முஸ்லிம்களின் பேரீத்தம்பழ அரசியல்

0 292

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

காத்­தான்­கு­டியின் இவ்­வ­ருடப் பேரீத்­தம்­பழ அறு­வடை கிழக்­கி­லங்­கையின் ஆளுனர் சகிதம் கோலா­க­ல­மாக நடை­பெற்­றுள்­ளதை ஊட­கங்கள் புகைப்­ப­டங்­க­ளுடன் வெளி­யிட்­டுள்­ளன. காத்­தான்­கு­டியின் பெரு­மையை வருடா வருடம் பேரீத்த மரங்கள் பறை­சாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன. வாழ்க இப்­ப­ழங்கள்! எனினும் இது தொடர்­பாக இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் வர­லாற்­றுடன் பேரீத்­தம்­ப­ழங்கள் எவ்­வாறு பிணைந்­துள்­ளன என்­ப­து ­பற்­றியும் பொது­வா­கவே உலக முஸ்­லிம்­க­ளுக்கும் பேரீத்தம் பழங்­க­ளுக்கும் இடை­யே­யுள்ள காலத்தால் அழி­யாத உற­வு­பற்­றியும் சில சிந்­த­னை­களை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்ள இக்­கட்­டுரை விரும்­பு­கி­றது.

காத்­தான்­கு­டிக்குப் பேரீந்து ஒரு நூதன மரம். பன்­னெ­டுங்­கா­ல­மாக அவ்வூர் முஸ்­லிம்கள் ஹஜ் யாத்­திரை சென்­றா­லன்றி பேரீத்த மரத்தை கண்­டி­ருக்க வாய்ப்­பில்லை. (இப்­போது தொழில்­வாய்ப்பைத் தேடி இலங்கை முஸ்­லிம்கள் மத்­திய கிழக்­குக்குப் படை­யெ­டுப்­பதால் அந்த வாய்ப்பு பெரு­கி­யுள்­ளது என்­பது உண்மை). பல்­லாண்­டு­க­ளாக காத்­தான்­கு­டியின் சந்தைப் பள்­ளி­வா­ச­லுக்குள் ஒரு பேரீந்து மரம் வான­ளாவ வளர்ந்­தி­ருந்­தது. அது என்­றுமே காய்த்­த­தில்லை. பின்னர் 1960களில் அப்­பள்­ளி­வாசல் இடிக்­கப்­பட்ட வேளையில் அந்த மரம் வெட்டி வீழ்த்­தப்­பட்­டது. அதன் பின்னர் இன்று பேரீத்த மரங்கள் ஓர் இஸ்­லா­மியச் சின்­ன­மாக காத்­தான்­கு­டியின் நெடுஞ்­சாலை நடுவே நடப்­பட்டு அவை குலை­போட்டுக் கனிந்து அர­சி­யல்­வா­தி­களின் கவ­னத்­தையும் வரு­டா­வரும் ஈர்க்­கின்­றன. அந்த மரங்­களின் நடு­கைக்குக் காலாய் இருந்த காத்­தான்­கு­டியின் முன்­னைநாள் நாடா­ளு­மன்றப் பிர­தி­நிதி ஒருவர் அவ­ரது அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களை அழைத்து மிக ஆர­வா­ரத்­துடன் முதல் அறு­வ­டையை மேற்­கொண்­ட­மையும் ஞாப­கத்­துக்கு வரு­கின்­றது. அந்­தச்­சூ­ழலில் இந்த மரங்­களின் அர­சியல் தாக்­கங்­க­ளைப்­பற்­றிய ஒரு விமர்­சனக் கட்­டு­ரையை இக்­கட்­டுரை ஆசி­ரியர் ஒரு பத்­தி­ரி­கையில் வெளி­யிட்டு அது ஒரு சர்ச்­சையைத் தூண்­டி­ய­தையும் மறக்­க­வில்லை.

