பயங்கரவாத தடைச் சட்டமும் பாதிக்கப்படும் பெண்களும்

0 761

ஷ்ரீன் சரூர்
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்

2019 ஆம் ஆண்டின் மிலேச்­சத்­த­ன­மான உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்று கிட்­டத்­தட்ட மூன்று ஆண்­டுகள் கடந்து விட்­டன. உண்­மை­யான குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள தவ­றிய அரசு ஒட்டு மொத்த முஸ்லிம் சிறு­பான்மை சமூ­கத்­தையும் தண்­டிக்கும் ஆயு­த­மாக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை (PTA) பயன்­ப­டுத்­தி­யுள்­ளது. சிவில் யுத்­தத்தின் போது தமிழ் மக்கள் அனு­ப­வித்­ததைப் போன்று, அரசின் நட­வ­டிக்­கை­களால் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை பிர­யோ­கித்து மேற்­கொள்­ளப்­பட்ட கைது­களால் ஏற்­பட்ட பின்­வி­ளை­வுகள் அல்­லது தடுப்­புக்­கா­வலில் உள்ள ஆண்­க­ளு­ட­னான குடும்பப் பிணைப்­பு­களால் இலக்கு வைத்து பெண்கள் தனித்­துவம் மிக்க வகையில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அண்மைக் காலங்­களில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை பயன்­ப­டுத்தி கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளோரில் பெரும்­பான்­மை­யினர் மட்­டக்­க­ளப்பு மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தே­சங்­களைச் சேர்ந்த முஸ்லிம் ஆண்­க­ளாவர். இவர்கள் தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளுடன் அல்­லது தடை செய்­யப்­பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்­புடன் தொடர்­பு­களைக் கொண்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர். காத்­தான்­கு­டியில் ஸஹ்­ரானின் போதனை வகுப்­பு­க­ளுக்கு உண­வு­களை கொண்டு சென்று விநி­யோ­கித்தார் என்ற குற்­றச்­சாட்டில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இன்­னொரு நபர் தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளுக்கு பேரூந்து ஆச­னங்­களை பதிவு செய்து கொடுத்தார் என்­ப­தற்­காக கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் தற்­கொலை குண்­டு­தா­ரியின் அய­லவர் வீடு ஒன்றில் தொலைக்­காட்சி அன்­டெ­னாவை பொருத்­தி­ய­மைக்­காக மற்­றொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். ஸஹ்­ரானின் சகோ­த­ர­ருக்குச் சொந்­த­மான மோட்டார் சைக்கிள் ஒன்றை விலை கொடுத்து வாங்­கி­ய­தற்­காக ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இன்­னொரு நபரின் வேன் ஒன்று குறிப்­பி­டப்­ப­டாத “தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு” பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­பட்டு அந்­நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். குறித்த நபரின் வேனுக்­கு­ரிய லீசிங் மாதாந்தக் கட்­டணம் செலுத்­தப்­பட தவ­றி­ய­மைக்­காக அந்த லீசிங் வச­தியை வழங்­கிய நிறு­வனம் அந்த வேனை கைய­கப்­ப­டுத்த முயற்­சித்த வேளை அந்­ந­பரின் மைத்­துனர் லீசிங் பணத்தை செலுத்­து­வ­தற்கு உத­வி­ய­மைக்­காக அவரும் கைது செய்­யப்­பட்­டுள்ளார். ஸஹ்­ரானின் நுவ­ரெ­லியா மற்றும் ஹம்­பாந்­தோட்டை பயிற்சி நிகழ்­வு­களில், விட­யத்தை அறிந்து கொள்­ளாமல் கலந்து கொண்ட பலரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் சுற்­றுப்­ப­யணம் ஒன்றை மேற்­கொள்­கின்றோம் என்று எண்­ணியே அந்­நி­கழ்­வு­களில் கலந்து கொண்­டி­ருந்­தனர். அவர்­களில் பலர் சப்­பாத்­துகள் தயா­ரிக்கும் கடைகள், சிறிய உணவு விடு­திகள் மற்றும் வீதி­யோரக் கடை­களில் நாட் சம்­ப­ளத்­துக்கு பணி­பு­ரிந்த தொழி­லா­ளர்­க­ளாவர். இவர்கள் கொத்துக் கொத்­தாகக் கைது செய்­யப்­பட்டு இன்று வரை 34 மாதங்­க­ளாக அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர், இக்­கா­லப்­ப­குதி பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினால் தடுத்து வைக்­கப்­பட அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள 18 மாத காலப் பகு­திக்கும் அதி­க­மா­ன­தாகும். அண்­மையில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்டம் மீதான திருத்­தங்­களில் தடுப்புக் காவல் காலப்­ப­கு­தியை 18 மாதங்­களில் இருந்து 12 மாதங்­க­ளாக குறைப்­ப­தற்­கான முன்­மொ­ழிவும் உள்­ள­டங்­கி­யி­ருந்­தது, இம்­முன்­மொ­ழிவு இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட நபர்­க­ளுக்கு ஏதா­வது பயனை வழங்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யாகும். அவர்கள் எப்­போ­தா­வது விடு­த­லை­யாகும் போது பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் எதேச்­சை­யான முறையில் நீண்ட காலம் தடுத்து வைக்­கப்­பட்­டதன் விளை­வாக வாழ்­வா­தார இழப்பு, நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­படல் மற்றும் உள­வியல் தாக்­கங்­க­ளுக்கு உட்­பட்­ட­வர்­க­ளா­கவே விடு­த­லை­யாவர்.

பயங்­க­ர­வாத தடைச் சட்டம் தொடர்பில் ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட ஆலோ­சனைச் சபை தவ­றாகத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சிலரை விடு­தலை செய்யும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ளது, எனினும், அவ்­வாறு விடு­தலை செய்­யப்­படும் நபர்­களின் தடுப்­புக்­காவல் உத்­த­ர­வு­களை இரத்துச் செய்­வ­தற்­கான நிய­திகள் மற்றும் நிபந்­த­னைகள் கடு­மை­யா­னவை. இவ்­வாறு விடு­தலை செய்­யப்­படும் நபர்கள் “புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட” தமிழ் ஆண்கள் மற்றும் பெண்­களைப் போன்று தமது எஞ்­சி­யுள்ள வாழ்­நாளை அரச புல­னாய்வு அமைப்­பு­களின் பிடிக்­குள்­ளேயே கழிக்க வேண்­டிய நிலையில் உள்­ளனர். இவர்­களின் தடுப்­புக்­காவல் ஆணை­களை இடை­நி­றுத்­து­வ­தற்­கான நிபந்­த­னை­களில் குறித்த சந்­தேக நபர்கள் தமது இருப்­பி­டங்­களை மாற்­று­வ­தானால் அதனை பயங்­க­ர­வாத எதிர்ப்பு மற்றும் புலன்­வி­சா­ரணை பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­வித்தல், உள்ளூர் பய­ணங்கள் பற்றி அறி­விப்­ப­துடன் தமது வசிப்­பி­டங்­க­ளுக்கு திரும்ப வந்­த­வுடன் அதனை அறி­வித்தல், அப்­பி­ரிவின் கொழும்பு பயங்­க­ர­வாத தடுப்பு அலு­வ­ல­கத்­துக்கு மாதாந்தம் நேரில் சென்று பிர­சன்­ன­மா­குதல், பொறுப்­ப­தி­கா­ரியின் அழைப்­பாணை கிடைக்கப் பெற்றால் 72 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் அங்கு செல்லல் அத்­துடன் வெளி­நாடு செல்­வ­தாயின் பயங்­க­ர­வாத எதிர்ப்பு பிரிவின் பணிப்­பா­ளரின் எழுத்து மூல அனு­ம­தியைப் பெறல் என்­பன உள்­ள­டங்­கு­கின்­றன.

