மாற்றங்களோடு மலரட்டும் இஸ்லாமியப் புத்தாண்டு

0 1,158

உமர் (ரழி) அவர்களது ஆட்சிக்காலத்தின் போது ஹிஜ்ரத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமே அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாதமாகும். முஹர்ரம் என்றால் அதன் பொருள் சங்கையாக்கப்பட்டது என்பதாகும். அதன் பொருளே அதன் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் அது ஷஹ்ருல்லாஹ் (அல்லாஹ்வுடைய மாதம்) என்றும் அழைக்கப்படுவதாலும் அதன் தனித்தன்மையானது உயர்வானதாக பறைசாற்றப்படுகின்றது.

முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் மாதம்’ என ரஸுல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.  (நூல்: முஸ்லிம் 2157)

அல்லாஹ் தனது திருமறையில் சூரா தௌபாவில் மாதங்கள் குறித்து பின்வருமாறு கூறுகிறான்.  ‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு என அவனது பதிவுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அந்த நான்கு மாதங்களில் மோதல்களை ஹராமாக்கிய இந்த தீனுல் இஸ்லாம் தான் சீரான) நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்பவர்கள் (புனித மாதங்களை கண்ணியப்படுத்தாது) உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறைபயம் கொண்ட தக்வா உள்ளவர்களுடனே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ (9:36)

நபி (ஸல்) அவர்கள் தனது இறுதிப் பேருரையில் பின்வருமாறு கூறியதாக அபூபக்கர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாள் முதல் அவனது விதிப்படியே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. மூன்று மாதங்கள் தொடராகவும் ஒன்று இடையில் தனியாகவும் அமைந்துள்ளது. தொடராக வரும் மாதங்கள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் என்பனவாகும். தனியாக வருவது ரஜப் மாதம் ஆகும். அது ஜமாதுல்ஆகிர் மாதத்திற்கும் ஷஃபான் மாதத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது’. (புகாரி, முஸ்லிம்).

நபிகளாரின் ஹிஜ்ரத் நிகழ்வு நடந்தது முஹர்ரம் மாதத்தில் என்பது தவறான கருத்தாகும், ரபீஉல் அவ்வல் மாதம் திங்கட் கிழமை பிறை 12 ல் நடைபெற்றது என்பதுவே அதிகமான வரலாற்றாசிரியர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

இதனையே இமாம் இப்னு ஹிஷாம், இமாம் இப்னு இஸ்ஹாக் போன்றோர் தமது ஸீராவிலும் இமாம் இப்னு ஸஅத் தபகாதுல் குப்ராவிலும் இமாம் இப்னு கஸீர் பிதாயா வந்நிஹாயாவிலும் பதிவு செய்துள்ளனர்.

எனினும் ஹிஜ்ரத் பயணத்துக்காக திடஉறுதி பூண்ட மாதமாகவே முஹர்ரம் மாதம் கருதப்படுகிறது என்ற வகையிலே முஹர்ரம் மாதத்திற்கும் ஹிஜ்ரத்திற்குமிடையில் தொடர்பு ஏற்படுகிறது, இறை நம்பிக்கைக்கும் திட்டமிடலுக்கும் இடையே சமநிலை பேணப்பட்ட இலக்கை நோக்கிய இலட்சியப் பயணமே ஹிஜ்ரத் பயணம் என்பதை அந்த வரலாற்றை ஆழ்ந்து அவதானிக்கின்ற போது மிக இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இறைவன் தடை செய்தவைகளை விட்டும் இறைவன் விதியாக்கியதன்பால் மனித மனங்களை நகர்த்துகின்ற புனிதமான ஹிஜ்ரத் என்பது இந்த முஹர்ரம் எதிர்பார்க்கின்ற காலத்தோடு தொடர்புபட்ட மிக முக்கியமான ஹிஜ்ரத்தாகும். முஸ்லிம் பிற முஸ்லிமை அவனது கையாலும் நாவாலும் துன்புறுத்தமாட்டான். (முஹாஜிர்) உண்மையாக ஹிஜ்ரத் செய்பவர் இறைவன் தடுத்தவைகளை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வான் என நபி ஸல் கூறினார்கள் (புஹாரி )

இஸ்லாமிய வருட ஆரம்பத்தில் நாம் மாற வேண்டும் நம்மைச் சூழ உள்ளவர்களை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு வாழ்வை ஒழுங்குபடுத்த இரண்டு விடயங்களை நாம் அவசியம் உணரவேண்டியுள்ளது. ஒன்று தீயவைகளை திட்டமிட்டு விட்டு விடுதல் அடுத்தது நல்லவைகளை ஒழுங்குபடுத்தி செய்ய முயற்சித்தல். அதற்கான சிறந்த காலமே மலரவிருக்கும் முத்தான முஹர்ரம் மாதம்.

