உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு காய்நகர்த்தலா?

0 444

ஏ.ஆர்.ஏ.பரீல்

“2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திக­திக்கு முன்பு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். குறிப்­பிட்ட காலத்தில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடாத்­து­வ­தற்கு தேர்தல் ஆணைக்­குழு தயா­ரா­கவே உள்­ளது. இது தேர்தல் ஆணைக்­கு­ழுவின் கட­மை­யாகும். நாட்டு மக்­களின் வாக்­கு­ரிமை தொடர்பில் கடந்த காலங்­களில் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள தீர்ப்­பு­க­ளின்­படி தேர்­தலைப் பின்­தள்­ளு­வ­தற்கு நீதி­மன்றம் சந்­தர்ப்பம் வழங்­காது என்று தேர்தல் ஆணைக்­குழு நம்­பிக்கை வைத்­துள்­ளது” என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் சட்­டத்­த­ரணி நிமல் புஞ்சி ஹேவா தெரி­வித்­துள்ளார்.
எதிர்­வரும் 2023 மார்ச் மாதம் நாட்டில் சிறிய தேர்­த­லொன்று நடை­பெறும். அதா­வது உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்தல் நடை­பெறும். நாங்கள் அர­சாங்­கத்­துக்கு தகுந்த பாடம் புகட்­டுவோம் என நாட்டு மக்­களில் பெரும்­பான்­மை­யி­னரும் எதிர்­க் கட்­சி­களும் எதிர்­பார்த்­தி­ருந்­தன. அதற்­கான காய்­களை நகர்த்­தி­வந்­தன.
இந்­நி­லையில் கடந்த 9 ஆம் திகதி ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொழில்சார் வல்­லு­னர்­க­ளுடன் நடாத்­திய கலந்­து­ரை­யா­டலில் தெரி­வித்த கருத்­துகள் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல், தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ள­வாறு எதிர்­வரும் மார்ச் மாதம் நடத்­தப்­ப­டுமா என்­பது சந்­தே­கத்­துக்கு இட­மா­கி­யுள்­ளது.
குறிப்­பிட்ட தொழில்சார் வல்­லு­னர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­து­வ­தற்கு முன்பு உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 8000 லிருந்து 4000 ஆக குறைக்­கப்­படும். அத்­தோடு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அதி­காரம் தனி­யொரு தலை­வ­ருக்கு கிட்டும் முறைமை மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு தலைவர் உள்­ள­டங்­கிய நிர்­வாக சபைக்கு வழங்­கப்­படும் வகையில் புதிய சட்ட மூலம் கொண்­டு­வ­ரப்­படும் என தெரி­வித்­துள்ளார்.
அத்­தோடு அர­சியல் ஊழல்­க­ளுக்கு பிர­தான காரணம் விருப்பு வாக்­கு­முறை என அவர் குறிப்­பிட்டுள்ளார். அதனால் தேர்தல் முறை­மையில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். விருப்­பு­வாக்கு முறைமை அல்­லாது முழு­மை­யான பட்­டியல் முறைக்கோ அல்­லது கலப்பு முறைக்கோ செல்ல வேண்டும். இரண்டில் ஒரு முறை­மையைத் தேர்ந்­தெ­டுக்க வேண்டும். அதற்­கான தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்கு தெரி­வுக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். அடுத்த வருடம் ஜூன், ஜூலை மாத­மா­கும்­போது இது தொடர்பில் தீர்­மா­ன­மொன்று மேற்­கொள்ள முடி­யா­மற்­போனால் மக்­களின் கருத்­தினை அறிந்து கொள்­வ­தற்கு சர்­வ­சன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்­டு­மெ­னவும் அவர் தெரி­வித்­துள்ளார்.
