நேர்காணல்:
பிரியந்த கொடிப்பிலி
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
‘தற்போது இலங்கைக்குப் புதிய ஆட்சியாளர்களும் புதிய அரசியல் கலாசாரமுமே தேவையானதாகும்’ என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நிகழ்கால அரசியல் தொடர்பில் ‘ஞாயிறு லங்காதீப’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு கூறினார். அவருடனான நேர்காணல் வருமாறு:
கேள்வி: சஜித் பிரேமதாச வீதிக்கு இறங்கிவிட்டார். அநுர குமார திஸாநாயக்க வீதிக்கு இறங்குவது எப்போது?
கடந்த காலம் முழுவதும் விவசாய மக்களின் பிரச்சினை, ஆசிரியர்களின் பிரச்சினை, பொதுவாக மக்களின் பிரச்சினைகளுக்காக வீதிக்கு இறங்கினேன். அதனால் புதிதாக வீதிக்கு இறங்க வேண்டும் என்று ஒன்று இல்லை. அத்தோடு இவ்வாரம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினையும் ஏற்பாடு செய்துள்ளோம்.
இன்று அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்காக முழு நாடும் தயாராகி வருகிறது. அரசாங்கத்தை விரட்டியடிப்பது போன்று விஷேடமாக நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய புதிய ஆட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும். இதற்காக மக்களுடன் திறந்த கலந்துரையாடல் அவசியம்.
கேள்வி: அப்படியென்றால் நீங்கள் தற்போது புதியவோர் ஆட்சிபற்றி கலந்துரையாடி வருகிறீர்களா?
கடந்த காலம் முழுவதும் எமது நாட்டில் அரசாங்கத்தை மாற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டமை அரசாங்கத்துக்கிருந்த எதிர்ப்பினாலாகும். என்றாலும் மீண்டும் நிறுவப்படும் அரசாங்கம் முன்பிருந்த அரசாங்கத்தை விடவும் மக்களுக்கு எதிரான விடயங்களில் இறங்கியுள்ளன. உதாரணமாக 2015இல் ராஜபக்ஷ அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. களவு மற்றும் ஊழல்கள் நிறைந்த ஆட்சி என்று ராஜபக்ஷ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. என்றாலும் அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் ஒன்றிணைந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ஷ ஆட்சி நல்லது என்று நினைக்குமளவுக்கு மிகவும் மோசமான ஆட்சியை நடத்தியது. மக்களில் சிலர் இவ்வாறே நினைத்தார்கள். ஏனென்றால் மைத்திரி – ரணில் ஆட்சி அவ்வளவுக்கு மோசமான முறையில் அமைந்திருந்தது.
இந்நாட்டில் நேரடியாக தீர்மானமொன்றினை மேற்கொள்ள முடியாத ஒரு தலைவராக அன்று கருதப்பட்ட ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவை விட சிறந்தவர் என்று இன்று சிலர் நினைக்குமளவுக்கு கோத்தாபய ராஜபக்ஷ வீழ்ச்சியடைந்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சி நல்லாட்சி அரசாங்கத்தை விட அனைத்து வழிகளிலும் தோல்வி கண்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. கடந்த 74 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்வதற்கு அவருக்கு, இவருக்கு என ஒவ்வொருவருக்கும் மாறி மாறி மக்கள் சந்தர்ப்பம் வழங்கி வந்துள்ளனர். அதனால் இன்றைய அரசாங்கத்தை விரட்டியடிப்பதுடன் புதிய முற்போக்கு ஆட்சியொன்றினை நிறுவுவதே தேவையாகவுள்ளது. அதற்கான கலந்துரையாடல்களை நாங்கள் மக்களுடன் மேற்கொண்டு வருகிறோம். அவசரமாக அரசாங்கத்தை விரட்டியடித்து அதனை விட மோசமான ஆட்சியொன்றினை கொண்டு வருவதை விட எமக்கு நிகழ்கால பிரச்சினைகளிலிருந்தும் மீட்சி பெறுவதற்கான சிறந்த ஆட்சியொன்றே தேவை.
கேள்வி: 2015 ஆம் ஆண்டு நீங்கள் ராஜபக்ஷ அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக செயற்பட்டீர்கள். நீங்கள் காய்களை பறிப்பதற்கு பொல்லால் அடித்த போது காய்கள் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணிலின் மடி மீதே வீழ்ந்தன. இம்முறையும் நீங்கள் பொல்லால் அடிக்கிறீர்கள். இப்போது காய்கள் சஜித்தின் மடிமீதே வீழ்ந்து விடாதா? இறுதியில் நீங்கள் எப்போதும் பொல்லால் அடிப்பது மாத்திரம் தான்?
