மலையக-முஸ்லிம் உறவுக்கு பாலமாக விளங்கிய எஸ்.எம்.ஏ.ஹஸன்

0 212

பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ்

கலா­பூ­ஷணம் எஸ்.எம்.ஏ.ஹஸன் இறை­வ­னடி சேர்ந்து ஒரு­ வா­ர­மா­கின்­றது. மலை­யகம் ஒரு கல்­வி­மா­னையும், இலக்­கிய ஆர்­வ­ல­ரையும் இழந்­துள்­ளது. தொடர்ச்­சி­யான கல்விப் பணி­க­ளாலும் எழுத்­துக்­க­ளாலும் இலக்­கிய பங்­க­ளிப்­புக்­க­ளாலும் சமூக சேவை­க­ளாலும் தேசிய அளவில் அறி­யப்­பட்­டவர் எஸ்.எம்.ஏ.ஹஸன்.

ஆசி­ரி­ய­ராக வாழ்க்­கையை தொடங்­கிய ஹஸன் அதி­ப­ராக, ஆசி­ரி­யப் ­ப­யிற்சிக் கலா­சாலை விரி­வு­ரை­யா­ள­ராக, கல்வி அதி­கா­ரி­யாகத் தனது வாழ்வின் பெரும்­ப­கு­தியை கல்விச் சேவைக்­காக அர்ப்­ப­ணித்தார். எனினும் ஹஸனின் ஆர்­வமும், வாசிப்புப் பணி­களும் பல்­வேறு துறை­களை உள்­ள­டக்கி இருந்­தன. கல்­விப்­ப­ணியை அவர் எவ்­வ­ளவு நேசித்­தாரோ அதே வேகத்தில் இலக்­கி­யத்­திலும் பங்­காற்­றினார்.

அவ­ரது மனைவி பேரா­தனை ஷர்­புன்­னிசா ஒரு எழுத்­தாளர், இலக்­கிய ஆர்­வலர், சமூகச் செயற்­பாட்­டாளர். ஒரு காலத்தில் புகழ்­பெற்ற பெண் பேச்­சாளர். இலக்­கியம் அந்தக் குடும்­பத்தின் பிரிக்க முடி­யாத அங்கம்.

1955–1990 வரை இலங்­கையின் தமிழ் நாட்டின் முஸ்லிம் எழுத்­தா­ளர்­களும் இலக்­கியப் பிர­மு­கர்­களும் மலை நாட்டில் சந்­திக்கும் பொது இலக்­கிய மன்றம் அவர்கள் வீடு. வீட்டின் ஒரு பகுதி நூற் களஞ்­சியம். புரட்­சிக்­கமால், சாரணா கையூம், ஏ.இக்பால், எம்.சி.எம்.சுபைர், அ.ஸ.அப்துல் ஸமது, புலவர் மணி ஷரி­புதீன் என பெரிய பட்­டியல் அவ­ரது நட்புப் பட்­டி­யலில் உண்டு.

மலை­நாட்டின் முஸ்லிம், தமிழ் இலக்­கிய வளர்ச்­சியில் எஸ்.எம்.ஏ.ஹஸ­னுக்கு முக்­கிய பங்­கி­ருந்­தது. மலை­யக – முஸ்லிம் உற­வுக்கு ஹஸன் ஒரு பால­மாக விளங்­கினார். அந்­தனி ஜீவா, தெனியார், க.ப.சிவம் உள்­ளிட்ட அவர் காலத்து எல்லா மலை­யக இலக்­கி­யப்­ பி­ர­மு­கர்­க­ளு­டனும் எழுத்­தா­ளர்­க­ளு­டனும் ஹஸன் நெருக்­க­மான தொடர்­பு­களை வைத்­தி­ருந்தார்.

