எரிவாயுக் கசிவு: கணப்பொழுதில் கருகிய வீடு!

0 8,152

ரஸீன் ரஸ்மின்

“பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு எங்­களால் ஈடு­கொ­டுக்க முடி­யாமல் உள்­ளது. ஒவ்­வொரு நாளும் பெரும் மன உளைச்­ச­லோ­டுதான் வாழ்க்கை நகர்­கி­றது. இந்த நிலையில் வீடும் பற்றி எரிந்­துள்­ள­மை­யா­னது மேலும் மன அழுத்­தத்­தையே தந்­தி­ருக்­கி­றது” என்­கிறார் பாத்­திமா பீவி.

புத்­தளம் மாவட்­டத்தில் கற்­பிட்டி பிர­தேச செய­ல­கத்­திற்கு உட்­பட்ட குறிஞ்­சிப்­பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரி­வி­லுள்ள குரக்­கான்­சேனை கிரா­மத்தில் கடந்த சனிக்­கி­ழமை அதி­காலை 2.30 மணி­ய­ளவில் ஏற்­பட்ட எரி­வாயு அடுப்பு வெடிப்புச் சம்­ப­வத்தில் முழு வீடும் தீயில் எரிந்து சாம்­ப­லா­கிய சம்­பவம் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
இது தொடர்பில் கிராம சேவகர் மற்றும் கற்­பிட்டி பொலி­ஸா­ருக்கும் தகவல் வழங்­கப்­பட்­ட­துடன், சம்­பவ இடத்­திற்கு வருகை தந்த கற்­பிட்டி பொலி­ஸாரும், தட­ய­வியல் பொலி­ஸாரும், இர­சா­யன பகுப்­பாய்வு பிரி­வி­னரும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.
இந்த தீ விபத்துச் சம்­ப­வத்தில் சிறிய சில்­லறைக் கடை­யு­ட­னான வீடு முழு­மை­யாக எரிந்து சாம்­ப­லா­கி­ய­துடன், வீட்டில் இருந்து எடுப்­ப­தற்கு கூட எதுவும் எஞ்­சி­யி­ருக்­க­வில்லை.

பாத்­திமா பீவி நான்கு ஆண் பிள்­ளை­களின் தாய். ஒருவர் மட்­டுமே திரு­மணம் முடித்­துள்­ள­துடன் அவரும் தாயுடன் சேர்ந்­துதான் கூட்டுக் குடும்­ப­மாக வாழ்ந்து வரு­கின்றார்.
இந்த வெடிப்புச் சம்­பவம் இடம்­பெற்ற போது வீட்டில் சிறு குழந்தை உட்­பட ஏழு பேர் உறங்­கி­யுள்­ளனர்.

தகரம், பல­கை­க­ளா­லேயே வீடு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. அத­னுடன் சேர்ந்து முன்­பக்­க­மாக ஒரு சிறிய சில்­லறைக் கடையும் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பாத்­திமா பீவிதான் அந்த சில்­லறைக் கடையை நடத்தி வந்­தி­ருக்­கிறார்.

பாத்­திமா பீவி

எரி­வாயு அடுப்பு வெடித்துச் சித­றி­யதில் ஏற்­பட்ட தீ கட்­டுப்­பாட்டை இழந்து வீடு முழுதும் பர­விக்­கொண்­டி­ருந்த போது குறித்த தாயின் சம­யோ­சி­தத்தால் அதி­காலை வேளை­யிலும் உறங்கிக் கொண்­டி­ருந்த பிள்­ளை­க­ளையும், மூத்த மகனின் மனைவி மற்றும் பேரப்­பிள்­ளை­யையும் அழைத்­துக்­கொண்டு வெளியே செல்­லு­மாறு சத்தம் போட்­ட­துடன், கூக்­கு­ர­லிட்டு அய­ல­வர்­க­ளையும் வர­வ­ழைத்­துள்ளார்.

சில்­லறைக் கடைக்கு தேவை­யான பொருட்­களை கொள்­வ­னவு செய்ய வேண்டும் எனக் கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்து வைத்த பணத்­தையும், அத்­தனை ஆடை­க­ளையும், ஆவ­ணங்­க­ளையும் நெருப்பு விழுங்கிக் கொண்­டுள்­ளமை இந்தக் குடும்­பத்தை மேலும் துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட குறித்த குடும்­பத்தை செவ்­வாய்க்­கி­ழமை ‘விடிவெள்ளி’க்­காக சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம்.

