வணாத்தவில்லு விவகார வழக்கு : சி.ஐ.டி.யினர் மீட்ட 450 கிலோ யூரியா வெடிகுண்டுகளுக்கான மூலப் பொருளா? தென்னந் தோப்புக்கான மானிய உரமா?

0 397

எம்.எப்.எம்.பஸீர்

புத்­தளம் – வணாத்­த­வில்லு, லக்டோஸ் தோட்­டத்தில், வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்­துள்ள வழக்கின், ஆரம்­பமே பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த வழக்கு விசா­ர­ணைகள் கடந்த வாரம் தொடர்ச்­சி­யாக மூன்று நாட்கள் (ஆகஸ்ட் 24, 25, 26 ஆம் திக­தி­களில்), இவ்­வ­ழக்கை விசா­ரணை செய்­ய­வென விஷே­ட­மாக அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய ட்ரயல் அட் பார் சிறப்பு நீதி­மன்ற அமர்வு முன்­னி­லையில், புத்­தளம் மேல் நீதி­மன்றில் நடந்­தது. நீதி­ப­தி­க­ளான ஹசித்த பொன்­னம்­பெ­ரும, நிசாந்த ஹப்பு ஆரச்சி மற்றும் நயோமி விக்­ர­ம­சிங்க ஆகியோர் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட் பார் நீதி­மன்ற அமர்வு முன்­னி­லை­யி­லேயே இவ்­வி­சா­ர­ணைகள் நடந்­தன.

அதன்­படி 4 சாட்­சி­யா­ளர்­களின் சாட்­சி­யங்கள் இது­வ­ரை­யி­ல் இவ்­வ­ழக்கில் நெறிப்­ப­டுத்­தப்­பட்டு, குறுக்கு விசா­ர­ணை­க­ளுக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பின்­னணி :
இந்த வழக்­கா­னது 14 குற்றச்சாட்­டுக்­களின் கீழ் கடந்த 2021 ஏப்ரல் 28 ஆம் திகதி சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்­யப்பட்டிருந்தது.

தற்­போதும் மர­ண­ம­டைந்­துள்ள மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அச்சு மொஹம்­மது அஹ­மது ஹஸ்தூன் ஆகி­யோ­ருடன் இணைந்து, வணாத்­தவில்லு பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரிக்கும் மற்றும் தயா­ரிக்கும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்து சென்­ற­தாக பயங்­கர­வாத தடை சட்­டத்தின் கீழ் 6 பேருக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அபூ தஹ்தா எனும் மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீன் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ், கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ், அபூ செய்த் எனும் நெளபர் மெள­லவி அல்­லது மொஹம்மட் இப்­ராஹீம் நெளபர், அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெள­லவி ஆகிய 6 பேருக்கு எதி­ரா­கவே இவ்­வாறு வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

