புலம்பெயர் இலங்கை முஸ்லிம்களும் தாயகமும்

0 600

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

“பெற்­ற­தாயும் பிறந்த பொன் நாடும் நற்­ற­வ­வா­னினும் நனி சிறந்­ததே”.
இலங்கை முஸ்­லிம்­களின் புலம்­பெ­யர்வு அண்­மைக்­கா­லத்தில் ஏற்­பட்ட ஒரு நிகழ்வு. ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இலங்கை மண்­ணி­லேயே கட்­டுண்டு அந்த மண்­ணுக்கே விசு­வா­ச­மாகக் கிடந்த ஒரு சமூகம் 1915இல் நடை­பெற்ற சிங்­க­ள-­ முஸ்லிம் இனக்­க­ல­வ­ரத்­திற்குப் பிற­கும்­கூட வெளிநாடு சென்று குடி­யே­ற வேண்டும் என்று கன­விலும் நினைக்­க­வில்லை. மாறாக இலங்­கை­யு­ட­னுள்ள இறுக்கம் மேலும் கடி­ன­மாக வள­ர­லா­யிற்று. இது தமி­ழி­னத்­துடன் ஒப்­பி­டும்­போது ஒரு முக்­கி­ய­மான வேறு­பாடு. தமி­ழ­ருக்­கெ­தி­ரான ஒவ்­வொரு இனக்­க­ல­வ­ரத்தின் பின்னும் நுற்­றுக்­க­ணக்­கான தமி­ழர்கள் புலம்­பெ­ய­ர­லா­யினர். அந்த இனத்­துக்­கெ­தி­ராக 1983ல் அர­சாங்­கத்­தி­னா­லேயே தொடக்­கப்­பட்ட இனச்­சுத்­தி­க­ரிப்புக் கல­வ­ரமும், அதனைத் தொடர்ந்த விடு­தலைப் புலி­களின் ஆயுதப் போராட்­டமும், அதன் இறுதித் தோல்­வியும் புலம்­பெயர் தமி­ழர்­களின் எண்­ணிக்­கையை ஆயி­ரக்­க­ணக்­காக உயர்த்­தி­விட்­டன. இன்று ஏறத்­தாழ 500,000க்கும் அதி­க­மான இலங்கைத் தமி­ழர்கள் கனடா, இங்­கி­லாந்து, அமெ­ரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்­தி­ரே­லியா என்­ற­வாறு பல்­வேறு நாடு­களிற் குடி­யேறி கண்­ணி­ய­மாக வாழ்­கின்­றனர். இவர்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது புலம்­பெயர் முஸ்­லிம்­களின் எண்­ணிக்கை மிக­மிகக் குறைவு. இது­வரை இவர்­களின் மொத்த எண்­ணிக்­கையை யாரும் மதிப்­பீடு செய்­ய­வில்­லை­யா­யினும், உல­கெங்கும் நிரந்­த­ர­மாகக் குடி­பெ­யர்ந்­துள்ள இலங்கை முஸ்­லிம்­களின் எண்­ணிக்கை தமி­ழர்­களின் தொகையில் பத்து வீதத்­தையும் எட்­டி­யி­ருக்­காது என்றே கூற­வேண்டும். இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு வெளிநா­டு­க­ளுக்குச் சென்று குடி­யே­ற­வேண்டும் என்ற எண்ணம் மிகவும் காலம் ­தாழ்த்­தியே ஏற்­பட்­டதும், வெளிநா­டுகள் விரும்பும் கல்வித் தகை­மை­களும் தொழில் திற­மை­களும் முஸ்­லிம்­க­ளி­டையே குறை­வாகக் காணப்­பட்­டதும் இதற்­கான கார­ணங்­க­ளாக அமையும். இது ஆழ­மாக ஆரா­யப்­ப­ட­வேண்­டிய ஒரு விடயம்.