2015 இல் ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென சமூகத்தில் பொதுவான கருத்தொன்று கட்டியெழுப்பப்பட்டது. இந்த கருத்து கட்டியெழுப்பப்பட்டதற்குக் காரணம் அப்போது ஜனநாயகத்துக்கு பாரிய சவால்கள் உருவாகி ஜனநாயகம் பாதிக்கப்பட்டிருந்தமையே. அதனால் ஜனநாயகத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்காக கட்சி பேதங்களின்றி அநேகர் ஒரே கருத்தினைக் கொண்டவர்களாக இருந்தார்கள். பொது மக்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய, ஊடகவியலாளர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து சமூகத்தையே பீதிக்குள்ளாக்கிய அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தில் அநேகர் இருந்தார்கள். இதுதான் அன்று இருந்த பெரும்பான்மையோரின் பொதுவான கருத்து. என்றாலும் இன்றைய நிலைமை அதனை விட வேறுபட்டது. இன்று கோத்தாபயவின் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு இருப்பது போல், கோத்தாபயவை ஜனாதிபதியாக்குவதற்கு எதிர்ப்பினை கட்டியெழுப்பிய நல்லாட்சி அரசாங்கத்துடன் தொடர்பானவர்களுக்கும் அதே போன்ற எதிர்ப்பு உள்ளது. இது ஓர் விஷேட நிலைமையாகும்.
இன்று நாட்டுக்கு புதிய ஆட்சியொன்றும், புதிய அரசியல் கலாசாரமும் தேவை. இதனைக் கட்டியெழுப்புவதற்கு முடியாமற் போனால் நிலைமை மேலும் மோசமடையும். மக்கள் முன்பு போல் பழைய சம்பிரதாய ஆட்சி மாற்றங்களுக்கு இடமளிக்கமாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம்.
கேள்வி: பெற்றோல், டீசல் வரிசைகளில் காத்துக்கிடக்கும் போது எரிவாயு வரிசைகளில் காத்திருக்கும் போது மக்களுக்கு ஏற்படும் ஆவேசமான கொள்கைகள், செயற்பாடுகள், தேர்தல் அண்மிக்கும் போது இல்லாமற் போக மாட்டாதா?
எத்தனை பிரச்சினைகள், சவால்கள் ஏற்பட்டாலும் மக்கள் பொறுமை காக்கும் ஒரு சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் இந்நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் நிலைமை இதற்கு முதல் எப்போதும் ஏற்பட்டிராத சிக்கலான மிகவும் மோசமானதாகும். அதனால் மக்கள் இதற்கு முன்பு செயற்பட்டது போன்று இப்போது செயற்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. முன்னைய காலங்களில் போன்று ஆவேசமாக அரசாங்கத்துக்கு ஏசி விட்டு பின்பு மறந்து விடும் நிலைமை இன்று இல்லை. அதனால் இந்த அரசாங்கத்துக்கு மீண்டும் எந்தவொரு தேர்தலிலும் வெற்றியடைய முடியும் என நாம் நினைக்கவில்லை.
கேள்வி: இந்த பொருளாதார பிரச்சினைக்கு உங்கள் தீர்வு என்ன என்பது தொடர்பில் இப்போது நாம் பேசுவோம். விமர்சனங்கள் போன்று உங்களிடம் தீர்வுகளும் இருக்க வேண்டுமல்லவா?
இந்தப் பிரச்சினை தானாகவே உருவானதொன்றல்ல. எமது நாட்டில் நீண்டகாலம் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கை, களவு, ஊழல்கள் நிறைந்த அரசியல் கலாசாரத்தின் பிரதிபலனே இது. இந்தப் பிரச்சினைக்கு குறுகிய கால தீர்வினைப் போன்றே நீண்டகால தீர்வுகளையும் தேட வேண்டும். இதற்கு ஊழல், களவு அற்ற நேர்மையான ஆட்சி அவசியமாகும். ஊழல், களவு அற்ற ஆட்சியினால் மாத்திரம் நாட்டை மீட்டெடுக்க முடியாது என சிலர் கூறுகிறார்கள். ஆனால் நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென்றால் ஊழல், களவு என்பனவற்றை முதலில் ஒழிக்க வேண்டும்.
அடுத்து இந்நாட்டு மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் நாட்டுக்கே திருப்பிக் கையளிக்கப்பட வேண்டும். டொலர் பிரச்சினையிலிருந்தும் மீள வேண்டுமென்றால், வெளிநாட்டுப் பணியாளர்களிடமிருந்து கிடைக்கும் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
74 வருட அழிவிலிருந்தும் ஓரிரு வருடங்களில் மீள முடியாது. அதனால் திட்டமிடப்பட்ட பொருளாதார முறைமை ஒன்றின் மூலமாகவே எம்மால் மீட்சி பெறமுடியும் என நாம் நினைக்கிறோம்.
