மகிந்தவின் அகல்வும் ரணிலின் நுழைவும்

0 424

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

இளம் தலை­மு­றை­யி­னரின் அறப்போர் ஈட்­டிய முதல் வெற்றி மகிந்த ராஜ­பக்­சவை பிர­தமர் பத­வியைத் துறக்கச் செய்­த­மை­யாகும். ஆனால் அவர் பதவி துறப்­ப­தற்­குமுன் நாட்­டுக்குக் கொடுத்த நன்­கொடை நாட்­டையே ஒரு போர்க்­க­ள­மாக மாற்­றி­விட்­டமை. அவர் பதவி துறந்த நாள் தொடக்கம் சில தினங்­க­ளாக இடம்­பெற்ற கொலை­களும், கொள்­ளை­களும், சொத்துச் சேதங்­களும் அவரால் திட்­ட­மிட்டு உரு­வாக்­கப்­பட்­டவை என்­பதை யாராலும் மறுக்க முடி­யாது. அவர் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­தப்­பட வேண்­டி­யவர். அவ­ரது சூழ்ச்சி எவ்­வாறு நடை­முறைப்படுத்­தப்­பட்­டது என்­பதை வாச­கர்கள் அறி­வது அவ­சியம்.

அவர் பதவி துறப்­ப­தற்கு முன்னர் தனது கடைசி உரையை நாட்டு மக்­க­ளுக்கு அலரி மாளி­கையின் வாசலில் நின்று நிகழ்த்த விரும்­பினார். எனினும் அவர் எந்த அள­வுக்கு மக்­களின் ஆத­ரவை இழந்­துள்ளார் என்­ப­தையும் ஏற்­க­னவே அவர் அறிந்­துள்ளார். அனு­ரா­த­பு­ரத்­துக்கு மத­வ­ழி­பாட்­டுக்­காகச் சென்­றி­ருந்­த­போது அங்கே கூடி­யி­ருந்த அவ­ரது முன்னை நாள் ஆத­ர­வா­ளர்கள் கூச்சல் போட்­ட­தி­லி­ருந்தே அந்த உண்­மையை அவர் உணர்ந்­தி­ருக்க வேண்டும். எனவே தமக்கு ஆத­ரவு காட்டும் ஒரு கூட்­டத்­தி­னரை தெற்­கி­லி­ருந்து கொழும்­புக்கு விலை­கொ­டுத்து வர­வ­ழைக்கச் செய்தார். அந்தக் கூட்டம் ஒரு கூலிப் படை. இரண்­டா­யிரம் ரூபா பணத்­திற்­கா­கவும் மது­வுக்­கா­கவும் அவ­ரது உரையைக் கேட்­ப­தற்­கென பேரூந்­து­களில் கொண்­டு­வ­ரப்­பட்­ட­வர்கள். ஆனால் பிர­த­மரின் அந்­த­ரங்க நோக்கம் காலி­முகத் திடலில் அறப்­போரில் ஈடு­பட்­டி­ருந்த குழு­வி­னரை அடித்துக் கலைப்­ப­தாகும்.

அதனை கலைக்க வேண்டும் என்ற முடிவு ஏற்­க­னவே சிலரால் எடுக்­கப்­பட்­டு­விட்­டது. அதற்கு அடிப்­ப­டை­யாக அப்­போ­ராட்­டத்­தைப்­பற்­றிய சில பொய்­களை சில தலை­வர்கள் பரப்பத் தொடங்­கினர். உதா­ர­ண­மாக, முன்னை நாள் அமைச்சர் சரத் வீர­சே­கர அறப்போர் அணிக்குள் ஈழப்­போ­ரா­ளி­களும் பௌத்­த­ம­தத்தின் எதி­ரி­களும் நுழைந்­துள்­ளார்­க­ளென ஒரு கதையை பகி­ரங்­கத்தில் அவிழ்த்து விட்டார். அவ­ருக்கு முன்னர் அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து பிரிந்து சென்ற விமல் வீர­வங்­சவும் இந்த அறப்போர் வெளிச் சக்­தி­களின் ஒரு சதி­யென்று பிதற்­றினார். ஆகவே அதனை வன்­மு­றை­கொண்டு கலைப்­ப­தற்கு மகிந்த ராஜ­பக்ச தயா­ரானார். இந்த ஏற்­பா­டுகள் அனைத்­தும் ஜனா­தி­ப­திக்குத் தெரி­யா­மலா இருந்­தி­ருக்கும்?

