பொருளாதாரச் சீரழிவின் மறுபக்கம்

0 622

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

“படிப்­ப­தற்குக் கொப்பி இலை
பட­மெ­ழுதத் தாளில்லை
நடிப்­ப­துபோல் நடந்­தது நாடு”
– கவிஞர் அப்துல் காதர் லெப்பை

பரீட்சை வினாத்­தாள்­களை அச்­சி­டு­வ­தற்குக் கட­தாசி தட்­டுப்­பா­டென்­பதால் பரீட்­சைகள் கால­வ­ரை­யின்றிப் பிற்­போ­டப்­பட்­டுள்­ளன என்ற ஒரு செய்­தியைப் படித்­த­போது சிந்­தனைக் கவிஞர் அப்துல் காதர் லெப்­பையின் மேற்­கூ­றிய வரி­கள்தான் என் ஞாப­கத்­துக்கு வந்­தன. இரண்­டா­வது உல­க­மகா யுத்த காலத்தில் நில­விய பொரு­ளா­தார நெருக்­க­டி­யைப்­பற்றி அவர் விப­ரித்த விதமே அது.

இலங்­கையின் இன்­றைய பொரு­ளா­தாரச் சீர­ழிவும் நெருக்­க­டியும் எவ்­வாறு பொது­மக்­களைப் பாதித்­துள்­ளன என்­பதை விப­ரிப்­பது இக்­கட்­டு­ரையின் நோக்கம் அல்ல. அதனை வாச­கர்கள் ஒவ்­வொ­ரு­வரும் அனு­ப­விக்­கின்­றனர் என்­பதை அறிவேன். அதை விப­ரிப்­பதால் அவர்கள் அனு­ப­விக்கும் கஷ்­டங்­களை குறைக்க முடி­யாது. அதே­போன்று இச்­சீ­ர­ழி­வுக்­கான கார­ணங்கள் எவை என்­பது பற்­றியும் இக்­கட்­டுரை ஆரா­யப்­போ­வ­தில்லை.

பொரு­ளி­ய­லா­ளர்­களும் அர­சியல் அவ­தா­னி­களும் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களும் அவற்றை ஏற்­க­னவே விப­ரித்­துள்­ளனர். சுருக்­க­மாகச் சொல்­லப்­போனால் அரசின் நிதிக்­கொள்கை, இறக்­கு­மதிக் கொள்கை, அத­னா­லேற்­பட்ட பண­வீக்கம், பார­பட்­ச­மான வரிச்­ச­லு­கைகள், தேசியக் கடன்­பளு, நிர்­வாக ஊழல், மாபி­யாக்­களின் செல்­வாக்கு ஆகி­ய­ன­வற்றின் ஒன்­று­பட்ட விளைவே இச்­சீ­ர­ழிவு. கொவிட் கொள்ளை நோய் அந்தச் சீர­ழி­வுக்கு வேக­மூட்­டி­யதே தவிர அதனைத் தோற்­று­விக்­க­வில்லை. ஆகவே ஆட்­சி­யினர் அதன்மேல் முழுப்­ப­ழி­யையும் சுமத்­து­வது அவர்­களின் பொறுப்பைத் தட்­டிக்­க­ழிக்கும் அர­சியல் உபா­ய­மே­யன்றி வேறில்லை. ஆகவே இக்­கட்­டு­ரையின் பிர­தான நோக்கம் இச்­
சீ­ர­ழி­வுக்குப் பின்னால் மறைக்­கப்­பட்­டுள்ள அல்­லது மறைந்­தி­ருக்கும் இன்­னொரு அடிப்­படைக் கார­ணியை வாச­கர்­களின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரு­வ­தாகும். அதனை இச்­சீ­ர­ழிவின் மறு­பக்கம் என்றும் கூறலாம்.