வர­லாற்றில் பெரிய ஆர்வம் உள்­ளவர். இலங்கை முஸ்­லிம்கள், இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் வர­லாறு, கண்டி வர­லாறு பற்றி தெளி­வான விளக்­கங்­களும் கருத்­துக்­களும் அவ­ருக்­கி­ருந்­தது. இவை பற்றி அவர் பல கட்­டு­ரைகள் எழு­தி­யுள்ளார். பொது மன்­றங்­களில் பேசியுள்ளார். கிராம வர­லா­று­களை திரட்­டு­வ­திலும் கிராமப் புல­வர்­களைப் பற்றி எழு­து­வ­திலும் பேசு­வ­திலும் அவர் ஈடு­பட்டார். அவர் வீட்டில் இவை பற்றிப் பல கையெ­ழுத்­துப்­ பி­ர­திகள் இருந்­தன.

எம்.சி.சித்தி லெப்­பையை வெளியே கொண்டு வந்­த­வர்­களில் அவரும் ஒருவர்.
இஸ்லாம், இஸ்­லா­மிய நாக­ரிகம், நவீன இஸ்லாம் பற்றி அவர் பேசினார். அல்­லாமா இக்பால் அவ­ரது ஆதர்ஸ சிந்­த­னை­யாளர். இக்பால் பற்றி ஒரு நூலையும் எழுதி வெளி­யிட்டார். பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக அரபு நாக­ரிகத் துறை பேரா­சி­ரியர் எஸ்.ஏ. இமா­முடன் நெருங்­கிய தொடர்பு வைத்­தி­ருந்தார். பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு வெளியே அவரைப் பேச வைத்­த­வர்­களில் அவரும் ஒருவர். இஸ்­லா­மிய நாக­ரிகம் என்ற எண்­ணக்­க­ரு­விற்கு இலங்­கையில் உயி­ரூட்­டிய பெரிய அறிஞர் பேரா­சி­ரியர் இமாம்.

ஹஸன் 1927 மே, 27 ஆம் திகதி கண்­டியில் பிறந்தார். பேரா­த­னைக்கு அருகில் உள்ள மீவத்­துறை அவ­ரது கிராமம். தந்தை பெயர் அப்துல் அஸீஸ் ஷெய்கு முஹம்­மது, தாயார் பெயர் மீரா லெப்பை பாத்­துமா பீவி. ஹசனின் மூதா­தையர், வர்த்­த­கர்கள், மார்க்க அறி­ஞர்கள். அவ­ரது பாட்­டானார் ஒரு மெள­லவி. இவர்­களின் முன்­னோர்கள் காயல்­பட்­ட­ணத்தைச் சேர்ந்­த­வர்கள்.

பள்­ளி­வா­சலில் இயங்­கிய குர்ஆன் மக்­தபில் ஓதல் பயிற்­சியைப் பெற்று தமிழ் பாட­சா­லையில் கல்­வியை ஆரம்­பித்தார். 1944 ஆம் ஆண்டு 17 ஆவது வயதில் S.S.C. தேர்வில் சித்தி பெற்றார். அதன் பின்னர் கண்டி மகாத்மா காந்தி கல்­லூ­ரியில் ஆங்­கில மொழியில் கல்­வியைத் தொடர்ந்தார். இங்கு படித்துக் கொண்­டி­ருக்கும் போது கேகா­லையில் ஆசி­ரி­ய­ராக முத­லா­வது நிய­ம­னத்தைப் பெற்றார். அந்தப் பாட­சாலை கேகாலை பள்­ளி­வா­ச­லோடு இணைக்­கப்­பட்­டி­ருந்­தது.

1946 SSC ஆங்­கிலத் தேர்­விலும் சித்தி பெற்றார். ஆங்­கில ஆசி­ரி­ய­ராக வாய்ப்­பி­ருந்தும் தமிழ் ஆசி­ரி­ய­ரா­கவே தனது ஆசி­ரியப் பத­வியைத் தொடர்ந்தார்.
வெலம்­பொடை, உடிஸ்­பத்­துவ, கெற்ற கும்­புர, அக்­கு­ரணை, மாவத்த பொல ஆகிய பாட­சா­லை­களில் ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்­றினார். இதற்­கி­டையில் 1947 இல் அளுத்­கம ஆசி­ரியப் பயிற்சி கலா­சா­லையில் பயிற்சி ஆசி­ரி­ய­ராகச் சேர்ந்தார்.

