ஈரான் மகளிரின் போராட்டமும் உலக மகளிரின் மௌனமும்

0 436

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

இரு­பத்­தி­ரண்டு வயது நிரம்­பிய முஸ்லிம் பெண் மஹிசா அமினி ஈரானின் பஸீஜ் என்­ற­ழைக்­கப்­படும் ஒழுக்கக் கண்­கா­ணிப்பு அதி­கா­ரி­களின் கைகளிற் சிக்கி உயிர் இழந்­ததை தொடர்ந்து அந்­நாட்டின் முஸ்லிம் மகளிர் கடந்த சில வாரங்­க­ளாக முல்­லாக்­களின் ஆட்­சிக்­கெ­தி­ராகக் கிளர்ந்­தெ­ழுந்­துள்­ளனர். அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக ஆண் இளை­ஞர்­களும் களத்தில் குதித்­துள்­ளனர். அக்­கி­ளர்ச்சி பல மேற்கு நாடு­களின் மகளிர் ஆத­ர­வையும் திரட்­டி­யுள்­ளதை ஊட­கங்கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. மகளிர் கொழுத்­திய தீ இன்று பர­வலாய் எரி­கி­றது. ஆனால் உல­கெங்­கு­முள்ள சுன்னி முஸ்லிம் நாடு­களில் ஈரா­னிய மக­ளிரின் கிளர்ச்­சிக்­கான ஆத­ரவு மிகவும் குறை­வாகக் காணப்­ப­டு­வது விசித்­தி­ர­மாகத் தோன்­ற­வில்­லையா? அவர்­களின் மௌனத்தின் மர்மம் என்ன? அது வர­லாறு படைத்த மதப்­பி­ளவின் பிர­தி­ப­லிப்பா? மேற்­கு­லகு ஏன் இக்­கி­ளர்ச்­சிக்கு ஆத­ர­வ­ளிக்­கின்­றது? இவ்­வா­றான வினாக்­க­ளைப்­பற்றி அல­சு­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம்.

பெண்­களின் இன உரிமைப் போராட்டம்
மானிட சமூகம் ஆதி­யிலே வேடர்­க­ளாகத் திரிந்த காலத்தில் ஆண்­களும் பெண்­களும் சம­நி­லையில் நின்று வன­வி­லங்­கு­க­ளுடன் போராடி வாழ்ந்­தனர் என்றும், பின்னர் வேடுவர் சமூகம் விவ­சாயச் சமூ­க­மா­க­மா­கவும் வியா­பாரச் சமூ­க­மா­கவும் மாறத் தொடங்­கவே மனிதக் குழுக்கள் நிலை­யாக ஓரி­டத்தில் குடி­கொள்ளத் தொடங்க தனி­யு­டமை அடிப்­ப­டையில் ஏற்­றத்­தாழ்­வு­களும் வள­ர­லா­யின என்றும் அதன்­பின்னர் பெண்­களும் படிப்­ப­டி­யாக தமது சுதந்­தி­ரத்­தையும் சம­நி­லை­யையும் இழக்கத் தொடங்கி ஆண்­களின் அடக்­கு­த­லுக்கு ஆளா­கினர் என்றும் வர­லாறும் சமூ­க­வி­யலும் கூறு­கின்­றன.