புலம்­பெயர் முஸ்­லிம்­களின் தொகை சிறி­தாக இருந்­தாலும் இன்று இலங்கை இருக்கும் நிலையில் அவர்­களால் அவர்­களை உரு­வாக்­கி­விட்ட தாய­கத்­துக்கும் அங்­கு­ வாழும் அவர்­களின் உற­வி­னர்­க­ளுக்கும் முஸ்லிம் இனத்­துக்கும் எவ்­வாறு துணை­யாகச் செயற்­ப­டலாம் என்­ப­தைப்­பற்றிச் சிந்­திக்கும் ஒரு கடமை இப­்­போது அவர்கள் தலையில் சுமத்­தப்­பட்­டுள்­ளது. தனிப்­பட்ட முறையில் தமது உற­வி­னர்­க­ளுக்கு இவர்­க­ளெல்­லா­ருமே தத்தம் வச­திக்­கேற்ப ஏதோ ஒரு வகையில் உத­விக்­கொண்­டுதான் இருக்­கி­றார்கள். அதிலே சந்­தேகம் இல்லை. ஆனால் அதை­விட ஒரு படி மேலேறி இலங்கை முஸ்லிம் இனத்­துக்கும் தாய்­நாட்­டுக்கும் எவ்­வாறு உத­வலாம் என்­பதே அவர்­கள் இன்று எதிர்­நோக்கும் பிரச்­சினை. அதே பிரச்­சி­னைதான் புலம்­பெயர் தமி­ழர்­க­ளையும் எதிர்­கொண்­டுள்­ளது. அதற்­காக அவர்கள் பல­வ­ழி­க­ளிலும் செயற்­படத் தொடங்­கி­விட்­டனர். எனினும் இக்­க­டமை பற்­றிய பின்­வரும் சிந்­த­னைகள் இரு இனங்­க­ளுக்கும் பொருத்­த­மா­னவை.

இன்று இலங்­கையைப் பீடித்­தி­ருக்கும் மிகக்­கொ­டிய பிணி பொரு­ளா­தார நெருக்­க­டியோ கொரோனா கொள்ளை நோயோ அல்ல, இலங்­கையில் நிலவும் மனி­தா­பி­மா­ன­மற்ற இன­வாத அர­சாட்­சியே. பொரு­ளா­தார நெருக்­க­டியும் கொள்­ளை­நோயும் மற்ற நாடு­க­ளை­யும்தான் பீடித்­துள்­ளன. ஆனால் அந்த நாடு­களில் நீதித்­துறை சுய­மாக இயங்­கு­வ­தாலும் இனத்­து­வேஷம் திட்­ட­மிட்ட முறையில் வளர்க்­கப்­ப­டாமல் மக்­க­ள­னை­வரும் சம­மான பிர­ஜை­களே என மதிக்­கப்­பட்டு அரசு விளை­விக்கும் நன்­மையோ தீமையோ அவை யாவும் எல்லா மக்­க­ளையும் சம­மாகச் சென்­ற­டை­கின்­ற­தாலும் பொரு­ளா­தாரப் பிணி­யையும், கொள்ளை நோயின் கொடு­மை­யி­னையும் தாங்­கிக்­கொண்டு மக்கள் அமை­தி­யாக வாழ்­கின்­றனர்.