ஹிஜ்ரி 1442 இல் நுழையவிருக்கும் எமக்கு எமது வாழ்வை திட்டமிடுவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தினை நாம் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்வின் அனைத்து பகுதிகளையும் தழுவியதாக எமது திட்டமிடல் அமைந்திருக்க வேண்டும் என்ற வகையில் பின்வரும் பிரதான சில அம்சங்களை மையப்படுத்தி நமது வாழ்வை ஒழுங்குபடுத்த முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்.

ஆன்மீகம், தஃவா, அறிவு, பொருளாதாரம், பண்பாடு, உடலாரோக்கியம், தொழில்,  குடும்ப விவகாரம், சமூக உறவுகள் போன்றவற்றில் நம்மை நாமே சென்ற வருடத்தோடு ஒப்பிட்டு சுயவிசாரணை செய்துகொள்வதோடு இந்த வருடத்துக்காக திட்டமிட்டு வாழ்வை ஒழுங்குபடுத்த முயற்சிப்போம்.

அத்தோடு இம்மாதத்தின் மகிமையைப் பேணி நபிகளாரின் மிக முக்கியமான சுன்னாக்களை கடைப்பிடிக்க உறுதி கொள்வோம்.  இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி அவர்கள் தனது லதாஇஃபுல் மஆரிப் என்ற நூலில் அபூஉஸ்மான் அந்நஹ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முன்னைய ஸலபுஸ் ஸாலிஹீன்கள் பற்றிக் கூறியதை இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்; “ஸலபுஸ் ஸாலிஹீன்கள் மூன்று பத்து இரவுப் பொழுதுகளைக் கண்ணியப்படுத்தினார்கள். ரமழானின் இறுதிப் பத்து, துல்ஹிஜ்ஜாவின் முதல்பத்து, முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து தினங்களே அவையாகும்”

இம்மாதம் ஒன்பது, பத்தாம் நாட்களில் நோன்பு வைப்பதால் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய சிறப்புக்களை பின்வரும் நபிகளாரின் பொன்மொழிகளினூடாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பாகக் கருதி தேடியதாக நான் அறியவில்லை. இந்த மாதத்தை (ரமழான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பாகக் கருதி தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி,முஸ்லிம்)

ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஆஷுரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

இந்த செய்தி ஸஹீஹ் முஸ்லிமில் நம்பத்தகுந்த அறிவிப்பாளர் வரிசையினூடாக பதிவாகியுள்ள தரமான செய்தியாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஆஷுரா நாளின் போது நோன்பு வையுங்கள் அதற்கு முன் ஒரு நாள் அல்லது அதற்கு பின் ஒரு நாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்.(அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி,)

இந்த செய்தி அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி போன்ற கிரந்தங்களிலும் இன்னும் பல கிரந்தங்களிலும் பதியப்பட்டிருந்தாலும் கூட இந்த செய்தி பலவீனமானதாகும். இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுகின்ற முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் என்பவரது மனன சக்தியில் கடுமையான கோளாறு காணப்பட்டமையினால் ஹதீஸ் துறை இமாம்களான அஹ்மத் இப்ன் ஹன்பல் மற்றும் யஹ்யா இப்னு மஈன் ரஹிமஹுமுல்லாஹ் போன்றோர் இவரை பலவீனமானவர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் மேலுள்ள பலவீனமான செய்தியை விட்டுவிட்டு ஆதாரபூர்வமான “எதிர்வரும் வருடம் நான் இருந்தால் ஒன்பதையும் சேர்த்து நோற்பேன்” என்ற ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஒன்பதாம் மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு வைப்பதே நபிகளாரின் சுன்னாவைப் பேணுவதற்கு பொருத்தமான வழி முறையாகும்.

மலரவிருக்கும் இஸ்லாமியப் புத்தாண்டை ஆழமாக திட்டமிட்டு அழகாக பயன்படுத்த முயற்சிப்பதோடு இம்மாதத்திலுள்ள சுன்னத்தான நோன்புகளையும் நோற்று இதன் முழுப் பலாபலன்களையும் பெற்றுக் கொள்வோமாக.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.