கொரோனா வைரஸ் தண்டனையா?

உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர்

0 1,035

 

உலகெல்லாம் பரவி பல உயிர் அழிவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று நோயைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தினுள்ளே பல கலந்துரையாடல்களும் நடந்து வருகின்றன. இது இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இறைவன் கொடுத்த தண்டனை என்ற கருத்துப் போக்கிலும் கருத்து வெளியிடப்பட்டமையையும் அவற்றிடையே பாhக்கிறோம். அது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியிலும் பரவி ஓர் எதிர் மறைத்தாக்கத்தை விளைவித்திருப்பதும் அவதானிக்கத்தக்கது. இக்கருத்தை தெளிவுபடுத்துவது அவசியம் என்ற வகையில் இச்சிறிய கட்டுரையை எழுதுகிறேன்.

இஸ்லாத்தின் எதிரிகளை அல்லாஹ் தண்டிக்கிறான் எனப் பேசப்படும் போது இப்னுகதீர் தமது தப்ஸீரில் சூரா யூனுஸில் பிர்அவ்னின் அழிவு சம்பந்தமாக வசனமொன்றுக்கு விளக்கம் சொல்லும் போது குறிப்பிடும் ஒரு ஹதீஸ் எனக்கு ஞாபகத்தில் வருவதுண்டு. அந்த ஹதீஸையே முதலில் இங்கு குறிக்கின்றேன்.
அதற்கு இப்னு கதீர் விளக்கம் சொல்லும் இறைவசனம் கீழ் வருமாறு:

இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடந்து செல்லச் செய்தோம். பிர்அவ்னும் அவனது படையினரும் அத்துமீறலும், எதிர்ப்பும் கொண்ட மனப்பாங்குடன் அவர்களைப் பின்தொடர்ந்தனர். மூழ்கும் நிலைக்கு பிர்அவ்ன் உட்பட்ட போது பனூ இஸ்ராயீல் நம்பிக்கை கொண்ட கடவுள் தவிர வேறு கடவுள் கிடையாது அவனை நான் நம்பிக்கை கொண்டேன், நான் அவனைக் கீழப்படிவோரில் ஒருவனானேன் என்றான். (சூரா யூனுஸ் 90)

இப்னு கதீர் இவ்வசனத்திற்கான விளக்கத்தின் போது குறிக்கும் ஹதீஸ் கீழ்வருமாறு.
இப்னு அப்பாஸ் (றழி) அறிவிக்கிறார்கள் : இறைதூதர் (ஸல்) கூறினார்கள் பனூ இஸ்ராயீல் நம்பிக்கை கொண்ட கடவுள் தவிர வேறு கடவுள் கிடையாது அவனை நான் நம்பிக்கை கொண்டேன்….. என பிர்அவ்ன் கூறிய போது நிகழ்ந்ததை ஜிப்ரீல் கீழ்வருமாறு என்னிடம் கூறினார்.

“முஹம்மதே இறை கருணை பிர்அவ்னையும் அடைந்துவிடலாம் எனப் பயந்து சேற்றை எடுத்து அவனது வாயில் நான் திணித்தமையை நீர் பார்த்திருக்க வேண்டுமே.”
அல்தப்ஸீர் – அஹ்மத் ஷாகிர் (தப்ஸீர் இப்னு கதீரின் சுருக்க நூல்) அஹ்மத் ஷாகிர் இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது என்கிறார். முஸ்னத் அஹ்மத் 3821 ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி ஸஹீஹ் அல் திர்மதி 3107)

இறைவனின் கோபம், இறைவனின் பழிவாங்கல், அவனது தண்டனை என்று பேச முன்னர் அல்லாஹ்வின் மிகப் பாரிய ஆழ்ந்த கருணை பற்றி இவ்வகையான ஹதீஸ்கள் எமது ஞாபகத்திற்கு வரவேண்டும். ஒரு போதும் மக்களுக்கு இறைவன் பயங்கரமானவன், கோபமும் வெறுப்பும் கொண்டு மக்களைத் தண்டிப்பவன் என்ற பிழையான விம்பத்தை எமது விளக்கம் அல்லது எழுத்து கொடுத்துவிடக் கூடாது.
இந்த அடிப்படை உண்மைக்குப் பின்னர் இப்போதைய எமது பிரச்சினைக்கு வருவோம். கொரோனா தொற்று நோய் என்ற நிகழ்வைக் கீழ்வருமாறு புரிந்து கொள்வதே பொருத்தம் எனக் கருதுகிறேன்.