இலங்­கை­யிலோ அரசின் திட்­ட­மிட்ட மனி­தா­பி­மா­ன­மற்ற இனத்­து­வேஷக் கொள்­கை­களால் பெரும்­பான்மை இனம் மிகப்­பெ­ரும்­பா­லான நன்­மை­க­ளையும் அதே­ச­மயம் மிகக் குறை­வான இழப்­பு­க­ளையும் அனு­ப­விக்க, சிறு­பான்மை இனங்­களோ மிகக் குறை­வான நன்­மை­க­ளையும் அதே சமயம் மிகக் கூடு­த­லான இழப்­பு­க­ளையும் அனு­ப­விக்­கின்­றன. அதற்­குக்­கா­ரணம் பெரும்­பான்மை இன மக்­க­ளல்ல. மாறாக, சிறு­பான்­மை­யி­னங்கள் இந்த நாட்டின் எதி­ரிகள் என்ற ஒரு மனோ­ப­யத்தையும் வெறுப்­பையும் அவர்­க­ளது நெஞ்­சிலே நஞ்­சாக ஊட்­டி­விட்ட அர­சி­யல்­வா­தி­களும் அவர்­களின் அடி­யாட்­க­ளுமே. இது சுமார் எழு­பது வரு­டங்­க­ளாக அர­சி­யலால் வளர்க்­கப்­பட்ட ஒரு தீராத வியாதி. இங்கே அநீதி தலை­வி­ரித்­தா­டு­கி­றது. பாரதி கூறி­ய­து­போன்று இங்கே பேய் அர­சாட்சி செய்­கி­றது.

இந்த நிலையில் இன்று முஸ்­லிம்­க­ளுக்கும் தமி­ழி­னத்­துக்கும் முக்­கி­ய­மாகத் தேவைப்­ப­டு­வது நீதியே அன்றி வேறெந்தச் சலு­கை­களும் அல்ல. அந்த நீதியின் ஆட்­சியே நாட்­டி­னது தேவை­யு­மாகும். நாடு செழிப்­பதைத் தடுக்­கி­றது அநீதி. ஆக­வே­ நீ­தியை நிலை­நாட்ட எவ்­வாறு ஆட்­சி­யா­ளர்­களை நிர்ப்­பந்­திக்­கலாம்? அவ்­வாறு நிர்ப்­பந்­திக்கப் புலம்­பெயர் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் யாது செய்­யலாம் என்­பதே இன்று இவர்­களை எதிர்­நோக்கும் கேள்வி.

தூரமும் நேரமும் குறுகி தொடர்­பு­களும் விரி­வ­டைந்­துள்ள இன்­றைய உலகம் ஒரு பாரிய கிரா­ம­மாக மாறி­விட்­ட­தென்று கூறுவர். அதனால் எந்த ஒரு நாட்­டிலும் எந்த இன­மக்­க­ளுக்கும் எதி­ராக வன்­மு­றை­களும் அநி­யா­யங்­களும் அவிழ்த்­து­வி­டப்­ப­டு­கையில் அதனை உலகின் கண்­க­ளி­லி­ருந்து மறைக்க முடி­யாது. இரண்­டா­வது உலக யுத்­தத்தின் பின்னர் உரு­வாக்­கப்­பட்ட ஐக்­கிய நாடுகள் சபையின் நோக்­கங்­களுள் அவ்­வா­றான தீமை­களைத் தடுப்­பதும் ஒன்­றாகும். ஐ. நா. சபை­யிலும் பல குறை­பா­டுகள் உள்ளன என்­பதை மறுக்­க­வில்லை. இருந்­த­போதும் அந்­நி­று­வ­னத்தின் பல அங்­கங்­க­ளாக இயங்கும் தாப­னங்­க­ளி­னூ­டாக அநீதி இழைக்கும் அர­சு­க­ளுக்கு அழுத்­தங்­களைக் கொடுத்து அவ்­வ­ர­சு­களின் கொள்­கை­க­ளிலும் போக்­கி­னிலும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தலாம். உதா­ர­ண­மாக, ஐ.நாவின் மனித உரிமைச் சபை கடந்த வருடம் ஜெனி­வாவில் நிறை­வேற்­றிய இலங்­கைக்­கெ­தி­ரான பிரே­ரணை அந்த நோக்கில் எடுக்­கப்­பட்­ட­தொன்றே. அதே­போன்று ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்­கையின் ஏற்­று­ம­தி­க­ளுக்கு வழங்­கப்­படும் விசேட சலு­கை­களை நிறுத்­து­வ­தாக எச்­ச­ரித்­துள்­ள­மையும் அந்த நோக்­கத்­தி­னா­லேயே. இந்த நட­வ­டிக்­கை­களின் பின்னால் புலம்­பெயர் தமி­ழர்­களின் அழுத்­தங்கள் இருந்­தன என்­பதும் இப்­போது உறு­தி­யா­கி­விட்­டது. அத­னா­லேதான் அவர்­க­ளுடன் தமி­ழர்­களின் பிரச்­சி­னை­க­ளைப்­பற்றிப் பேச்­சு­வார்த்தை நடத்த இணங்­கு­வ­தாக ஐ.நாவின் செய­லா­ள­ரிடம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச உறு­தி­மொழி அளித்­துள்ளார். இது உண்­மை­யி­லேயே நடை­பெ­றுமா என்­பது வேறு விடயம். ஆனாலும் அடிமேல் அடி அடித்தால் அம்­மியும் நகரும் என்­ப­து­போல வெளியே இருந்து அழுத்­தங்கள் மாறி­மாறி எழும்­போது ஆட்­சி­யா­ளர்கள் தொடர்ந்து அவ்­வ­ழுத்­தங்­களை உதா­சீனம் செய்­து­கொண்­டி­ருக்க முடி­யாது. இந்த ரீதியில் புலம்­பெயர் முஸ்லிம் சமூகம் எவ்­வாறு செயற்­ப­டலாம்?