கேள்வி: ஜே.வி.பி. அழகான கதைகளைக் கூறுகிறது. அவ்வாறு சொல்லும் கதைகளை இப்பூமியில் நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான தகுதியானவர்கள் ஜே.வி.பி. யில் இருக்கிறார்களா? என்று கூட சிலர் உங்களை விமர்சிக்கிறார்களே?
இதுவரை காலம் இந்நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களை விடவும் ஒவ்வோர் அமைச்சர்கள் அதன் விடயங்கள் தொடர்பில் பூரண அறிவுள்ள, அனுபவமுள்ள, வழங்கப்படும் பொறுப்புக்களை தவறின்றி நிறைவேற்றும் நேர்மையானவர்கள் ஜே.வி.பி.யிடம் இருக்கிறார்கள். இது தொடர்பில் எவ்வித சந்தேகமும் எழ வேண்டியதில்லை. இதனை நான் பொறுப்புடன் கூறுகிறேன். அதனால் தற்போது உருவாகியுள்ள பிரச்சினைகளிலிருந்தும் மீள வேண்டுமானால் அதற்கு பல வழிகள் இல்லை. ஒரே ஒரு வழியே உள்ளது. அது நாங்கள் முன்வைக்கும் வழி மாத்திரமே.
கேள்வி: ஜே.வி.பி.க்கு உடைகள் அன்பளிப்புச் செய்யும் இலவசமாக முடி வெட்டித்தரும் நண்பர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் சஜித் கூறுகிறார் பல வருடங்களுக்கு என்றாலும் எண்ணெய் அன்பளிப்புச் செய்யும் சர்வதேச நண்பர்கள் அவர்களுக்கு இருக்கிறார்கள் என்கிறார். உங்களுக்கு இவ்வாறான நண்பர்கள் இல்லையா?
சஜித் பிரேமதாச கூறும் வகையிலான பொறுப்பற்ற , பகிடியான கருத்துகள் தெரிவிக்கும் அளவுக்கு நாங்கள் அரசியல் முட்டாள்கள் அல்ல. இவ்வாறான பேச்சுகள் மூலம் அவர்களது இராஜதந்திரத்தின் தன்மை புரிகிறது. கடந்த ஆட்சியில் இராஜதந்திர கொடுக்கல் வாங்கல்களுக்குப் பதிலாக ஒவ்வொரு நாடுகளுடனும் அந்த நாடுகளின் நிறுவனங்களுடன் நடைபெற்ற டீல்களை நாம் கண்டோம். எம்மிடம் அதற்கும் அப்பால் கொள்கையளவிலான இராஜதந்திர வேலைத்திட்டமொன்று உள்ளது. அது எண்ணெய் சிறிது வழங்கும், டொலர் கொஞ்சம் வழங்கும் நண்பர்கள் இருக்கிறார்கள் என பெருமை பேசிக் கொள்பவர்கள் அல்ல நாம்.
கேள்வி: இப்போது அரசாங்கத்திலிருந்தும் அரசாங்கத்துக்கு எதிர்க்கருத்தினைக் கொண்டவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். உங்களது முன்னைய நண்பர் விமல் வீரவன்ச தான் தற்போது போராட்டத்தை நடத்துகிறார். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கும் ஒரு பங்கு கிடைக்கும் அல்லவா?
அவர்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு காரணமானவர்களே அன்றி வேறு நபர்கள் அல்ல. இப்போது அவர்கள் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும் பிரச்சினைகளைக் கட்டியெழுப்பியவர்கள் அவர்கள். இது அவர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்துக்காக சப்தமிடுவதைத் தவிர வேறெதுவும் எமக்குத் தெரியவில்லை.
கேள்வி: தற்போது அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்கப்பட்டு வருபவரே பசில் ராஜபக்ஷ. பசில் பற்றி உங்களது கருத்து எப்படியுள்ளது?
