அமைச்சர், ராஜாங்க அமைச்சர் பிரதியமைச்சர்களின் அதிகாரம்

0 1,358
  • வை. எல். எஸ். ஹமீட்

அமைச்சர்கள் பிரதமரால் முன்மொழியப்படுகின்றவர்களைத்தான் அமைச்சர்களாக ஜனாதிபதி நியமிக்க முடியும். இந்த விடயத்தில் ஜனாதிபதிக்கு சொந்த அதிகாரம் கிடையாது. எனவே, பிரதமர் முன்மொழிகின்ற ஒருவரை நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கூறுவது அரசியலமைப்பு மீறலாகும். சரத்து 43(2). ஆனால் 30 பேரையும் நியமிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஜனாதிபதி விரும்பினால் 30ஐ விடக் குறைவாகவும் நியமிக்கலாம். எத்தனை அமைச்சர்கள் என்பதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்குரியது. தேவையெனக்கருதினால் பிரதமரைக் கலந்தாலோசிக்கலாம். ஆனால் அதன்படி நடக்கவேண்டுமென்பதில்லை. சரத்து 43(1)

அதேபோன்று, அந்த அமைச்சர்களுக்குரிய அமைச்சுக்கள், அவற்றின் கீழ்வரும் நிறுவனங்களைத் தீர்மானிப்பது ஜனாதிபதியே. பிரதமரைக் கலந்தாலோசிக்கலாம். ஆனால் அதன்படி நடக்க வேண்டுமென்பதில்லை. 43(1)

தான் விரும்பும் நேரம் இந்த அமைச்சர்களின் அமைச்சுக்களையோ அதன்கீழ் வரும் நிறுவனங்களையோ ஜனாதிபதி மாற்றலாம். அது ஜனாதிபதியின் அதிகாரம். 43(3) ஆனால் பிரதமர் முன்மொழிந்தாலேயொழிய ஜனாதிபதி அவர்களை நீக்கமுடியாது. 46(3)

அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் முழுக்க, முழுக்க ஜனாதிபதியினுடையது. 52(1). இந்த செயலாளர்கள் அமைச்சர்களின் அறிவுறுத்தல், கட்டுப்பாட்டின்கீழேயே இயங்க வேண்டும். 52(2) ஜனாதிபதி ஒரு அமைச்சரை புறந்தள்ளி நேரடியாக செயலாளருக்கு உத்தரவு வழங்க முடியாது. அமைச்சின் முழுக்கட்டுப்பாடும் அமைச்சரிடமே இருக்கும். ஆனால் அமைச்சருக்குரிய அதிகாரம் தொடர்பான விடயதானங்கள் அனைத்தும் ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் வழங்கப்படும்.

மொத்த அமைச்சரவையும் பாராளுமன்றத்திற்கு பதில்கூற கடமைப்பட்டது. 42(2)

ராஜாங்க அமைச்சர்கள்

‘ராஜாங்க அமைச்சர்’ என்ற சொல் யாப்பில் இல்லை. ‘அமைச்சரவை அங்கத்தவரல்லாத அமைச்சர்’ என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ‘ ராஜாங்க அமைச்சர் ‘ என்ற சொல் நடைமுறையில் உள்ளதால் அச்சொல்லே இக்கட்டுரையில் பாவிக்கப்படுகின்றது.

இவர்களை நியமிப்பதா? இல்லையா? என்று தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குரியது. நியமிப்பதாயின் பிரதமர் முன்மொழிகின்றவர்களையே நியமிக்க வேண்டும். 44(1). நீக்க வேண்டும்.

