நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தை துரிதமாக பகிர்ந்தளிக்க அரசாங்கம் திட்டம்

சபாநாயகர் தலைமையில் முக்கிய கூட்டம்

0 803

அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை பிர­தே­சத்தில் சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் நிதி­யு­த­வியில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுனாமி வீட்டுத் திட்­டத்­தினை துரி­த­க­தியில் பய­னா­ளி­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்­ளது.

இது தொடர்­பி­லான விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றது.

இதில் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தயா கமகே, பைசல் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நசீர், கலா­நிதி எஸ்.எம்.எம்.இஸ்­மாயில், கே.கோடீஸ்­வரன் மற்றும் இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் அப்துல் நாசர் எச். அல் ஹாரீத் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பினர் கலந்­து­கொண்­டனர்.

குறித்த வீட்டுத் திட்­டத்­தினை துரி­த­மாகக் கைய­ளிப்­பது தொடர்பில் இதன்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.

எனினும், அமைச்சர் தயா கம­கேயின் கருத்­தினால் விசே­ட­மாக கூட்­டப்­பட்ட இந்தக் கூட்டம் எந்­த­வித தீர்­மா­ன­மு­மின்றி முடி­வுற்­றது என அவர் குற்­றச்­சாஞ்­சாட்­டினார். இந்தக் கூட்டம் தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீஸ், விடி­வெ­ளிக்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

“நாட்­டி­லுள்ள இன விகி­தா­சாரத்­திற்­க­மைய குறித்த வீட்டுத் திட்டம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்று அமைச்சர் தயா கமகே இதன்­போது தெரி­வித்தார். எனினும் இந்த கூட்­டத்தில் கலந்­து­கொண்ட அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பலத்த எதிர்ப்­பினை வெளியிட்­ட­துடன் சுனா­மியால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மாத்­தி­ரமே இந்த வீட்டுத் திட்­டத்­தினை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

இந்தக் கூட்­டத்தில் கலந்­து­கொண்ட சவூதி அரே­பிய தூதுவர் அப்துல் நாசர் எச். அல் ஹாரீதும், சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கே இந்த வீடுகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்ற அடிப்­ப­டை­யி­லேயே கருத்து வெளி­யிட்டார்.
அமைச்சர் தயா கம­கேயின் கருத்­தினால் இந்தக் கூட்டம் எந்­த­வித தீர்­மா­ன­மு­மின்றி நிறை­வு­பெற்­றது. எவ்­வா­றா­யினும் அம்­பாறை மாவட்ட செய­லாளர் தலை­மையில் மிக விரைவில் கூடி இது தொடர்பில் இறுதித் தீர்­மா­ன­மொன்றை மேற்­கொள்ள இணக்கம் காணப்­பட்­டது.

இதனால் இந்த வீட்டுத் திட்டம் சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு விரைவில் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­மென்ற நம்­பிக்­கை­யுள்­ளது. இதற்குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் முன்­னெ­டுக்கும்” என்றார்.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை மாவட்ட முஸ்லிம் மக்­க­ளுக்­காக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்­ரபின் முயற்­சி­யினால் சவூதி அர­சாங்­கத்­தினால் இந்த வீட்டுத் திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

550 கோடி ரூபா நிதியில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட இந்த வீட்டுத் திட்­டத்தில் 500 வீடுகள், ஆண்கள் மற்றும் பெண்கள் பாட­சா­லைகள், பள்­ளி­வாசல், வைத்­தி­ய­சாலை, நூலகம், பொதுச் சந்தை, கலா­சார மண்­டபம் மற்றும் பேருந்து நிலையம் ஆகி­யன உள்­ள­டங்­கி­யுள்­ளன.

இந்த வீட­மைப்புத் திட்டம் உரிய பய­னா­ளி­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட இருந்த நிலையில், ஜாதிக ஹெல உறு­ம­ய­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட மனு­விற்­க­மைய இந்த வீட்டுத் திட்­டத்­தி­லுள்ள வீடுகள் மூவின மக்­களின் விகி­தா­சாரத்­திற்­க­மைய பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்­டு­மென முன்னாள் நீதி­ய­ரசர் சரத் என். சில்வா தலை­மை­யி­லான உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழு­வினால் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

இதனால் 2007ஆம் ஆண்டு கட்டி முடிக்­கப்­பட்ட இந்த வீட­மைப்புத் திட்டம் இன்று வரை உரிய பய­னா­ளி­க­ளுக்கு கைய­ளிக்­கப்­ப­டாமல் பாழ­டைந்தும், சேத­ம­டைந்தும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்ட சவூதி அரேபியாவின் சூரா சபையின் (பாராளுமன்றம்) தலைவர் கலாநிதி அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹிம் அஷ் ஷெயின் விடுத்த வேண்டுகோளினை அடுத்தே அக்கரைப்பற்று சுனாமி வீடமைப்புத் திட்டம் தொடர்பாக கூட்டம் சபாநாயகரினால் கூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.