பதி­னொரு மாதங்கள் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்ட பின்னர் எதிர்­பா­ராத வகையில் விடு­தலை பெற்று வீட்­டுக்கு வந்த தனது மகன் முஹம்­மதை கண்ட வேளை அவரின் தாயார் இஸ்­மியா மட்­டற்ற மகிழ்ச்சி அடைந்தார். முஹம்மத் பாட­சாலை மாண­வ­ராக இருந்த வேளை உள்ளூர் மற்றும் வெளி­நாட்டு தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்தார் மற்றும் தீவி­ர­வாதக் காணொ­ளி­களை சமூக ஊட­கத்தில் பகிர்ந்தார் என்ற குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு அவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். தற்­பொ­ழுது வீடு திரும்­பி­யுள்ள முஹம்மத் மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட நிய­திகள் மற்றும் நிபந்­த­னை­களைப் பின்­பற்றி நடக்க வேண்டும். கண­வனை இழந்த இஸ்­மியா வாடகை வீட்டில் தனது மூன்று மகள்­க­ளுடன் வசித்து வரு­கின்றார். தனது மகன் கல்விப் பொதுத் தரா­தர உயர் தரத்தைக் கற்­றதன் பின்னர் அவரை மத்­திய கிழக்­குக்கு அனுப்­பு­வதன் மூலம் சொந்த வீடு ஒன்றை அமைத்து தனது மகள்­க­ளுக்கு திரு­மணம் முடிக்கும் கன­வுடன் இஸ்­மியா வாழ்ந்­தி­ருந்தார். பயங்­க­ர­வாத எதிர்ப்பு பிரி­வுக்கு அறி­விக்­காமல் அடுத்த மாவட்­டத்­துக்கு கூட பய­ணிக்க முடி­யாத முஹம்­மதால் இப்­போது வெளி­நாட்­டுக்கு பய­ணிப்­பதை பற்றி எண்­ணிப்­பார்க்­கவே முடி­யா­துள்­ளது.

இந்த பாரிய அள­வி­லான எதேச்­சை­யான தடுத்து வைத்­தலின் சுமை­களை பெண்கள் சுமக்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளமை ஒரு­வ­ராலும் கவ­னிக்­கப்­ப­டாத விட­ய­மாக அமைந்­துள்­ளது. ஆணா­திக்க சமூ­க­மொன்றில் குடும்­பத்தில் வரு­மா­ன­மீட்டும் ஆண்கள் அர­சினால் தடுத்து வைக்­கப்­படும் நிலையில் அதற்­காக பெண்கள் கொடுக்கும் விலை மிகப் பெரி­ய­தாக அமைந்­துள்­ளது. அநே­க­மாக, கைதுக்­கான ஆவ­ணங்கள் உரிய நேரத்தில் வழங்­கப்­ப­டு­வ­தில்லை, இந்­நிலை கார­ண­மாக இப்­பெண்கள் தமது வாழ்க்கைத் துணைகள் எங்கே தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர் என்­பதை நெடு நாட்­க­ளாக (சில வேளை­களில் வாரக் கணக்கில்) அறி­யா­த­வர்­க­ளாக உள்­ளனர். அநே­க­மான குடும்­பங்கள் வெளி மாவட்­டங்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை சென்று பார்ப்­ப­தற்கு வச­தி­யற்ற வறு­மை­யான குடும்­பங்­க­ளா­க­வுள்­ளன. இக்­கு­டும்­பங்கள், சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம் பயணக் கொடுப்­ப­னவை வழங்கும் வேளையில் மாத்­தி­ரமே அவர்­களைக் காணச் செல்­கின்­றன. அரச