு அர­சி­யல்­வா­தி­யிடமும் பேசி­யி­ருக்­கிறார் ஹக்கீம்.
வழக்கம் போன்றே இந்த விவ­கா­ரத்தை அடுத்து வரும் தேர்­தல்­களில் பேசு­பொ­ரு­ளாக்கி ஆதாயம் தேட இவர்கள் முனை­கி­றார்­களா என்ற கேள்வி எழு­வதைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

அர­சியல் விளை­யாட்டு
உலமா சபை இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் மார்க்க விட­யங்­க­ளுக்கு தலைமை வகிக்கும் ஸ்தாபனம் என்ற வகையில் அதனுடன் முரண்படுவது தேர்தலில் தாக்கம் செலுத்தும் என முஸ்லிம் அரசியல்வாதிகள் கணிக்கின்றனர். இந்­நி­லையில், பிர­தான முஸ்லிம் கட்­சியின் தலை­மைக்கும் அந்த அமைப்­புக்­கு­மான முரண்­பாடு தேர்தல் அர­சி­யலில் தாக்­கத்தை செலுத்தும், அதனை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏனைய அரசியல் சக்திகள் கருதக்கூடும்.

ஹக்கீமும் உலமா சபையும்
பெண்கள் காதி விட­யத்தில் ஹக்கீம் தனது நிலைப்­பாட்டை நேர­டி­யாக இது­வரை வெளிப்­ப­டுத்­த­வில்லை. என்­றாலும், அவர் பெண் காதி நிய­ம­னத்தையும் ஏனைய சில முற்போக்கான திருத்தங்களையும் ஆதரிக்கிறார். இவற்றை அவர் பகிரங்கமாக முன்வைக்காவிடினும் அவ்வப்போது தனது உரைகளில் மாற்றங்களை வலியுறுத்தி வருகிறார்.

இதன் தொடரில்தான், ஹக்கீம் உலமா சபை­யுடன் கருத்து முரண்­பாட்டு நிலைமை ஏற்­பட கார­ண­மா­கி­யது.

பெண் காதி நியமனம் தொடர்பில் முஸ்லிம் எம்.பி.க்களுடனான சந்திப்பு ஒன்றில் உலமா சபை பிரதிநிதிகள் தெரிவித்த கருத்தை ஊடக நேர்காணல் ஒன்றில் ஹக்கீம் வெளிப்படுத்தினார். எனினும் அது உலமா சபையின் நிலைப்பாடு அல்ல என்றும் அக்கருத்தை ஹக்கீம் வாபஸ் பெற வேண்டும் என்றும் உலமா சபை அறிக்கை விட்டது. எனினும் தனது கருத்தில் ஹக்கீம் உறுதியாக இருப்பதுடன் இது தொடர்பில் உலமா சபையுடன் பேசுவதற்கு தயாராகவுள்ளதாகவும் அறிவித்தார். இந்த இடத்தில்தான் உலமா சபையையும் தன்னையும் மோதவிடுவதன் பின்னணியில் ஒரு தீய சக்தி இருப்பதாக ஹக்கீம் குறிப்பிட்டார். அந்த சக்தி யார் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

எனினும் ரவூப் ஹக்­கீம் கடந்த 14 வருட காலப்­ப­கு­திக்கு கிட்­டத்­தட்ட 50 மாதங்கள் (4 வரு­டங்­களும் இரண்டு மாதங்­களும்) நீதி­ய­மைச்சு பத­வியை வகித்­துள்ளார். எனினும், இக் காலப்­ப­கு­தியில் தனது அதிகாரத்தைப் பாவித்து அவர் இந்த திருத்தத்தை மேற்கொள்ள முனையவில்லை.

அதாவின் சாடல்
ஹக்கீம் நீதி­ய­மைச்­ச­ராக இருக்­கும்­போது தனியார் சட்ட விவ­கா­ரத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைத்து நல்ல தீர்வை வழங்­கி­யி­ருக்க முடியும், ஆனால் அதை செய்­ய­வில்லை என பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற முஸ்லிம் எம்.பிக்க­ளுக்­கி­டை­யே­யான சந்­திப்பில் முன்னாள் அமைச்சர் அதா­வுல்லா சாடி­யி­ருந்தார்.

இவ்­வாறு ஹக்கீம் மீது விரல் நீட்­டு­வ­தற்கு அதா­வுல்லாஹ் தகு­தி­யா­ன­வரா என்ற கேள்வி எழு­கி­றது. அதா­வது, 2005 ஆம் ஆண்டு முதல் 2015 வரை மஹிந்த அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்த அதா­வுல்­லாஹ்வால், அக்­க­ரைப்­பற்று நுரைச்­சோ­லை­யி­லுள்ள சுனாமி வீட்­டுத்­திட்­டத்தை மக்­க­ளுக்கு பகிர்ந்தளிக்க முடி­ய­வில்லை. அவ­ரு­டைய பிர­தே­சத்தில் நீண்­ட­கால பிரச்­சி­னை­யாக இருக்கும் இந்த வீட்­டுத்­திட்ட விவ­கா­ரத்­துக்கு தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத அதா, ஹக்­கீமை சாடு­வதில் எப்­படி நியாயம் கற்­பிக்­கப்­போ­கிறார்.

ஹக்கீம் இந்த விட­யத்தில் நழுவல் பேக்கை கையாள்­வ­துபோல், அதா நுரைச்­சோலை வீட்­டுத்­திட்ட விட­யத்தில் என்ன செய்தார், ரிஷாட் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் எடுத்­த காத்­தி­ர­மான நட­வ­டிக்கை என்ன என்ற கேள்­வி­களும் எழாமல் இல்லை.

தெளி­வின்மை
முஸ்லிம் தனியார் சட்ட விவ­கா­ரத்தில் ஹக்­கீமும் அமைச்சர் அலி சப்­ரியும் தமக்கென ஒரு நிலைப்­பாட்டைக் கொண்டுள்ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ரிஷாத் பதியுதீனும் சில மாற்றங்களை செய்யக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளார். ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு­வாக நின்று ஒரு முடிவை வெளி­யிட்­டாலும் இந்த விடயதானம் தொடர்பில் தெளி­வுடன் இருக்­கி­றார்­களா? யாரு­டைய வழி­காட்­டலில் அவர்கள் இந்த தனியார் சட்ட திருத்த அறிக்­கையில் கையொப்­ப­மிட்­டனர் என்­ப­தற்கு அவர்­க­ளிடம் தனித்­த­னி­யாக கேள்வி எழுப்­பினால் விடை கிடைக்கும்.

சட்டம் இயற்றும் பாரா­ளு­மன்­றத்தில் சட்­டத்தை பற்றிய விளக்­கமே இல்­லாத பலரும் அங்கம் வகிப்­ப­து சமூ­கத்­திற்கு எவ்வளவு பாதகமானது என்பதை இந்த விடயத்தில் புரிந்து கொள்ளலாம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.