தொப்பி, ஹிஜாப் அணிந்து எடுத்த புகைப்படங்களை நிராகரிக்கின்றனர்

ஆட்பதிவு திணைக்களத்திடம் உலமா சபை முறைப்பாடு

0 1,562

தேசிய அடை­யாள அட்டை பெற்­றுக்­கொள்ள ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்­துக்கு செல்லும் முஸ்லிம் ஆண்­களின் தொப்­பி­யு­ட­னான புகைப்­ப­டங்­க­ளையும், முஸ்லிம் பெண்­களின் தலையை மறைத்­துள்ள ஹிஜா­பு­ட­னான புகைப்­ப­டங்­க­ளையும் ஆட்­களைப் பதி­வு­செய்யும் திணைக்­கள அதி­கா­ரிகள் நிரா­க­ரிப்­ப­தாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. இத­னை­ய­டுத்து இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஆட்­களைப் பதி­வு­செய்யும் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாய­கத்­துக்கு முறைப்­பாடு செய்­துள்­ளது.

இதே­வேளை தேசிய அடை­யாள அட்­டைக்­கான புகைப்­ப­டங்கள் எடுப்­ப­தற்கு அனு­மதி பெற்­றுள்ள புகைப்­பட நிலை­யங்கள் (ஸ்டூடி­யோக்கள்) முஸ்லிம் ஆண்கள் தொப்பி மற்றும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்­தி­ருந்தால் புகைப்­படம் எடுப்­ப­தற்கு மறுப்­புத்­தெ­ரி­விப்­ப­தா­கவும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை முறைப்­பாடு செய்­துள்­ளது. ஸ்டூடி­யோக்கள் ஆண்கள் தொப்­பியை அல்­லது முஸ்லிம் பெண்கள் தலையை மூடி­யுள்ள ஹிஜாபை கழற்­றினால் மாத்­தி­ரமே புகைப்­படம் எடுக்க முடியும் எனத் தெரி­விப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.

ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­களம் முஸ்லிம் ஆண்கள் தொப்பி அணிந்து தேசிய அடை­யாள அட்­டைக்­கான புகைப்­படம் எடுப்­ப­தற்கும் முஸ்லிம் பெண்கள் தலையை மூடி ஹிஜாப் அணிந்து புகைப்­படம் எடுப்­ப­தற்கும் சட்ட ரீதி­யாக அனு­மதி வழங்­கி­யுள்ள நிலையில் ஆட்­களைப் பதி­வு­செய்யும் திணைக்­கள அதி­கா­ரி­களும், புகைப்­பட நிலை­யங்­களும் தாம் நினைத்­த­வாறு செயற்­ப­டு­வது முஸ்­லிம்­களை பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் தெரி­வித்தார்.
முஸ்­லிம்­களின் சட்­ட­ரீ­தி­யான உரி­மைகள் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வது தவிர்க்­கப்­பட வேண்டும். கலா­சார அமைச்சும் ஆட்­களைப் பதி­வு­செய்யும் திணைக்­க­ளமும் இது தொடர்பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வேண்டும் என்றார்.

ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்தின் சுற்­று­நிருபம்

ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­களம். பணிப்­பாளர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் எனக் குறிப்­பிட்டு 2011.09.19 ஆம் திகதி 01/ஆ/மா.ச/45 எனும் இலக்­க­மிட்டு சுற்­று­நி­ருபம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்­ளது. அதன் பிர­திகள் செய­லாளர், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, மாவட்ட செய­லா­ளர்கள், பிர­தேச செய­லா­ளர்கள், நிறை­வேற்று அதி­கா­ரிகள், அனைத்து பணிப்­பா­ளர்கள் ஆகி­யோ­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

சுற்­று­நி­ருபம் இவ்­வாறு தெரி­விக்­கி­றது

இதன் பின்பு தேசிய அடை­யாள அட்டை பெற்­றுக்­கொள்ள புகைப்­படம் எடுக்கும் போது முஸ்லிம் சமய உல­மாக்கள், போத­கர்கள், சம­யத்தை பயிலும் மாண­வர்கள் அத்­தோடு ஏனைய முஸ்லிம் ஆண்கள் தலையை மூடி தொப்பி அணி­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­டு­கி­றது. தொப்பி அணியும் போது தலை மாத்­திரம் மறைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். நெற்றி மறை­யா­தி­ருக்க வேண்டும்.

பெண்கள் பர்தா அணியும் உரி­மைக்­குத்­த­டை­யில்லை. ஆனால் காதுகள் தெளி­வாகத் தெரிய வேண்டும். பல்­வேறு முஸ்லிம் சமய அமைப்­பு­களின் வேண்­டு­கோ­ளின்­படி இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இச்­சுற்­று­நி­ருபம் அப்­போ­தைய ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­கள ஆணைாளர் நாயகம் ஜகத்.பி.விஜே­வீ­ர­வினால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சுற்­று­நி­ருபம் 2011 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அப்­போ­தைய பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் மேற்­கொண்ட கலந்­து­ரை­யா­டலின் பின்பே வெளி­யி­டப்­பட்­ட­தா­கவும் தானும் கலந்­து­ரை­யா­டலில் பங்கு கொண்­ட­தா­கவும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்டி மாவட்ட கிளையின் தலைவர் மெள­லவி எச்.ஒமர்தீன் தெரி­வித்தார்.

அண்­மையில் தனது மக­னது தேசிய அடை­யாள அட்டை பெற்­றுக்­கொள்ள ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்­துக்குச் சென்­ற­போது அங்­குள்ள பெண் அதி­காரி மகனின் தொப்­பி­யு­ட­னான புகைப்­ப­டத்தை நிரா­க­ரித்­த­தா­கவும் அவர் தெரி­வித்தார். பின்பு பல்­வேறு தெளி­வு­களை வழங்கி இறு­தியில் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்தின் சுற்­று­நி­ரு­பத்தைக் காட்­டி­ய­தனை அடுத்து மன்­னிப்­புக்­கோ­ரி­ய­துடன் தொப்பி அணிந்­தி­ருந்த மகனின் புகைப்­ப­டத்தை அவர்கள் ஏற்­றுக்­கொண்­ட­தாகத் தெரி­வித்தார். ஆனால் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்து செல்லும் பாமர விண்­ணப்­ப­தா­ரி­களின் விண்­ணப்­பங்கள் தொப்பி, பர்தா அணிந்த கார­ணத்­தினால் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் கூறினார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.