புல­னாய்வு கட்­ட­மைப்­பு­களின் கண்­கா­ணிப்பு மற்றும் தொந்­த­ரவு என்­ப­வற்­றுக்கு அஞ்­சு­வதால் சட்ட உத­வி­களை வழங்­கு­வ­தற்கு பல சட்­டத்­த­ர­ணிகள் தயங்­கு­கி­றார்கள். இந்த இடை­வெ­ளியை பயன்­ப­டுத்தும் சில நேர்­மை­யற்ற சட்­டத்­த­ர­ணிகள் தடுப்புக் காவலில் உள்­ளோ­ருக்கு பிணை பெற்றுத் தரு­வ­தாகக் கூறி இவ்­வா­றான பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களை தவ­றாக வழி நடத்தி பணம் சம்­பா­திக்­கின்­றனர். இந்த சட்­டத்­த­ர­ணிகள் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு வழக்கு விசா­ரணை ஆரம்­பிக்­கப்­ப­டாத நபர்­க­ளுக்கு மாத்­தி­ரமே சட்­டமா அதி­பரின் ஒப்­பு­த­லுடன் பிணை வழங்­கப்­ப­டலாம் என்ற யதார்த்­தத்தை இச்­சட்­டத்­த­ர­ணிகள் குறித்த குடும்­பங்­க­ளிடம் தெரி­விப்­ப­தில்லை. ஆனாலும் சில சட்­டத்­த­ர­ணிகள் இவர்­க­ளுக்­காக பல வழி­களில் போராடி வரு­கி­றார்கள் என்­ப­தையும் இந்த இடத்தில் குறிப்­பிட்­டாக வேண்டும். தமது குடும்­பங்­களின் பிர­தான வரு­மா­ன­மீட்டும் நபரை விடு­விக்க பகீ­ரதப் பிர­யத்­தனம் மேற்­கொள்ளும் நிலையில் உள்ள அத்­துடன் இச்­சட்ட ஏற்­பா­டுகள் பற்றி அறிந்­தி­ராத அப்­பாவிக் குடும்­பங்கள் இவ்­வா­றான நபர்­களின் பொறி­களில் சிக்க தம்­மிடம் காணப்­படும் ஒரே­யொரு சொத்­தான தங்க நகை­களை விற்றுக் கூட பணத்தைக் கொடுத்து ஏமா­று­கின்­றன. தனது கண­வனின் கைதின் பின்னர் அவர் நடத்திச் சென்ற வியா­பாரம் வீழ்ச்சி அடைந்­ததன் பின்னர் சட்­டத்­த­ர­ணி­களின் கட்­ட­ணங்­களைச் செலுத்த தனது வீட்டை விற்ற சம்­பவம் பற்­றியும் அறிய முடி­கின்­றது.

வீட்டின் முதன்மை வரு­மானம் ஈட்டும் நபர் தடுத்து வைக்­கப்­படும் நிலையில், வீட்டில் உள்ள ஏனையோர் வரு­மா­னத்தை தேட வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­ப­டு­கின்­றனர். சில கட்­டுப்­பா­டு­மிக்க குடும்­பங்­களைச் சேர்ந்த பெண்கள் வரு­மானம் ஈட்­டு­வ­தற்­காக முதன்­மு­த­லாக வெளி­யி­றங்க வேண்­டிய நிலையில் உள்­ளனர். ஜாஸியா என்ற பெண் தனது கணவன் தடுத்து வைக்­கப்­பட்­டதன் பின்னர் மீன்­பிடி வலை­களை நெய்து வரு­மா­ன­மீட்ட ஆரம்­பித்­துள்­ள­தாகக் கூறினார். நாளொன்­றுக்கு 300 தொடக்கம் 350 ரூபா வரை மட்­டுமே உழைக்க முடிந்த அவரால் தனது பதின்ம வயது மகனின் பாட­சாலை மூடப்­பட்­டதன் பின்னர் வேறு பாட­சா­லைக்கு அனுப்ப முடி­யாத நிலையில் உள்ளார். ஏனைய பெண்கள் உயிர்­வாழ்­வ­தற்­காக வீட்டில் உள்ள பெறு­ம­தி­மிக்க பொருட்கள் மற்றும் நிலங்­களை விற்று வரு­வ­தாகக் கூறு­கின்­றனர்.