நாச­கார அல்­லது பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் எண்­ணத்­துடன் வணாத்­தவில்லு பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரிக்க சதி செய்­தமை, யூரியா நைற்றேட், நைற்றிக் அசிட், தோட்­டாக்கள் உள்­ளிட்ட வெடி­பொ­ருட்­களை சேக­ரித்­தமை, வெடி­பொ­ருட்­களை உற்­பத்தி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) உ பிரிவின் கீழும், 3 (2) ஆம் பிரிவின் கீழும் பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக விஷேட குற்­றச்­சாட்டு முன் வைக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் வெடி­பொருள் சேக­ரிப்பு, தயா­ரிப்பு, ஆயுத பயிற்சி உள்­ளிட்­ட­வற்­றுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் அனைத்து பிர­தி­வா­தி­க­ளுக்கும் எதி­ராக குற்­றச்­சாட்டு முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, முதல் பிர­தி­வா­தி­யான அபூ தஹ்தா எனப்­படும் மொஹம்மட் முபீஸ் மீது, பயங்­க­ர­வாதத்­துக்கு நிதி­ய­ளித்­தலை தடுக்கும் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 ஆம் உறுப்­பு­ரையின் கீழ் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. ஆயுத களஞ்­சி­யத்­துடன் கூடிய வணாத்­த­வில்லு லக்டோஸ் தோட்­டத்தின் ஒரு பகு­தியை ஆயுத பயிற்­சி­களை முன்­னெ­டுக்க அபூ உமர் எனும் சாதிக் அப்­துல்­லாஹ்­வுக்கு வழங்­கி­யமை தொடர்பில் அந்த குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தான விசா­ரணை அதி­கா­ரியின் சாட்­சியம் :
அந்த வகையில், இந்த வெடி­பொருள் மீட்பு விவ­கா­ரத்தின் பிர­தான விசா­ரணை அதி­கா­ரி­யாக செயற்­பட்ட, சி.ஐ.டி.யின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்­கவின் சாட்­சியம் முதல் சாட்­சி­ய­மாக மன்றில் நெறிப்­ப­டுத்­தப்­பட்­டது. அரசின் சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக ஊடாக இந்த சாட்­சியம் நெறிப்ப­டுத்­தப்பட்­டது. இதன்­போது கடந்த 2019 ஜன­வரி 16ஆம் திகதி, வணாத்­தவில்லு, லக்டோஸ் தோட்டம் என கூற­ப்படும் தோட்­டத்தின் கட்­டிடம் ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்பட்­ட­தாக கூறி, வழக்குப் பொருட்­க­ளாக நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்பட்­டி­ருந்த வழக்குப் பொருட்­களும் (ஆய்­வு­கூ­டத்தில் பய­ன்படுத்­தப்­ப­டு­வதை ஒத்த கூஜாக்கள், அரைக்கும் இயந்­திரம், சூரிய ஒளி மூலம் மின்­சாரம் பெறும் படலம், இர­சா­யன கலவைக் குறிப்பு உள்­ளிட்­டவை) சான்றுப் பொருட்­க­ளாக நீதி­மன்றில் பிர­தான விசா­ரணை அதி­காரி ஊடாக பதிவு செய்­யப்­பட்­டது.

இந் நிலையில் அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்­வி­ஸுடன் ஆஜ­ரான சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­ல­கவின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­வாறு பிர­தான விசா­ரணை அதி­காரி மார­சிங்க நீண்ட சாட்­சி­யத்தை வழங்­கினார். அவ­ரது சாட்­சி­யங்கள் இரு நாட்­க­ளுக்கு நீடித்­தது.

‘வணாத்­தவில்­லுவில் வெடி­பொருள் மீட்­கப்­பட்ட பின்னர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் சஹ்ரான் ஹஷீம் மற்றும் மொஹம்மட் எனும் இரு­வரின் தொடர்­புகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. மொஹம்மட் எனும் பெயரால் அறி­யப்­பட்ட நபர் கட்­டு­வா­பிட்­டிய தேவா­ல­யத்தில் குண்டை வெடிக்கச் செய்த ஹஸ்தூன் என உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் தெரி­ய­வந்­தது.

சஹ்­ரானை கைது செய்ய கடந்த 2019 ஜன­வரி 23 முதல் முயற்­சிகள் முன்­னெ­டுத்த போதும் அவரை கைது செய்ய முடி­ய­வில்லை. அவ­ருக்கு எதி­ராக நாம் வெளி­நாட்டு பயணத் தடை­யையும் பெற்­றி­ருந்தோம்.

சஹ்ரான் சாதா­ரண தொலை­பேசி அழைப்­புக்­களை கூட முன்­னெ­டுக்­க­வில்லை. அவர் ‘திரிமா’ எனும் செயலியை பயன்­ப­டுத்­தி­யதால் அவரை நெருங்க முடி­ய­வில்லை. அந்த செய­லியை எந்த தொலை­பேசி சேவைகள் நிறு­வ­னத்­தி­னாலும் ‘ஹெக்’ செய்ய முடி­ய­வில்லை.

சஹ்­ரானை தேடி நாம் அவ­ரது வீட்­டுக்கு சென்றோம். அவ­ரது மனை­வி­யான பாத்­திமா ஹாதி­யாவின் கெக்­கு­னு­கொல்ல வீட்­டுக்கும் சென்றோம். அங்கு சென்ற எல்லா சந்­தர்ப்­பத்­திலும், கட்­டு­வா­பிட்டி தேவா­லய குண்­டு­தாரி ஹஸ்­தூனின் மனைவி சாரா ஜெஸ்மின் எனப்­படும் புலஸ்­தினி மகேத்­திரன் அங்கு சஹ்­ரானின் மனை­வி­யு­ட­னேயே தங்­கி­யி­ருந்தார்.