காத்­தன்­கு­டியை பேரீத்த மரங்­களால் மட்­டு­மல்ல ஏனைய வழி­க­ளாலும் ஒரு குட்டி அரபுப் பிர­தே­ச­மாக மாற்­ற­வேண்டும் என்­பதே அந்த மரங்­களை நாட்­டு­வ­தற்குக் காலாய் இருந்­த­வரின் அந்­த­ரங்க எண்ணம் என்­பதும் பின்னர் வெளிச்­சத்­துக்கு வந்­தது. அதன் உச்சக் கட்டமா­கத்தான் இப்­போது அங்கே பல கோடி டொலர் வெளி­நாட்டு நன்­கொடை உத­வி­யுடன் நீலக்­கற்­களால் ஒரு நகல் பைத்துல் முகத்திஸ் பள்­ளி­வா­சலும் நிர்­மா­ணிக்­கப்­பட்டு அது நாடெங்­கி­லு­முள்ள உள்­நாட்டுச் சுற்­றுப்­பி­ர­யா­ணி­களைக் கவர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. பலஸ்­தீ­னத்தின் அசல் பைத்துல் முகத்திஸ் இஸ்­ர­வேலின் படை­க­ளாலும் குண்­டு­க­ளாலும் தரை­மட்­ட­மாக்­கப்­படும் ஆபத்து நாளாந்தம் வளர்ந்து கொண்­டி­ருக்கும் நிலையில் இந்த நகல் உரு­வா­கி­யதை வர­வேற்­காமல் இருக்க முடி­யாது. அசல் ஒரு நாள் அழிக்­கப்­ப­டு­மானால் காத்­தான்­கு­டியின் நகல் வெளி­நாட்டு முஸ்லிம் பக்­தர்­களை வசீ­க­ரித்து அரசின் திறை­சே­ரிக்கு வள­மூட்­டலாம். எனினும் பேரீத்­த­ம­ரங்­க­ளுக்கும் இந்தப் பள்­ளி­வா­ச­லுக்கும் இடையே அரபு மொழி­யிலே முஸ்லிம் கடை நாமங்கள், வீதி­களின் பெயர்கள், மற்றும் பொதுக் கட்­டி­டங்­களின் பெயர்கள் என்­ப­ன­வெல்லாம் வெளிப்­படத் தொடங்கி அது ஓர் இன­வாத உணர்வை சிங்­கள தமிழ் மக்­க­ளி­டையே தூண்­டி­ய­தையும் மறக்­க­லா­காது. அன்று நான் எழு­திய கட்­டுரை இந்த இன­வா­தத்தை பேரீத்த மரங்கள் தோற்­று­விக்கும் என்­பதைச் சுட்­டிக்­காட்டத் தவ­ற­வில்லை. அதே விளை­வைத்தான் அதே பிர­தி­நி­தியால் புணா­னையில் நிறு­வப்­பட்ட இஸ்­லா­மியக் கல்விக் கட்­டி­டமும் வளர்த்­தது.