எப்­ப­டி­யா­யினும் ஜனா­தி­ப­தியின் இந்தக் கருத்­தினை எதிர்க்­கட்சி விமர்­சித்­துள்­ளது. ஜனா­தி­பதி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பின்­தள்­ளு­வ­தற்கு முயற்­சிப்­ப­தா­கவே எதிர்க்­கட்­சித் ­த­லைவர் சஜித் பிரே­ம­தாஸ கருத்து வெளி­யிட்­டுள்ளார்.
எமது நாட்டின் உள்­ளூ­ராட்சி கட்­ட­மைப்பு மாந­க­ர ­சபை, நகர சபை, உள்­ளூ­ராட்சி சபை என 341 சபைகளைக் கொண்­ட­தாகும்.
உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல் இறு­தி­யாக 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி இடம்­பெற்­றது. இத்­தேர்­தலில் 8719 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டனர். அடுத்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் 2022 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதமே நடத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். என்­றாலும் விட­யத்­துக்குப் பொறுப்­பான அப்­போ­தைய அமைச்சர் தேர்­தலை ஒரு­வ­ருட காலத்துக்குப் பிற்போட்டார்.அதன்படி ஒருவருட காலம் கடந்து அதா­வது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திக­திக்கு முன்பு தேர்தல் நடத்­தப்­ப­ட­ வேண்டும்.
இந்­நி­லையில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆலோ­ச­னையின் படி உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னது உறுப்­பி­னர்­க­ளது எண்­ணிக்­கையைக் குறைத்தல் மற்றும் தேர்தல் முறையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தல் ஆகிய ஏற்­பா­டு­களை 2023 மார்ச் மாதத்­துக்கு முன்பு மேற் ­கொள்­ள­ மு­டி­யாது போனால் இத்­தேர்தல் மேலும் தாம­த­மா­கலாம். தேர்தல் சட்ட திட்­டங்­க­ளுக்கு அமைய விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­ச­ரினால் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்­தலை ஆகக்­கூ­டி­யது ஒரு வருட காலத்­துக்கு மாத்­தி­ரமே பிற்­போட முடியும்.
உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலை மேலும் கால­தா­ம­தப்­ப­டுத்­து­வதை எதிர்ப்­ப­தாக தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் தெரி­வித்­துள்ளார். அத்­தோடு தேர்­தலை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடாத்­து­வ­தற்கு தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் அனைத்து நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.
தேர்தல் முறையில் மாற்­றங்­களைச் செய்ய வேண்டும் என்ற ஜனா­தி­ப­தியின் கருத்து தனது சுய­நலம் மற்றும் தான் சார்ந்­தி­ருக்கும் மொட்­டுக்­கட்­சியின் நல­னுக்­கா­கவே என்று பல­ராலும் கருத்து வெளி­யிடப்பட்டு வரு­கி­றது. தேர்­தலை தாம­தப்­ப­டுத்தும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் முயற்சி தனது அதி­கா­ரத்தை தக்க வைத்துக் கொள்­வ­தற்­கான முயற்சி என்று கூறப்­ப­டு­கி­றது. தேர்தல் ஒன்று- வந்தால் தனது அதி­கார இருப்­புக்கு பாதிப்பு ஏற்­படும் என்ற விட­யமே பிர­தான கார­ண­மாகும். தற்­போது பத­வி­யி­லுள்ள அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணை கிடை­யாது. தேர்தல் ஒன்று வந்தால் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும் அவர் சார்ந்­தி­ருக்­கின்ற மொட்­டுக்­கட்­சி­யி­னதும் செல்­வாக்கு பாரி­ய­ளவில் வீழ்ச்­சி­ய­டையும். அதனால் தேர்தல் ஒன்று வரு­வதைத் தடுக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேர்தல் முறையில் மாற்றம் தேவை என்­பதில் உறு­தி­யாக உள்ளார்.

தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர்
சட்­டத்­த­ரணி நிமல் புஞ்சி ஹேவா
உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்­கு­ழுவின் நிலைப்­பாட்­டினை அதன் தலைவர் சட்­டத்­த­ரணி நிமல் புஞ்சி ஹேவா தெளி­வாகக் கூறி­யி­ருக்­கிறார்.
‘உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் எண்­ணிக்­கையை குறைப்­பதா? அல்­லது அதி­க­ரிப்­பதா? என்­பது அர­சாங்­கத்தின் கொள்­கை­யுடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மாகும். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை என்­றாலும் 2017 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க உள்­ளூ­ராட்சி சட்­டத்தின் மூலமே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்­டது. மக்­க­ளுக்­கான சேவை­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கா­கவே உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னது உறுப்­பினர் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­ப­தாக அப்­போது கூறப்­பட்­டது. ஆனால் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அள­வுக்கு அதி­க­மாக உள்­ளது. இவ் எண்­ணிக்கை உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு பாரிய சுமை­யாக உள்­ளது. அதனால் உறுப்­பினர் எண்­ணிக்­கையைக் குறைக்­க­வேண்டும் என்று இப்­போது கூறு­கி­றார்கள். உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் தொகை அதி­க­மா­னது என்னும் விட­யத்தை நாம் கவ­னத்தில் கொள்ள வேண்டும். இது பற்றி ஆராய்ந்து தீர்­மா­னிக்க வேண்டும்.
1980 ஆண்­டாகும் போது எமது நாட்டில் கிராம சபை, சிறிய நக­ர­சபை, நகர சபை மற்றும் மாந­க­ர­ சபை என பல நிறு­வ­னங்கள் செயற்­பட்டு வந்­தன. அவற்றில் சுமார் 7000 பேர் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தார்கள். ஆனால் அப்­போது உறுப்­பி­னர்­களின் தொகை அதிகம் என எவரும் கூற­வில்லை.
அதே­வேளை இன்று நாட்டில் சனத்­தொ­கையின் விகி­தமும் அதி­க­ரித்­துள்­ளது. இந்­நி­லையில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தென்றால் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அள­வினை பெரி­து­ப­டுத்த வேண்டும் என்றே தேர்தல் ஆணைக்­குழு எதிர்­பார்க்­கி­றது. அதற்­காக எல்லை நிர்­ணயம் செய்­யப்­ப­ட­வேண்டும். எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­வ­தென்றால் அதற்கு கால எல்லை தேவை. இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தால் மக்கள் மத்­தியில் பல சந்­தே­கங்கள் முளை­வி­டலாம். மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ண­யத்­துக்கு நேர்ந்­த­கதி இதற்கும் ஏற்­ப­டலாம் என மக்கள் மத்­தியில் சந்­தேகம் ஏற்­ப­டலாம்.
மாகா­ண­சபை தேர்­த­லுக்கு கலப்பு விகி­தா­சார தேர்தல் முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டாலும் எல்லை நிர்­ணயம் தொடர்­பான அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றிக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அதனால் மாகாண சபைகள் தற்­போது செய­லி­ழந்­துள்­ளன. மாகாண சபை நிர்­வாகம் தற்­போது அதி­கா­ரி­க­ளி­னாலே மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இதனை தேர்தல் ஆணைக்­குழு எதிர்க்­கி­றது. மாகாண சபை தேர்­தலை விரைவில் நடாத்த வேண்­டு­மென நாம் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லை­யிலும் கூறி­யி­ருந்தோம். சில அர­சியல் ஆய்­வா­ளர்­களும் மற்றும் மக்­களும் மாகா­ண­சபை தேர்­த­லுக்கு கலப்­பு­ வி­கி­தா­சார பிர­தி­நி­தித்­து­வ­மு­றை­மையை அறி­முகம் செய்­தது. மாகாண சபை தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்­கா­கவே அன்றி பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­ப­தற்­கா­க­வல்ல என கரு­து­கி­றார்கள்.
2023 மார்ச் 20 ஆம் திக­திக்கு முன்பு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்தல் நடாத்­தப்­ப­ட­வேண்டும். தேர்தல் ஆணைக்­குழு தேர்­தலை நடத்­து­வ­தற்கு தயா­ரா­கவே உள்­ளது. இது தேர்தல் ஆணைக்­கு­ழுவின் கட­மை­யாகும்.
ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ள கருத்­துக்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மென்றால் அதற்­கென வேறாக சட்­டத்தைக் கொண்­டு­வர வேண்டும் எதிர்­வரும் மார்ச் 20 ஆம் திக­திக்கு முன்பு ஜனா­தி­ப­தி­யினால் இதனை நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­யு­மென்றால் பிரச்­சி­னை­யில்லை. என்­றாலும் இதனை தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்­கான ஆயு­த­மாக பயன்­ப­டுத்­து­வ­தென்றால் தேர்தல் ஆணைக்­குழு இதற்கு உடன்­பட மாட்­டாது என்றார்.