முதலில் தண்டனை பற்றிய அல்குர்ஆனின் சிந்தனையை நபிமார்கள் வரலாற்றினூடாக முதலாவது நோக்குவோம்.

1. நூஹ் (அலை) அவர்களது சமூகம், ஆத், ஸமூத் ஆகிய சமூகங்களின் அழிவுகள் குறிப்பிட்ட நபிமார்களும் அவர்களை நம்பிக்கை கொண்ட சொற்பத் தொகையினரும் தம்மைக் காத்துக்கொள்ள முடியாமல் பலவீன நிலையில் இருந்த போது நிகழ்ந்தது. எனவே தான் இறைதூதை எதிர்ப்பவர்கள் அழிக்கப்படுவது என்பது பொதுவானதொரு போக்காகக் காணப்படவில்லை என்பதனை அவதானிக்கிறோம். மூஸா (அலை) அவர்களை எதிர்த்த பிர்அவ்னும் அவனது படையினரும் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றித் துரத்தி வந்த போது தான் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள். எகிப்தில் வாழ்ந்த பிர்அவ்னின் சமூகம் இறைதூதை ஏற்றுக்கொள்ளாத போதும் தண்டனை வழங்கப்படவில்லை.

இப்றாஹீம் (அலை) மிகப் பெரியதொரு தூதர் அவர்களது பிரார்த்தனையின் விளைவே முஹம்மத் (ஸல் ) அவர்களது சமூகம் என அல்குர்ஆன் கூறுகிறது. அப்பெரும் நபியை அந்த சமூகம் நெருப்புக் குழியில் எறிந்தும் கூட அந்த சமூகம் தண்டிக்கப்படவில்லை. இப்றாஹீம் (அலை) மிக நீண்ட பிரயாணங்கள் மேற்கொண்டு தமது தூதை வெற்றி பெறச் செய்ய கடும் பாடுபட்டார்கள். இறுதியில் மக்காவில் தனது மனைவியையும், மகனையும் குடியமர்த்தி அங்கிருந்து உயர்ந்த சமூகம் தோன்றப் பிரார்த்தித்தார்கள். ஈஸா (அலை) தம் தூதைக் கொண்டு வந்த போது அவரது சமூகத்தால் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்டார்கள். எனினும் மிகுந்த பொறுமையுடன் பாடுபட்ட அவர்களை இறைவன் விசேடமாகக் காப்பாற்ற வேண்டியதாயிற்று. தமது சமூகத்திற்கெதிராக அவர்கள் தண்டனை இறங்க வேண்டுமென எண்ணவில்லை. மறுமையில் இறை விசாரணையின் போது கூட அவர்கள் கீழ்வருமாறு தான் பேசுவார்கள் என அல்குர்ஆன் கூறுகிறது. நீ அவர்களைத் தண்டித்தாலும் அவர்கள் உனது அடியார்களேயாவர். நீ அவர்களை மன்னித்துவிட்டால் நீயே யாவரையும் மிகைத்த சக்தியுடையவனும் மிகுந்த ஞானமுள்ளவனுமாவாய் (5:118)

2. உலகம் என்பது அடிப்படையில் தண்டனைக்கோ, வெகுமதிக்கோ உரிய இடமன்று சோதனைக்குரிய இடமாகும் என அல்குர்ஆன் கூறுகிறது: அனைத்து ஆன்மாக்களும் மரணத்தை சுவைக்கும். உங்களை நன்மை தருபவற்றாலும் தீங்கு தருபவற்றாலும் பரீட்சித்தல் என்ற கருத்தில் சோதிப்போம். எம்மிடமே நீங்கள் மீளக் கொண்டு வரப்படுவீர்கள் (21:35)

உலகம், வளங்களும் அவற்றின் விளைவான சந்தோஷங்களும் கொண்டது போல துன்பங்களும், கஷ்டங்களும் நிறைந்ததாகவே இருக்கும். இது இறைவன் படைத்த இவ்வுலகின் போக்கு. உடற் குறைபாடுகளோடு மனிதர்கள் துன்பப்படுவது போன்றே பௌதீக உலகின் துன்பங்களான நிலநடுக்கம், வெள்ளம், எரிமலைகள் என்பவற்றாலும் துன்பப்படுவர். மனிதர்களைப் பீடிக்கும் நோய்களும் இவ்வகை சார்ந்தவைதான்.