நாம் வணாத்­த­வில்­லுவில் வெடி­பொ­ருட்­களை மீட்­டதால் மிகப் பெரும் அழிவு தவிர்க்­கப்­பட்­டது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் போது பயன்­ப­டுத்­தப்­பட்ட வெடி­பொ­ருட்கள், வணாத்­தவில்­லுவில் மீட்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­க­ளுக்கு சம­மா­னவை. அங்கு வைத்து இர­சா­யன கலவை தொடர்­பி­லான விட­யங்கள் அடங்­கிய ஒரு கடிதம் முதல் பிர­தி­வா­தி­யி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்­டது.

இத­னை­விட இர­சா­யன கல­வைகள் செய்யும் வகை­யி­லான உப­க­ர­ணங்­களும் மீட்­க­ப­்பட்­டன.(உப­க­ர­ணங்­க­ளையும் அடை­யாளம் காட்டினார்)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தலில் பெரும்­பாலும் அனைத்து குண்­டு­தா­ரி­களும் பயன்­ப­டுத்­திய வெடி­பொ­ருளின் அளவு தலா 500 கிராமாகும். ஒரே ஒரு தாக்­கு­தல்­தாரி மட்டும் 800 கிராம் நிறை­யு­டைய வெடி­பொ­ருளை பய­ன்­ப­டுத்­தி­யி­ருந்தார்.
அதன்­படி அத்­தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்­திய மொத்த வெடி­பொ­ருளின் அளவு 5 கிலோ­வாகும். எனினும் வணாத்­து­வில்­லுவில் நாம் கைப்­பற்­றிய வெடி­பொருள் சுமார் 1200 கிலோ எடை கொண்­டது. அப்­ப­டி­யானால் மிகப் பெரும் அழிவு இத­னூ­டாக தவிர்க்­கப்­பட்­டது என்­பதை நீதி­மன்றம் அவ­தா­னிக்க வேண்டும்.

சஹ்­ரானின் மனைவி வழக்கின் 5 ஆவது பிர­தி­வா­தி­யான நெளபர் மெள­ல­விக்கு நெருங்­கிய உற­வினர். முதல் இரு பிர­தி­வா­தி­களும் சம்­பவ இடத்தில் வைத்து கைது செய்­யப்­பட்­டனர். 3 ஆம் பிர­தி­வாதி காத்­தான்­கு­டியை சேர்ந்­தவர். அவர் காத்­தான்­கு­டியில் வைத்து, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களை அடுத்து பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் வீர­சிங்­கவால் கைது செய்­யப்பட்டார்.

4 ஆவது பிர­தி­வாதி மாவ­னெல்­லையைச் சேர்ந்­தவர். அவர், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் கம்­பளை பகு­தியில் மறைந்­தி­ருந்தபோது பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரால் கைது செய்­யப்பட்டார்.

5,6 ஆம் பிர­தி­வா­திகள், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர், சாய்ந்­த­ம­ருது நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருக்கும் போது, தம்­புள்ளை சோதனை சாவ­டியில் தம்­புள்ளை பொலி­ஸா­ருக்கு ஏற்­பட்ட சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்பட்டு சி.ஐ.டி.யின­ரிடம் கைய­ளிக்­கப்பட்­டி­ருந்­தனர். அவர்கள் முறையே காத்­தான்­குடி மற்றும் கெக்­கு­னு­கொல்ல, மாவ­னெல்லை பகு­தி­களைச் சேர்ந்­த­வர்கள்.

3 முதல் 6 வரை­யி­லான பிர­தி­வா­தி­களும் திரிமா செய­லியை பயன்­ப­டுத்­தி­யதால் அவர்­க­ளையும், தாக்­கு­த­லுக்கு முன்னர் கைது செய்ய முடி­யாமல் போனது.’ என மார­சிங்க சாட்­சி­ய­ம­ளித்தார்.

6ஆவது பிர­தி­வாதி சார்பில் நடந்த முதல் குறுக்கு விசா­ரணை:
பிர­தான விசா­ரணை அதி­காரி மார­சிங்­க­விடம், முதலில் 6 ஆவது பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணி­யான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கஸ்­ஸாலி ஹுசைன் சிறப்பு அனு­ம­தியின் பேரில் குறுக்கு விசா­ர­ணை­களை நடாத்­தினார்.