பெப்ரல் அமைப்பின்
நிறை­வேற்றுப் பணிப்­பாளர்
தேர்தல் முறை­மையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வது தொடர்பில் ஜனா­தி­பதி கடந்த 9 ஆம் திகதி தொழில் வல்­லு­னர்கள் குழு­வொன்­றுடன் நடாத்­திய கலந்­து­ரை­யா­டலில் தெரி­வித்த கருத்­துக்கள், ஜனா­தி­பதி மக்­க­ளுக்கு இனிப்பு தட­விய விஷத்தை ஊட்­டு­வ­தற்கு முயற்­சிப்­ப­தாக அமைந்­துள்­ளது.
இவ்­வா­றான தேர்தல் முறைமை பற்­றிய திருத்­தங்கள் வர­லாறு நெடு­கிலும் கொண்­டு­வ­ரப்­பட்­டாலும், அவ்­வா­றான திருத்­தங்கள் அக்­கா­லங்­களில் அதி­கா­ரத்­தி­லி­ருந்த ஆட்­சி­யா­ள­ருக்கு தேவை­யான வகை­யிலே அமைந்­தி­ருந்­தன. அன்றி நாட்­டுக்­குப்­பொ­ருத்­த­மான முறை­மை­யாக அமைந்­தி­ருக்­க­வில்லை என பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி கூறி­யுள்ளார்.
இந்தச் சந்­தர்ப்­பத்தில் ஜனா­தி­ப­தியின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்­திடம் கேள்­வி­யொன்­றினைத் தொடுக்­க­வேண்­டி­யுள்­ளது.
அதா­வது தேர்­தலை நடாத்­து­வதை ஒரு ­வ­ரு­ட­காலம் பிற்­போட்டு அந்­தக்­கால எல்லை நிறை­வுறும் வரை காலத்தை வெறு­மனே கடத்­தி­யது ஏன்? உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­க­ளது எண்­ணிக்­கையைக் குறைக்க வேண்டும் என்­பதை நாம் ஏற்றுக் கொள்­கிறோம். என்­றாலும் இந்த முயற்­சிக்­கான காரணம் என்ன? இதற்கு அர­சியல் கட்­சி­களின் இணக்கம் பெறப்­பட்­டுள்­ளதா என்­பதை தெரிந்து கொள்ள விரும்­பு­கிறோம்.
உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையைக் குறைக்கும் நோக்கில் மீண்டும் எல்லை நிர்­ண­யத்­துக்­கான முயற்சி தேர்­தலை மீண்டும் கால தாம­தப்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டமா? என்றும் அர­சிடம் கேட்­கிறோம். அரசு நேர்­மை­யாக செயற்­படும் நோக்கம் கொண்­டி­ருந்தால் முதலில் உட­ன­டி­யாக மக்கள் தமது ஆணையை வெளிப்­ப­டுத்தும் வகையில் தேர்­தலை நடத்த வேண்டும். அதன் பின்பு தேர்தல் முறை­மையில் மாற்­றங்­களைச் செய்­வதற்கு தேவை­யான காலத்தை ஒதுக்கிக் கொள்­ளலாம்.
விருப்பு வாக்கு தேர்தல் முறை­மையின் ஊழல்கள் மலிந்­துள்­ளன என்று ஜனா­தி­பதி தெரி­வித்­தாலும் மக்­களின் அவ­ச­ர­மான முக்­கி­ய­மான கோரிக்கை தேர்தல் முறை­மையில் மாற்­றமா? இல்லை. மக்கள் ஜன­நா­யக ரீதி­யி­லான தேர்தல் ஒன்­றினை உரிய காலத்தில் நடத்­து­மாறே கோரு­கின்­றனர்.
தேர்தல் முறை­மையின் மாற்­றங்­களைச் செய்­வ­தற்­காக ஜனா­தி­பதி சர்­வ­ஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என்று கூறுவது மக்களையும் முழு உலகையும் ஏமாற்றுவதாகும்.

Leave A Reply

Your email address will not be published.