மரத்­த­டியில் ஓர் ஓர­மாக இருந்­து­கொண்டு சாம்பல் மயா­ன­மாக காட்­சி­ய­ளிக்கும் அந்த வீடு இருந்த இடத்தைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்தார் பாத்­திமா பீவி. அந்தக் குடும்­பத்­திற்கு என்­னதான் ஆறு­தலைச் சொல்ல முடியும். “இறைவன் உங்­க­ளையும் உங்கள் குடும்­பத்­தையும் கைவிட மாட்டான்” என்று அருகில் சென்று பேச்சைக் கொடுத்தேன். முதலில் கண்­ணீரை மட்­டுமே அவர் பதி­லாகத் தந்தார்.

“என் பேத்­திக்கு ஒரு மிடர் பால்­தேநீர் கலக்கிக் கொடுக்­கத்தான் கேஸ் அடுப்பை பற்­ற­வைத்தன்…” என கண்ணீர் கலந்த தனது பேச்சை ஆரம்­பித்தார்.
“நானும் எனது பிள்­ளை­களும் வீட்டின் முன் பக்­கத்தில் படுத்­து­றங்கிக் கொண்­டி­ருந்தோம். அப்­போது அதி­காலை 2.30 மணி­யி­ருக்கும்.

பேரப்­பிள்ளை அழும் சத்தம் கேட்­டது. அப்­போது எனது மரு­மகள் எழும்பி பேரப்­பிள்­ளைக்கு பால்­தேநீர் தயா­ரிப்­ப­தற்கு வந்தார். அப்­போது நீங்கள் பிள்­ளையை பார்த்துக் கொள்­ளுங்கள். நான் சுடு­தண்ணீர் வைத்து தரு­கிறேன் எனக் கூறி­விட்டு அடுப்­ப­டிக்குச் சென்றேன்.

ஒரு கேத்­தலில் தண்­ணீரை ஊற்றி கேஸ் அடுப்பை பற்­ற­வைத்தேன். பின்னர், தேநீர் தயா­ரிப்­ப­தற்­காக கோப்­பை­களை கழுவ வெளியே சென்­று­விட்டு மீண்டும் அடுப்­ப­டிக்குள் நுழைந்த போது கேஸ் அடுப்­பி­லி­ருந்து நெருப்பு பரவிக் கொண்­டி­ருந்­தது.
உடனே சத்தம் போட்டு பிள்­ளை­களை எழுப்பி நெருப்பு பிடித்­து­விட்­டது. வீட்­டை­விட்டு வெளியே ஓடு­மாறு கூறினேன். அடுப்­பி­லி­ருந்து வந்த தீ கொஞ்சம் கொஞ்­ச­மாக முழு வீட்­டிலும் பரவ ஆரம்­பித்­தது.

அல்­லாஹ்வின் உத­வியால் பேரப்­பிள்­ளை­யையும், பிள்­ளை­க­ளையும், வீட்­டுக்குள் ஓர் ஓர­மாக படுத்­து­றங்கிக் கொண்­டி­ருந்த ஆட்­டுக்­குட்­டி­யையும் பத்­தி­ர­மாக பாது­காத்­து­விட்டேன்.

எந்த உயிர்ச் சேதங்­களும் ஏற்­ப­ட­வில்லை. எனக்கும், எனது சகோ­த­ரியின் மக­னுக்கும் சிறிய காயம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. மற்று­படி, வேறு யாருக்கும் எந்த பாதிப்­புக்­களும் இல்லை.

கேஸ் அடுப்பில் இருந்­துதான் நெருப்பு பரவ ஆரம்­பித்­தது. அதனால், கேஸ் சிலிண்­டரை இழுத்து வெளியே வீசு­மாறு சகோ­த­ரியின் மக­னிடம் சொன்னேன்.
அவரும் அந்த கேஸ் சிலிண்­டரை வெளியே எடுத்து வரு­வ­தற்­காக சமையல் அறைக்கு சென்றார். ஆனாலும், அவரால் கேஸ் சிலிண்டர் இருக்கும் இடத்­திற்கு நெருங்க முடி­ய­வில்லை. அந்­த­ள­வுக்கு நெருப்பு எரிந்­து­கொண்­டி­ருந்­தது. உள்ளே போனவர் சிறிய எரி­கா­யங்­க­ளுடன் உட­ன­டி­யா­கவே திரும்பி வந்­து­விட்டார்.