3. மக்களது கைகள் சம்பாதித்தவற்றால் நிலத்திலும், கடலிலும் சீர்கேடுகள் தோன்றிவிட்டன அதன் விளைவாக அவர்கள் மீளலாம் என்பதற்காக அவர்களின் தீயசெயல்களின் விளைவை இறைவான் சுவைக்கச் செய்கிறான் (30:41)
துன்பங்களும், கஷ்டங்களும் மனிதர்களது செயல்களின் விளைவாக அமைகின்றன என இவ்வசனம் விளக்குகிறது. இப்போது மனித சமூகம் எதிர்கொண்டிருக்கும் இக்கொரோனா வைரஸ் பிரச்சினையையும் அவ்வாறு நோக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

மனிதவாழ்வில் குற்றச் செயல்களும், பாவங்களும் மலிந்துவிட்டன. சமூகங்களுக்கும் நாடுகளுக்குமிடையிலான முரண்பாடுகளும், எதிர் நடவடிக்கைகளும் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றன. வல்லரசுகளுக்கிடையிலான போட்டி என்பது அன்றாடம் நாம் அவதானிக்கும் நிகழ்ச்சி நிரலாகப் போய்விட்டது. பொருளாதார ஆதிக்கமும், சுரண்டலும் அதன் உச்ச நிலையை அடைந்துள்ளது. அத்தோடு பூமியின் பௌதீகக் கட்டமைப்பை பாதிக்கும் செயற்பாடுகள் மலிந்து சூழல் மாசடைதல் என்பது உலக மக்களுக்கு ஒரு பயங்கர எதிர்காலத்தை எதிர்வு கூறும் நிலை உருவாகிவிட்டுள்ளமை பொதுவாக அறியப்பட்ட உண்மையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் மனிதன், கொரோனா எங்கிருந்து உருவாகியது? அது ஒரு சதிமுயற்சியுடன் கூடிய செயற்கை உருவாக்கமா? அல்லது இவ்வுலகின் தார்மீக கட்டமைப்பின் இயற்கை உருவாக்கமா என்பது பற்றி தெளிவான முடிவுக்கு வர முடியாது தடுமாறுகிறான்.

“…..அவர்கள் மீளலாம் என்பதற்காக…” என்ற முன்னால் குறிப்பிட்ட இறைவசனத்தின் பகுதியை சிறிது அவதானிப்போம்.

மனிதன் கடவுளை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டான். இறைநம்பிக்கை மனிதர்களிடம் மிகப் பலவீனப்பட்டுப் போய்விட்டது. உலக செல்வங்களிலும் சுகபோகங்களிலும் மூழ்கி மனிதர்கள் ஆன்மீக ரீதியாகத் தம்மை வளர்த்துக்கொள்வதிலும் மனிதர்களது ஈடுபாடு மிகவும் குறைந்துவிட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக அமையும் மார்க்கமும் கூட வெறும் இன அடையாளமாக மாறி உள்ளமை சமூகவாழ்வில் அவதானிக்கப்படக் கூடியதாக உள்ளது.

இந் நிலையில் மனிதர்களை மீண்டும் இறைவன் பக்கம் மீளச் செய்வதற்கான சோதனையே இதுவாகும் என்றுதான் இவ்வசனம் விளக்குகிறது. இறைவன் மனிதர்கள் மீது கருணை கொண்டவன். எனவே சீர்கெட்டுப் போன அவர்களது வாழ்வை சீராக்கவே இவ்வாறான சோதனைகள் நிகழ்கின்றன என்பதனை இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். இது முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும் அடக்கும் உண்மையாகும் என்பது கண்டிப்பாகப் புரியப்பட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் உலகில் ஆங்காங்கே உலகின் மீள் ஒழுங்கு பற்றிய குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன என்பதனையும் அவதானிக்கிறோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.