அவ்­வா­றான வாழ்க்கை இஸ்லாம் தோன்­றி­ய­போது அரே­பிய சமூ­கத்தில் மிகவும் கேவ­ல­மான ஒரு நிலையை அடைந்து பெண்கள் ஆண்­களின் தனி­யு­டமைச் சொத்­தா­கவும் ஆண்­களின் காமப் பசியைத் தீர்க்கும் இரை­யா­கவும் மாறி இருந்­தனர். அந்த அவ­லத்­துக்கு முற்றுப் புள்­ளி­வைக்கத் தோன்­றி­யதே இஸ்லாம். திரு­ம­றையின் திரு­வ­ச­னங்­க­ளையும் திருத்­தூ­தரின் வாழ்க்­கை­யையும் பக்­தி­யுடன் மேலெ­ழுந்­த­வா­ரி­யாகப் படிக்­காமல் அவ்­வ­ச­னங்கள் எச்­சந்­தர்ப்­பங்­களில் என்ன நோக்­கங்­க­ளுக்­காக அரு­ளப்­பட்­டன, அவற்றை எவ்­வாறு பெரு­மானார் நடை­மு­றைப்­ப­டுத்திக் காட்­டினார் என்ற வினாக்­களை தர்க்­க­ரீ­தியில் சமூ­க­வியல் அடிப்­ப­டையில் ஆராய்ந்தால் இந்த உண்மை வெளிப்­படும். தாய் அன்பை இழந்து, ஒரு செவி­லியின் மடி­யிலே தவழ்ந்து விளை­யாடி, தன்­னிலும் மூத்­த­வ­ரான ஒரு பெண்ணை மணந்து சரித்­தி­ரம்­ப­டைத்த ஒரு தலைவன் பெண் இனத்தை கன­வி­லேனும் ஓர் அடிமை இன­மாக மதித்­தி­ருப்­பாரா என்­பதை எண்­ணிப்­பார்த்தால் பெண்­களின் இன உரிமைப் போராட்­டத்­துக்கு திரு­ம­றையே வழி­வ­குத்­தது என்ற உண்­மையை உண­ரலாம்.

ஆனால் காலப்­போக்கில் இஸ்­லா­மிய மதக்­கல்வி ஆண்­களின் தனி­யு­ட­மை­யா­க­மாற அவர்­களே பெண்­க­ளைப்­பற்றித் திரு­ம­றையும் திருத்­தூ­தரின் போத­னை­களும் என்ன சொல்­கின்­றன எனப்­போ­திக்­க­லா­யினர். அந்தப் போத­னை­களில் ஆண்­வர்க்­கத்தின் அதி­காரம் தொனித்­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை. இந்த நிலை நவீ­னத்­து­வமும் தற்­கா­லக்­கல்­வியும் முஸ்லிம் சமூ­கங்­களிற் காலூன்­றும்­வரை நீடித்­தது. இன்றோ நிலை வேறு. திருக்­கு­ர்ஆனும் திருத்­தூதர் போத­னையும் உண்­மை­யி­லேயே தங்­க­ளைப்­பற்றி என்ன சொல்­கின்­றன என்­பதை முஸ்லிம் பெண்கள் தாமா­கவே தற்­கா­லக்­கல்­வியின் உத­வி­யுடன் அறியத் தொடங்­கி­விட்­டனர்;. அதன் விளை­வுதான் இன்­றைய முஸ்லிம் மக­ளிரின் இன உரிமைப் போராட்டம். அந்தப் போராட்­டத்தின் இன்­றைய அத்­தி­யா­யமே ஈரானில் நடை­பெறும் ஆர்ப்பாட்டங்கள்.

ஷீயா மக­ளிரின் கோரிக்கை
முல்­லாக்கள் வகுத்­துள்ள ஒழுக்க போதனைச் சிறை­யி­லி­ருந்து விடு­தலை வேண்டும்; ஆண்­க­ளைப்போல் பெண்­க­ளுக்கும் தனித்­தி­யங்கும் திற­மையும் சமூ­கத்தில் உயி­ரோட்­ட­முள்ள ஓர் இன­மாக வாழ்ந்து சமூக மேம்­பாட்­டுக்குப் பங்­க­ளிக்கும் வல்­ல­மையும் உண்டு; ஆகவே ஆண்­க­ளுடன் சம­நி­லையில் நின்று நாட்­டுக்­கா­கவும் சமூ­கத்­துக்­கா­கவும் பாடு­பட எங்­க­ளுக்கு விடு­தலை வேண்டும். இவைதான் ஷீயா மக­ளிரின் போராட்டக் கரு. அதற்கு ஓர் அடை­யா­ள­மாக விளங்­கு­வ­துதான் பெண்­களின் கூந்தல் திரை.