“படுத்­து­றங்கிக் கொண்­டி­ருந்த பிள்­ளை­களை மட்டும் பாது­காப்­பாக வெளியே கொண்டு வர­வேண்டும் என்­ப­துதான் எனது நோக்­க­மாக இருந்­தது. ஆனால் கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்து வைத்த பொருட்­க­ளையும், கடை சாமான்­க­ளையும் என்னால் பாது­காக்க முடி­ய­வில்லை என்­பது கவ­லைதான்” என்­கிறார் அவர்.

பாத்­திமா பீவி வசிக்கும் பகு­தியில் சில முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்ந்து வரு­கின்ற அதே­வேளை, அதி­க­மாக சிங்­கள குடும்­பங்­களே அய­ல­வர்­க­ளாக இருக்­கின்­றனர்.
குறித்த வீடு தீப்­பற்றி எரிய ஆரம்­பித்­த­துமே அக்­கம்­பக்­கத்­தி­லுள்ள அனை­வரும் உத­விக்கு வந்த போதிலும் அவர்­களால் தீயை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர முடி­யாமல் போயுள்­ளது.

“காலையில் விடிந்­ததும் வீடு இருந்த இடத்தில் சாம்பல் மட்­டுமே காணப்­பட்­டது. அதனை என்னால் பார்க்க முடி­ய­வில்லை. கடந்த 23 வரு­டங்­க­ளாக இந்த இடத்தில் வாழ்ந்து வரு­கிறேன். 15 வரு­டங்­க­ளுக்கு முன் எனது கணவர் என்­னையும், எனது பிள்­ளை­க­ளையும் விட்டு பிரிந்து சென்­று­விட்டார். எனினும், அவர் இப்­போது உயி­ரு­டனும் இல்லை. எனது தனி முயற்­சியில் தான் நான்கு பிள்­ளை­க­ளையும் வளர்த்­தெ­டுத்தேன்.

தோட்ட வேலைக்குச் சென்றேன். வீடு வீடாகச் சென்று வேலை செய்தேன். இப்­படி கஷ்­டப்­பட்­டுத்தான் பிள்­ளைகளை வளர்த்தேன். மொத்­த­மாக வாங்­கு­வ­தற்கு பணம் இல்லை என்­பதால், சீட்டுப் போட்டும், தவணை அடிப்­ப­டை­யிலும் வீட்­டுக்கு தேவை­யான பொருட்­க­ளையும் வாங்கி சேக­ரித்து வைத்தேன்.

நான்கு பிள்­ளை­களும் கடல் தொழில் செய்து வரு­கி­றார்கள். முன்­னரைப் போல தொழில் சரி­யில்லை. என்­றாலும் கிடைக்கும் பணத்தில் அவர்­க­ளது செல­வுக்கு சிறிய தொகையை எடுத்­து­விட்டு மிகு­தியை என்­னிடம் தந்­து­வி­டு­வார்கள்.

நான் கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்து வைத்த பணத்தை முத­லாக கொண்­டுதான் வீட்­டோடு கடை ஒன்­றையும் ஆரம்­பித்தேன். நல்ல வியா­பாரம் இருந்­தது. கற்­பிட்டி, குறிஞ்­சிப்­பிட்டி நக­ருக்குச் சென்று கடைக்குத் தேவை­யான பொருட்­களை வாங்கி வருவேன்.
ஒரு நாளைக்கு இரண்­டா­யிரம் ரூபா முதல் மூவா­யிரம் ரூபா வரை வியா­பாரம் நடக்கும். கடன் இல்­லாமல் குடும்­பத்தைக் கொண்டு செல்லும் அள­வுக்கு சில்­லறைக் கடையை நடத்தி வந்தேன். இன்று மீண்டும் எனது வாழ்க்­கையை பூச்­சி­யத்தில் இருந்து ஆரம்­பிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது” என்று கதையை விப­ரித்தார் பாத்­திமா பீவி.
சமையல் எரி­வாயு அடுப்பு வெடித்துச் சித­றி­யதில் ஏற்­பட்ட பாதிப்­பு­களின் பெறு­ம­தியை இது­வரை கணிப்­பி­ட­வில்லை எனவும் பாத்­திமா பீவி தெரி­விக்­கின்றார்.