இவர்களுடைய அதிகாரம்

இவர்களுக்கு தனியாக அதிகாரம் வழங்கலாம், வழங்காமலும் விடலாம். அதிகாரம் வழங்குவதாயின் இருவகையாக வழங்கலாம். ஒன்று ஜனாதிபதி நேரடியாக வர்த்தமானி மூலம் வழங்குவது அல்லது உரிய அமைச்சர் வர்த்தமானி மூலம் வழங்குவது

ஜனாதிபதி அதிகாரம் வழங்குவது

ஜனாதிபதி தேவைப்படின் பிரதமருடன் கலந்தாலோசித்து இவர்களுக்கு அமைச்சர்களுக்கு வழங்குவதுபோன்று தனியான அமைச்சு வழங்கலாம். அல்லது அமைச்சு வழங்காமல் சில விடயதானங்களை மட்டும் வழங்கலாம். 44(2) அவ்வாறு வழங்கினால் அந்த விடயங்களில் அவர்கள் ஒரு முழுமையான அமைச்சரைப்போன்று செயற்படலாம். இவர்கள் பாராளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் பொறுப்புக்கூறவேண்டியவர்கள். 44(4)

அமைச்சர் அதிகாரம் வழங்குவது

சம்பந்தப்பட்ட அமைச்சர் தனக்குக் கீழ்வரும் அமைச்சு மற்றும் விடயதானங்கள் தொடர்பாக வர்த்தமானிமூலம் அதிகாரம் வழங்கலாம். 44(5)

இவர்களுக்கு ஜனாதிபதியோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ இவ்வாறு அதிகாரம் வழங்கவேண்டுமென எந்தக்கட்டாயமுமில்லை.

பிரதியமைச்சர்கள்

இவர்களும் பிரதமரின் சிபாரிசின்பேரிலேயே நியமிக்கப்பட வேண்டும். நீக்கப்பட வேண்டும்.

இவர்களுக்கு ஜனாதிபதி நேரடியாக அதிகாரம் வழங்குவதில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர் வர்த்தமானி மூலம் வழங்கலாம்.

கடந்தகாலங்களில் சில சந்தர்பங்களில் ராஜாங்க அமைச்சர்களுக்கு தனியான அமைச்சுக்களும் அதிகாரங்களும் வழங்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. அதற்காக எப்போதும் அவ்வாறு இல்லை.

தற்போது இவர்களுக்குத் தனியான அமைச்சோ, அதிகாரங்களோ வழங்கப்படுமா? எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் ராஜாங்க அமைச்சர்களுக்கும் பிரதியமைச்சர்களுக்கும் நடைமுறையில் எதுவித வித்தியாசமுமில்லை.

இதனுடைய பொருள் அதிகாரம் வழங்காவிட்டால் எதுவும் செய்யமுடியாதென்பதல்ல. உரிய அமைச்சர்களை அணுகி எவ்வளவோ சாதிக்கலாம். அது அவரவர் திறமையைப் பொறுத்தது.

அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் ராஜாங்க அமைச்சர் சம்பந்தமான குழப்பம்

அமைச்சர்களின் வகை

* அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் சரத்து 43.

* அமைச்சரவை அங்கத்தவரல்லாத அமைச்சர் சரத்து 44.

* பிரதியமைச்சர் சரத்து 45.

இதற்கு மேலதிகமாக வேறு எந்தவகையான அமைச்சர்களும் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.

அவ்வாறாயின் மூன்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களும் 17 ராஜாங்க அமைச்சர்களும் என்று மேலதிகமாக ஒருவகை ஏன் சேர்க்கப்பட்டது? சேர்க்கப்பட முடியுமா?

பதில்: இதுவரை அமைச்சரவை அங்கத்தவரல்லாத அமைச்சர்களை நடைமுறையில் ‘ ராஜாங்க அமைச்சர்’ என அழைத்தார்கள். இப்பொழுது அமைச்சரவை அங்கத்தவரல்லாத அமைச்சர், ராஜாங்க அமைச்சர் என்று மேலதிகமாக சேர்த்தது உண்மையில் குழப்பகரமானது. இதற்குரிய காரணத்தை அரசு இன்னும் விளக்கவில்லை.

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் எந்தவொரு Cabinet அமைச்சரின் கீழும் வரமாட்டார்கள். அவர்கள் உரிய அமைச்சருக்கு வழங்கப்பட்ட சில விடயதானங்களுக்கு பொறுப்பாக இருந்து சுயமாக இயங்குவார்கள். ஆனால் அவர்கள் அமைச்சரவைக்கு செல்லமாட்டார்கள். அவர்களுடைய cabinet paper கள் பிரதமரினூடாக சமர்ப்பிக்கப்படும். அவர்களுக்கென்று தனியாக செயலாளர்கள் இருப்பார்கள் என்பதாகும்.