இரண்டு வழி­க­ளுண்டு. அவை இரண்­டுமே சாத்­தி­யப்­ப­டக்­கூ­டி­யவை. ஒன்று, புலம்­பெயர் தமி­ழ­ருடன் புலம்­பெயர் முஸ்­லிம்­களும் இணைந்து தனியே தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களில் மட்டும் வெளிநாட்டு அர­சு­க­ளையும் சர்­வ­தேச தாப­னங்­க­ளையும் கவனம் செலுத்­து­வதை மாற்றி சிறு­பான்மை இனங்­களின் பிரச்­சி­னை­க­ளைப்­பற்றி உலக அரங்­கினில் குர­லெ­ழுப்­பு­மாறு செய்­வது. ஐ.நாவின் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் அறிக்கை இந்­தப்­ப­ர­வ­லான நோக்­கைத்தான் உறு­திப்­ப­டுத்­து­கி­றது. அதே­வேளை, புலம்­பெ­யர்ந்து வாழும் இலங்­கை­யருள் சிங்­கள சமூ­க­மொன்றும் இப்­பொ­ழுது உரு­வா­கி­யுள்­ள­தையும் மறத்­த­லா­காது. அந்தச் சமூ­கமும் தாய­கத்தில் நடை­பெறும் அர­சியல் பொரு­ளா­தார சமூக ரீதி­யா­ன சீர்­கே­டு­க­ளையும் அநி­யா­யங்­க­ளையும் வெறுப்­புடன் கண்­டித்து மாற்­றம்­கோ­ரியும் இன­வா­தத்தை எதிர்த்தும் இயக்­க­ரீ­தி­யாகச் செயற்­படத் தொடங்­கி­யுள்­ளனர். இது ஓர் அண்­மைக்­கால வர­வேற்­கத்­தக்க வளர்ச்சி. ஆட்­சி­யி­ன­ரையும் அவர்­களின் அடி­வ­ரு­டி­க­ளையும் தவிர வேறு யாருக்­குமே அந்த நாட்டில் அமை­தி­யாக வாழ­மு­டி­யாது என்­ப­தையே புலம்­பெயர் சிங்­களச் சமூகம் எடுத்­துக்­காட்­டு­கி­றது. ஆதலால் புலம்­பெயர் முஸ்லிம் சமூகம் மற்ற இனங்­களின் அமைப்­பு­க­ளுடன் சேர்ந்து செயற்­ப­டு­வதே பொருத்­த­மா­னது. அவ்­வாறு கூட்­டாகச் செயற்­ப­டு­தல்­மூலம் தமது நோக்கம் முஸ்லிம் இனத்­தை­மட்­டும் ­பற்­றிய ஒரு குறு­கிய நோக்­க­மல்ல, மாறாக முழு நாட்­டையும் அதன் சர்­வ­மக்­க­ளையும் உள்­ள­டக்­கிய விரி­வான நோக்கு என்­பதை உல­குக்கு உணர்த்த முடியும். உலகில் எங்­கெல்லாம் புலம்­பெயர் இலங்­கையர் இலங்­கையின் இன்­றைய அர­சுக்­கெ­தி­ராகக் குர­லெ­ழுப்­பு­கின்­றனரோ அங்­கெல்லாம் புலம்­பெயர் முஸ்­லிம்­களின் குரலும் சேர்ந்து ஒலிக்க வேண்டும். இது முத­லா­வது வழி.