அக்­கு­ர­ணை­யிலும் கொட்­ட­கொ­டை­யிலும் அவர் ஆசி­ரி­ய­ராக பணி­யாற்றி வந்தார்.
இக்­கா­லத்தில் அவர் பொறுப்­பேற்ற சில பாட­சா­லைகள் அந்த ஊர்­களின் முதற் பாட­சா­லைகள், ஆசி­ரியர் பற்­றாக்­குறை, மாணவர் வரவு குறைவு, கட்­ட­டங்கள், தள­பா­டங்கள் இல்­லாத சூழல். மத்­திய மலை­நாட்டில் 1950 காலக் கல்வி வளர்ச்­சியில் இன்றும் பேசப்­ப­டாத ஒரு பகுதி ஹஸனின் அனு­ப­வங்­களில் புதைந்­தி­ருந்­தது.

இது சேர். ராசீக் பரீத், மலை­ய­கத்தில் முஸ்­லிம்­களின் கல்வி மேம்­பாட்­டிற்­கா­கவும் புதிய பாட­சா­லை­களை திறப்­ப­தற்­கா­கவும் மலை­யக முஸ்லிம் கிரா­மங்­களில் சுற்­றித்­தி­ரிந்­த­ காலம். எஸ்.எம்.ஏ.ஹஸன் சேர்.ராஸிக் பரீத்­துடன் மலை­யக முஸ்லிம் கல்வி மறு­ம­லர்ச்சி தொடர்பில் நெருங்கிச் செயற்­பட்டார். கண்டி மாவட்­டத்தில் சேர்.ராஸிக் பரீத் சந்­திப்­ப­வர்­களில் ஹஸனும் ஒருவர்.

அதே விதத் தொடர்பு பதி­யுதீன் மஹ்மூது­டனும் ஹஸ­னுக்கு இருந்­தது. 1945 இல் இருந்து அந்தத் தொடர்பு ஆரம்­ப­மா­கி­றது. கம்­ப­ளையில் பதி­யுதீனின் இல்­லத்தில் முஸ்லிம் கல்விப் பிரச்­சி­னைகள் பற்­றிய கலந்­து­ரை­யா­டல்­களில் ஹஸனும் கலந்து கொண்டார். உட­த­ல­வின்­னவில் ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரிந்த ஷரி­புதீன், ஜே.எம்.அப்துல் காதர், கே.எல். இப்­றாஹீம் ஆகி­யோரும் இக்­க­லந்­து­ரை­யா­டல்­களில் பங்­கேற்று வந்­தனர். எனினும் பதி­யுதீன் மிகவும் விரும்பி அடிக்­கடி சந்­தித்­த­வர்­களில் எஸ்.எம்.ஏ. ஹஸன், கம்­பளை இல்­ல­வத்­துறை அப்துல் றஹ்­மா­னியா பாட­சாலை ஆசி­ரியர் அப்துல் ரவூப் ஆகியோர் முதன்மையானவர்கள்.

பதி­யுதீன் மஹ்மூது­ட­னான தொடர்பு அவ­ரது வபாத் வரை தொடர்ந்­தது. கல்வி ஆலோ­ச­னை­களை வழங்­கி­ய­வர்­களில் தவிர்க்க முடி­யா­த­வ­ராக எஸ்.எம்.ஏ.ஹஸன் விளங்­கினார். பதி­யுதீ­னுடன் தனது அனு­ப­வங்­க­ளையும் இணைத்து பதி­யைப்­பற்றி விரி­வான நூல் ஒன்றை எழு­தினார். பதி­யைப்­பற்றி எழு­தப்­பட்ட குறிப்பு நூல் அது.