இதனைப்பார்க்கும்போது அவர்களுக்கு 44(2) இல் குறிப்பிடப்பட்டதுபோன்று தனியான அமைச்சு வழங்கப்பட இருப்பது புலப்படுகிறது.

இதிலிருந்து ராஜாங்க அமைச்சர்களுக்கு தனியான அமைச்சு வழங்கப்பட மாட்டாது என்பதும் புலப்படுகிறது. அமைச்சு வழங்காமல் சில விடயதானங்களை வழங்கலாம். அவ்வாறு வழங்கப்படுமா? என்பது தெரியவில்லை.

பெரும்பாலும் ராஜாங்க அமைச்சர்களும் பிரதியமைச்சர்களுக்கு சமாந்திரமானவர்களாகவே இருக்கலாம் அதிகாரம் எதுவும் இல்லாமல். கௌரவத்திற்காக பெயர் மாத்திரம் ராஜாங்கமாக இருக்கலாம்.

இங்கு எழுகின்ற சட்டரீதியான கேள்வி, இவ்வாறு நாலாவது வகையான அமைச்சர்களை நியமிக்க முடியுமா? என்பதாகும்.

நாலாவது வகை நியமிக்க முடியாது. பெரும்பாலும் non cabinet அமைச்சரும் ராஜாங்க அமைச்சரும் ஒரே வகையாக இருக்கலாம். அதாவது non cabinet அமைச்சர். அதில் ஒரு பகுதியினருக்கு அதிகாரம் வழங்கலாம். அடுத்த பகுதியினருக்கு வழங்காமல் விடலாம்.

இந்த அமைச்சர்களுக்கு வெவ்வேறு பெயர்களை வைக்கலாம். அதாவது ராஜாங்கம் அல்லது வேறு பெயர்களையும் வைக்கலாம். தடையேதுமில்லை. காரணம் இந்த இரண்டாவது வகையை அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்காத அமைச்சர்கள் என்றே 44(1) இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இரு தரப்பினரது நியமனப்பத்திரத்திலும் அமைச்சரவை அங்கத்தரவரல்லாத அமைச்சர் என்பது ஏதோ ஒருவிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் அது நான்காவது வகையாகிவிடும். அது சட்டவிரோதமாகிவிடும்.

அமைச்சரவை அங்கத்தவரல்லாத அமைச்சர்களைக் குறிப்பிடுகின்ற சரத்து 44(1) ராஜாங்க அமைச்சர் நியமனப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ‘ அவர்களும் non Cabinet அமைச்சர்களே. அதாவது இரண்டாவது வகை.

அதேநேரம் ஒரு அமைச்சுக்கு அமைச்சருக்கு மேலதிகமாக ஒரு ராஜாங்க அமைச்சரும் ஒரு பிரதி அமைச்சரும் நியமிக்கலாமா? என்று சிலர் தொலைபேசியில் கேட்கின்றார்கள்.

ஒவ்வொன்றல்ல, அதற்குமேலும் நியமிக்கலாம். எதுவித சட்டப்பிரச்சினையும் இல்லை. கேள்வி என்னவென்றால் இவர்களுக்குரிய அதிகாரம் என்னவென்பதாகும்.

முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டதுபோல்  பிரதியமைச்சருக்கு ஜனாதிபதி அதிகாரம் வழங்க முடியாது. சம்பந்தப்பட்ட அமைச்சர் தனது அதிகாரத்தில் ஒரு பகுதியை வர்த்தமானி மூலம் வழங்க முடியும். ஆனால் நடைமுறையில் ஒரு அமைச்சரும் அவ்வாறு வழங்குவதில்லை. எந்த அமைச்சர்தான் தன் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்புவார்?

ராஜாங்க அமைச்சருக்கு (non Cabinet) ஜனாதிபதியும் அதிகாரம் வழங்கலாம், அமைச்சரும் வழங்கலாம். அமைச்சர் வழங்கப்போவதில்லை. ஜனாதிபதி வழங்குவாரா? என்பது அடுத்த ஒரு சில தினங்களில் வர்த்தமானி வெளியானதும் தெரியவரும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.