தடுப்புக் காவலில் உள்ள நபர்­களின் மனை­விகள் தமது குடும்­பங்­களைக் கொண்டு செல்ல போராடிக் கொண்­டி­ருக்கும் நிலையில், இவர்­களின் வீடு­க­ளுக்கு பாது­காப்பு அமைப்­பு­களின் அதி­கா­ரிகள் வரு­வதும் இப்­பெண்கள் பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு அழைக்­கப்­ப­டு­வதும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றது. பாது­காப்பு தரப்பு நபர்கள் இக்­கு­டும்­பங்­க­ளிடம் இருந்து தக­வல்­களைப் பெற்று வாக்கு மூலங்­களை சிங்­க­ளத்தில் எழுதிக் கொள்­கின்­றனர், இவ்­வாக்கு மூலங்­களில் என்ன எழு­தப்­பட்­டுள்­ளது என வாக்கு மூலங்­களை அளித்­த­வர்­களால் புரிந்து கொள்ள முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. ஆண் பாது­காப்பு அதி­கா­ரிகள் அடிக்­கடி தமது வீடு­க­ளுக்கு வருகை தரும் போது தாம் பாது­காப்­ப­ற்­ற­வர்­க­ளாக உணர்­வ­தா­கவும் இவ்­வ­ரு­கைகள் சமூகம் தம்மை ஒதுக்­கு­வ­தற்கு கார­ண­மாக அமை­யலாம் என தாம் அஞ்­சு­வ­தா­கவும் இப்­பெண்கள் தெரி­வித்­தனர். கடந்த மாதம் ஒரு பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவின் அதி­காரி ஒருவர் தடுப்­புக்­கா­வலில் உள்ள ஒரு நபரின் வீட்­டுக்கு சென்று அந்­ந­பரின் மனை­விக்குச் சொந்­த­மான தையல் இயந்­திரம் ஒன்றை கைப்­பற்­றி­யுள்ளார். குறித்த தையல் இயந்­தி­ரத்தை பயன்­ப­டுத்தி தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளுக்கு உடுப்­புகள் தைக்­கப்­பட்­ட­மையே இவ்­வாறு கைப்­பற்­றி­ய­மைக்­கான காரணம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த பெண் இத்­தையல் இயந்­தி­ரத்தின் மூலமே தனது மூன்று பிள்­ளை­களை பரா­ம­ரிப்­ப­தற்­கான வரு­மா­னத்தை பெற்றுக் கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே இவ்­வாறு கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­துடன் குறித்த பெண் எவ்­வித வரு­மா­ன­மு­மற்ற நிர்க்­கதி நிலைக்கு ஆளா­கி­யுள்ளார். குறித்த பெண் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு ஒன்­றையும் பதிவு செய்­துள்ளார், எனினும் பலர் இவ்­வா­றான அமைப்­பு­க­ளுக்கு தனி­யாகப் பயணம் செய்து உதவி கோரு­வ­தற்கு அஞ்­சிய நிலையில் உள்­ளனர்.

தமது அன்­புக்­கு­ரி­ய­வர்கள் தடுப்புக் காவலில் இருப்­பது சமூக ஒதுக்­க­லையும் உரு­வாக்­கு­கின்­றது, இது ஏற்­க­னவே ஓரங்­கட்­டப்­பட்­டுள்ள பெண்­களை மேலும் தனி­மைப்­ப­டுத்­த­லுக்குள் தள்ளி விடு­கின்­றது. உதா­ர­ண­மாக, பாத்­திமா என்ற பெண் தனது சகோ­தரன் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்­ளமை எவ்­வாறு தனது குடும்­பத்தின் வரு­மா­னத்தை பாதித்­தது என்­ப­தையும் தானும் தனது தாயாரும் பாய்­களை இழைத்து குடும்­பத்தைக் கொண்டு செல்ல வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டனர் என்­பதை விப­ரித்­த­துடன் இச்­சம்­பவம் கார­ண­மாக தனது திரு­மணப் பேச்­சு­வார்த்தை முறி­வ­டைந்து நிச்­ச­ய­தார்த்தம் தடைப்­பட்ட சம்­ப­வத்­தையும் விப­ரித்தார். தற்­போது அவர் திரு­மணம் முடித்­துள்ள போதும் தனது கண­வரை தனது சகோ­தரர் தொடர்­பான விட­யங்­களில் தள்­ளியே வைத்­துள்ளார். தனது சகோ­த­ரனைக் காண சிறைச்­சா­லைக்கு செல்லும் வேளை தனது கண­வ­ரையும் அழைத்துச் செல்­வது கண­வரும் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட ஏது­வா­கலாம் என பாத்­திமா அஞ்­சு­கின்றார்.

