வரலாற்றில் பதிவாகிவிட்ட மஜ்மா நகர் மையவாடி

0 5,323

எச்.எம்.எம். பர்ஸான்

“கொவிட் தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­களை அடக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டியில் இடப்­பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. அங்கு தொடர்ந்தும் அடக்கம் செய்­வதை இடை­நி­றுத்தி, அந்­தந்த மாவட்­டங்­களில் அடக்கம் செய்ய அனு­ம­திக்க வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும்”

கடந்த பெப்­ர­வரி மாதம் ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர், செய­லாளர் மற்றும் மஜ்மா நகர் மக்­களை நாம் சந்­தித்­த­போது அவர்­க­ளது கோரிக்கை இவ்­வா­றுதான் இருந்­தது. அவர்­க­ளது கோரிக்­கைக்கு சாத­க­மாக பதி­ல­ளிக்கும் வகையில் கடந்த மார்ச் 5 ஆம் திகதி முதல் நாட்டின் எந்­த­வொரு பகு­தி­யி­லு­முள்ள மைய­வா­டி­களில் கொவிட் சட­லங்­களை அடக்கம் செய்யும் வகையில் சுகா­தார அமைச்சு அனு­மதி வழங்­கி­யுள்­ளமை மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாகும்.

கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­க­ளது சட­லங்­களை கட்­டா­ய­மாக தகனம் செய்ய வேண்டும் எனும் கொள்­கையை இலங்கை அர­சாங்கம் 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி 2170/08 ஆம் இலக்க வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் வெளி­யிட்­டது.

இறு­தியில் சுமார் 11 மாதங்­களின் பின்னர், அதா­வது 25 பெப்­ர­வரி 2021 அன்று இலங்­கையில் கொவிட் தொற்­றுக்­குள்­ளான சட­லங்­களை அடக்கம் செய்ய அனு­மதி வழங்கும் 2216/38 ஆம் இலக்க வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யா­னது.

தவிசாளர் ஏ.எம்.நெளபர்

இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­வந்து, ஓட்­ட­மா­வடி பிர­தே­சத்தில் அடக்கம் செய்யும் பணிகள் ஆரம்­ப­மா­னதும் கட்­டாய தகனக் கொள்­கைக்கு எதி­ராக ஒலித்து வந்த குரல்கள் ஓய்ந்­தன. அதன் பிறகு ஓட்­ட­மா­வ­டியில் அடக்கம் செய்யும் பணிகள் எவ்­வாறு நடை­பெற்­றன என்­பதைப் பற்றி அறிய யாரும் பெரி­தாக ஆர்வம் காட்­ட­வில்லை.
கடந்த ஒரு வருட காலப்­ப­கு­தியில் இங்கு மூவா­யி­ரத்து அறு­நூ­றுக்கும் மேற்­பட்ட சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்ள போதிலும் இது­வி­ட­யத்தில் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து எந்­த­வித உத­வி­களும் கிடைக்கப் பெற­வில்லை” என்­கிறார் ஓட்­ட­மா­வடி பிர­தேச சபைத் தவி­சாளர் ஏ.எம்.நௌபர்.

“கொவிட் 19 பரவல் கார­ண­மாக மூன்று தட­வைகள் எமது பிர­தேசம் முழு­மை­யாக முடக்­கப்­பட்­டது. இதனால் எமது சபையின் வரு­மானம் 50 வீதத்­தினால் குறை­வ­டைந்­தது. இந்­நி­லையில் கொவிட் தொற்­றுக்­குள்­ளான சட­லங்­களை அடக்கம் செய்யும் பணி­க­ளையும் எமது சபையே கவ­னிக்க வேண்டி ஏற்­பட்­ட­மை­யா­னது எமக்கு பெரும் சுமை­யாக மாறி­யது. தன­வந்­தர்கள், சமூக சேவை நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்­பு­க­ளால்தான் அடக்கம் செய்­வ­தற்­கான அனைத்து செல­வு­களும் பகி­ரப்­ப­டு­கின்­றன” என்றும் அவர் குறிப்­பி­டு­கிறார்.