எந்த ஒரு நாடும் அதன் அர­சாங்­கமும் அந்த நாட்டு மக்­களைப் புறக்­க­ணித்­து­விட்டு பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. பொரு­ளா­தாரம் என்­பது மக்­களால் மக்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­ப­டு­வது. இவ்­வா­றான ஒரு பாடத்தை ஜன­நா­ய­கத்தைப் பற்றி அர­சியல் நூல்கள் கூறு­கின்­றன. ஆனால் அதை ஓர் அடிப்­படைப் பாட­மாக பொரு­ளியல் நூல்கள் கற்­பிப்­ப­தில்லை. மக்­களின் ஒன்­று­தி­ரண்ட உழைப்புச் சக்­தியும், முயற்­சியும், நுகர்வும், பரி­மாற்­றமும் இல்­லாமல் பொரு­ளா­தாரம் இல்லை. அந்த அம்­சங்­களின் ஒன்­று­பட்ட கூட்டின் விளைவே இன்­றைய நவீன உலகு. ஆகவே ஒரு நாட்டின் நிரந்­தரச் செல்வம் அந்த நாட்டின் மக்­களே. அந்த மக்கள் ஒன்­று­பட்டால் இம­யத்­தையும் வீழ்த்­தலாம். அவர்­களைப் பிரித்­து­விட்டால் ஒரு தூசி­யைக்­கூட நகர்த்த முடி­யாது. இந்த விளக்­கத்தின் யதார்த்­தத்தை இரண்டு நாடு­களின் துரி­த­மான பொரு­ளா­தார வளர்ச்­சி­யைக்­கொண்டு விளங்­கலாம். ஒன்று வங்­கா­ள­தேசம், மற்­றது சிங்­கப்பூர்.

இலங்கை சுதந்­திரம் அடை­யும்­போது வங்­காளதேசம் என்ற ஒரு நாடே இருக்­க­வில்லை. 1971 இல் அந்த நாடு உரு­வா­கி­ய­போது அபி­வி­ருத்தி அடை­யாத ஒரு பொரு­ளா­தா­ரத்­துக்கு இலக்­க­ண­மா­கவே அந்த நாட்டை பொரு­ளி­ய­லா­ளர்கள் மதிப்­பிட்­டனர். வறுமை, பட்­டினி, கல்­வி­ய­றி­வின்மை, நோய் ஆகிய பிணி­க­ளுக்கு உறை­வி­ட­மாக வங்­கா­ள­தேசம் அன்று விளங்­கி­யது. ஆனால் இன்று 163 கோடி மக்­க­ளுடன் பொரு­ளா­தா­ரத்திற் துரித வளர்ச்­சி­கண்டு இலங்­கைக்கே கடன் பிச்­சை­போடும் நிலைக்கு மாறி­யுள்­ளதன் இர­க­சியம் என்­னவோ? அந்த நாட்டின் பொரு­ளி­ய­லா­ளர்கள் பலரை நான் அணுகிக் கேட்­ட­போது அவர்கள் கூறிய ஒரே விடை எவ்­வாறு அந்த நாட்டின் பிர­தான வள­மான மக்கள் பிர­யோ­ச­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர் என்­பதே அப்­பொ­ரு­ளா­தார வளர்ச்­சியின் இர­சியம் என்­றனர். இலங்­கையில் உள்­ள­து­போன்று அங்கும் இன மத வேறு­பா­டுகள் உண்டு. ஆனால் அந்த வேறு­பா­டு­களை ஒரு புறம் ஒதுக்­கி­வைத்­து­விட்டு, பொரு­ளா­தாரப் போராட்­டத்தில் அம்­மக்கள் ஒன்­று­தி­ரண்டு அந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­கின்­றனர்.