தடுப்­புக்­கா­வலில் உள்ள நபர்­களின் குடும்­பங்­க­ளுக்கு உதவும் நபர்­களும் கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் விசா­ர­ணை­க­ளுக்கும் முகங்­கொ­டுக்­கின்­றனர். இந்­நிலை பாதிக்­கப்­பட்ட குடும்­பங்கள் சமூக ஆத­ரவை பெறு­வதைத் தடுக்­கின்­றது. உதா­ர­ண­மாக, சிவில் சமூக நிறு­வனம் ஒன்று வழங்­கிய உல­ரு­ண­வு­களை இக்­கு­டும்­பங்­க­ளுக்கு விநி­யோ­கித்த பெண் ஒரு­வரும் கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார். நலன் விரும்­பிகள் மற்றும் உள்ளூர் தொண்டு நிறு­வ­னங்கள் ஆத­ர­வு­களை வழங்கும் வேளை புல­னாய்வு அதி­கா­ரி­களால் தொந்­த­ர­வு­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் அவர்கள் விசா­ர­ணை­க­ளுக்கும் அழைக்­கப்­ப­டு­கின்­றனர். இவ்­வா­றான நபர்கள் மற்றும் அமைப்­புகள் தடுப்புக் காவலில் உள்­ளோ­ருடன் தொடர்­புள்­ள­வர்­க­ளாக சித்­த­ரிக்­கப்­ப­டு­வ­துடன் தடை செய்­யப்­பட்ட தேசிய தௌஹீத் ஜமா­அத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் எனவும் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றனர். இவை எல்­லா­வற்­றுக்கும் மேலாக தடுப்புக் காவலில் உள்­ள­வர்­களின் உற­வி­னர்கள் சமூ­கத்­துக்கு அச்­சு­றுத்­த­லாக உள்­ளனர் எனக் கூறி நிரந்­த­ர­மாக விலக்கி வைக்கும் நிலை காணப்­ப­டு­கின்­றது. எனவே, அர­சாங்கம் குடும்­பத்­த­லை­வரை மாத்­திரம் தடுத்து வைத்­துள்ள போதும், கைவி­டப்­பட்ட பெண்கள் சமூ­கத்­தினால் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான நபர்கள் என நடத்­தப்­ப­டு­வ­துடன் அடிப்­படை குடும்ப வாழ்வை பேணு­வ­தற்கு அவ­சி­ய­மான பரா­ம­ரிப்பு மற்றும் சேவைகள் மறுக்­கப்­பட்­ட­வர்­க­ளாக உள்­ளனர்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கு­மாறு உல­க­ளா­விய ரீதியில் முன்­வைக்­கப்­படும் கோரிக்­கை­களை எதிர்த்து வரும் அர­சாங்கம் அச்­சட்­டத்தை மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் “தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்­குதல்” என்ற ஒழுங்­கு­வி­தி­களை முன்­மொ­ழிந்­துள்­ளது. மேலும், அண்­மையில் கண்­து­டைப்­பாக சில சீர்­தி­ருத்­தங்­களை இச்­சட்­டத்­துக்கு முன்­மொ­ழிந்­துள்­ளது. தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்­குதல் முன்­மொ­ழிவு சீனாவின் உய்குர் கொள்­கை­களை பிர­தி­ப­லிப்­ப­தாக தனது கரி­ச­னை­யினை வெளி­யிட்ட ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்றம் கடந்த ஜூன் மாதம் இலங்­கைக்­கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை இடை­நி­றுத்த பரிந்­துரை செய்­தி­ருந்­தது. தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்­குதல் ஒழுங்கு விதி­க­ளுக்கு எதி­ரான அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களின் விசா­ர­ணைகள் முடி­வ­டையும் வரை அவ்­வொ­ழுங்­கு­வி­தி­களின் இயக்­கத்தை உச்ச நீதி­மன்றம் தடை செய்­துள்­ளது. அரை மன­துடன் அண்­மையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் மீதான திருத்த முன்­மொ­ழி­வு­க­ளுக்கு எதி­ரா­கவும் மேல­திக சவால்கள் முன்­வைக்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. கடந்த வருடம், தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை புனர்­வாழ்­வுக்கு அனுப்­பு­வ­தற்கு வாக்கு மூலங்­களில் கையொப்­ப­மி­டு­மாறு பல குடும்­பங்­க­ளுக்கு அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்­ட­தாக நாம் கேள்­விப்­ப­டு­கின்றோம். தமது அன்­புக்­கு­ரி­ய­வர்கள் புனர்­வாழ்வு முகாம்­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­வ­தற்கு சம்­ம­திக்­காத பட்­சத்தில் அவர்கள் மேலும் பல வரு­டங்­க­ளுக்கு தடுப்புக் காவலில் வாட நேரிடும் என இக்­கு­டும்­பங்கள் அஞ்­சு­கின்­றன. எனவே, எதேச்­சை­யாக தடுத்து வைப்­பதை தடுப்­ப­தற்கு மாற்­றீ­டாக ஒரு குற்­றப்­பத்­தி­ரங்­களும் தாக்கல் செய்­யாமல் அவர்­களை இரண்டு வரு­டங்கள் புனர்­வாழ்வு நிலை­யங்­க­ளுக்கு அனுப்பி இரண்டு வரு­டங்­களில் அவர்­களை பயங்­க­ர­வா­திகள் என முத்­திரை குத்தி விடு­விப்­பதே இதன் நோக்­க­மாகும்.