“கொவிட் சட­லங்­களை அடக்கம் செய்யும் பணியில் பிர­தேச சபையின் ஊழி­யர்கள் பலர் ஈடு­பட்­டனர். ஜே.சி.பி. இயந்­திரம் ஒன்று முழு­மை­யாக பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டது. அதற்­கான எரி­பொருள், பழு­து­பார்ப்பு செல­வு­க­ளையும் சபையே முன்­னெ­டுத்­தது. அவ்­வப்­போது தேவை­யான பொருட்­களை எமது சபையின் நிதி­யி­லி­ருந்தே கொள்­வ­னவு செய்ய வேண்­டி­யி­ருந்­தது. இதற்­காக உள்­ளு­ராட்சி மாகாண சபைகள் அமைச்சோ கொவிட் நிதி­யினைக் கையாளும் ஜனா­தி­பதி செய­ல­கமோ அல்­லது விட­யத்­துக்குப் பொறுப்­பான சுகா­தார அமைச்சோ ஒரு சதத்தைக் கூட ஒதுக்­க­வில்லை” என்றும் அவர் கவ­லைப்­ப­டு­கிறார்.

செய­லாளர் எஸ்.சிஹாப்தீன்

“தினமும் சட­லங்­களை அடக்கம் செய்யும் பணியில் 11 பேர் ஈடு­ப­ட்­டனர். இதற்­காக இவர்­க­ளுக்கு சிறிய கொடுப்­ப­னவு ஒன்றும் வழங்­கப்­பட்­டது. எனினும் அக் கொடுப்­ப­னவைக் கூட கொழும்­பி­லுள்ள முஸ்லிம் சமூக நிறு­வ­னங்­களே வழங்­கி­ன. சட­லங்­களை அடக்கத் தேவை­யான பெட்­டிகள், அடக்கம் செய்­யப்­பட்ட இடத்தை இல­கு­வாக அடை­யாளம் காண்­ப­தற்­கென நடப்­படும் இலக்­க­மி­டப்­பட்ட கொங்­கிறீட் தூண் ஆகி­ய­வற்றைக் கூட முஸ்லிம் தன­வந்­தர்­களே வழங்­­கி­னார்கள்” என ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையின் செய­லாளர் எஸ். சிஹாப்தீன் குறிப்­பி­டு­கிறார்.

“சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்­கென நாம் எந்­த­வித கட்­ட­ணத்­தையும் குடும்­பத்­தி­னர்­க­ளிடம் அற­வி­ட­வில்லை. இதனை முற்­றிலும் ஒரு சேவை­யா­கவே முன்­னெ­டுத்தோம்” என்றும் அவர் சுட்­டிக்­காட்­டு­கிறார்.

“நாட்டின் எல்லாப் பகு­தி­க­ளி­லி­ருந்தும் கொண்டு வரப்­படும் சட­லங்­களை அடக்கம் செய்யும் பணியை தனி­யாக ஒரு பிர­தேச சபை­யினால் நிர்­வ­கிப்­பது என்­பது எமக்கு ஒரு சுமக்க முடி­யாத சுமை. ஆனாலும் இதனை ஒரு தேசிய கட­மை­யாகக் கரு­தியே செய்து வந்தோம். இங்கு முஸ்­லிம்­க­ளது சட­லங்கள் மாத்­தி­ர­மன்றி பௌத்த, கிறிஸ்­தவ மற்றும் இந்­துக்­களின் சட­லங்­களும் எந்­த­வித வேறு­பா­டு­க­ளு­மின்றி அடக்கம் செய்­யப்­ப­ட்டன என்­ப­தையும் குறிப்­பிட்டுக் கூற விரும்­பு­கிறேன்” என்றும் அவர் மேலும் குறிப்­பி­டு­கிறார்.

சகல மதத்­த­வர்­களும் அடக்கம்
கொவிட் சட­லங்­களை அடக்கம் செய்ய அனு­மதி கோரி முஸ்­லிம்கள் போராட ஆரம்­பித்த போது ஏனைய சம­யத்­த­வர்கள் அதனை ஓர் அநா­வ­சி­ய­மான கோரிக்­கை­யா­கவே நோக்­கினர். எனினும் நாட்கள் செல்லச் செல்ல இக் கோரிக்­கையின் பின்­னா­லுள்ள நியா­யத்தைப் புரிந்து கொள்ள ஆரம்­பித்­த­துடன் முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக வீதி­களில் இறங்­கியும் சமூக ஊட­கங்­க­ளிலும் போராட்­டங்­களில் ஈடு­பட்­டனர்.

ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் கடந்த ஒரு வருட காலத்தில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளது புள்­ளி­வி­ப­ரங்­களை நோக்­கும்­போது இந்த மைய­வா­டியில் முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மன்றி சகல சமூ­கங்­களைச் சேர்ந்­த­வர்­களும் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளார்கள் என்­பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அதற்­க­மைய, 2021 மார்ச் 5 ஆம் திகதி முதல் 2022 மார்ச் 5 ஆம் திகதி வரை இங்கு மொத்­த­மாக 3634 சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. இவற்றில் முஸ்­லிம்கள் – 2992, பௌத்­தர்கள் – 287, இந்­துக்கள் – 270, கிறிஸ்­த­வர்கள் – 85 என்ற ரீதியில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

காணிகள் யாரு­டை­யவை?
ஓட்­ட­மா­வடி, மஜ்மா நகர் கிரா­மத்தில் கொவிட் சட­லங்­களை அடக்கம் செய்­ய­வென 10 ஏக்கர் காணி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதில் சுமார் 7 ஏக்கர் காணி­யி­லேயே இது­வரை சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. இந் நிலையில் ஒதுக்­கப்­பட்ட 10 ஏக்கர் காணியைச் சுற்றி மதில் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை கொழும்­பி­லுள்ள தொண்டு நிறு­வனம் ஒன்று ஆரம்­பித்­துள்­ளது. இதற்கு மேல­தி­க­மாக இதனைச் சுற்­றி­யுள்ள மேலும் 11.5 ஏக்கர் காணி ‘சூனிய வலயம்’ என்ற பெயரில் பொது மக்கள் நுழைய முடி­யா­த­வாறு அடையாளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கொவிட் சட­லங்­களை அடக்கம் செய்­ய­வென காணிகள் தெரிவு செய்­யப்­பட்ட விதத்தை ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையின் செய­லாளர் எஸ். சிஹாப்தீன் எமக்கு விப­ரித்தார்.
“கொவிட் சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்­கென ஓட்­ட­மா­வடி பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­தியில் பொருத்­த­மான நிலப்­ப­கு­தியை அடை­யா­ளப்­ப­டுத்தித் தரு­மாறு மாவட்ட செய­லாளர் மற்றும் இரா­ணுவ தரப்பு மூலம் எமக்கு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது. இதற்­க­மைய அரச காணி ஒன்றை நாம் அடை­யா­ளப்­ப­டுத்­தினோம். எனினும் அது தாழ்­வான பகு­தி­யெனக் கூறி சுகா­தார அமைச்சின் தொழில்­நுட்பக் குழு­வி­னரும் இரா­ணு­வத்­தி­னரும் நிரா­க­ரித்­தனர். இத­னை­ய­டுத்து அதற்கு மேற்­பு­ற­மாக இருந்த மேட்டு நிலப்­பயிர்ச் செய்கை செய்­யப்­பட்டு வந்த காணியை பொருத்­த­மா­ன­தென அதி­கா­ரிகள் இனங்­கண்­டனர். இது அரச காணியாக இருப்பினும் இக் காணியில் பல வரு­டங்­க­ளாக பொது மக்கள் விவ­சாயம் செய்து வரு­வதால் அவர்­க­ளது அனு­ம­தியைப் பெற வேண்­டி­யி­ருந்­தது.

முதலில் காணிச் சொந்­தக்­கா­ர­ரான ஜௌபர் என்­ப­வரை நாம் அணு­கிய போது அவர் தனது 3 ஏக்கர் காணியை வழங்க முன்­வந்தார். அக் காணி­யி­லேயே சட­லங்­களை அடக்கம் செய்யும் பணியை விரை­வாக ஆரம்­பித்தோம். பின்னர் அடக்கம் செய்யும் சட­லங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தை­ய­டுத்து அரு­கி­லி­ருந்த மேலும் 4 ஏக்கர் காணியை இதற்­காக எடுத்துக் கொண்டோம். இப்­போது மொத்­த­மாக 7 ஏக்கர் நிலத்தில் சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன” என்றார்.

