அலிசப்ரி ரஹீம் எம்.பி. மீதான ஒழுக்காற்று நடவடிக்கை: புத்தளம் சிவில் சமூக நிறுவனங்களின் ஒன்றியத்துக்கு நயீமுல்லாஹ் கடிதம்

0 652

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்பில் புத்­தளம் சிவில் சமூக நிறு­வ­னங்ளின் ஒன்­றிய (பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தல் 2020) த்தின் தலைவர் அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலி­முக்கு ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பின் செய­லாளர் நாயகம் மஸீ­ஹுதீன் நயீ­முல்லாஹ் கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்ளார்.

அக்­க­டி­தத்தில் குறிப்­பிட்­டுள்ள விட­யங்கள் வரு­மாறு,
‘‘கடந்த மூன்று தசாப்­தங்­க­ளுக்கும் மேலாக புத்­தளம் மாவட்ட முஸ்­லிம்கள் தங்­களை பிர­தி­நி­தித்­துவப் படுத்­து­வற்­காக தங்­களால் தெரி­வு­செய்­யப்­பட்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தொடர்ச்­சி­யாக முயற்­சி­க­ளை மேற்­கொண்டு வந்ததை அறிவோம். அதனடிப்படையில் தங்­க­ளது தலை­மையில் உல­மாக்கள், பொது நல அமைப்­புகள், புத்தி ஜீவிகள், அர­சியல் ஈடு­பாட்­டா­ளர்கள் அனை­வரும் ஒருங்கே இணைந்து அமைத்துக் கொண்ட சிவில் சமூக நிறு­வ­னங்ளின் ஒன்­றியம் வகுத்த வியூ­கத்தின் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்ற தேர்­தலில் அனை­வரும் எதிர்­பார்த்­தது போலவே ஒரு பாரா­ளு­மன்ற ஆச­னத்தை வென்­று­கொள்ள முடிந்­தது.

அனை­வ­ரது வேண்­டு­கோ­ளுக்கும் இணங்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் (SLMC) அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் (ACMC) மற்றும் வேறு சில கட்­சி­களை சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளையும் சேர்த்து ஒரு கூட்­ட­ணி­யாக எமது கட்­சி­யான முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் (MNA) [தற்­போ­தைய ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பின் (UNA)] ‘தராசு’ சின்­னத்தின் கீழ் நிய­மனப் பத்­தி­ரத்தை தாக்கல் செய்து உங்­க­ளது நீண்­ட­கால முயற்­சிக்கு எம்மால் இயன்ற பங்­க­ளிப்­பையும் நல்க முடிந்தது.

என்­றாலும் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அவ்­வாறு தெரிவு செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கடந்த அர­சாங்க காலத்தில் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பின் 20 வது திருத்த சட்ட மூலத்­துக்­கான வாக்­கெ­டுப்பின் போதும் அதனைத் தொடர்ந்து வந்த ஏனைய வாக்­கெ­டுப்­புக்­களின் போதும் தான் தெரிவு செய்­யப்­பட கார­ண­மாக இருந்த பெரும்­பான்­மை­யான வாக்­கா­ளர்­க­ளதும் பல்­வே­று­பட்ட இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுத்துக் கொண்­டி­ருந்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் வேண்­டு­கோளை துச்­ச­மென மதித்து அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தார். இதன் மூலம் புத்­தளம் மாவட்ட மற்றும் நாட­ளா­விய ரீதியில் வாழும் முஸ்­லிம்­க­ளது பலத்த கண்­ட­னங்­க­ளுக்கும் விமர்­ச­னங்­க­ளுக்கும் ஆளா­கி­ய­மையை தாங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள்.