Q: நீங்கள் இர­சா­யன விஞ்­ஞானம் படித்­தி­ருக்­கின்­றீர்­களா?
A: தனி­யாக படிக்­க­வில்லை
Q: சஹ்­ரா­னுக்கு திறந்த பிடி­யாணை இருந்­ததா?
A: அவ­ருக்கு அலியார் சந்தி மோதல் தொடர்பில் திறந்த பிடி­யாணை இருந்­தமை பின்­னரே தெரி­ய­வந்­தது.
Q: அந்த பிடி­யாணை குறித்து பொலிஸார் அறிந்­தி­ருந்­த­னரா?
A: காத்­தான்­குடி பொலிஸார், பயங்­கர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அறிந்­தி­ருந்­தனர்.
Q: சஹ்­ரா­னுக்கு எதி­ராக வெளி­நாட்டுப் பயணத் தடை இருந்­ததா?
A: ஆம், நான் தான் மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்­றுக்கு இர­க­சிய அறிக்கை சமர்ப்­பித்து பெற்றேன்.
Q: பிடி­யா­ணைக்கு முன்­னரா பின்­னரா வெளி­நாட்டு பயணத் தடை பெற்­றீர்கள் ?
A: 2019 பெப்ர­வரி 7 ஆம் திகதி வெளி­நாட்டு பயணத் தடை பெற்றேன். பிடி­யாணை 2017 இல் பிறப்­பிக்­கப்­பட்­டது என நினைக்­கின்றேன்.
Q: 6 ஆம் பிர­தி­வா­திக்கு புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் வழக்கு உள்­ளதா?
A: ஆம்
Q: அவரை நீரா கைது செய்தீர்?
A: இல்லை. உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர் தப்­பி­யோ­டிக்­கொண்­டி­ருந்த போது தம்­புள்ளை பொலிஸார் கைது செய்து சி.ஐ.டி.யின­ரிடம் கைய­ளித்­தி­ருந்­தனர்.
Q: வணாத்­த­வில்லு பகு­தியில் வழக்­குடன் தொடர்­பு­பட்ட காணி­யி­லி­ருந்து சூரிய ஒளி மின்­சார படலம் ஒன்­றி­னையும் கைப்­பற்­றி­னீரா?
A: ஆம்.
Q: அதன் அம்­பியர் பெறுமானம் என்ன?
A: அது தொடர்பில் குறிப்­புக்­களை இட­வில்லை.
Q: ஏன் அதனை குறித்­துக்­கொள்­ள­வில்லை?
A: தெரி­யாது.
Q: அங்­கி­ருந்து அரைக்கும் இயந்­திரம் ஒன்­றினை கைப்­பற்­றி­னீரா?
A: ஆம்
Q: அதன் அம்­பியர் பெறு­மா­னத்­தை­யா­வது பதி­விட்­டீர்­களா?
A: இல்லை, அந்த இடத்தில் இருந்த வேலைப் பழு­வுக்கு மத்­தியில் அவற்றை குறிப்­பிட முடி­ய­வில்லை.
Q: அந்த அரைக்கும் இயந்­தி­ரத்தின் பெயர் என்ன? அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­ததா?
A: பெய­ரையும் குறித்­துக்­கொள்­ள­வில்லை.
Q: அப்­படி­யானால், பெயர், நிறம், அம்­பயர் பெறு­மானம் எதுவும் விசா­ர­ணைக்கு முக்­கி­ய­மில்லை என்றா கூறு­கின்­றீர்கள்?
A: அந்த சந்­தர்ப்­பத்தில் முடி­யு­மா­ன­வற்­றையே குறிப்­பிட்­டுள்ளேன்.
Q: அங்­கி­ருந்த அரைக்கும் இயந்­திரம், அந்த இடத்தில் இருக்­கவே இல்லை. அதனை நீங்­களே அங்கு கொண்­டு­வந்­துள்­ளீர்கள் ?
A: இல்லை. நான் அதனை மறுக்­கின்றேன்.

இத­னை­ய­டுத்து 1,2,4 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்­டத்­த­ர­ணி­க­ளான வஸீமுல் அக்ரம், சஜாத், நதீஹா அப்பாஸ் ஆகி­யோ­ருடன் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் முதல் சாட்­சி­யா­ள­ரான மார­சிங்­கவை குறுக்கு விசா­ரணை செய்தார்.

