நாட்டிலும் நெருக்கடி வீட்டிலும் நெருக்கடி ; உயிரை மாய்க்கும் குடும்பங்கள்

0 300

ஆங்கிலத்தில் : சேனுகா ஜயகொடி

தனிப்­பட்ட மன அழுத்­தங்கள், வீட்­டுக்குள் நிலவும் பிரச்­சி­னைகள்,பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள தாய்­மார்கள் தங்­க­ளதும் தங்­க­ளது பிள்­ளை­க­ளி­னதும் உயிரை மாய்த்­துக்­கொள்ளும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ளன. கடந்த சில வாரங்­க­ளாக இடம் பெற்­றுள்ள இவ்­வா­றான சம்­ப­வங்கள் அனை­வ­ரதும் கவ­னத்தை ஈர்த்­துள்­ளன.

கடந்த பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி 31 வய­தான தாயொ­ருவர் வாழ்க்­கையில் விரக்­தி­யுற்று எடுத்த முடிவு அனை­வ­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­ய­துடன் வேத­னையில் ஆழ்த்­தி­யது. அந்­தத்தாய் பெந்­தோட்டை பாலத்தில் தனது இரு பிள்­ளை­க­ளையும் அநா­த­ர­வாக விட்டு ஆற்­றுக்குள் குதித்தார்.

தாயும் இரண்டு பிள்­ளை­களும் ஊர­கஸ்­மன்­ஹந்­தி­ய­வி­லி­ருக்கும் தமது தந்­தையைப் பார்ப்­ப­தற்குப் பய­ண­மாகிக் கொண்­டி­ருந்­தனர். அவர்கள் அழுத்­க­மையைக் கடந்து பய­ணித்துக் கொண்­டி­ருந்­த­வேளை இரு பிள்­ளை­களின் தந்தை தன்னைச் சந்­திக்­கவோ, பார்க்­கவோ வர­வேண்­டா­மென பிள்­ளை­களின் தாயான தனது மனை­விக்குத் தெரி­வித்­தி­ருக்­கிறார். இதனால் கவலை மேலீட்டால் அந்­தத்தாய் தொடர்ந்தும் பய­ணிக்­காது பெந்­தோட்டை பாலத்­தி­லி­ருந்து ஆற்றில் பாய்ந்­துள்ளார். நீரில் குதிப்­ப­தற்கு முன்பு இரு பிள்­ளை­க­ளையும் பாலத்­திற்­க­ருகில் இருக்கச் செய்­துள்ளார்.

தான் நீரில் பாய்ந்து இறந்­ததும், நீரில் குதிக்­கும்­ப­டியும் மூத்த பிள்­ளை­யிடம் கூறி­யுள்ளார். இளைய பிள்­ளை­யுடன் நீரில் குதிக்க வேண்­டு­மெ­னவும் உத்­த­ர­விட்­டுள்ளார்.
பின்பு அந்­தத்தாய் ஒரு பட­கோட்­டி­யினால் காப்­பாற்­றப்­பட்டு பலப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். பிள்­ளைகள் இரு­வரும் நீதி­மன்றின் உத்­த­ர­வின்­பேரில் அவர்­க­ளது பாட்­ட­னா­ரி­டமும் மாமா­வி­டமும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திக­தியும் சோக­மான சம்­பவம் ஒன்று நிகழ்ந்­துள்­ளது. அன்று 20 வய­தான தாயொ­ருவர் தனது ஒன்­றரை வய­தான பிள்­ளையை இறால் பண்ணை தாங்­கிக்குள் வீசி­யுள்ளார். இச்­சம்­பவம் உடப்பு பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது. தனது கண­வ­ருடன் ஏற்­பட்ட முரண்­பாடு கார­ண­மா­கவே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. பொலிஸார் அந்­தப் ­பெண்ணைக் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் ­ப­டுத்­தி­னார்கள். நீதி­மன்றம் அந்­தத்­தாயை 14 ஆம் திக­தி­வரை (நேற்று முன்­தினம்) விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டது.