அங்­கேயும் இம்­ம­ரங்கள் நடப்­பட்­டன. இன­வாத உணர்வு ஒரு­பு­ற­மி­ருக்க, காத்­தான்­குடி இஸ்­லா­மியத் தீவி­ர­வா­தி­களின் தொட்­டி­லாக மாறப்­போ­கி­றது என்ற மிகவும் ஆபத்­தான ஓர் உணர்வும் ஆளும் வர்க்­கத்­தி­ன­ரி­டையே வளர்­வ­தற்கு இப்­பே­ரீத்த மரங்கள் ஒரு மறை­மு­க­மான எடுத்­துக்­காட்­டாக விளங்­கின என்று கூறு­வ­திலே தவ­றில்லை. அந்த உணர்­வுக்கு உயி­ரூட்­டு­வ­துபோல் அமைந்­தது சஹ்­ரானின் கொலை­கா­ரக் கும்பல் காத்­தான்­கு­டியை மைய­மாகக் கொண்டு 2019 இல் ஆடிய கோரத் தாண்­ட­வமும் அதன் விளை­வாக இரா­ணு­வத்தின் எடு­பி­டிக்குள் காத்­தான்­குடி சிக்­கி­யதும். அந்த எடு­பிடி இன்­னுந்தான் தள­ர­வில்லை. இவ்­வாறு விமர்­சிப்­பதை பலரால் ஜீர­ணிக்­க ­மு­டி­யாமல் இருக்கும் என்­ப­தையும் எதிர்­பார்க்­கலாம். ஆனாலும் யதார்த்­தத்தை மறைக்க முடி­யாது. முடி­வாக, நட்ட மரங்­களை வெட்டி எறி­யாமல் அவற்­றைப்­பற்றிப் பெருமைப் படு­வதை நிறுத்தி அவற்றை ஒரு நூதன மரங்­க­ளெனக் கணித்­துக்­கொண்டு காத்­தான்­கு­டியின் இன்­றைய பல பிரச்­சி­னை­களை தூர­நோக்­குடன் அவ்வூர் தலை­வர்கள் தீர்க்க முனை­ய­ வேண்டும்.

காத்­தான்­குடி இலங்­கையின் ஏனைய முஸ்லிம் பட்­டி­னங்­க­ளைப்போல் அல்­லாது ஒரு மிகவும் நெருக்­க­டி­யான சூழ­லுக்குள் சிக்கிக் கொண்­டுள்­ளது. கிழக்­கிலே கடலும் மேற்­கிலே வாவியும் வடக்­கிலும் தெற்­கிலும் தமி­ழி­னமும் சூழ அவற்­றிற்கு மத்­தி­யிலே சுமார் நான்கு சதுர கிலோ­மீற்றர் நிலப்­ப­ரப்­புக்குள் ஏறத்­தாழ ஐம்­பது இலட்சம் முஸ்­லிம்­களை கொண்டு அமைந்­துள்­ளது இந்­நகர். வைசி­யமும் வைதீ­கமும் வரம்­பின்றி இணைந்து வாழும் ஒரு சமூ­க­மென காத்­தான்­கு­டியை வர்­ணிக்­கலாம். வணி­கத்­தையே வாழ்­வா­தா­ர­மா­கக்­கொண்டு இம்­மக்கள் நீண்­ட­கா­ல­மாக வாழ்ந்­ததால் உல­கியற் கல்­வி­யிலே அதிகம் நாட்டம் செலுத்­த­வில்லை. திரை கட­லோ­டியும் திர­வியம் தேடு என்­ப­தற்­கி­ணங்க நாடெல்லாம் திரிந்து வணிகம் செய்து பொரு­ளீட்டி அந்த வரு­மா­னத்­தி­லேதான் காத்­தான்­குடி வளர்ந்­தது. குறிப்­பாக ஊவா மாகா­ணமும் மத்­திய மாகா­ணமும் காத்­தான்­குடி வியா­பா­ரி­களின் கேந்­திர வணி­கத்­த­லங்­க­ளாக ஒரு காலத்தில் விளங்­கின. ஆனால் அங்கே தமது குடும்­பங்­களை அவர்கள் கொண்டு செல்­ல­வில்லை. அவ்­வாறு சென்று சொந்த நிலங்­களை வாங்கி வீடு­க­ளைக்­கட்டிக் குடி.ேயறி இருந்தால் காத்­தான்­கு­டியின் இன்­றைய குடி­சன நெருக்­க­டியைத் தவிர்த்­தி­ருக்­கலாம். ஏன் அரு­கா­மை­யி­லுள்ள மட்­டக்­க­ளப்பு நக­ரி­லேயே கடை­களைத் திறந்து வியா­பாரம் செய்த இவ்வூர் வணி­கர்கன் அந்த நக­ரி­லே­கூட தமது குடும்­பங்­களை நிரந்­த­ர­மாகக் குடி­யேற்­ற­வில்­லையே. இதை ஒரு முறை முன்னை நாள் தலைவர் ராசிக் பரீத் அவர்­களே மிக வருத்­தத்­துடன் 1950களில் மட்­டக்­க­ளப்­பு­புக்கு வந்­த­போது சுட்­டிக்­காட்­டி­யது என் மன­திலே பதிந்­துள்­ளது. அதனால் அண்மைக் காலங்­களில் சிங்­கள தமிழ் இனங்கள் விழிப்­ப­டைந்து வணி­கத்தில் நாட்டம் செலுத்­தி­ய­தாலும் அந்த வணி­கப்­போட்டி ஓர் இன­வாத வடி­வத்தைத் தோற்­று­வித்­த­தாலும் முஸ்லிம் வர்த்­த­கர்கள் காத்­தான்­கு­டியே தஞ்­ச­மென நினைத்து அந்தத் தலங்­களை விட்டு நீங்கி காத்­தான்­கு­டியின் குட்டி நிலப்­பரப்புக்குள்­ளேயே தமது கடை­க­ளையும் நிறு­வ­லா­யினர். அதன் விளை­வாக காத்­தான்­கு­டியே ஒரு மாபெரும் கடை­வீ­தி­யாக இன்று காட்­சி­ய­ளிக்­கி­றது. இந்த மாற்­றங்கள் வியா­பா­ரி­களின் வரு­மா­னத்­துக்கு உர­மூட்­டி­னாலும் அந்த வியா­பாரக் கவர்ச்­சி­யுடன் நுழையும் பல சமூகத் தீங்­குகள் பர­வு­வ­தையும் தக­வல்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. அவற்றை விப­ரிக்க இக்­கட்­டுரை இச்­சந்­தர்ப்­பத்தில் விரும்­ப­வில்லை.