ஏ.எல்.சமீம்

மஜ்மா நகர் மக்­களின் அவலம்

“கொவிட் சட­லங்­களை அடக்க 10 ஏக்கர் காணியை வழங்­கி­னாலும் அப் பகு­தியில் மொத்தம் 21.5 ஏக்கர் காணியை சூனிய வல­ய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதனால் எமக்கு அப் பகு­தியில் எதுவும் செய்ய முடி­யாத நிலை தோன்­றி­யுள்­ளது. இவை எமது பாரம்­ப­ரிய விவ­சாய காணிகள். முழு ஓட்­ட­மா­வடி பகு­தி­யிலும் மர­ணிக்கும் மக்­களை எதிர்­கா­லத்தில் அடக்கம் செய்­வ­தற்­கான பொது மைய­வா­டிக்­கு­ரிய காணியும் இப்­போது இதற்குள் சிக்­கி­யுள்­ளது. கொவிட் சட­லங்­களை அடக்­கு­கிறோம் என்ற போர்­வையில் மாற்று ஏற்­பா­டுகள் எது­வு­மின்றி எமது குடி­யி­ருப்பு மற்றும் விவ­சாய காணி­களை அர­சாங்கம் அப­க­ரிப்­பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடி­யாது” என மஜ்மா நகர் கிராம அபி­வி­ருத்திச் சங்க தலைவர் ஏ.எல். சமீம் குறிப்­பிட்டார்.

மஜ்மா நகர் ஒரு மீள்­கு­டி­யேற்ற கிரா­ம­மாகும். இங்கு சுமார் 320 குடும்­பங்­களே வசிக்­கின்­றன. இக் கிராம மக்­களின் வாழ்­வா­தாரம் விவ­சா­யத்­தி­லேயே தங்­கி­யுள்­ளது. பெரும்­பா­லா­ன­வர்கள் மேட்டு நிலப் பயிர்ச் செய்­கையில் ஈடு­ப­டு­கி­றார்கள். மேலும் பலர் கூலித் தொழி­லா­ளிகள். குடிநீர், மல­சல கூடம், முறை­யான வீதி­யின்மை என பல அடிப்­படைப் பிரச்­சி­னை­களை இக் கிராம மக்கள் எதிர்­நோக்கி வரு­கி­றார்கள். இவ்­வா­றான நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யில்தான் இக் கிரா­மத்தைச் சேர்ந்த சுமார் 14 பேர் தற்­போது காணி­களை இழந்­துள்­ளனர். இவர்­க­ளுக்கு இது­வரை எந்­த­வித நஷ்­ட­யீடோ அல்­லது மாற்றுக் காணியோ வழங்­கப்­ப­ட­வில்லை.

எம்.எப்.எம்.ஜெளபர்

மஜ்மா நகரில் சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்­காக எந்த மறுப்பும் தெரி­விக்­காது தனது 3 ஏக்கர் காணியை வழங்­கிய எம்.எப்.எம். ஜௌபரை நாம் சந்­தித்தோம். தான் எந்­த­வித எதிர்­பார்ப்­பு­மின்­றியே இக் காணியை வழங்­கி­ய­தாக அவர் குறிப்­பிட்டார். “எனக்குச் சொந்­த­மான காணியை கொவிட் 19 சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்­காக தர முடி­யுமா என அதி­கா­ரிகள் கோரி­ய­போது நான் மறுப்புத் தெரி­விக்­க­வில்லை. ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் மாத்­தி­ர­மன்றி தமது உற­வு­களின் சட­லங்கள் நெருப்­புக்கு இரை­யாகக் கூடாது எனப் பிரார்த்­தித்த சகோ­தர மதத்­தினர் கூட இந்த தரு­ணத்­திற்­கா­கத்தான் காத்­தி­ருந்­தார்கள். இந்த தேவைக்கு முன் எனது காணி ஒரு பெரிய விட­யமே அல்ல. நான் எனது மனை­வியின் சம்­ம­தத்­தையும் பெற்று உட­ன­டி­யா­கவே காணியை வழங்­கினேன்” என ஜௌபர் குறிப்­பிட்டார். “நான் இதற்­காக எந்­த­வொரு நஷ்­ட­யீட்­டையும் எதிர்­பார்க்­க­வில்லை. நான் இவ்­வாறு காணியை விட்டுக் கொடுத்­த­மைக்­காக பல முஸ்லிம் தன­வந்­தர்கள் என்னைத் தொடர்­பு­கொண்டு பணம் தரு­வ­தற்கு முன்­வந்­தார்கள். நான் அதனை நிரா­க­ரித்­து­விட்டேன். நான் நல்ல நோக்­கத்­திற்­காக வழங்­கிய காணிக்கு பணம் தர வேண்டாம் எனக் கூறினேன். ஆனால் அர­சாங்கம் வேறு ஒரு இடத்தில் காணியை தரு­மா­க­வி­ருந்தால் அதில் எனது விவ­சாய நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து முன்­னெ­டுக்க முடியும்” என்றும் அவர் குறிப்­பி­டு­கிறார்.