இணைந்து செயற்­ப­டுதல் முதல் வழி என்றால் அந்த வழியின் ஒரு கூறா­கவே இரண்­டா­வது வழி அமைதல் வேண்டும். அதா­வது, புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்கும் புலம்­பெயர் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் இல்­லாத ஓர் அரிய வாய்ப்பு புலம்­பெயர் முஸ்­லிம்­க­ளுக்கு உண்டு. அதனை யதார்த்­தத்­துடன் புரிந்­து­கொள்­வது அவ­சியம். தேர­வாத பௌத்­தத்தைப் பின்­பற்­று­வதால் சிங்­கள இனம் தாய்­லாந்­து­டனும் மியன்­மா­ரு­டனும் இணைந்­துள்­ளது. இந்­து­ம­தத்தைப் பின்­பற்­று­வ­தாலும் தமிழ்­மொ­ழியைத் தாய்­மொ­ழி­யாகக் கொண்­ட­த­னாலும் தமி­ழினம் தமிழ் நாட்­டுடன் நெருக்கம் கொண்­டுள்­ளது. ஆனால் இஸ்­லாத்தைப் பின்­பற்­று­வதால் முஸ்­லிம்கள் உலகில் ஐம்­பத்­தேழு நாடு­க­ளுடன் தொடர்­பு­று­கின்­றனர். இதைப்­பற்றி அள­வு­க­டந்து புக­ழாமல் இந்தத் தொடர்­பு­மூலம் ஏற்­படும் ஓர் அரிய வாய்ப்­பினைப் பயன்­ப­டுத்தி புலம்­பெயர் முஸ்லிம் சமூகம் இலங்­கைக்கும் அங்கு வாழும் தம் இனத்­த­வர்க்கும் எவ்­வாறு உத­வலாம் என்­ப­தையே சிந்­தித்துப் பார்த்துச் செயற்­படல் வேண்டும்.