பேரீத்த மரங்­களும் அர­பு­ம­யமாக்­கமும் காத்­தான்­குடி அர­சி­யல்­வா­திக்கு நாடா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்­றி­வா­கை­சூட உத­வி­யது போன்று ஆட்­சியில் அமரும் ஒவ்வோர் அர­சாங்­கத்­துக்கும் முஸ்­லிம்­களின் செல்­வாக்­கைப்­பெற போரீத்­தம்­ப­ழங்கள் உத­வு­வ­தையும் இங்கே சுட்­டிக்­காட்ட வேண்டும். ஜன­நா­யக ஆட்­சியும் தேர்தல் முறையும் அறி­மு­க­மான காலம் தொடக்கம் இலங்கை முஸ்லிம் சமூகம் மூன்று சலு­கை­க­ளையே முக்­கி­ய­மாக அர­சாங்­கங்­க­ளி­ட­மி­ருந்து எதிர்­பார்த்­தது. ஒன்று, தடை­யற்ற வியா­பாரச் சுதந்­திரம், மற்­றது நோன்­புக்குப் பேரீத்­தப்­பழம், மூன்­றா­வது மக்கா யாத்­தி­ரைக்குத் தேவை­யான அன்­னியச் செலா­வணி.

நோன்பு காலம் நெருங்­கி­விட்டால் வர்த்­தக அமைச்சும் முஸ்லிம் அமைச்­சர்­களும் நோன்­புக்குப் பேரீத்­தம்­ப­ழங்கள் தாரா­ள­மாகக் கிடைக்க அரசு வழி செய்யும் என்­பதை விளம்­ப­ரப்­ப­டுத்­துவர். அதே போன்று ஹஜ் யாத்­திரைக் காலத்தில் அன்­னி­யச்­செ­லா­வணி தாரா­ள­மாகக் கிடைக்கும் என்­ப­தையும் உறுதி செய்வர். முஸ்­லிம்­களும் ஏதோ தமது உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­கின்­றன என்ற தோர­ணத்தில் திருப்தி அடைவர். 1970களில் அன்­னி­யச்­செ­லா­வணி நெருக்­கடி ஏற்­பட்டு அதனால் சிறி­மா­வோவின் இட­து­சாரி அரசு ஹஜ் யாத்­தி­ரைக்குச் சில கட்­டுப்­பா­டு­களை விதித்­த­போது எதிர்க்­கட்­சி­யினர் அதனை ஒரு துரும்­பா­கப்­பா­வித்து முஸ்லிம் தேர்தல் வாக்­கு­களை நாடிப் பிரச்­சாரம் செய்­தனர். அடுத்­து­வந்த தேர்­தலில் பெரும்­பா­லான முஸ்லிம் வாக்­கா­ளர்கள் எதிர்­க்கட்­சிக்கு வாக்­க­ளித்து சிறி­மாவோ அரசை மண்­கௌவச் செய்­தனர். இந்தப் பேரீத்­தம்­பழ அர­சியல்; முஸ்லிம் கட்­சிகள் என்ற பெயரில் இன்­னும்தான் நில­வு­வதை மறுக்க முடி­யாது.