மற்­றொரு சம்­பவம் இங்கு குறிப்­பிட்ட ஏனைய சம்­ப­வங்­களை விட விஞ்­சி­ய­தாக சோக­ம­ய­மா­ன­தாக அமைந்­துள்­ளது. அந்­தத்தாய் கெப்­பித்திக் கொல்­லா­வையைச் சேர்ந்­தவள். அப்பெண் தனது மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளாக இரு பிள்­ளைகளுடன் உயிரை மாய்த்­துக்­கொள்­வ­தற்­காக கிணற்றில் பாய்ந்­துள்ளார். இச்­சம்­பவம் கடந்த 6 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது. தனது மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளான இரு­ பிள்­ளை­களின் மருத்­துவச் செல­வு­களைச் சமா­ளிக்க முடி­யாமை மற்றும் வாழ்க்கைச் செல­வு­களைத் தாங்­கிக்­கொள்ள முடி­யா­ததன் கார­ண­மா­கவே இந்­தத்தாய் இந்த விப­ரீத முடி­வினை எடுத்­துள்ளார்.

 

இந்தச் சோக விபத்தில் 21 வய­தான மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான மகன் உயி­ரி­ழந்­துள்ளார். தாயும் 9 வய­தான இளைய மகனும் காப்­பாற்­றப்­பட்­டுள்­ளனர். காப்­பாற்­றப்­பட்­ட குறிப்­பிட்ட ­மகன் காது கேட்­பதில் குறை­பா­டுள்­ளவர். இரு­வரும் கெப்­பித்­திக்­கொல்­லாவ வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். குறிப்­பிட்ட பெண் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டார். கொலை மற்றும் கொலை முயற்சி குற்­றச்­சாட்­டு­களின் கீழேயே அவர் கைது செய்­யப்­பட்­டார். அப்பெண்ணுக்கு சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டது.

அத்­தோடு கடந்த 7 ஆம் திகதி மற்­றுமொரு சோக நிகழ்வு வவு­னி­யாவில் பதி­வா­கி­யுள்­ளது. வவு­னியா குட்செட் வீதியில் வீடொன்­றினுள் இரு பிள்­ளைகள் மற்றும் அப் பிள்­ளை­களின் தாய், தந்­தை­யி­னது சட­லங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. இக்­கு­டும்­பத் ­த­லைவன் இணைய வழி­யூ­டாக விசா பெற்­றுக்­கொ­டுக்கும் தொழிலை மேற்­கொண்டு வந்­தவர்.
இத்­தொழில் கார­ண­மாக அவர் பெரும் கட­னா­ளி­யாக மாறி­யி­ருந்தார். இதே வேளை குடும்­பத்­தலைவி ஓர் ஆசி­ரி­யை­யாவார்.

இந்தக் குடும்­பத்­த­லைவன் கடன் சுமை கார­ண­மாக மன­ அ­ழுத்­தங்­க­ளுக்­குள்­ளாகி தனது மனை­வி­யையும், பிள்­ளை­க­ளையும் கொன்­று­விட்டு தான் தற்­கொலை செய்து கொண்­டி­ருக்­கலாம் என பொலிஸார் நம்­பு­கின்­றனர். கடன் தொல்­லையே தற்­கொ­லைக்கு கார­ண­மாக இருக்­கலாம் எனவும் பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

மேலும் அண்­மையில் செவ­ன­கல பிர­தேச செய­லாளர் காரி­யா­ல­யத்­துக்குச் சென்ற பெண் ஒரு­வரின் கதையும் மனதை நெகிழ வைக்­கி­றது. அண்­மையில் 31 வய­தான பெண் தனது இரு பிள்­ளை­க­ளுடன் செவ­ன­கல பிர­தேச செயலாளர் காரி­யா­ல­யத்­துக்குப் படி­யே­றினார்.

