போதகர் ஜெரோம் கைது செய்யப்படுவாரா?

0 264

ஏ.ஆர்.ஏ.பரீல்

மத போதகர் ஜெரோம் பெர்­னாண்டோ மதங்­க­ளுக்கு எதி­ராக அண்­மையில் வெளி­யிட்ட கருத்­துகள் நாட்டில் எதிர்­வ­லை­களைத் தோற்­று­வித்­துள்­ளன. தசாப்­த­கா­ல­மாக இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த மத நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்கும் முயற்­சி­க­ளுக்கும் ஜெரோம் பெர்­னாண்­டோவின் கருத்­துகள் பேரி­டியாய் மாறி­யுள்­ளன. இக்­க­ருத்­துகள் நாட்டில் மத நல்­லி­ணக்­கத்தைக் குழப்பி இனங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக வெளி­யி­டப்­பட்­டவை என சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.

மத போத­கரின் கருத்­துகள் கார­ண­மாக மதங்­க­ளுக்­கி­டையில் வன்­செ­யல்கள் உரு­வாகி நல்­லி­ணக்­கத்­துக்கும், நல்­லு­ற­வுக்கும் பாரிய சவால்கள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புள்­ள­தென பல முறை­ப்பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தென குற்­ற­வியல் விசா­ரணை திணைக்­களம் (சி.ஐ.டி.) தெரி­வித்­துள்­ளது.

பெளத்தம், இஸ்லாம் மற்றும் இந்து ஆகிய மதங்­களை நிந்­தனை செய்யும் வகையில் தெரி­வித்­துள்ள பொறுப்­பற்­றதும், அவ­ம­ரி­யா­தை­க்குரியது­மான கருத்­துகள் தொடர்பில் ஜெரோம் பெர்­னாண்­டோ­வுக்கு எதி­ரான முறைப்­பா­டு­களை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ரவு பிறப்­பித்தார். ஜனா­தி­ப­தி உத்­த­ரவு பிறப்­பித்த சில மணித்­தி­யா­லங்­களின் பின்பு அவர் நாட்டை விட்டும் வெளி­யேறிச் சென்­றுள்ளார்.

அவர் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து சிங்­கப்பூர் நோக்கிச் செல்லும் SQ 469 எனும் விமானம் மூலம் நாட்­டி­லி­ருந்தும் வெளி­யேறிச் சென்றார். அவர் வெளி­யேறிச் செல்லும் வரை பய­ணத்­தடை உத்­த­ர­வொன்று பிறப்­பிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அத­னா­லேயே விமான நிலைய குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரி­களால் அவ­ரது பய­ணத்தை நிறுத்த முடி­யாமற் போனது. மஜிஸ்­திரேட் நீதி­மன்­றத்தின் பய­ணத்­தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­போது அவர் நாட்­டி­லி­ருந்தும் வெளி­யே­றி­யி­ருந்தார்.

மத­போ­தகர் ஜெரோம் பெர்­னாண்டோ பெளத்தம் மற்றும் இந்து மதங்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல இஸ்லாம் மதத்­துக்கும் எதி­ராகவும் பொறுப்­பற்­றதும் அவ­ம­ரி­யா­தை­யு­மான கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்ளார். அல்­லாஹ்வின் 99 திரு­நா­மங்­களில் ஒரு திரு­நா­மத்­தி­லேனும் ‘அன்பு’ பற்றி தெரி­விக்­கப்­பட்­டில்லை என்று அவர் கருத்து தெரி­வித்­துள்ளார். இவ்­வா­றான இவ­ரது கருத்து ‘இஸ்லாம்’ அன்பு அற்ற மதம் எனக் கூறுவதாகவுள்ளது. அதாவது, பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிக்கும் மதம் என்ற கருத்­துப்­ப­டவே அவ­ரது கூற்று அமைந்­துள்­ளது.