ஏகத்­து­வத்தை நிலை­நாட்டப் பிறந்த நபி மூஸா, நபி ஈஸா, நபி முகம்மத் ஆகியோர் போதித்த மார்க்­கங்கள் யாவற்­றிலும் நோன்பு நோற்றல் ஒரு கட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய மார்க்­கங்கள் சில­வற்­றி­லும்­கூட அக்­க­டமை உண்டு. அவற்றின் முறை­களும் ஆசா­ரங்­களும் வேறு­பட்­டி­ருந்­தாலும் அது ஒரு கடமை என்­பதை குர்­ஆனே கூறு­கி­றது.

ஆனாலும் இஸ்­லாத்தின் 30 நாட்கள் நோன்புக் கட­மைக்கும் பேரீத்­தம்­ப­ழங்­க­ளுக்­கு­முள்ள உறவுபோன்று மற்றைய எதிலும் இல்லை. இதனாலேதான் சவூதி அரேபிய அர­சாங்­கமும் வரு­டா­வ­ருடம் நோன்பு காலத்தில் பொதி­பொ­தி­யாக பேரீத்­தம்­ப­ழங்­களை முஸ்லிம் நாடு­க­ளுக்கு அன்­ப­ளிப்புச் செய்து தனது புக­ழையும் நற்­பெ­ய­ரையும் முஸ்­லிம்­க­ளி­டையே பாது­காத்துக் கொள்­கி­றது. அதுவும் ஒரு சர்­வ­தேச அர­சியல் தந்­தி­ரமே. சவூதி அரசின் வெளி­நாட்டுக் கொள்­கை­க­ளைப்­பற்றி உலக முஸ்­லிம்கள் பல்­வேறு அபிப்­பி­ரா­யங்­களை கொண்­டி­ருந்­தாலும் அவற்­றை­யெல்லாம் மூடி­ம­றைக்கும் கரு­வி­களுள் ஒன்­றா­கவும் பேரீத்­தம்­பழ அன்­ப­ளிப்பைக் கரு­தலாம். அரே­பியப் பாலை­வ­னத்தில் அன்­னி­யரால் எண்ணெய் வளம் கண்­டு­பி­டிக்­கப்­படும் வரை பேரீத்­தம்­பழம் ஒன்றே அந்­நாட்டின் ஏற்­று­மதிப் பொருளாய் இருந்­தது. அந்­தப்­பழம் இன்று ராஜ­தந்திர உறவை வளர்க்கும் ஒரு பொரு­ளாக மாறி­யதை என்­னென்று கூறு­வதோ? இவ்­வாறு அர­சியல் செல்­வாக்­குப்­பெற்ற ஒரு பழ­ம­ரத்தை காத்­தான்­கு­டியும் தனது நெடுஞ்­சா­லையின் அலங்­கார விருட்­ச­மாகக் கொண்­டி­ருப்­பதும் அதன் பழ அறுவடையைக் கொண்டாடுவதும் அம்மரத்துக்குப் பெருமையா காத்தான்குடிக்குப் பெருமையா?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.