சீலைக் கூடா­ரத்­துக்குள் பெண்கள் தங்­களின் கூந்­தலை மறைக்­க­வேண்டும் என்­பது முல்­லாக்­களின் போத­னையும் கட்­ட­ளையும். ஆனால் அதனை மறைப்­பதும் திறப்­பதும் ஏன் கூந்­த­லையே வெட்டி எறி­வதும் தங்­களின் அடிப்­படை மனித உரிமை என்­பது மக­ளிரின் நிலைப்­பாடு;. இந்த நிலைப்­பாடு அனைத்து மக­ளி­ருக்கும் பொது­வா­னது என்­பதை அவர்கள் மறுப்­பார்­களா?

சுன்னி மக­ளிரின் ஹிஜாப் போராட்டம்
பிரான்ஸ் தொடக்கம் இந்­தியா ஊடாக இலங்கை வரை ஹிஜாப் அணியும் உரி­மை­யைக்­கேட்டு சுன்னி மகளிர் நடத்­திய ஆர்ப்பாட்டங்­களை வாச­கர்கள் மறந்­தி­ருக்க மாட்­டார்கள். அண்­மையில் இலங்­கையில் ஷண்­முகா வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெற்ற முஸ்லிம் ஆசி­ரி­யை­களின் ஹிஜாப் கோரிக்கை நீதி­மன்­றம்­வரை சென்று அது பெண்­களின் அடிப்­படை மனித உரிமை என்ற வாதாட்­டத்­துடன் வெற்­றி­பெற்­ற­தையும் வாச­கர்கள் அறிந்­தி­ருப்பர். அதே போராட்டம் இந்­தி­யா­விலும் ஆந்­திரா மாநி­லத்தில் நடை­பெற்­றது. அதில் ஈடு­பட்­டோரும் சுன்னி மக­ளிரே. இந்தப் போராட்­டங்கள் எல்­லாமே முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழும் நாடு­களில் நடை­பெற்­றன என்­ப­தையும் உண­ர­வேண்டும்.

சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் நாடு­களில் முஸ்லிம் மகளிர் கூந்­த­லையும் சில இடங்­களில் முகத்­தையும் மூடு­வ­தற்கு உரிமை கேட்­கி­றார்கள். ஆனால் பெரும்­பான்­மை­யாக வாழும் நாடு­களில் திறப்­ப­தற்கு மகளிர் உரிமை கோரு­கி­றார்கள். ஓரி­ரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பி­யா­விலும் பெண்கள் ஆடைச் சுதந்­திரம் வேண்டி ஆர்ப்­பாட்டம் நடத்தி அதில் சில பெண்கள் சிறையில் தள்­ளப்­பட்­ட­தையும் ஞாப­கத்­திற்­கொள்ள வேண்டும். இப்­போது தலி­பான்­களின் ஆப்­கா­னிஸ்­தா­னிலும் இது வெடிக்­கி­றது. அந்த மக­ளி­ரையும் தலி­பான்கள் அடக்­கப்­பார்க்­கி­றார்கள். அதே ஆடைச் சுதந்­திரம் வேண்­டியே ஈரா­னிய மகளிர் இன்று போரா­டு­கி­றார்கள்.

இந்த நிலையில் சுன்னி முஸ்லிம் மக­ளிரின் மௌனம் ஒரு முரண்­பா­டாகத் தோன்­ற­வில்­லையா? இரண்­டுமே அடிப்­படை மனி­தா­பி­மான உரிமை என்ற கோதாவில் நடை­பெ­று­கின்­றன. மூடு­வ­தற்கு உரிமை வேண்­டு­மென்றால் திறப்­ப­தற்கும் அந்த உரிமை வேண்­டும்­தானே? என­வேதான் ஷீயா மக­ளிரின் உரிமைப் போராட்­டத்­துக்கு சுன்னி மக­ளிரின் மௌனம் ஒரு புதி­ராகத் தோன்­று­கி­றது.

மதப் பிள­வுதான் கார­ணமோ?
இஸ்­லாத்தின் ஷீயா சுன்னி மதப்­பி­ளவு வர­லாறு கண்ட உண்மை. இந்தப் பிளவை முன்­நின்று வலி­யு­றுத்­துவோர் இரு பக்­கத்­தி­லு­முள்ள முல்­லாக்­களே. என­வேதான் ஷீயா மக­ளிரின் போராட்­டத்­துக்கு சுன்னி முஸ்­லிம்கள் ஏன் ஆத­ரவு வழங்க வேண்டும் என்ற ஒரு நிலைப்­பாடு சுன்னி மக­ளிரின் மௌனத்­துக்குக் கார­ணமோ என்று எண்ணத் தோன்­று­கி­றது. எனினும் அதிலும் ஒரு முரண்­பா­டுண்டு.