இவ­ரது இஸ்­லாத்தைப் பற்­றிய கூற்று முற்­றிலும் தவ­றா­னது. இது மத நல்­லி­ணக்­கத்தை சீர்­கு­லைக்கும் முயற்­சி­யாகும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை
‘இயே­சுவின் சீடர்’ என்று தன்னைக் கூறிக்­கொள்ளும் ஜெரோம் பெர்­னாண்­டோவின் பிர­சங்கம் ஆத்­தி­ர­மூட்டும் வகையில் மத நல்­லி­ணத்­துக்கு அச்­சு­றுத்­த­லா­க இருப்­பது மிகவும் வருந்தத்தக்­கது. இஸ்லாம் மதம் பற்றி அறி­யாமல் ஜெரோம் பெர்­னாண்டோ இவ்­வா­றான தவ­றான கருத்­து­களைக் கூறி­யுள்ளார்’ என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லா­ளலர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘மத போதகர் ஜெரோம் பெர்­னாண்டோ அண்­மையில் ஒரு பொதுக் கூட்­டத்தில் பெளத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­களைத் தெரி­வித்­துள்ளார். இவ­ரது மதங்­களை நிந்­திக்கும் வகை­யி­லான கருத்­துகள் சமூக வலைத்­த­ளங்­களில் வைர­லாக பர­வி­யது. அவர் தன்னை இயே­சுவின் சீடர் என்று கூறிக் கொண்­டாலும் அவ­ரது பிர­சங்கம் ஆத்­தி­ர­மூட்டும் வகை­யிலும் மத நல்­லி­ணக்­கத்­துக்கு அச்­சு­றுத்­த­லா­கவும் இருப்­பது மிகவும் வருந்­தத்­தக்­கது.

அவ­ரது சர்ச்­சைக்­கு­ரிய அறிக்கை மற்றும் அவ­ரது செயற்­பா­டுகள் மத நல்­லி­ணக்­கத்தைப் பாது­காக்கும் வகையில் அமைந்­தில்­லா­ததால் அவ­ருக்கு எதி­ராக உட­ன­டி­யாக விசா­ர­ணை­யினை ஆரம்­பித்­த­தற்­காக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கிறோம். மத நல்­லி­ணக்­கத்தை சீர்­கு­லைக்க முயற்­சிப்­ப­வர்கள் மீது உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என நாம் நம்­பு­கிறோம்.

இஸ்­லாத்தைப் பற்­றி அவர் குறிப்­பிட்ட குறிப்பு முற்­றிலும் தவ­றா­னது என்­பதை நாம் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறோம். அத்­தோடு அவர் இவ்­வி­ட­யத்தை அறி­யாமல் கூறி­ய­தாகத் தெரி­கி­றது என அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கத்­தோ­லிக்க சபை கண்­டனம்
நாட்டில் மதங்­க­ளுக்­கி­டை­யி­லான ஐக்­கியம் மற்றும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் என்­ப­ன­வற்றை சவா­லுக்­குட்­ப­டுத்தும் வகையில் ஜெரோம் பெர்­னாண்டோ தெரி­வித்­துள்ள கருத்­து­க­ளுக்கு கண்­டனம் தெரி­வித்­துள்ள கத்­தோ­லிக்க சபை அவ­ரது கருத்­துக்­களை நிரா­க­ரிப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

மதங்­களை அவ­ம­திக்கும் வகையில் குறிப்­பிட்ட மத போதகர் ஜெரோமின் வெளி­நாட்டுப் பயணம் கொழும்பு கோட்டை மஜிஸ்­தி­ரேட்­டினால் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் கத்­தோ­லிக்க சபை கண்­டன அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளமை மிகவும் முக்­கிய நகர்வு எனக் குறிப்­பி­டலாம்.