பிர­த­மரின் உரை­யைக் கேட்ட கைக்­கூ­லிகள் கூட்டம் கூட்­ட­மாக காலி­முகத் திடலை நோக்கி நகரத் தொடங்­கினர். காலி­முகத் திட­லுக்கும் அலரி மாளி­கைக்கும் நடு­வி­லேதான் இருக்­கி­றது கொள்­ளுப்­பிட்டி பொலிஸ் நிலையம். ஆனால் பொலிஸ் நிலைய அதி­கா­ரிகள் அந்தக் கூட்­டத்­தி­னரைத் தடுப்­ப­தற்கு எந்த முயற்­சியும் எடுக்­கா­தது இந்தச் சூழ்ச்­சியின் இன்­னொரு இர­க­சி­யத்தை வெளிப்­ப­டுத்­து­கி­றது. அதா­வது, அது­வரை நடந்­த­வற்றை நேரில் பார்த்த எந்த ஒரு சாதா­ரண பிர­ஜைக்கும் ஏதோ ஒரு அசம்­பா­விதத்­து­டன்தான் அந்த நிகழ்வு முடி­வுறும் என்­பதை உண­ராமல் இருந்­தி­ருக்க முடி­யாது. ஆனால் அப்­ப­டிப்­பட்ட ஒரு முடிவை பொலிஸார் உண­ராமல் இருந்­தி­ருப்பர் என்­பதை நம்ப முடி­யுமா? ஆகவே நிலை­யத்தைத் தாண்டி நடந்து சென்ற கூட்­டத்தைத் தடுக்­கா­த­தற்கு மேலி­டத்து உத்­த­ரவு கார­ணமாய் இருக்­கலாம் என்­பதை நிரா­க­ரிக்க முடி­யாது. அது எந்த மேலிடம் என்­பதை விசா­ரணை செய்ய வேண்டும்.

திட்­ட­மிட்­ட­து­போன்று அறப்­போ­ரா­ளிகள் மகிந்­தவின் கைக்­கூ­லி­களின் அடி­த­டிக்கு ஆளா­கினர். அதன் விளைவு நாடே ஒரு போர்க்­க­ள­மாக மாறிற்று. மக்கள் எந்த அள­வுக்கு ஆட்­சி­யி­னர்மேல் வெறுப்­புற்­றுள்­ளனர் என்­ப­தையும் எந்த அள­வுக்கு மக்­களின் பொரு­ளா­தாரக் கஷ்­டங்கள் தாங்­கொ­ணாத துய­ரங்­க­ளுக்கு அவர்­களை ஆளாக்­கி­யுள்­ளன என்­ப­தை­யுமே அக்­க­ல­வ­ரங்கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன. இவற்றை குறை­வாக எடை­போட்­டு­விட்ட பிர­தமர் அந்தக் கல­வ­ரத்­தையே தனது பிரி­வு­ப­சாரப் பரி­சாக மக்­க­ளுக்கு வழங்­கி­யுள்ளார். அவ­மா­னத்­து­டனும் பழிச்­சொல்­லு­டனும் பதவி இழந்த பிர­த­மரை வர­லாறு எவ்­வாறு சித்­த­ரிக்­குமோ தெரி­யாது. “குடை­நி­ழ­லி­ருந்து குஞ்­சரம் ஊர்ந்தோர் நடை­மெ­லிந்து நண்­ணினும் நண்­ணு­வர்” என்ற பழம் தமிழ் கூற்றே இப்­போது ஞாப­கத்­துக்கு வரு­கி­றது.
அவரின் பதவி துறப்­பி­னாலும் அமைச்­ச­ரவை கலைப்­பி­னாலும் ஏற்­பட்ட இடை­வெ­ளியை நிரப்­பாமல் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தைச் சீர்­ப­டுத்த முடி­யாது. அந்தப் பொறுப்பை ஜனா­தி­ப­தியின் தலைமேல் நாட்டின் அர­சியல் யாப்பு சுமத்­தி­யுள்­ளது. ஆனால் அதிலே ஒரு பிரச்­சினை உண்டு என்­பதை அவர் நன்கு அறிவார். அதா­வது, காலி­மு­கத்­தி­டலின் அறப்­போ­ரா­ளி­களும் நாட்டின் ஏனைய பாகங்­க­ளி­லுள்ள பெரும்­பான்­மை­யான மக்­களும் “கோத்­தாவே வீட்­டுக்குப் போ” என்ற தமது கோரிக்கை நிறை­வே­றும்­வரை ஓயப்­போ­வ­தில்லை. அதற்கு நாடா­ளு­மன்றத்­துக்கு உள்­ளேயும் ஆத­ர­வுண்டு என்­பதும் அவர்­க­ளுக்குத் தெரியும். அதை ஜனா­தி­ப­தியும் உணர்வார். எனவே மகிந்­தவின் இடை­வெ­ளியை நிரப்ப தனக்குச் சார்­பான ஒரு­வ­ரையே பிர­த­ம­ராக்க வேண்­டு­மென விரும்பி ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹவை நிய­மிக்­க­லானார்.