தனது கணவர் தன்னை சட்­ட ­ரீ­தி­யாக வெளி­யேற்­றி­விட்­ட­தா­கவும் தனக்கு காணியும், வீடொன்றும் பெற்­றுத்­த­ரு­மாறும் பிர­தேச செய­லா­ளரை வேண்­டினார். செவ­ன­கல பிர­தேச செய­லாளர் ஆர்.பி.என்.ஆர்.பிய­சாந்த குறிப்­பிட்ட பெண்­ணுக்கு வீடொன்­றினை நிர்­மா­ணித்துக் கொடுப்­ப­தற்­காக காணி­யொன்று இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்தார். ஆனால் வீடொன்­றினை நிர்­மா­ணித்து வழங்­கு­வ­தற்கு சமூக சேவை திணைக்­க­ளத்­திடம் நிதி­யில்லை என்றும் கூறினார்.

சமூக வலு­வூட்டல் இரா­ஜாங்க அமைச்சர் அனுபா பஸ்­குவல் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், இவ்­வா­றான விசேட வேலைத்­திட்­டங்கள் எதுவும் எம்மிடம் இல்லை. அமைச்சு மக்­க­ளுக்கு தற்­கா­லி­க­மான தீர்­வு­க­ளையே வழங்கி வரு­கி­றது. குறிப்­பாக வர்த்­த­கத்­துக்கு உதவும் வகையில் ஒத்­து­ழைப்­புகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான முறைப்­பா­டுகள் பிர­தேச செய­ல­கங்கள் மூலம் தேசிய சிறுவர் பாது­காப்பு நிறு­வ­னத்­துக்கு கிடைக்­கப்­பெற்று வரு­வ­தாக அதன் தலைவர் உத­ய­கு­மார அம­ர­சிங்க தெரி­வித்தார். இவ்­வா­றான சம்­ப­வங்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு வரும் சிறு­வர்­க­ளுக்கு உள­வியல் ரீதி­யான சேவைகள் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் அவர் கூறினார்.

இவ்­வா­றான சிறு­வர்கள் தொடர்­பான முறை­ப்பா­டுகள் நிரந்தர வருமானமற்ற குடும்­பங்­க­ளி­டமிருந்தே கிடைக்­கப்­பெ­று­வ­தா­கவும் அவர் கூறினார். இதற்குக் காரணம் குடும்­பப்­ பி­ரச்­சி­னை­களும் மன­ அ­ழுத்­தங்­க­ளு­மே­யாகும்.

பொறுக்க முடி­யாத தீர்த்­துக்­கொள்ள முடி­யாத பிரச்­சி­னைகள் குடும்­பத்­துக்குள் நில­வினால் அவர்கள் பொலிஸ் நிலை­யத்­துக்கு வருகை தந்து சிறுவர் மற்றும் பெண் பிரிவு பொலி­ஸ் பிரிவில் முறை­யிட வேண்டும் என நாம் ஆலோ­சனை வழங்­கு­கிறோம் என பொலிஸ் பேச்­சாளர் நிஹால் தல்­துவ தெரி­வித்தார். அவர்கள் தங்­க­ளது பிள்­ளை­களைக் கொலை செய்­யாது இந்த வழி முறையைப் பின்­பற்ற வேண்­டு­மெ­னவும் வேண்டிக் கொண்டார்.

இதே­வேளை ‘கிரா­மங்­களில் பெரும் எண்­ணிக்­கை­யான மக்கள் தங்­க­ளது தொழில்­களை இழந்­துள்­ளனர். பலர் கடன் சுமையில் சிக்­கி­யுள்­ளனர். நிர்­மா­ணத்­துறை தொழி­லா­ளர்கள் தொழில்­களை இழந்­துள்­ளனர். விவ­சா­யத்தில் ஈடு­பட்­டுள்ளோர் பச­ளைக்கு பெருந்­தொகைப் பணத்தைச் செல­விட வேண்­டி­யுள்­ளது. அவர்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் எவ்­வித நிவா­ர­ணமும் வழங்­கப்­ப­டுவதில்லை’ என இலங்கை கிரா­ம அதிகாரி­களின் சங்­கத்தின் தலைவர் டப்­ளியூ.ஜி. கமல் கித்­சிறி தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், ‘இவ்­வி­வ­கா­ரங்­களில் எம்மால் தலை­யிட முடி­யாது என்றாலும் குடும்ப முரண்­பா­டு­களைத் தீர்த்து வைப்­ப­தற்­கான முயற்­சி­களில் எம்மால் ஈடு­பட முடியும்’ என்றார்.