மத போதகர் ஜெரோம் கடந்த காலங்­களில் பல தட­வைகள் இது போன்ற சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­களை வெளி­யிட்டு வந்­த­வ­ராவார். அவ­ரது மத நம்­பிக்­கையை பின்­பற்றும் மக்கள் நாட்டில் இருப்­பது உண்­மை­யாக இருக்­கலாம். என்­றாலும் அவரைப் பின்­பற்றும் ஒரு தரப்­பினர் இருக்­கி­றார்கள் என்­ப­தற்­காக ஏனைய மதங்­களை அவ­ம­திக்கும் வகையில் கருத்­து­களை வெளி­யி­டு­வ­தற்கு அவ­ருக்கு எவரும் அனு­மதி வழங்­க­வில்லை.

மதங்­க­ளுக்­கி­டை­யி­லான கல­வ­ரங்கள் பாரி­ய­ளவில் அதி­க­ரிப்­ப­தற்கு நீண்ட நாட்கள் செல்­லாது. குறு­கிய காலத்­திலே இது நிகழ்ந்து விட முடியும். இது பற்றி மத­போ­தகர் நன்கு அறிந்­தி­ருந்தும் இவ்­வாறு மக்­களை ஆத்­தி­ர­மூட்டி ஏதோ­வொரு இலக்­கினை அடை­வ­தற்­காக இவ்­வா­றாக கருத்­து­களை அவர் வெளி­யிட்­டாரா என்­பதை ஆராய்ந்து பார்க்க வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான சூழ்ச்­சி­க­ர­மான முன்­னெ­டுப்­பு­க­ளுக்கு பாரி­ய­ளவில் நிதி­யினை வழங்கும் பல்­வேறு அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் உல­கெங்கும் வியா­பித்­துள்­ளன. ஜெரோம் பெர்­னாண்டோ இவ்­வா­றான அமைப்­பு­களின் கையா­ளாக செயற்­ப­டு­கின்­றாரா? என்­ப­தையும் ஆராய்ந்து பார்க்க வேண்­டி­யுள்­ளது.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு
இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­துக்கு முத­லிடம் வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் ஏனைய மதங்­களின் உரி­மை­களும் பாது­காக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு அனை­வ­ருக்கும் தாம் விரும்பும் சம­யத்தைப் பின்­பற்­று­வ­தற்கு சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக பாது­காப்பும் வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் எந்­தவோர் மதத்தின் நம்­பிக்­கை­க­ளுக்கும், கொள்­கை­க­ளுக்கும் எதி­ராக செயற்­ப­டு­வ­தற்கு எவ­ருக்கும் இய­லாது என்­பதும் அர­சி­ய­ல­மைப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மத போதகர் ஜெரோம் பெர்­னாண்­டோ­வுக்கு எதி­ராக சில வெளி­நாட்டு ஊட­கங்கள் ஊடா­கவும் குற்­றச்­சாட்­டுகள் கடந்த காலங்­களில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அத்­தோடு இதற்கு முன்பு இவர் வெளி­யிட்­டுள்ள சர்ச்­சைக்­கு­ரிய அறிக்­கைகள், கருத்­துகள் தொடர்பில் கவ­னத்தில் கொள்­ளப்­பட்டு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இவர் அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வரா? அல்­லது அவர்­களின் கையாளா? என்­பது பற்­றியும் ஆராய வேண்டும்.

மத போதகர் ஜெரோம் பெர்­னாண்டோ
‘போர்ன் எகேன்’ Born Again மத குழு­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்ட மத­போ­தனை நட­வ­டிக்­கைகள் இன்று மிகப்­பெ­ரிய அளவில் வளர்ச்சி கண்­டுள்­ளன. இதற்கு ஜெரோம் பெர்­னாண்டோ தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். இவர் ஒரு காலத்தில் வர்த்­தக விளம்­ப­ரங்­களில் ஈடு­பட்ட ஒரு மொடல் ஆவார். அத்­தோடு கிரிக்கெட் விளை­யாட்டு வீர­ரு­மாவார். இல­குவில் அடுத்­த­வர்­களைக் கவர்ந்­தி­ழுக்கும் தோற்றம் அவ­ரி­ட­மி­ருந்­தது. இதை அவ­தா­னித்த போர்ன் எகேன் மத குழு ஒரு குறு­கிய கால எல்­லைக்குள் அவரை ஒரு மத குரு­வாக உரு­வாக்­கி­யது. ஆசிய வல­யத்தின் பிரார்த்­த­னை­களை நடாத்தும் இயே­சுவின் சீட­ராக அவரை நிய­மித்­தது. இலட்­சக்­க­ணக்­கான மக்கள் அவரை சூழ்ந்து ஒன்று சேர்ந்­தனர். மில்­லியன், பில்­லியன் என்று பணம் தேடி வந்­தது.

