மாவனெல்லை சிலை தகர்ப்பு விவகாரம்: விடுதலை பெற்றும் ஒன்றரை மாதங்கள் சிறையிலிருந்த ஐவர்

0 456

(எம்.எப்.எம்.பஸீர்)
மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்டு, வழக்குத் தொட­ரப்­பட்ட 16 பிர­தி­வா­தி­களில் மூவரை வழக்­கி­லி­ருந்து விடு­வித்த சப்­ர­க­முவ மாகாண மேல் நீதி­மன்றின் (கேகாலை) மூவர் கொண்ட நீதி­ப­திகள் அமர்வு (ட்ரயல் அட் பார்) மேலும் 11 பேருக்கு 7 வரு­டங்­க­ளுக்கு ஒத்திவைக்­கப்­பட்ட 3 மாத கால சிறைத் தண்­ட­னையை அளித்து விடு­தலை செய்து தீர்ப்­ப­ளித்­தது. இந் நிலையில் அவ்­வாறு விடு­தலை  செய்­யப்­பட்­ட­வர்­களில் 5 பேர், தீர்ப்­ப­றி­விக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து ஒன்­றரை மாதங்­களின் பின்­ன­ரேயே விடு­தலை பெற்று கடந்த சனி­யன்று வீடு திரும்­பி­யுள்­ளனர்.

எனினும் ஏனைய 9 பேருக்கும் வெவ்­வேறு நீதி­ம­ன்றங்­களில் வேறு வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ளதால் அவர்கள் மட்டும் தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
நீதி­மன்றால் விடு­வித்து விடு­தலை செய்­யப்­பட்ட 3 ஆம் பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டி­ருந்த மொஹம்மட் அக்பர் மொஹம்மட் முனீப் 4 ஆம் பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டி­ருந்த மொஹம்மட் சுபியான் மொஹம்மட் இர்ஷாத் ஆகி­யோரும், ஒத்தி வைக்­கப்­பட்ட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட முதலாம் பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்பட்­டி­ருந்த மொஹம்மட் அல்பர் மொஹம்மட் அஸ்பாக், 2 ஆம் பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்பட்­டி­ருந்த மொஹம்மட் பைசர் மொஹம்மட் முப்தி, 5 ஆம் பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்பட்­டி­ருந்த மொஹம்மட் அஸ்ஹர் அதீக் அஹமட் ஆகி­யோரே ஒன்­றரை மாதங்­களின் பின்னர் இவ்­வாறு சிறைச்­சா­லை­யி­லி­ருந்து விடு­த­லை­யாகி வீடு சென்­றுள்­ளனர்.

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி சப்­ர­க­முவ மாகாண மேல் நீதி­மன்றில் (கேகாலை) நீதி­பதி ஜகத் கஹந்­த­க­மகே தலை­மை­யி­லான ஜயகி டி அல்விஸ் மற்றும் இந்­திகா காலிங்­க­வங்ச ஆகிய நீதி­ப­திகள் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்ற அமர்வு புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரங்கள் குறித்த வழக்கில் தீர்ப்­ப­றி­வித்­தி­ருந்­தது. அத­ன்­ப­டியே இந்த 14 பேரும் விடு­விக்­கப்­பட்­டனர் (ஒத்தி வைக்­கப்­பட்ட சிறை உட்­பட).

எனினும் இந்த ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட குற்றப் பத்­தி­ரி­கை­யுடன் தொடர்­பு­பட்ட பொத்­து­ஹர சிலை தகர்ப்பு தொடர்பில் பொல்­க­ஹ­வல நீதிவான் நீதி­மன்­றிலும், வெலம்­பொட சம்­பவம் தொடர்பில் கம்­பளை நீதிவான் நீதி­மன்­றிலும் விசா­ரணை முன்னெடுக்கப்பட்டபோது அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு அந்த வழக்­கிலக்­கங்­களின் கீழும் சந்­தேக நபர்­க­ளாக பலர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். அதில், ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் விடு­தலை செய்த, ஒத்தி வைத்த சிறைத் தண்­டனை அளித்த நபர்­களும் உள்­ள­டங்­கி­யி­ருந்­தனர்.

இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் கேகாலை ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்த போதும் விடு­தலை செய்­யப்­பட்­ட­வர்­களால் வீடு­க­ளுக்கு செல்ல முடி­ய­வில்லை.
எவ்­வா­றா­யினும் பொத்­து­ஹர மற்றும் கம்­பளைச் சம்­ப­வங்­களும், கேகாலை ட்ரயல் அட்பார் நீதி­மன்ற வழக்கில் உள்­ளீர்க்­கப்­பட்­டி­ருந்­ததால் அவற்­றி­லி­ருந்தும் பிர­தி­வா­திகள் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தனர். எனினும் அது குறித்த விப­ரங்கள் பொல்­க­ஹ­வல மற்றும் கம்­பளை நீதி­மன்­றங்­க­ளுக்கு உரி­ய­வாறு அறி­விக்­கப்­பட்­டி­ருக்­காத நிலையில் தொடர்ச்­சி­யாக விடு­விக்­கப்­பட்­ட­வர்கள் சிறை­களில் இருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

இது தொடர்பில், ட்ரயல் அட்பார் நீதி­மன்ற வழக்கில் 1,2,5,12,13,16 ஆம் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்பட்­டி­ருந்­த­வர்­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் தலை­மையில் சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவைஸ் உள்­ளிட்ட குழு­வி­னரும் 6,7,8,10 மற்றும் 11 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மை­யி­லான வசீமுல் அக்ரம் உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணி­களும் ஏனைய பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணிகள் சிலரும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தியின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தி­ருந்­தனர்.

‘இது தொடர்பில் கேகாலை ட்ரயல் அட்பார் நீதி­மன்றின் நீதி­ப­திகள் மற்றும் சட்ட மா அதி­பரின் கவ­னத்­துக்கு கொண்டு வந்தோம். அதன் பின்னர் ட்ரயல் அட்பார் நீதி­மன்றின் தலைமை நீதி­ப­தியின் எழுத்து மூல அறி­விப்­பினை பெற்று அத­னூ­டாக பொல்­க­ஹ­வல மற்றும் கம்­பளை நீதி­மன்­றங்­க­ளுக்கு அவற்றை சமர்ப்­பித்து விடு­த­லைக்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம்.’ என இவ்­வ­ழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்­த­வர்­களில் பல­ருக்­காக ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார்.

‘முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களை அடுத்து 5 பேர் கடந்த சனி­யன்று சிறைச்­சா­லை­களில் இருந்து வீடு திரும்­பினர். ஏனையோர் மேலும் சில வழக்­கு­களை மையப்­ப­டுத்தி விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்­ளனர். அவர்­களில் பலர் தொடர்­பிலும் பிணை மற்றும் விடு­தலை பெற்­றுக்­கொள்­வது குறித்து சட்ட மா அதி­ப­ருடன் பேசப்­பட்டு வரு­கி­றது’ என இவ்­வ­ழக்கில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவைஸ் விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கு, நுவரெலிய மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் உள்ள வழக்கு போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில், மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில் விடுவிக்கப்பட்ட, ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட 9 பேரின் பெயர்கள் உள்ளடங்கி இருப்பதால் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் வட்டார தகவல்கள் ஊடாக அறிய முடிந்தது.

கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொத்து­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில் கோண்­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்து கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன. இந்த சம்­பவம் தொடர்பில் பொத்து­ஹர பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதா­வது கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இத­னை­யொத்த ஒரு சம்­பவம் யட்டிநுவர -வெலம்பொட பொலிஸ் பிரிவில் பதி­வா­னது.

அதி­காலை 3.00 மணி­ய­ளவில் வெலம்­பொட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வல பகு­தியில் மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை அடை­யாளம் தெரி­யா­தோரின் தாக்கு­த­லுக்கு உள்­ளா­னது. அத்­துடன் அந்த மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை சேத­ப்­படுத்­தப்­பட்ட அதே நேரம் அதனை அண்­டிய பகு­தியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலை­களும் சேத­ப்­படுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்நிலையில் அதே தினம் அதி­காலை 4.00 மணி­ய­ளவில் மாவ­னெல்லை – திது­ரு­வத்த சந்­தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி சேத­ப்­படுத்­தப்­பட்­டுள்­ளது.
இந்த அனைத்து சம்­ப­வங்­க­ளையும் மையப்­ப­டுத்­தியே கேகாலை மேல் நீதி­மன்றில் 16 பேருக்கு எதி­ராக வழக்குத் தொட­ரப்பட்­டது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழும், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி அளித்­தலை தடுப்­பது தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­காப்­பாட்டு சட்­டத்தின் கீழும் 21 குற்­றச்­சாட்­டுக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இரு சமூ­கங்­க­ளி­டையே மோதலை உரு­வாக்க சதித் திட்டம் தீட்­டி­யமை, 5 புத்தர் சிலை­களை தகர்த்­தமை, சமூ­கங்­களுக்கி­டையே வெறுப்­பு­ணர்­வு­களை தூண்­டி­யமை, தோப்பூர், மாவ­னெல்லை, ஹம்­பாந்­தோட்டை மற்றும் நுவ­ரெ­லியா பகு­தியில் அதற்­கான வதி­விட கருத்த­ரங்­குகள் மற்றும் ஆயுதப் பயிற்­சி­யினைப் பெற்­றமை தொடர்பில் பயங்க­ர­வாத தடை சட்­டத்தின் கீழும், ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்­த­ரங்­கு­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை நேர­டி­யா­கவும் மறை­மு­க­மாகவும் வழங்­கி­யமை தொடர்பில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி­ய­ளிப்­பதை தடுக்கும் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன.