அவரை ஒரு வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கிய அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அவர் செய்த குற்­றங்கள் தொடர்பில் ஒழுக்­காற்று விசா­ர­ணை­யொன்றை மேற்­கொண்டு அவரை தமது கட்சி அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து நீக்கி விட்­ட­தாக ஊட­கங்­க­ளுக்கு அறிக்கை விடுத்­தி­ருந்த போதிலும், பொதுத் தேர்­த­லின்­போது அவர்கள் எமது கட்­சி­யுடன் செய்து கொண்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தின் பிர­காரம், தமது தீர்­மா­னத்தை எமக்கு உத்­தி­யோகபூர்­வ­மாக எழுத்து மூலம் அறி­விக்க தவ­றி­ய­மையால் அவ்­வி­ட­யத்தில் ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்­பினால் மேல­திக நட­வ­டிக்­கைகள் எத­னையும் மேற்­கொள்ள முடி­யாமல் போனது. ஆதலால், தனது கட்­சிக்கோ வேறு எந்த சக்­தி­க­ளுக்­குமோ கட்­டுப்­ப­டாத, தன்­னிச்­சை­யாக செயற்­படும் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவே அவர் தொடர்ந்தும் இயங்கி வரு­கிறார் என்­ப­தையும் நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள்.

இந்­நி­லை­யில்தான் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி காலை தங்கம் மற்றும் கைத் தொலை­பே­சிகள் கடத்தல் தொடர்பில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் சுங்கத் திணைக்­கள அதி­கா­ரி­களால் அவர் கைது செய்­யப்­பட்டு அடுத்த நாள் பிற்­பகல் தண்டப் பணத்தை செலுத்­தி­யதன் பின்னர் விடு­விக்­கப்­பட்டார். அவ­ருக்கு வாக்­க­ளித்த புத்­தளம் மாவட்ட மக்­க­ளுக்கு மட்­டு­மன்றி அவரை வேட்­பா­ள­ராக நிறுத்­திய அர­சியல் கட்­சிகள் உட்­பட ஒட்டு மொத்த முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் களங்கம் கற்­பிக்கும் விதத்­தி­லேயே இக் கடத்தல் விவ­காரம் பர­வ­லாக பேசப்­ப­டு­கி­றது. அதன் பின்னர் அவர் ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்ட கருத்­துக்கள் கூட சிறு­பிள்ளைத் தன­மா­னதும் கோமாளித்தன­மா­ன­தா­க­வுமே அமைந்­தி­ருந்­தது. அவர் மீது கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் மேற்­கோள்­ளப்­பட வேண்டும் என நாளுக்கு நாள் எமக்கும் கோரிக்­கைகள் வந்த வண்ணம் உள்­ளன.

கட்­சியின் ஒழுக்­காற்று கோவை மற்றும் எம்மால் செய்து கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களின் பிர­காரம் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள எவ்­வாறு நாம் கட­மைப்­பட்­டுள்­ளோமோ, அது ­போ­லவே சகல கட்­சி­க­ளையும் புத்­தளம் மாவட்ட அனைத்து ஊர் முஸ்­லிம்­க­ளையும் உள ரீதி­யாக ஒன்­றி­ணைத்து, அனை­வ­ரது வாக்­கு­க­ளையும் ‘தராசு’ சின்­னத்­துக்குப் பெற்றுக் கொடுத்து, அவர்­க­ளது நீண்ட கால கனவை நன­வாக்க முன்­னின்று உழைத்த உங்­க­ளது ஒன்­றி­யத்­துக்கும் மேற்­படி விட­யத்தில் குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை அணுகி விளக்கம் கோரவும் ஆலோசனைகளை வழங்கவும் தீர்மானங்களை மேற்கொள்ளவும் அரசியல் கட்சிகளுக்கு அப்பாலான சமூகக் கடமையும் தார்மீக பொறுப்பும் உள்ளது என்றும் கருதுகிறோம்.

எனவே, உங்களது ஒன்றியத்தினை அவசரமாக ஒன்றுகூட்டி மேற்படி விவகாரம் சம்பந்தமாக கலந்துரையாடி இது தொடர்பில் சட்ட ரீதியாக செயற்படும் வகையிலான உங்களது ஆலோசனைகள் ஏதுமிருப்பின் அதுபற்றி தாமதியாது எமக்கு அறியத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்’’என தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.