இத­னை­ய­டுத்து கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­துக்கு அரு­கா­மையில் இந்த மத குழுவின் ‘மிரக்கல் டூம்’ என்ற பெயரில் பிரார்த்­தனை நிலை­ய­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. இங்கு பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­டு­வ­தற்­காக பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து பெரும் தன­வந்­தர்கள் வருகை தந்­தார்கள். நவீன உப­க­ர­ணங்கள் மற்றும் மின் அலங்­கா­ரங்கள் மூலம் இங்கு பிரார்த்­த­னைகள் நடாத்­தப்­பட்­டன.

முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான அண்ணன், தம்பி இரு­வரும் மற்றும் அவர்­களின் புதல்­வர்­களும் ஜெரோம் பெர்­னாண்­டோவை தங்­க­ளது வீட்­டுக்கு அழைத்து ஆசிர்­வா­தங்­களைப் பெற்றுக் கொண்­ட­வர்­க­ளாவர். இவர்கள் மாத்­தி­ர­மல்ல இந்­நாட்டின் பெயர்­போன அர­சி­யல்­வா­திகள் மற்றும் அவர்­க­ளது உற­வி­னர்கள் பெரும்­பா­லானோர் போர்ன் எகேய்ன் குழு­வி­னரின் ஆத­ர­வா­ளர்கள். மற்றும் இக்­குழு மீது நம்­பிக்கை கொண்­ட­வர்கள் அற்­பு­தங்கள் மூலம் பல்­வேறு நன்­மை­களைப் பெற்­றுக்­கொண்­டதன் பின்பு இதற்கு ஏமாந்து கோடிக்­க­ணக்கில் நிதி அன்­ப­ளிப்­பு­களை வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். இதனால் எவரும் ஜெரோம் பெர்­னாண்­டோவை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருக்கமாட்­டார்கள்.

ஜெரோம் பெர்­னாண்­டோ­வுக்கு சொந்­த­மான சொத்­துக்கள் தொடர்­பான விசா­ர­ணையில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. மத போதனை நிலையம் அமைப்­ப­தற்கு ஒரு செங்கல் 5 இலட்சம் ரூபாய் வீதம் பல செங்­கல்கள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளன.

இவ­ரது சொத்­துகள் மற்றும் பொருட்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க சட்­ட­வி­ரோத சொத்­துகள் விசா­ரணை பிரிவு தீர்­மா­னித்­துள்­ளது. இவ­ருக்கு நீதி­மன்றம் வெளி­நாட்டுப் பய­ணத்­தடை விதிக்க முன்பு சிங்­கப்பூர் சென்­றுள்ள நிலையில் விரைவில் நாடு திரும்­பு­வ­தாக தெரி­வித்­துள்ளார்.

இவர் தனது மத­போ­த­னை­களை முன்­னெ­டுக்கும் கட்­டு­நா­யக்கா வெயங்கொட வீதி­யி­லுள்ள மிரகல் டோம் எனும் சமய நிலை­யத்தின் மதிப்­பி­டப்­பட்ட பெறு­மதி 9 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும். இம்­மத போதனை நிலை­யத்தை நிறு­வு­வ­தற்கு குறிப்­பிட்ட சமய குழுவில் அங்கம் வகிக்கும் தொழி­ல­திபர் ஒருவர் மற்றும் அவ­ரது மனை­வியின் யெரால் 4 ஏக்கர் காணி வழங்­கப்­பட்­டுள்­ளது.