இத­னி­டையில் பொரு­ளா­தாரச் சீர்­தி­ருத்­தத்தை மேற்­கொள்ள வேண்­டு­மாயின் அதற்கு அடிப்­படைத் தேவை­யாக அர­சியல் உறு­திப்­பாடு வேண்டும். அந்தத் தேவையை சர்­வ­தேச நாணய நிதி உட்­பட சர்­வ­தேச நாடு­களும் அர­சு­களும் வலி­யு­றுத்­து­கின்­றன. இலங்கை மத்­திய வங்­கியின் புதிய ஆளு­ன­ரும்­கூட அந்தத் தேவை விரைவில் நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் தான் தனது பத­வியைத் துறப்­ப­தா­கவும் எச்­ச­ரித்­துள்ளார். எனவே ஒரு புதிய பிரதம­ரையும் அமைச்­ச­ர­வை­யையும் கால­தா­ம­த­மின்றி நிய­மிக்க வேண்டி இருந்­தது. சஜித் பிரே­ம­தா­சவின் தயக்­கமும் ஏனைய கட்­சித்­த­லை­வர்­களின் மறுப்பும் ரணிலின் நிய­ம­னத்­துக்குச் சாத­க­மாக அமைந்­தன. யார் இந்த ரணில்?

பிர­ப­ல­மான கொழும்பு றோயல் கல்­லூ­ரியின் முன்னை நாள் மாணவன்.சட்டக் கல்­லூ­ரியிற் பயின்று வழக்­கு­ரை­ஞ­ரா­னவர். அவுஸ்­தி­ரே­லிய டீக்கின்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தினால் கௌரவ கலா­நிதிப் பட்டம் வழங்­கப்­பட்­டவர். எனவே மகிந்­த­வை­விட அறி­வுத்­தி­ற­னுள்­ள­வ­ரென சர்­வ­தேச மட்­டத்தில் கரு­தப்­ப­டு­பவர். வர்த்­தகத் துறையின் நண்பன். முத­லா­ளித்­துவச் சிந்­த­னையின் ஆத­ர­வாளன். ஆதலால் மேற்கு நாடு­களின் ஆத­ரவைப் பெற்­றவர். முத­லா­ளித்­துவச் சிந்­த­னையைத் தழு­விய ஐக்­கிய தேசியக் கட்­சி­யின்­மூலம் 1977 இல் அர­சி­ய­லுக்கு அறி­மு­க­மா­னவர். ஜே. ஆர். ஜெய­வர்த்­தன ஆட்­சியில் உதவி வெளி­நாட்டு அமைச்­ச­ராக 28ஆவது வயதில் நிய­மனம் பெற்­றவர். 1994 இல் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ராக ரணில் தெரிவு செய்­யப்­பட்­ட­போது அக்­கட்­சிக்கு 44 சத­வீத வாக்­குகள் இருந்­தன. அந்தப் பலத்தை 2020 இல் 2 சத­வீ­த­மாகக் குறைத்த பெருமை இவ­ரையே சாரும்.