ஏற்­க­னவே குறிப்­பிட்­ட­து­ போன்று இலங்­கையைப் பீடித்­துள்ள மிகக்­கொ­டிய பிணி அநீ­தியின் ஆட்சி. இந்த அநீ­தி­யினால் மனித உரி­மைகள் மறுக்­கப்­பட்டும் சிதைக்­கப்­பட்டும், இனத்­து­வேஷம் தூண்­டப்­பட்டும், ஜன­நா­யக சுதந்­தி­ரங்கள் பறிக்­கப்­பட்டும், இரா­ணுவ அடக்­கு­முறை வலுப்­ப­டுத்­தப்­பட்டும் வரு­வ­தனால் நாட்டின் பொரு­ளா­தாரம் வங்­கு­றோத்து நிலைக்குத் தள்­ளப்­பட்டு எல்லா இன மக்­க­ளுமே அவ­தி­யு­று­கின்­றனர். ஆனால் ஆட்­சி­யி­னரும் அவர்­களின் பாது­கா­வ­லர்­களும் இத்­த­னைக்­கு­மான பழியை முஸ்­லிம்­க­ளின்மேல் சுமத்தி மக்­களைத் திசை­தி­ருப்ப முனை­கின்­றனர். கொவிட் கொள்ளை நோயைக்­கூட முஸ்­லிம்­களே கொண்­டு­வந்­தனர் என்றும் அவ்­வாட்­சி­யி­னரின் விஷ­மிகள் ஆரம்­பத்தில் பிரச்­சாரம் செய்­தனர். ஆகவே அநீ­தியின் ஆட்சி ஒழிக்­கப்­பட்­டா­லன்றி நாட்­டுக்கும் அங்கே வாழும் முஸ்­லிம்­க­ளுக்கும் விடி­வில்லை என்­பது தெளிவா­கி­றது.
பொரு­ளா­தாரம் சீர­ழிந்து செல்­கை­யிலே அர­சுக்­கெ­தி­ரான ஆர்ப்­பாட்­டங்­களும் எதிர்ப்­பு­களும் விரி­வ­டை­வது திண்ணம். ஏற்­க­னவே பாரிய கடன் சுமை­யுடன் பரி­த­விக்கும் ஆட்­சி­யினர் பிச்சை எடுத்­தா­வது பொரு­ளா­தா­ரத்தை வளர்க்க முனை­கின்­றனர். அதற்­காக முஸ்லிம் நாடுகளின் உதவியை நாட முன்வந்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தை புலம்பெயர் முஸ்லிம் சமூகம் ஒரு துரும்பாகப் பயன்படுத்தி தமது தாயகத்தில் நீதியை நிலைநாட்டப் பாடுபடலாம். எவ்வாறு?

ஐம்­பத்­தேழு முஸ்லிம் நாடு­க­ளையும் உள்­ள­டக்­கிய ஓர் அமைப்பே உலக முஸ்லிம் கூட்­டு­ற­வுத்­தா­பனம். அண்­மையில் அது நிறை­வேற்­றிய இலங்­கைக்­கெ­தி­ரான பிரே­ர­ணையே புதிய வெளி­யு­றவு அமைச்சர் பேரா­சி­ரியர் பீரிஸ் அவர்­களை அதன் செய­லா­ள­ருடன் பேச்­சு­வார்த்தை நடாத்தத் தூண்­டி­யது. முஸ்லிம் நாடுகள் இலங்­கைக்கு உத­விக்­கரம் நீட்­டு­வதில் எந்த ஆட்­சே­ப­னையும் இல்லை. அதை வர­வேற்கும் அதே­நேரம் அந்த உத­வியை சில நிபந்­த­னை­களின் அடிப்­ப­டை­யி­லேயே வழங்க வேண்டும் என்­ப­தையே புலம்­பெயர் முஸ்­லிம்கள் உலக முஸ்லிம் கூட்­டு­ற­வுத்­தா­ப­னத்­தி­னூ­டாக முஸ்லிம் அர­சு­களின் செவி­க­ளுக்கு எட்டவைக்க வேண்டும். அந்த நிபந்தனைகள் ஐ.நாவின் மனித உரிமைச் சபை சுட்டிக்காட்டியுள்ள நிபந்தனைகளுடன் ஒத்ததாகவும் இருக்க வேண்டும். இந்த அழுத்தத்தை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்களையும் சிங்களவர்களையும்விட முஸ்லிம்களுக்கே அதிக வாய்ப்புண்டு. முஸ்லிம் நாடுகளின் பத்திரிகைகளிலும் மற்றும் ஊடகங்களிலும் இலங்கையின் யதார்த்த நிலைபற்றியும் முஸ்லிம்களின் அனுபவங்களைப்பற்றியும் உண்மைகளை வெளியிட வேண்டியது அவசியம். புலம்பெயர் முஸ்லிம்களே அதைத் துணிவுடன் செய்ய முடியும். தாம் பிறந்த தாயகத்துக்குச் செய்யும் ஒரு மகத்தான பணியாக இவற்றை மேற்கொள்ளுதல் அம்முஸ்லிம்களின் தலையாய கடமை.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.