1980களில் சுன்னி முஸ்லிம் நாடு­களில் ஏற்­பட்ட மத­வி­ழிப்­பு­ணர்­வுக்குக் காரணம் ஈரானில் ஏற்­பட்ட புரட்­சியும் குமேனி தலை­மையில் நிறு­வப்­பட்ட ஆட்­சியும் என்­பதை மறுக்­க­லாமா? அந்த விழிப்­பு­ணர்­வு­தானே சுன்னி முஸ்லிம் நாடு­க­ளிலும் இஸ்­லா­மிய அரசு வேண்டும், ஷரியாச் சட்டம் அமுல்படுத்­தப்­படல் வேண்டும் என்ற கிளர்­ச்சிக்கும் ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கும் போர்­க­ளுக்கும் கார­ணமாய் அமைந்­தது? அப்­போது மட்டும் ஏன் சுன்னி முஸ்­லிம்கள் ஈரானின் புரட்­சியை ஒரு ஷீயா பிரச்­சினை என்று ஒதுக்­கி­விட்டு மௌனம் சாதிக்­க­வில்லை? அவ்­வாறு புறக்­க­ணிக்­கு­மாறு அமெ­ரிக்கா போன்ற மேற்கு வல்­ல­ர­சுகள் வேண்­டி­யும்­கூட அந்தப் புரட்சி சுன்­னி­க­ளி­டையே எவ்­வா­றான ஓர் உற்­சா­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது என்­பதை விப­ரிக்க வேண்­டி­ய­தில்லை. அதே உற்­சாகம் இன்று சுன்னி மக­ளி­ரி­டையே காணப்­ப­ட­வில்­லையே என்­ப­துதான் ஏமாற்­ற­மாக இருக்­கி­றது.

வல்­ல­ர­சு­களின் ஆத­ரவு
ஈரா­னிய மக­ளிரின் போராட்­டத்­துக்கு மேற்கு நாடு­களின் ஆத­ரவு உண்டு. அதனை அங்­குள்ள தொலைக்­காட்சி ஊட­கங்கள் தெளி­வு­ப­டுத்­து­கின்­றன. ஆனால் அதற்கு காரணம் முஸ்லிம் மக­ளிரின் முன்­னேற்­றத்தில் அவர்­க­ளுக்­குள்ள விருப்பம் அல்ல, ஈரானின் அணு­வா­யுதப் பலத்தை முறி­ய­டிப்­பதே என்­பதை முஸ்லிம் நாடுகள் உண­ர­ வேண்டும். ஈரா­னிய அரசு இஸ்­ர­வே­லி­னதும் அமெ­ரிக்­கா­வி­னதும் முதல் எதிரி. அந்த எதி­ரிக்கு எதி­ரி­யாக எழுந்­துள்­ளது மகளிர் புரட்சி. ஆகவே எதி­ரியின் எதிரி நண்பன் என்ற முறை­யி­லேயே அவர்­களின் ஆத­ரவை விளங்க வேண்­டி­யுள்­ளது.