மகிந்­தவின் பத்­தாண்­டு­கால ஜனா­தி­பதி ஆட்சி பல குற்­றச்­சாட்­டு­களின் மத்­தியில் தோல்­வி­கண்டு 2015 இல் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­போது மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யின்கீழ் ரணில் பிர­த­ம­ரானார். அப்­போது நடை­பெற்ற தேர்தல் பிரச்­சார மேடை­களில் மகிந்த ஆட்­சியின் குற்­றச்­சாட்­டு­களை விசா­ரித்து தக்க நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தாக முழங்­கினார். ஆனால் அவை எது­வுமே நடை­பெ­ற­வில்லை. நடந்­த­தெல்லாம் மத்­திய வங்கிப் பண­முறி மோச­டியும் ஈஸ்டர் பண்­டிகை குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வ­முமே. இவை இரண்­டி­னதும் பழிகள் இவர் தலைமேல் விழத் தொடங்­கின. இந்த இரண்டும் மகிந்­தவின் கட்­சியின் 2020 வெற்­றிக்குக் கிடைத்த வரப்­பி­ர­சா­தங்கள். இங்­கேதான் ரணிலின் பல­வீனம் வெளிப்­ப­ட­லா­யிற்று. தன்­மேலும் தனது ஆட்­சி­யின்­மேலும் விழுந்த பழியை நீக்­க­வேண்­டு­மானால் மகிந்த அர­சின்மேல் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்­காது விட­வேண்­டு­மென்று உணர்ந்து அந்த விசா­ர­ணை­களைக் கைவிட்டார். அதற்குக் கைமா­றாக 2020 இல் மகிந்­தவின் கட்சி ஆட்­சிக்கு வந்­த­போது நல்­லாட்சி அர­சாங்­கத்­தைப்­பற்­றிய விசா­ர­ணைகள் காற்றில் பறக்க விடப்­பட்­டன. இது ஒரு முதுகு சொறியும் உபாயம்.

இப்­போது ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவும் பதவி துறந்து ராஜ­பக்ச அரசின் ஊழல் மோச­டி­களும் கொள்­ளை­களும் மனித உரிமை மீறல்­களும் போர்க் குற்­றச்­சாட்­டு­களும் விசா­ரிக்­கப்­பட்டு அவர்கள் தண்­டிக்­கப்­பட வேண்­டு­மெ­ன்­பதில் அறப்­போ­ரா­ளிகள் பிடி­வா­த­மாக உள்­ளனர். அவர்­களின் போராட்டம் நடந்­து­மு­டிந்த கல­வ­ரத்­தின்­பின்னர் நாளுக்கு நாள் வலுப்­பெற்று வரு­கின்­றது. இந்த நிலையில் ராஜ­பக்­சாக்­க­ளையும் காப்­பாற்றி பொரு­ளா­தார மீட்­சிக்கும் வழி­தேடப் பொருத்­த­மான ஒருவர் முதுகு சொறியும் ரணி­லைத்­த­விர வேறில்லை என்­பதை உணர்ந்தே கோத்­தா­பய அவரை பிர­த­ம­ராக நிய­மித்­துள்ளார். அவ­ருடன் சேர்ந்து பணி­யாற்ற சுமார் 15 பேரைக்­கொண்ட ஓர் அமைச்சரவை­யையும் ஜனா­தி­பதி நிய­மிப்பார். இவ்­வாறு நிய­மிக்­கப்­பட்ட இந்த ஆட்சி காப்­பாற்­றப்­போ­வது பொரு­ளா­தா­ரத்­தையா ராஜ­பக்­சாக்­க­ளையா அல்­லது இரண்­டை­யுமா? இதுதான் இன்று நாடு எதிர்­நோக்கும் முக்­கிய கேள்வி.

இது மலை­போன்ற ஒரு பிரச்­சினை. அதனைத் தீர்க்கும் வலு ரணி­லுக்கு உண்டா என்­பது சந்­தே­கமே. திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தில் ஒழிந்­து­கொண்­டி­ருக்கும் மகிந்த ரணி­லுக்கு வாழ்த்துச் செய்­தியை உட­ன­டி­யாக அனுப்­பி­யமை ஏன் என்­பதை வாச­கர்கள் உண­ர­வேண்டும். சோழியன் குடும்பி சும்மா ஆடு­வ­தில்லை.

இத்­த­னைக்கும் மத்­தியில் கொழும்புப் பங்­குச்­சந்தை ரணிலின் நிய­ம­னத்தைக் கண்டு சுறு­சு­றுப்­ப­டையத் தொடங்­கிற்று. இலங்கை நாண­யமும் சிறி­த­ளவு விலை மதிப்புப் பெற்­றது. சர்­வ­தேச நாணய நிதி­யு­ட­னான பேச்­சுக்­களும் புதிய நிதி அமைச்சர் நிய­மனமா­னதும் மீண்டும் ஆரம்­பிக்­கலாம். அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடு­களும் ரணி­லுக்கு வாழ்த்துக் கூறி­யுள்­ளன. இருந்தும் இவை­யெ­ல்லாம் நாட்டின் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்­வா­குமா?