ஜௌபரின் காணிக்கு அரு­கி­லி­ருந்த மேலும் 13 பேருக்குச் சொந்­த­மான காணி­களும் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் தமது சம்­ம­தத்தைப் பெறா­ம­லேயே காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்­ட­தாக காணிச் சொந்­தக்­கா­ரர்கள் குற்­றம்­சாட்­டு­கி­றார்கள்.

அவ்­வாறு காணியை இழந்­த­வர்தான் 49 வய­தான எம்.ஏ. முகைதீன். விவ­சா­யத்தை பரம்­பரைத் தொழி­லாக முன்­னெ­டுத்து வரும் இவர், தமது குடும்­பத்­திற்குச் சொந்­த­மான 1.25 ஏக்கர் காணியை சட­லங்­களை அடக்கும் நட­வ­டிக்­கைக்­காக தமது அனு­ம­தி­யின்­றியே அதி­கா­ரிகள் எடுத்துக் கொண்­ட­தாகக் கூறு­கிறார்.

“காணியை சுவீ­க­ரித்த பிற­குதான் இது பற்றி எமக்கு அறி­வித்­தார்கள். 10 நாட்­களில் உங்­க­ளுக்கு மாற்றுக் காணி தருவோம் என பிர­தேச செய­லாளர் எம்மை அழைத்து உறு­தி­ய­ளித்தார். இன்று ஒரு வருடம் கடந்தும் எமக்கு ஒரு துண்­டுக்­கா­ணியோ வேறு நஷ்­ட­யீ­டு­களோ கிடைக்­க­வில்லை” என கவ­லை­யுடன் கூறு­கிறார் முகைதீன்.

எனினும் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் பிரதேச சமூக நலன் அமைப்புகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைவாகவே இக்காணிகளை மையவாடிக்காக பெற்றுக்கொண்டதாக பிரதேச சபையின் செயலாளர் எம்மிடம் சுட்டிக்காட்டினார்.

மேலும் காணியை இழந்த மக்­க­ளுக்கு மாற்றுக் காணி­களை வழங்­கு­மாறு தாம் மாவட்ட செய­லாளர், மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ரிடம் பல முறை வேண்­டு­கோள்­வி­டுத்தும் அதற்­கான எந்­த­வித நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என பிர­தேச சபையின் செய­லாளர் குறிப்­பி­டு­கிறார். இவர்­க­ளுக்கு வழங்­க­வென மாற்றுக் காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்தி அது தொடர்பில் உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்­ள­தா­கவும் அவர் கூறு­கிறார்.

கொழும்பு, கண்டி பள்­ளி­வா­சல்கள்
சம்­மே­ள­னங்­களின் பங்­க­ளிப்பு
கொவிட் சட­லங்­களை கொழும்­பிலும் நாட்டின் ஏனைய பாகங்­க­ளி­லி­ருந்தும் ஓட்­ட­மா­வ­டிக்கு அனுப்பு­வ­தற்­கான பணியில் தன்­னார்­வ­மாகச் செயற்­பட்ட கொழும்பு பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் செய­லாளர் அஸ்லாம் ஒத்­மானைத் தொடர்பு கொண்டு இது பற்றி வின­வினோம்.