லண்டன், ஐரோப்பா, அமெ­ரிக்கா, துபாய், அவுஸ்­தி­ரே­லியா, ஹொங்கொங், இந்­தியா மற்றும் பங்­க­ளாதேஷ் நாடு­க­ளி­லி­ருந்து போத­கர்கள் பிரார்த்­தனை சேவை­க­ளுக்கு இங்கு வருகை தந்­துள்­ளனர். இவர்­க­ளி­ட­மி­ருந்தும் உதவித் தொகை பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அந்த உத­வித்­தொ­கைக்கு ரசீ­துகள் வழங்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறைந்த பட்ச உத­வித்­தொகையாக 5 இலட்சம் ரூபா பெறப்­பட்­டுள்­ளது.

போர்ன் எகேய்ன் குழு
போர்ன் எகேய்ன் என்பது சர்­வ­தேச குழு­வாகும். இதன் பின்னால் மறைந்­துள்ள அர­சி­யலை நாம் இனங்­காண வேண்டும். இவர்­களை நெறிப்­ப­டுத்­து­வது அமெ­ரிக்­காவின் சி.ஐ.ஏ. உளவுப் பிரி­வாக இருக்­கலாம். இதற்கு ஒரு பின்­பு­ல­முண்டு. இன்றும் உலகில் பல­முள்ள நாடாக முன்­னி­லையில் இருப்­பது அமெ­ரிக்­காவே. பொரு­ளா­தார பலமும் அமெ­ரிக்­கா­வி­டமே உள்­ளது. ஆயு­தங்கள் மற்றும் அணு ஆயுத பலமும் அவர்­க­ளி­டமே உள்­ளது. ஆனால் சமய பலம் அமெ­ரிக்­கா­விடம் இல்லை. கத்­தோ­லிக்க சம­யத்தின் தலைமை நிலையம் வத்­திக்­கானில் உள்­ளது. இஸ்லாத்தின் தலை­மை­யகம் என்று கூறப்­படும் ஸ்தாபனம் மக்­கா­விலே அமைந்­துள்­ளது.

போர்ன் எகேய்ன் சமய குழு­வினர் ஊடாக அமெ­ரிக்கா புதிய சமய தலைமை மத்­திய நிலை­ய­மொன்­றினை நிர்­மா­ணித்து வரு­கி­றது. அங்கு ஜெரோம் போன்ற மத போத­கர்­களை பயிற்­று­விக்கும் பல்­க­லைக்­க­ழ­க­மொன்றும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
போர்ன் எகேய்ன் சமய குழுவின் தலை­வ­ராக செயற்­படும் வூபர்ட் ஏன்ஜர் பல தட­வைகள் இலங்­கைக்கு வருகை தந்து சமய பிரார்த்­த­னை­களை நடாத்­தி­யுள்ளார். கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்பு இலங்­கைக்கு வந்தார். அவர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ மற்றும் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு பிரார்த்­த­னைகள் நடாத்­தி­யுள்ளார்.