இதே­வேளை, இந்த சம்­ப­வத்தை கேள்­விப்­பட்ட கற்­பிட்டி பிர­தேச சபை எதிர்க் கட்சித் தலைவர் முகம்மட் தாரிக் உள்­ளிட்டோர் சம்­பவ இடத்­திற்கு வருகை தந்து பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­திற்கு தேவை­யான முதற்­கட்ட உத­வி­களை செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்கள்.
அத்­துடன், கற்­பிட்டி சக்காத் ஒன்­றி­யத்­தினர் பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­திற்கு தற்­கா­லி­க­மாக தங்­கு­வ­தற்கு தேவை­யான ஏற்­பா­டு­களை செய்து கொடுத்­த­துடன், தீயில் முழு­மை­யாக எரிந்த வீட்­டுக்குப் பக்­கத்தில் பாதியில் கட்­டப்­பட்­டி­ருக்கும் பாத்­திமா பீவியின் மக­னு­டைய வீட்டை நிர்­மா­ணிக்கத் தேவை­யான நிதி­யினைத் திரட்டும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இன்னும் ஓரிரு நாட்­களில் தற்­கா­லிக வீட்டின் நிர்­மா­ணப்­ப­ணிகள் நிறை­வ­டைந்து விடும் எனவும் சக்காத் ஒன்­றியம் தெரி­வித்­தது. அத்­துடன், பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­தி­ன­ருக்கு உதவி செய்ய யார் முன்­வந்­தாலும் கற்­பிட்டி சக்காத் ஒன்­றி­யத்தின் ஊடா­கவே உத­வி­களை செய்­யு­மாறும் கேட்­கப்­பட்­டுள்­ளனர்.

இதன் அடிப்­ப­டையில், பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­திற்­காக கிடைக்கும் நிதி­யா­னது அந்தக் குடும்­பத்­தி­னது தேவை­க­ளுக்­காக மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­படும் என கற்­பிட்டி சக்காத் ஒன்­றி­யத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை, நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை பாதிக்­கப்­பட்ட இடத்தை பார்­வை­யிட்ட புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம், குறித்த குடும்­பத்­திற்கு முதற்­கட்­ட­மாக தேவை­யான பொருட்­களை கொள்­வ­னவு செய்து கொள்ள கற்­பிட்டி சக்காத் ஒன்­றி­யத்­திற்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்­கு­வ­தாக கூறினார்.

அத்­துடன், பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­திற்கு அர­சாங்­கத்தின் விஷேட வீட­மைப்புத் திட்­டத்­தி­லி­ருந்து வீடு ஒன்றை வழங்கும் நட­வ­டிக்கை எடுப்­ப­தாகத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர், வீடமைப்பு அதிகார சபை, கற்பிட்டி பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் கலந்துரை யாடினார். எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா ஏற்படுத்திய அச்சத்தை விட சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரு­டத்தை நாட்டு மக்கள் எளிதில் மறத்­து­வி­ட­மாட்­டார்கள். கொரோனா ஒரு­புறம், பொரு­ளா­தார நெருக்­கடி மறு­புறம். அதோடு எரி­வாயு சிலிண்­டர்கள் வெடிப்பும் மக்­களின் நிம்­ம­தியைக் கெடுத்­துள்­ளது.

2021 ஆம் ஆண்டு நாளை­யுடன் நிறை­வ­டைந்து 2022 என்ற புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்க இருக்­கிறோம். புது வரு­டத்­தி­லா­வது பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்தும், எரி­வாயு அடுப்பு வெடிப்புச் சம்­ப­வத்தில் இருந்தும் நாட்டு மக்கள் மீள வேண்டும் என பிரார்த்திப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.