“கொழும்பு மற்றும் கண்டி பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னங்கள் சுகா­தார அமைச்சு மற்றும் இரா­ணு­வத்­துடன் இணைந்து நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லு­முள்ள வைத்­தி­ய­சா­லை­களில் மர­ணிக்கும் கொவிட் சட­லங்­களை ஓட்­ட­மா­வ­டிக்கு கொண்டு செல்லும் பணியை ஒருங்­கி­ணைத்­தன.

கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து வரும் சட­லங்கள் நேர­டி­யா­கவே ஓட்­ட­மா­வ­டிக்கு கொண்டு செல்­லப்­பட்­டன. ஏனைய பகு­தி­க­ளி­லுள்ள சட­லங்கள் கொழும்பு, குரு­நாகல், அநு­ரா­த­புரம் போன்ற பகு­தி­க­ளுக்கு கொண்டு வரப்­பட்டு அங்­கி­ருந்து இரா­ணுவப் பாது­காப்­புடன் ஓட்­ட­மா­வ­டிக்கு கொண்டு செல்­லப்­பட்­டன.

கொவிட் சட­லங்­களை அடக்கும் விட­யத்தில் அர­சாங்கம் பாரி­ய­ளவு பொரு­ளா­தார உத­வி­களை வழங்­கா­வி­டினும் இராணுவத்தினர் இதுவிடயத்தில் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது என அஸ்லம் ஒத்மான் குறிப்பிடுகிறார். சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பை இராணுவத்தினரே முழுமையாக ஏற்றுச் செயற்பட்டனர். அதற்கான போக்குவரத்து, ஆளணிகளையும் அவர்களே வழங்கினர். அந்த வகையில் இராணுவத்தினரின் பங்களிப்பு போற்றத்தக்கதாகும்” என்றார்.

எனினும் கொவிட் சடலங்களுக்கான பெட்டிகளை முஸ்லிம் தனவந்தர்களே வழங்கினர். ஒரு பெட்டியை தயாரிப்பதற்கு 4500 ரூபா வரை செலவாகியது. இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்ட பெட்டிகளை நாம் வழங்கியுள்ளோம் என்றும் அஸ்லம் ஒத்மான் குறிப்பிடுகிறார்.

சென்றுவர முடியாத தூரம்
அதிக போக்குவரத்து செலவு
பல கிலோ மீற்றர் தொலைவில் சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டதால் விரும்­பிய நேரங்­களில் அடக்­கஸ்­த­லத்­திற்குச் சென்று பிரார்த்­த­னை­க­ளிலோ ஏனைய மத வழி­பா­டு­க­ளிலோ எம்மால் ஈடு­பட முடி­யா­துள்­ளமை கவ­லைக்­கு­ரி­யது என கொழும்பில் வசிக்கும் மொஹமட் சப்ரான் குறிப்­பி­டு­கிறார். சப்­ரானின் தந்தை கொவிட் தொற்­றினால் கடந்த வருடம் செப்­டம்பர் மாதம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் காலமானார். அவரது சடலம் ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. “அடக்கம் செய்யப்பட்டதன் பிற்பாடு நாம் குடும்பமாக ஒரு தடவை அங்கு சென்று வந்தோம். ஒரு தடவை சென்று வர சுமார் 40 ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவாகிறது. எனது தாயார் அடிக்கடி அடக்கஸ்தலத்தை தரிசிக்க விரும்புகிறார். ஆனாலும் நீண்ட தூர பிரயாணம், பொருளாதார செலவுகள் காரணமாக அவரது விருப்பத்தை எம்மால் நிறைவேற்ற முடியாதுள்ளது” என்றும் சப்ரான் குறிப்பிடுகிறார்.

இங்கு கொவிட் சடலங்களை அடக்கம் செய்யும் பணி முடிவுக்கு வந்துள்ள போதிலும் அந்த பூமியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள 3634 மனிதர்களதும் நினைவுகளைச் சுமந்தவாறு வரலாற்றில் அழிக்கமுடியாத தடத்தைப் பதித்திருக்கிறது மஜ்மா நகர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.