இது முழு அரசாங்கத்தையும் காப்பாற்றி பசிலை குற்றவாளியாக்கிவிட்டு தப்பித்துக்கொள்ளும் ஒன்றல்ல. இது பசில் ராஜபக்ஷவின் பிரச்சினை மாத்திரமே என்றால் கோத்தாபயக்கள், மஹிந்த என்போர் ஒன்றுமில்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. இதற்கு முன்பு இவ்வாறான ஒருவராக நாங்கள் பி.பீ. ஜயசுந்தரவைக் கண்டோம். எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் பி.பீ. ஜயசுந்தரவே என்று கூறி அவர்கள் கைகளைக் கழுவிக் கொள்ளவே முயற்சித்தார்கள். தற்போது பி.பீ.யை விலக்கி விட்டார்கள் என்று பிரச்சினை தீர்ந்துவிட்டதா? பசில் என்பவரும் அவ்வாறான ஒரு கதாபாத்திரமே. தற்போதைய பிரச்சினைகளுக்கு இந்தக் கூட்டாட்சியைச் சேர்ந்த அனைவருமே பொறுப்புக் கூற வேண்டும். இதில் கோத்தாபயவுக்கும் மஹிந்தவுக்கும் பசிலுக்கும் விமலுக்கும் ஏனையவர்களுக்கும் பொறுப்பில்லை என கழன்றுவிட முடியாது. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் இந்த அழிவினை ஏற்படுத்தியுள்ளார்கள். பசில் ராஜபக்ஷ தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் அநேகம் உள்ளன. என்றாலும் இந்தப் பிரச்சினைகளுக்கு பசில் ராஜபக்ஷ தனி ஆளாக பொறுப்புக் கூற வேண்டும் என்ற கருத்தினை உருவாக்குவது தவறு. அண்ணன்மார், தம்பிமார், மகன்மார், தந்தைமார், அவர்களைச் சூழவுள்ள ஏனையோர் அனைவரும் இந்தப் பிரச்சினைகளின் பங்குதாரர்கள்.
கேள்வி: தற்போது மீண்டும் தேசிய அரசாங்கமொன்றை நிறுவுவது பற்றி பேசப்படுகிறது. இது தொடர்பாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் செய்ய முயற்சிக்கிறார்கள். தங்களது அரசியல் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தக் கட்சிகளுக்கு நினைத்த தீர்மானங்களை எடுக்க முடியும். நினைத்தவற்றைச் செய்ய முடியும். கொள்கை ரீதியான தீர்மானங்கள் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வது, அதிகாரத்தை உறுதி செய்து கொள்வது, அதிகாரத்துக்காக ஒன்றிணைவது, தமது முகாமின் அதிகாரம் பலவீனப்படும் போது எதிரியின் முகாமுடன் டீல் செய்து கொள்வது தான் அவர்களது கொள்கை. அதனால் அவர்கள் எதற்கும் முயற்சிக்கலாம். தேசிய அரசாங்கம் என்ற கதை இவ்வாறே உருவாகியுள்ளது.
கேள்வி: 11 கட்சிகள் வேலையை ஆரம்பித்துள்ளன. இது தேசிய மக்கள் சக்திக்கு சவாலாக அமையுமா?
ஒருபோதும் இல்லை. அவர்கள் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியாத குழுவினர். அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் இறைச்சியின் அளவைப் பற்றி சிந்திக்கும், இறைச்சி குறைவான எலும்பொன்று கிடைத்தால் மூக்கினால் அழும் குழுவினர் அவர்கள்.
கேள்வி: அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் இருக்கும் ஜே.வி.பி. அந்த எதிர்ப்பின் ஒரு பகுதி இன்னொரு தரப்பினருக்கு சொந்தமாவதற்கு விரும்பவில்லையா? உங்களுக்கு ஆதரவான சில தரப்பினரின் கருத்துப்படி அரச எதிர்ப்பின் உரிமை உங்களுக்குரியது என கூறப்படுகிறதே.?
அப்படியொன்றும் இல்லை. எங்களிடம் அவ்வாறான ஒரு பிரச்சினை இல்லை. இந்த ஆட்சிக்கு எதிராக எங்கு எதிர்ப்பலைகள் உருவெடுத்தாலும் அந்த எதிர்ப்புகள் அனைத்துக்கும் நாம் ஆதரவு வழங்குகிறோம். என்றாலும் நாம் மக்களை எச்சரிக்கிறோம். பொதுவான எதிர்ப்புகளை முன்னெடுத்து இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு பெற்றுக்கொள்வதற்காக எங்களுடன் இணையுங்கள் என நாம் மக்களை அழைக்கிறோம். அவ்வாறில்லாது இவ்வாறான குழுவினர் மீண்டும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது. மக்கள் இரவு வீழ்ந்த குழியில் பகலில் வீழ்வதற்கு இடமளித்து எம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அதனால் இந்த ஆட்சியை வீழ்த்தி இது போன்ற ஆட்சியொன்றுக்கு மீண்டும் இடமளிக்க முடியாது.
நன்றி : ஞாயிறு லங்காதீப
-Vidivelli