அறப்­போ­ராட்டம் நாட்டின் அர­சியல் பொரு­ளா­தார அமைப்­புகள் மாற்­றப்­பட வேண்­டு­மென்று கோரும்­போது அதனுள் அடங்கும் பொரு­ளா­தார மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு மக்­களின் பூரண ஒத்­து­ழைப்பு அவ­சியம். அது ரணி­லுக்கு இப்­போது கிடை­யாது. உதா­ர­ண­மாக, வரிப்­பளு, பொதுத்­துறைச் செல­வி­னங்கள், ஊழல் ஒழிப்பு, மாபி­யாக்­களின் ஒழிப்பு, கல்வி, மருத்­துவம் போன்ற பொது­நல அபி­வி­ருத்தி, அரச நிறு­வ­னங்­களின் சீர்­தி­ருத்­தங்கள், நிர்­வாகச் சீர­மைப்பு ஆகி­ய­ன­வற்றில் அடிப்­படை மாற்­றங்கள் தேவைப்­ப­டு­கின்­றன. ஆனால் அவற்றை ஏற்­ப­டுத்­தும்­போது அடி­மட்­டத்தில் வாழும் மக்­களின் ஜீவா­தார நலன்கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது. இந்த மாற்­றங்­களை மக்­களின் ஆத­ர­வில்­லாமல் ஒரு அர­சாங்­கத்தால் கொண்­டு­வர முடி­யாது. அதற்­கு­ரிய செல­வி­னங்­க­ளையும் உள்­நாட்­டி­லி­ருந்தே திரட்­டவும் வேண்டும். வெளி­நாட்டு உத­விகள் போதாது. ஏற்­க­னவே கடன்­ சு­மையால் வலு­வி­ழந்­துள்ள பொரு­ளா­தாரம் இன்னும் கடன்­பட முடி­யாது. யாரும் கடன் தரவும் மாட்­டார்கள். சர்­வ­தேச நாணய நிதியின் உத­வியும் ஏற்­க­ன­வே­பட்ட கடன் சுமையால் ஒரு பிரச்­சி­னை­யாக எழுந்­துள்­ளது. இந்த நிலையில் கோத்­தாவை ஜனா­தி­ப­தி­யாக வைத்துக் கொண்டு மக்­களின் ஆத­ரவை ரணில் எதிர்­பார்ப்­பா­ரானால் அவ­ருக்கு அது ஏமாற்­ற­மா­கவே முடியும். எதிர்க்­கட்­சி­களும் தமது ஆதரவை நிபந்தனைகளுடனேதான் வழங்கும். கோத்தாவின் பொந்துக்குள் புகுந்துகொண்டுதான் மகிந்த இத்தனை அமளிகளையும் செய்தார். இப்போது அதே பொந்துக்குள் ரணில் நுழைந்துள்ளார். அவர் செய்யப்போகும் கைங்கரியங்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரணிலை உடனடியாக எதிர்நோக்கும் பிரச்சினை அறப்போராட்டத்தை எப்படிக் கலைப்பது என்பதே. அவர் அதைக் கலைக்கமாட்டேன் என்று உறுதிமொழி வழங்கியுள்ளார். இராணுவத் தளபதியும் அதை ஆமோதித்துள்ளார். ஆனால் பொலிஸ் உயர் அதிகாரியோ காலிமுகத்திடலை பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். ஆதலால் அறப்போராளிகள் வெளியேற வேண்டும் என்ற கட்­ட­ளையை இன்னும் செயற்­ப­டுத்­தாது பிற்­போட்­டுள்ளார். ஆனால் எத்­தனை நாட்­க­ளுக்கோ? ஜனா­தி­ப­திக்கும் இப்­போ­ராட்டம் ஓர் எதிரி. எனவே ஏதோ ஒரு சாட்­டை­வைத்து இப்­போ­ராட்­டத்தை பலாத்­கா­ர­மாகக் கலைக்க முயன்றால் ரணில் அதற்கு என்ன பதி­லடி கொடுப்­பாரோ? ஆனால் மீண்டும் ஓர் இரத்­தக்­க­ளரி ஏற்­பட்டு அந்­தப்­போ­ரா­ளிகள் பலி­யானால் அதுவே ரணி­லையும் நிரந்­த­ர­மா­கவே அர­சி­ய­லி­லி­ருந்து வெளி­யேற்றும். மகிந்­தவின் அகல்வு இறு­தியில் ரணி­லையும் பலி­கொள்ளும். ஒன்­று­மட்டும் உறுதி. மக்­களால் தெரி­யப்­பட்ட ஓர் அர­சாங்கம் இல்லாமல் பொருளாதாரத்தை எவரும் கட்டி எழுப்ப முடியாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.