2019 ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­திய பயங்­க­ர­வாதி சஹ்ரான் மற்றும் முறைப்­பாட்­டாளர் அறி­யா­த­வர்­க­ளுடன் இணைந்து பிர­தி­வா­திகள் இக்­குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.
இக்­குற்­றச்­சாட்­டுக்­களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்­க­ளையும், 92 சாட்­சி­யா­ளர்­களின் பட்­டி­ய­லையும் சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் இணைத்தி­ருந்தார்.
1.மொஹம்மட் அல்பர் மொஹம்மட் அஸ்பாக்
2.மொஹம்மட் பைசர் மொஹம்மட் முப்தி
3.மொஹம்மட் அக்பர் மொஹம்மட் முனீப்
4.மொஹம்மட் சுபியான் மொஹம்மட் இர்ஷாத்
5.மொஹம்மட் அஸ்ஹர் அதீக் அஹமட்
6.நஜி­முதீன் மொஹம்மட் பெளசான்
7.ரஷீத் மொஹம்மட் இப்­ராஹீம் அல்­லது இப்­ராஹீம் மெள­லவி அல்­லது இப்­ராஹீம் சேர்
8.அபூ செய்த் எனும் மொஹம்மட் இப்­ராஹீம் நெளபர் மெள­லவி
9.அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெள­லவி
10.அபூ பலாஹ் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
11.அபூ உமர் என­பப்டும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ்
12.அபூ ஹினா அல்­லது சிவப்பு தாடி என அறி­யப்­படும் மொஹம்மட் ஹனீபா சைனுல் ஆப்தீன்
13.ஹிஸ்­புல்லாஹ் கான் ஹாமித்
14.அபூ சியா என­ப்படும் ஹயாத்து மொஹம்­மது அஹ­மது மில்ஹான்
15.ஹாஜா மொஹிதீன்
16. ஹனன் ஹம்­சுதீன் எனும் ஹனன்
ஆகிய 16 பேருக்கு எதி­ரா­கவே இந்த குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.
இந் நிலை­யி­லேயே வழக்கின் சாட்சி விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க முன்னர், கடந்த ஜூலை மாதம் குற்றப் பத்­தி­ரிகை திருத்­தப்­பட்­டது. பிர­தி­வா­திகள் தரப்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர், சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான ருஷ்தி ஹபீப், சம்பத் ஹேவா பத்­தி­ரன, கஸ்­ஸாலி ஹுசைன் உள்­ளிட்­டோரின் வாதங்கள், சட்ட மா அதி­பரின் இணக்­கத்­துடன் இக்­குற்றப் பத்­தி­ரிகை திருத்­தப்­பட்­டது.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்ட குற்றப் பத்­தி­ரி­கையில் 21 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்பட்­டி­ருந்த நிலையில், அது திருத்­தப்­பட்டு தண்­டனை சட்டக் கோவையின் 209 மற்றும் 290 ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழ் மட்டும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன.

இவ்­வா­றான நிலை­யி­லேயே கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தி­ருந்­தது.

இதன்­போது வழக்குத் தொட­ரப்­பட்ட 16 பிர­தி­வா­தி­களில் மூவரை வழக்­கி­லி­ருந்து விடு­வித்த சப்­ர­க­முவ மாகாண மேல் நீதி­மன்றின் (கேகாலை) மூவர் கொண்ட நீதி­ப­திகள் அமர்வு (ட்ரயல் அட்பார்) மேலும் 11 பேருக்கு 7 வரு­டங்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட 3 மாத கால சிறைத் தண்­ட­னையை அளித்து தீர்ப்­ப­ளித்­தது. குறித்த வழக்கில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்­டுக்­களை விலக்­கிக்­கொள்ள சட்ட மா அதிபர் இணங்­கிய நிலையில், தண்­டனை சட்டக் கோவையின் கீழ் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டினை, விரை­வான விடு­தலை கருதி 11 பிர­தி­வா­திகள் ஏற்­றுக்­கொண்ட நிலை­யி­லேயே அவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் குற்றச்சாட்டுக்களை 8 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அபூ செய்த் எனும் மொஹம்மட் இப்ராஹீம் நெளபர் மெளலவி, 9 ஆவது பிரதிவாதியான அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி ஆகியோர் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், அவ்விருவருக்கு எதிராக மட்டும் குறித்த வழக்கை முன்னெடுத்து செல்ல நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.