பெண்கள் தடுப்­புக்­கா­வலில் உள்ள போது இந்த பிரச்­சி­னைகள் மேலும் தீவி­ர­மா­கின்­றன. மட்­டக்­க­ளப்பில் 66 நபர்­க­ளுக்கு எதி­ராக 16 டீ அறிக்­கைகள் கோவை­யி­டப்­பட்­டுள்­ளன, இவர்­களில் 6 பேர் பெண்­க­ளாவர். இந்த தனி­ந­பர்­களை எந்­த­வித குற்­றச்­சாட்­டையும் குறிப்­பி­டாமல் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன எனக் கூறி தடுப்புக் காவலில் வைப்­பதில் அரசு வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டு­கின்­றது. தடுப்புக் காவலில் உள்ள அநே­க­மான பெண்கள் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­களின் உற­வி­னர்­க­ளா­கவோ அல்­லது தற்­போது தடை செய்­யப்­பட்­டுள்ள தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் போத­னை­களை செவி­யுற்­ற­வர்­க­ளா­கவோ உள்­ளனர். வறிய குடும்­பங்­களைச் சேர்ந்த மற்றும் மத ரீதி­யாக இறுக்­க­மான பின்­ன­ணி­களைக் கொண்ட இப்­பெண்கள் அரி­தா­கவே வீட்டை விட்டு வெளியே வரும் பழக்கம் உள்­ள­வர்கள். இப்­பெண்­க­ளுக்கு தமது ஆண் உற­வு­களின் செயற்­பா­டுகள் பற்­றிய அறிவு மிகக் குறை­வா­கவே உள்­ளது. 57 வயது நிரம்­பிய ஒரு பெண் தனது மகள் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­தா­ரி­க­ளுக்கு தொழில்­நுட்ப உத­வி­களை வழங்­கி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் நபர் ஒரு­வரை திரு­மணம் செய்­ததன் கார­ண­மாக தடுப்புக் காவலில் உள்ளார். கடந்த பத்து வரு­டங்­க­ளாக மார்புப் புற்று நோயினால் அவ­தி­யுறும் இப்­பெண்­ணுக்கு தேவை­யான மருத்­துவப் பரா­ம­ரிப்பு வழங்­கப்­ப­ட­வில்லை. குண்­டுத்­தாக்­குதல் சந்­தேக நபர் ஒரு­வரை திரு­மணம் முடித்த 22 வயது நிரம்­பிய பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 2021 இல் கைது செய்­யப்­பட்டார். இவரின் ஒரு வயது நிரம்­பிய குழந்தை தற்­போது தாயின் பரா­ம­ரிப்பு இன்றி வளர்ந்து வரு­கின்­றது. இதே நிலை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட 38 மற்றும் 25 வயது நிரம்­பிய பெண்கள் விட­யத்­திலும் அவ­தா­னிக்­கத்­தக்­க­தாக உள்­ளது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சந்­தேக நபர்­க­ளு­ட­னான திரு­மண உறவு கார­ண­மா­கவே இவர்கள் இரு­வரும் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வி­ரண்டு சம்­ப­வங்­க­ளிலும், இப்­பெண்­களின் பிள்­ளைகள் வயது முதிர்ந்த மற்றும் பல­வீ­ன­மான பாட்­டி­க­ளிடம் வளர்­கின்­றன. இம்­மூ­தாட்­டிகள் இப்­பிள்­ளை­களை வளர்ப்­ப­தற்கு எந்­த­வித வரு­மா­ன­மு­மின்றி தவிக்­கின்­றனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.