குறிப்­பாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபின் குறுக்கு விசா­ர­ணைகள் முதலில், வழக்குத் தொடுநர் அல்­லது முறைப்­பாட்­டாளர் தரப்பு சாட்­சி­ய­மாக மன்றில் பதிவு செய்­துள்ள, புத்­தளம் ‘ சொகொ’ பொலிஸ் பிரி­வி­னரின் வரைபடத்தை மைய­ப்­படுத்­தி­ய­தாக அமைந்­தி­ருந்­தது. அந்த வரை படத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த இடங்­களில் என்ன அமைந்­தி­ருந்­தது, அங்­கி­ருந்து என்ன மீட்­கப்­பட்­டது, அது குறித்த விசா­ர­ணைகள் எப்படி நடந்­தது என்­பது தொடர்பில் அந்த குறுக்கு விசா­ர­ணைகள் அமைந்­தி­ருந்­­தன.

முதலில், லக்டோஸ் தோட்டம் எனப்­படும் சுமார் 80 ஏக்கர் விசா­ல­மான தோட்­டத்தின் உரிமை தொடர்பில், காணி உறு­தியை மையப்­ப­டுத்தி உறுதிப்படுத்­தல்­களை செய்­து­கொண்ட சிரேஷ்ட சட்­டத்­த­ரனி ருஷ்தி ஹபீப், பின்னர் அக்­கா­ணியில், குற்றம் நடந்­த­தாக கூற­ப்படும் 18 ஏக்கர் நிலப்­ப­ரப்­புக்குள் வைத்து, 1,2 ஆம் பிர­தி­வா­திகள் கைது செய்­யப்­ப­ட­வில்லை எனவும், பிர­தான விசா­ரணை அதி­காரி மார­சிங்க பொய் சாட்­சியம் அளிப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

எனினும் அதனை பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்க மறுத்தார்.
இதன்­போது, வரைபடத்தில் ஜே – 4 என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த பகு­தியை மைய­ப்படுத்தி குறுக்கு விசா­ர­ணைகள் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீ­பினால் முன்­னெ­டுக்­கப்பட்­டது.

Q: வரை படத்தை பாருங்கள். அதில் ஜே – 4 என குறிப்­பி­டப்­பட்­டுள்ள இட­மொன்று இருக்­கின்­றதா?
A: ஆம்
Q: அந்த இடத்­தி­லி­ருந்தா யூரியா மூடைகள் 9 மீட்­கப்ட்­டது?
A: ஆம், அங்கு ஒரு கட்­டிடம் இருந்­தது. அதற்குள் இருந்தே மீட்­கப்பட்­டது.
Q:அங்கு கோழிக் கூடு ஒன்று இருந்­ததா?
A: ஆம்
Q: லக்டோஸ் தோட்­டத்தின் ஒரு எல்லை களப்­புடன் தொடர்­பு­பட்­டி­ருந்­ததா?
A: ஆம்
Q:அந்த களப்பில் மீன்பிடி நட­வ­டிக்­கைகள் நடக்­கின்ற­னவா?
A:பெரி­தாக இல்லை. நான் செல்லும் போது சிறுவன் ஒருவர் தூண்டில் கொண்டு மீன் பிடித்­துக்­கொண்­டி­ருந்­ததை கண்டேன்.
Q: தனி­யா­கவா?
A:ஆம்
Q: தனி­யாக சிறு­வன் ஒருவன் மீன் பிடிக்கும் அள­வுக்கு அப்­ப­குதி சூழல் இருந்­ததா?
A:தெரி­யாது.. நான் கண்­டதை கூறினேன். அவ்­வ­ளவு தான்.
Q: லக்டோ தோட்­டத்தில் என்ன இருந்­தது.
A: அத்­தோட்­டத்தில் தென்னை மரங்கள் இருந்­தன. காடுகள் அடர்த்­தி­யாக வளர்ந்து பரா­ம­ரிப்­பற்று இருக்கும் ஒரு சூழ­லையே நான் அவ­தா­னித்தேன். அங்­கி­ருந்த தென்னை மரங்­களில் தேங்­காய்கள் கூட இருக்­க­வில்லை.

இத­னை­ய­டுத்து வழக்கின் முறைப்­பாட்­டாளர் தரப்பே மன்றில் சாட்­சி­ய­மாக பதிவு செய்­தி­ருந்த புகைப்­ப­டங்­களை, சாட்­சி­யாளர் மார­சிங்­க­வுக்கு காண்­பித்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், லக்டோஸ் தோட்­டத்தின் தென்னை மரங்­களில் தேங்­காய்கள் இருக்­கி­றதா என கேள்வி எழுப்­பினார்.