மாவத்தப் பொலவில் ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றிய 1953 – 1954 காலப்­ப­கு­தியில் முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீ­துடன் பிர­தேசக் கல்­விப்­பி­ரச்­சி­னைகள் பற்றி உரை­யா­டினார். ஹஸன் அப்­போது மத்­திய இலங்கை அர­சினர் சோனகர் ஆசி­ரியர் சங்­கத்­த­லை­வ­ரா­கவும் இருந்­ததால் கண்டி மாவட்ட முஸ்லிம் பாட­சா­லைகள் பற்­றிய போதிய தக­வல்­களும் குறை நிவர்த்தித் திட்­டங்­க­ளையும் சிறப்­பாக ஆரா­யக்­கூ­டிய வாய்ப்பு ஹஸ­னுக்கு இருந்­தது. மத்­திய இலங்கை சோனகர் ஆசி­ரியர் சங்கம் கண்­டியின் பழை­மை­யான சங்கம். இது 1945 இல் ராஸீக் பரீதின் சேவை­களின் உந்­து­தலால் தொடங்­கப்­பட்ட ஆசி­ரியர் அமைப்பு.

கண்­டியில் முஸ்லிம் ஆசி­ரிய பயிற்­சிக்­க­லா­சாலை தோற்றம் பெறக்­கா­ர­ண­மாக இருந்­தது இந்த ஆசி­ரிய சங்­கம்தான்.

1957 இல் இந்தச் சங்­கத்தின் 9 ஆவது மாநாட்டில் இதற்­கான பிரே­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. பதி­யுதீன் மஹ்­மூத்தின் தலை­மையில் இக்­கூட்டம் நடை­பெற்­றது. இதன் பின்­ன­ணியில் தான் 1960 இல் ஹீரஸ்­ஸ­க­லவில் (கண்டி) கண்டி ஆசி­ரியப் பயிற்­சிக்­க­லா­சாலை ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஹஸன் அதன் விரி­வு­ரை­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

என்­சல்­கொல்ல முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் அதி­ப­ராகச் சில வரு­டங்கள் பணி­யாற்­றினார். மீவத்­துறை கிரா­மத்தின் இயற்கை அழகு என்­சல்­கொல்­ல­விலும் இருந்­ததால் அந்தக் கிராமம் அவரைப் பெரிதும் கவர்ந்­தது. அங்­கி­ருந்த புலவர் மலைக்கு அடிக்­கடி சென்றார். அங்கு அருள் வாக்கி அப்­துல்­காதர் புல­வரின் சாத­னை­க­ளையும் சரித்­தி­ரத்­தையும் கேட்­ட­றியும் வாய்ப்பு அவ­ருக்குக் கிடைத்­தது. மறைந்து கிடந்த புல­வரின் படைப்­புக்­களை தேடி ஆராய்ந்து அருள்­வாக்கி அப்துல் காதர் என்ற நூலை எழு­தினார்.

ஏறத்­தாழ காணா­மல் ­போ­யி­ருந்த புல­வரை மீட்­டெ­டுத்து இலக்­கிய உல­குக்கு வழங்­கினார். அருள்­வாக்கி அப்­துல்­காதர் புலவர் நூற்­றாண்டு விழா­வையும் தேசிய அளவில் கொண்­டாடி மலை­யக முஸ்லிம் இலக்­கி­யத்­துக்குப் புது அர்த்தம் பாய்ச்­சினார்.
1969 இல் பேராதனை ஆங்கில ஆசிரியர் கலாசாலையில் முதல் மொழி தமிழ், இஸ்லாம் ஆகிய பாடங்களை படிப்பிப்பதற்காக விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.

1969– 70 காலப்பகுதியில் ஹேந்தெனிய பேராதெனிய வை.எம்.எம்.ஏ. அமைப்பை புனர் நிர்மாணம் செய்தார். 1958 வை.எம்.எம்.ஏ அமைப்பை அங்கு முதலில் அறிமுகம் செய்தவரும் அவர்தான். ஹேந்தெனிய பேராதனை, மீவத்துறை கல்வி, சமூக சேவையில் பல முயற்சிகளை இவ்வமைப்பு மேற்கொண்டது.

ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் பின் கண்டி ஒராபி பாஷா (எகிப்திய) அருங்காட்சியகத்தின் பணிப்பாளராக 20 வருடங்கள் பணியாற்றினார். ஒராபிபாஷா உள்ளிட்ட எகிப்திய அறிஞர்களின் கண்டித் தொடர்பைப் பலப்படுத்தும் பல முன்னோடி முயற்சிகளை அங்கிருந்து அவர் மேற்கொண்டது ஒரு தனி வரலாறு.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.