எந்த ஒரு முஸ்லிம் நாடும் அணு­வா­யுதப் பல­முள்­ள­தாக வளர்­வதை இஸ்­ரவேல் எப்­பா­டு­பட்டும் தடுக்கும். அதற்கு உடந்தை அமெ­ரிக்கா. இன்­றைய முஸ்லிம் நாடு­களுள் அணு­வா­யுதப் பல­முள்ள ஒரே­யொரு நாடு பாக்­கிஸ்தான் மட்­டுமே. ஆனால் அது ஒரு வறிய நாடு. பொரு­ளா­தார வலு­வற்ற நாடு. அதனால் முஸ்லிம் உல­குக்குத் தலைமை தாங்கும் வல்­லமை அந்த நாட்­டுக்கு இல்லை. இனியும் இருக்­குமா என்­பதும் சந்­தேகம். அது மட்­டு­மல்ல, அதற்குப் பக்­கத்­தி­லுள்ள இந்­தியா அணு­வா­யுதப் பலத்­து­டனும் பொரு­ளா­தார வளத்­து­டனும் எழுச்சி பெறும் ஒரு பிராந்­திய வல்­ல­ரசு. அதனால் பாக்­கிஸ்­தானை மட்­டுப்­ப­டுத்தும் பணியை இந்­தி­யா­விடம் அமெ­ரிக்­காவும் இஸ்­ர­வேலும் ஒப்­ப­டைத்­துள்­ளன.

ஆனால் ஈரா­னுக்கோ அதன் பெற்­றோ­லிய வளத்­துடன் அணு­வா­யுத பலத்­தையும் வளர்க்க முடி­யு­மானால் அதுவும் ஒரு பிராந்­திய முஸ்லிம் வல்­ல­ர­சாக மாறும் வாய்ப்­புண்டு. என­வேதான் எப்­பா­டு­பட்டும் அந்த வளர்ச்­சியைத் தடுக்க மேற்­கு­லகு இஸ்­ர­வே­லுடன் இணைந்து மேற்­கொள்ளும் முயற்­சிகள். இந்தப் பின்­ன­ணி­யி­லேதான் மகளிர் ஆர்ப்பாட்டத்­துக்­கான மேற்கின் ஆத­ரவை விளங்­குதல் வேண்டும். அதே மேற்கு ஏன் சவூதிப் பெண்­களின் விடு­தலைப் போராட்­டத்­துக்குத் தனது ஆத­ரவை நல்கத் தயங்­கு­கின்­றது என்­பதும் ஒரு புதி­ராகத் தோன்­ற­வில்­லையா?

தவிர்க்க முடி­யாத போராட்டம்
இன்­றைய முஸ்லிம் பெண்­களின் விழிப்பும் எழுச்­சியும் நவீ­னத்­து­வத்தின் தவிர்க்க முடி­யாத ஓர் அங்கம். அவர்கள் வாழும் சமூ­கங்கள் எதிர்­நோக்கும் சவால்­களை ஆண்­க­ளுடன் சம­நி­லையில் நின்று எதிர்­கொண்டு வெல்லும் சக்தி பெண்­க­ளிடம் உண்டு. ஆண்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் உடற்­தோற்­றமும் சரீரப் பலமும் வேறு­ப­டலாம். ஆனால் சிந்­த­னை­யிலும் செயற்­பாட்­டிலும் ஆண்களையும் விஞ்சிவிடும் தன்மை அவர்களிடம் உண்டு. அது இறைவனே கொடுத்த கொடை. ஆனால் அவர்கள் சுய­மாக இயங்­கு­வ­தற்கு புரோ­கிதம் ஒரு தடை­யாக இருக்­கு­மானால் அதனை தகர்த்­தெ­றிந்­து­விட்டு சுயமே செல்ல அவர்கள் துணிந்­து­விட்­டனர். அதைத்தான் மேற்­கிலும் கிழக்­கிலும் பெண்­ணினம் இன்று செய்­து­கொண்­டி­ருக்­கி­றது. அதனை வர­வேற்­காமல் பழ­மையைப் போற்­றிக்­கொண்டு மதத்தின் பெய­ராலும் மரபின் பெய­ராலும் புரோ­கிதம் தடை­போ­டு­மாயின் அதனை எதிர்த்துக் கிளர்ந்­தெ­ழு­வ­தை­விட வேறு வழி இல்லை. அதைத்தான் இன்று ஈரானில் நடக்கும் மகளிர் போராட்டம் உணர்த்­து­கி­றது. மதப்­பி­ளவை ஒதுக்­கி­விட்டு சுன்னி மக­ளிரும் ஷீயா மக­ளிரின் போராட்­டத்­துக்கு ஆத­ரவு காட்ட வேண்டும். இது ஓர் இனப் போராட்டம். மதப் போராட்டம் அல்ல. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.