போதகர் ஜெரோ­முடன் தொடர்­பில்லை என்கிறார் மஹிந்த
மதங்­க­ளுக்கு எதி­ராக போதகர் ஜெரோம் சமீ­பத்தில் வெளி­யிட்ட கருத்­து­க­ளுக்கு கண்­டனம் தெரி­வித்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனக்கும் ஜெரோம் பெர்­னாண்­டோ­வுக்கும் எவ்­வித தொடர்பும் இல்லை எனக் கூறி­யுள்ளார். இந்­நாட்டில் மத நல்­லி­ணக்­கத்தை குழப்­பு­வ­தற்கோ, வெறுப்­பு­ணர்­வு­க­ளுக்கோ இட­ம­ளிக்க முடி­யாது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் இலங்­கையில் இன நல்­லி­ணக்­கத்­துக்கு எதி­ரான முயற்­சிக்கு எந்­த­வொரு நபர் கூறும் கருத்­துக்­க­ளையும் நான் வன்­மை­யாக கண்­டிக்­கிறேன். சிம்­பாப்வே ஆயர் ஏஞ்சல் அல்­லது போதகர் ஜெரோம் பெர்­னாண்­டோ­வுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் நான் பிர­த­ம­ராக இருந்த போது என்னைச் சந்­திக்க ஜெரோமின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து அழைப்பு வந்­தது. அப்­போது நான் மத விவ­கார அமைச்­ச­ரா­கவும் இருந்­ததால் சந்­திப்பு இடம்­பெற்­றது. இது அதி­கா­ர­பூர்வ சந்­திப்பு என்­பதால் ஊட­கங்­களில் படங்கள் வெளி­யி­டப்­பட்­டன. இதற்குப் பின்பு அவர்­க­ளுடன் வேறு எந்த சந்­திப்பும் இடம்­பெ­ற­வில்லை. அவர்­க­ளுடன் எனக்குத் தனிப்­பட்ட தொடர்பு இல்லை. மதங்­க­ளுக்கு எதி­ராக வெளி­யி­டப்­பட்ட இழி­வான கருத்­து­க­ளுக்கு எதி­ராக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தற்­போது விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர் என்றார்.

மன்­னிப்பு கோரத் தயார்
மத போத­னையின் போது தான் குறிப்­பிட்ட கருத்­துகள் பெளத்தம், இஸ்லாம் மற்றும் இந்து ஆகிய மதத்­த­வர்கள் மத்­தியில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கு­மாயின் அதற்­காக மன்­னிப்புக் கோரத் தயா­ராக இருப்­ப­தா­கவும் மீண்டும் விரைவில் இலங்கை திரும்­பு­வ­தா­கவும் மத போதகர் ஜெரோம் பெர்­னாண்டோ டுவிட்டர் பதிவின் ஊடாகத் தெரி­வித்­துள்ளார்.

இவ­ரது சர்ச்­சைக்­கு­ரிய கருத்து தொடர்பில் தேசிய வளங்­களைப் பாது­காக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குண­வங்ச தேரர் உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்துள்ளார். இவ்வாறான நிலையிலே அவர் மன்னிப்புக் கோரத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்றாலும் எனது வார்த்தைகள் உங்களை எந்த வகையிலும் மன ரீதியாக புண்படுத்தியிருந்தால் எனது பெளத்த சகோதரர்கள், இந்து சகோதரர்கள், முஸ்லிம் சகோதர சகோதரிகளிடம் மன்னிப்புக் கோர விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூருக்கு சென்றுள்ள அவர் கடந்த 21ஆம் திகதி இலங்கை திரும்புவதாக அறிவித்திருந்தார். என்றாலும் அவர் நாடு திரும்பவில்லை. கட்டுநாயக்க மிரகல் டோமில் 21ஆம் திகதிய ஞாயிறு ஆராதனை இடம்பெறாது என தனது சமூகவலைத்தளத்தில் அவர் பதிவொன்றினை இட்டிருந்தார்.

கட்டுநாயக்கவில் உள்ள அவரது மிரகல் டோம் மண்டபத்தின் முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு இடமளிக்கக் கூடாது
சில மேலைத்தேய நாடுகளிலுள்ள அமைப்புகள் எமது நாட்டின் சமய மற்றும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை சவா­லுக்­குட்­ப­டுத்தி தங்கள் இலக்­கு­களை எய்­து­வ­தற்கு முயற்­சிக்­கின்­றன. அதற்­காக இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு மில்­லியன் கணக்­கான டொலர்கள் கைமாறுகின்றன. சமய நல்லிணக்கத்தை இல்லாமற் செய்து அவ்வாறான அமைப்புகள் தங்கள் இலக்கினை வெற்றி கொள்கின்றன. அரசு இதற்கு இடமளிக்கக் கூடாது. சமய வேடங்களில் இங்கு வந்தாலும் அவர்களது முகத்திரையை கிழித்தெறிவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டத்தைக் கடுமையாக அமுல்நடத்த வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.