இரண்­டா­வது உதா­ரணம் சிங்­கப்பூர். 1950களில் ஒரு முறை அந்­நாட்டின் பிதா­மகன் லீ குவான் யூ இலங்­கைக்கு விஜயம் செய்­த­போது இலங்­கையின் வளர்ச்­சி­யைக்­கண்டு பொறாமை கொண்டார். இலங்­கையின் வளர்­ச்சியை எவ்­வா­றுதான் தனது நாடு எட்­டிப்­பி­டிக்­கு­மோ­வென அங்­க­லாய்த்தார். உண்­மை­யி­லேயே ஜப்­பா­னுக்கு அடுத்­த­ப­டி­யாக இலங்­கையே பொரு­ளா­தார வளர்ச்சி ஏணியில் அப்­போது கால்­வைத்­தி­ருந்­தது. ஆனால் 1980களில் ஒரு நாள் அத்­த­லைவன் தனது நாட்­டு­மக்­களைப் பார்த்து உரை­யாற்­றி­ய­போது இலங்­கையின் வீழ்ச்­சியை உதா­ர­ணங்­காட்டி தனது மக்­களை இலங்­கையின் வழி­யிற்­செல்ல முனை­யாதீர் என எச்­ச­ரித்தார். இலங்கை சென்ற இன மத வெறி­பி­டித்த பாதை ஒரு பொரு­ளா­தா­ரத்தை குட்டிச் சுவ­ராக்கும் என்­ப­தையே அவர் அன்று தெளிவுபடுத்­தினார். அதன் உண்­மையை இரு நாடு­களும் இன்று சித்­த­ரிக்­கின்­றன. மூன்றாம் உல­க­நாட்டுப் பொரு­ளா­தா­ர­மாக அன்று விளங்­கிய சிங்கை இன்று முதலாம் உல­க­நாட்டுப் பொரு­ளா­தா­ர­மாக மிளிர, முதலாம் உல­க­நாட்டுப் பொரு­ளா­தா­ரத்தை எட்­டிப்­பி­டிக்க இருந்த இலங்­கையோ இன்று கேவலம் மூன்றாம் உலக நிலைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது.
வங்­கா­ள­தே­சமும் சிங்­கப்­பூரும் இன, மத, மொழி வேறு­பா­டு­களைக் களைந்­தெ­றிந்­து­விட்டு ஒரே நாடு ஒரே மக்கள் என்ற அடிப்­ப­டையில் யாவ­ரையும் ஒன்று திரட்டி அவர்­களின் ஒன்­று­பட்ட உழைப்­பாலும் முயற்­சி­யாலும் அந்­நா­டு­களின் பொரு­ளா­தா­ரங்­களை கட்­டி­யெ­ழுப்பி அதன் பிர­யோ­ச­னத்தை அம்­மக்கள் இப்­போது அனு­ப­விக்­கின்­றனர். உண்­மை­யி­லேயே வங்­கா­ள­தேசம் அடை­ய­வேண்­டிய வளர்ச்சி இன்னும் எவ்­வ­ளவோ உண்டு. அதன் பிரச்­சி­னைகள் முற்­றாகத் தீர­வில்லை. இருந்தும் அது போகும் பாதை சரி­யான பாதை என்­ப­தையே அதன் குறு­கிய கால அனு­பவம் உணர்த்­து­கின்­றது. ஆனால், இலங்­கையில் நடந்­ததும் நடப்­பதும் என்ன?

இது எழு­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலான ஒரு சோகக் கதை. சுதந்­திரம் கிடைத்­த­தன்பின் அர­சாங்கம் முதலிற் செய்த வேலை இலங்கை மக்­க­ளென்றால் யார் என்­பதை வரை­யறை செய்­ததே. இந்த வரை­ய­றைக்­குள்­ளி­ருந்து முதலில் இந்­திய வம்­சா­வ­ழி­யி­னரை ஒதுக்­கினர். அதன்பின் தமி­ழி­னத்தை ஒதுக்க முயன்று ஒரு போரையே உரு­வாக்­கினர். இப்­போது முஸ்­லிம்­க­ளையும் அன்­னியர் என்­கின்­றனர். இறு­தி­யாக, இந்த நாடு சிங்­க­ள­வர்­க­ளுக்கு மட்­டுமே சொந்தம் என்ற நிலையில் சுமார் மூன்­றி­லொரு பகுதி மக்­களை ஓரங்­கட்­டி­யுள்­ளனர். ஆகவே நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் இந்த மூன்­றி­லொரு பகு­தி­யி­னரின் பூர­ண­மான பங்­க­ளிப்பை எதிர்­பார்க்க முடி­யுமா? எல்லா மக்­க­ளையும் ஒன்­றாகக் கட்­டி­ய­ணைக்­காமல் ஒரு பொரு­ளா­தாரம் தொடர்ந்து வளர்ச்சி காண முடி­யுமா? சுருக்­க­மாகச் சொன்னால் இன­வா­தத்தை வளர்த்­துக்­கொண்டு பொரு­ளா­தார மலர்ச்சி காண­மு­டி­யாது. இன்று ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டியின் மறுபக்கம் இதுதான்.

சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் அச்­சா­ணி­யாகச் செயற்­ப­டு­கிறார் இன்­றைய ஜனா­தி­பதி. அவ­ரது ஒவ்­வொரு நட­வ­டிக்­கையும் பேரி­ன­வா­தத்தை வளர்ப்­ப­தா­கவே இருக்­கி­றது. இன்­றைய பொரு­ளா­தாரச் சீர­ழிவு இன­வாதம் தந்த பரிசே என்றால் அது மிகை­யா­காது. உதா­ர­ண­மாக, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச பத­விக்கு வந்­த­போது வடக்­குக்கும் கிழக்­குக்கும் அதி­காரப் பகிர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்­டனர். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரி­யுமா? தமிழ் மக்­க­ளுக்குத் தேவை அதி­காரப் பகிர்வு அல்ல, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியே என்றார். இந்த வார்த்­தை­களை நன்­றாகச் சிந்­தித்­துப்­பார்த்தால் அவற்றுள் ஒழிந்­தி­ருக்கும் இன­வா­தத்தை உண­ரலாம். அவ­ரது வார்த்­தைகள், தமி­ழர்­களைப் பார்த்து, கும்­பிட்டு வாழுங்கள் நீங்கள் குபே­ரர்­க­ளா­கலாம் என்­ப­துபோல் இல்­லையா? இந்த அந்­த­ரங்­கத்தை முஸ்­லிம்கள் உட்­பட சிறு­பான்மை இனங்கள் யாவும் உணர்தல் வேண்டும். இந்தப் பேரி­ன­வாத மனப்­பாங்கும் அதனை ஒட்­டிய செயற்­பா­டு­க­ளுமே இன்று சர்­வ­தேச அரங்­கு­களில் இலங்­கையின் பெயரைப் பாழ்­ப­டுத்­தி­யுள்­ளன. ஐ.நா. மனித உரிமைச் சபையின் அறிக்­கைகள் இதற்கோர் எடுத்­துக்­காட்டு.

இன்று நிலவும் பொரு­ளா­தாரச் சீர­ழிவு இன்னும் தொடரும். இந்­தி­யாவின் தய­வையும் சீனாவின் உத­வி­யையும் நம்பி இந்தச் சரிவை நிமிர்த்த முடி­யாது. சர்­வ­தேச நாணய நிதியின் உத­வியை நாடு­வ­தைத்­த­விர வேறு­வழி இல்லை என்று எத்­த­னையோ பொரு­ளா­தார வல்­லு­னர்கள் ஒரு வரு­டத்­துக்கும் மேலாக ஆலோ­சனை கூறியும் அவற்­றை­யெல்லாம் உத­றித்­தள்­ளி­விட்டு, தான் பிடித்த முய­லுக்கு மூன்­றேதான் கால்கள் என்­ப­துபோல் ஜனா­தி­பதி வகுத்த வளர்ச்­சிப்­பா­தையே பொரு­ளா­தார சுபீட்­சத்தை ஏற்­ப­டுத்தும் என்ற ஒரு மாயையில் சிக்­குண்டு முழு அரசும் அதன் கேந்­திர ஸ்தாப­னங்­களும் இயங்­கி­யதால் விளைந்த விப­ரீ­தமே இந்த அழிவு. இப்­போது தனது தவறை உணர்ந்து சர்­வ­தேச நிதியின் உத­வியை நாட ஜனா­தி­பதி இணங்­கி­ய­போதும் அந்த ஞானம் காலம்­க­டந்த ஒன்றென்பதால் அந்த நிதியின் பரிகாரம் மட்டும் இப்பாரிய நோயைத் தீர்க்காது.
மக்களின் கொதிப்பு ஏற்கனவே வீதிக்கு வரத்தொடங்கி விட்டது. ராஜபக்சாக்களே வெளியேறுங்கள் என்ற கோஷங்கள் ஒலிக்கின்றன. ஆனாலும் அந்தக் கொதிப்பினை ஒன்றுதிரட்டி ஆட்சியை மாற்றுவதற்கு எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் இப்போது வலுவில்லை. இந்த நிலையில் இனவாதத்தையே மீண்டும் ஓர் ஆயுதமாகப் பாவித்து இன்றைய அரசும் அதன் ஜனாதிபதியும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள எத்தனிப்பர். அடுத்த மூன்று வருடங்களுக்கும் இதே ஆட்சி நீடித்தாலோ அதற்கு முன்னர் அது கவிழ்ந்து வேறோர் ஆட்சி ஏற்பட்டாலோ இனவாதத்தை ஒழிக்காமல் இந்த நாட்டை என்றுமே கட்டியெழுப்ப முடியாது என்பதை இந்த அரசுக்கு வாக்களித்த மக்கள் உணர வேண்டும். இந்த இனவாதம் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீரூற்றிப் பசளையிட்டு வளர்க்கப்பட்ட ஒரு நஞ்சு மரம். அதன் துர்நாற்றத்தில் நாடே இன்று அழிந்துகொண்டிருக்கிறது. அந்த மரத்தை வெட்டி எறிவார் யாரோ?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.