இதன்­போது புகைப்­ப­டங்­களில் காட்­டப்­பட்ட மரங்­களில் தேங்காய் இருப்­பதை சாட்­சி­யாளர் ஒப்­புக்­கொண்டார்.

அதன்­பின்னர் குறுக்கு விசா­ர­ணைகள் தொடர்ந்­தன.
Q: ஜே 4 என வரைபடத்தில் குறிப்­பி­டப்பட்­டி­ருந்த பகு­தியில் கோழிக் கூடு இருந்­ததா?
A: ஆம்
Q : அந்த கூட்டின் அருகே இருந்த கொட்­டி­லொன்­றி­லி­ருந்து யூரியா மூடை­களைக் கைப்­பற்­றி­ய­தாக ஏற்­க­னவே சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளீர்கள். எத்­தனை மூடை­களைக் கைப்­பற்­றி­னீர்கள் ?
A: 9 மூடை­களை கைப்­பற்­றினேன்… ஒவ்­வொன்றும் 50 கிலோ எடை உடை­யது.
Q: அப்ப­டி­யானால் 450 கிலோ யூரி­யாவை கைப்­பற்­றி­னீர்கள் என கூறு­கின்­றீர்­களா?
A: ஆம்

இத­னை­ய­டுத்து கைப்­பற்­றப்­பட்ட யூரியா மூடை­களில் இடப்­பட்­டி­ருந்த ஒரு முத்­தி­ரையை மைய­ப்­படுத்தி குறுக்கு விசா­ர­ணை­களை சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தொடர்ந்தார். யூரியா மூடை­களில் இருந்த முத்­தி­ரையின் புகைப்­படம் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்­க­வுக்கு காண்­பிக்­கப்பட்­டது.

Q: இந்த யூரியா மூடை­களில் ஏதேனும் முத்­திரை ஒன்று காண­ப்ப­டு­கின்றதா?
A : ஆம்
Q : அம்­முத்­தி­ரையில் என்ன குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது ?
A : ‘உரம் ‘ என தெளிவாக உள்­ளது.
Q: ஏதேனும் நிறு­வனம் ஒன்றின் பெயர் உள்­ளதா?
A : தெளி­வாக தெரி­ய­வில்லை.
Q : எங்ரோ எனும் ஒரு பெயர் உள்ளதா?
A : ஆம்… குறிப்பிடப்பட்டுள்ளது.
Q: அதற்கு மேலதிகமாக யூரியாவின் விலை குறிப்பிடப்பட்டுள்ளதா?
A : ஆம்… 1000 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
Q: ஆயிரம் ரூபாவுக்கு யூரியா ஒரு மூடை கொள்வனவு செய்ய முடியுமா?
A: பதிலளிப்பது கடினம்.

Q : இந்த யூரியா அரசாங்கத்தால் தெங்கு பயிர் செய்கை முன்னெடுப்போருக்கு மானிய விலையில் வழங்கப்படுவது என்றால் ஏற்கிறீரா?
A : எனக்குத் தெரியாது
Q: அது குறித்து நீர் விசாரணை செய்யவில்லையா?
A : யூரியா மூடையில் உள்ள முத்திரை தொடர்பில் நான் எந்த விசாரணையையும் செய்யவில்லை.
Q : யூரியா மூடைகளைக் கைப்பற்றியதும், நீங்கள் வேறு வேறு தீர்மானங்களுக்கு செல்ல முன்னர், அதில் உள்ள முத்திரைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்க வேண்டும் அல்லவா?
A : தென்னந்தோட்டத்தை சுத்தப்படுத்திய பின்னரேயே யூரியாவை வழங்குவது வழக்கமானது. எனினும் இந்த தோட்டம் சுத்திகரிக்கப்பட்டிருக்கவில்லை. காடுகள் வளர்ந்திருந்தன.
Q: நீங்கள் கைப்பற்றியது தென்னத் தோப்புக்கு அரச மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட யூரியா. அதனை நீங்கள் எந்த அடிப்படையும் இன்றி இதனுடன் தொடர்புபடுத்தியுள்ளீர்கள்?
A : இல்லை… நான் மறுக்கின்றேன்.
Q : நீங்கள் கைப்பற்றிய யூரியா மூடைகளுக்கு என்ன நடந்தது?
A : அவற்றை வணாத்தவில்லு பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்க ஆலோசனையளித்தோம்.

(குறுக்கு விசாரணைகள் தொடரும் ….)

Leave A Reply

Your email address will not be published.