ஸ்ரீலங்கா சுமித்­ராயோ தலைவி சுரன்­ஜனி விக்­கி­ர­ம­ரத்ன தெரி­விக்­கையில், யாழ்ப்­பாணம் முதல் லுனு­கம்­வெ­ஹர வரை­யுள்ள தங்கள் கிளை­களில் 270 தொண்­டர்கள் பணி­பு­ரி­கி­றார்கள்.

நாங்கள் பொரு­ளா­தார நெருக்­க­டி­களை எதிர்­கொண்டு வரு­கிறோம். கடந்த வரு­டத்­தி­லி­ருந்து பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். எதிர்­பா­ராத அள­வுக்கு மக்­க­ளி­ட­மி­ருந்து அழைப்­புகள் கிடைத்து வரு­கின்­றன. அவர்கள் கடனில் சிக்­கி­யுள்­ளனர். நிதி நிலை­மையை அவர்­களால் சமா­ளிக்க முடி­யா­துள்­ளது எனவும் சுரன்­ஜினி விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

குடும்­பங்கள் அழுத்­தங்­க­ளுக்கு உட்­ப­டும்­போது அவர்­களால் நிலை­மையை சமா­ளிக்க முடி­யாமற் போகி­றது. இறு­தியில் அவர்கள் இவ்­வாறான கவலையான தீர்­மானங்களை மேற்­கொள்­கின்­றனர் என கொழும்பு பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் ஸ்ரீ ஹெட்­டிகே தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் இந்தப் பிரச்­சி­னைகள் முளை­யிலே கிள்ளி எறி­யப்­பட வேண்டும். சமூக அடிப்­ப­டை­யி­லான கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அரச உத்­தி­யோ­கத்­த­ர்களான கிராம அதி­கா­ரிகள் தங்கள் பகு­தி­யி­லுள்ள ஒவ்வொரு குடும்­பத்தின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்­நி­லையில் சில தினங்­க­ளுக்கு முன்பு மேலு­மொரு அதிர்ச்சி தரும் சம்­பவம் பதி­வா­கி­யுள்­ளது. 17 வய­தான யுவ­தி­யொ­ருவர் அவ­ரது வளர்ப்புத் தாயா­ரினால் தாக்­கப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் ராகம பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது. யுவ­தியின் தந்தை வெளி­நாட்டில் பணி புரி­கிறார். இவர் இந்தச் சம்­ப­வத்தை சி.சி.ரி.வி. கெமரா பதிவு ஊடாக பார்­வை­யிட்­டுள்ளார்.

மற்­று­மொரு சம்­பவம் பக்­க­முன பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது. ஒருவர் வெளி­நாட்டில் இருக்கும் தனது மனை­விக்கு வீடியோ பதி­வொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். மனை­வி­யி­ட­மி­ருந்து பணம் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக மகளை தாக்கி அதனை வீடியோவாக அனுப்பியுள்ளார்.

இவ்வாறு நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் பிரச்சினைகள் பூதாகரமாகியுள்ளன. இவற்றுக்குத் தீர்வு வழங்குவது கடினம் என்ற போதிலும் உயிரை மாய்த்துக் கொள்ளுமளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்காவது உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கான கட்டமைப்பு ஒன்றை அரசாங்கம் தாபிக்க வேண்டும். இன்றேல் இவ்வாறான சம்பவங்கள் தினம் தினம் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது போய்விடும்.

நன்றி: சன்டே டைம்ஸ்

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.