உசாத்துணையிடல் பாணிகள் (Referencing Styles)

0 8,228

அறி­முகம்

இன்று உயர் கல்­விக்­கான வாய்ப்பு வச­திகள் அதி­க­ரித்­துள்­ளதால், பலர் உயர் கல்­வியில் அதிக நாட்டம் செலுத்தி வரு­கின்­றனர். உயர் கல்விப் பாடப்­ப­ரப்­புக்கள், மாண­வர்­களை ஆய்வு சார்ந்த விட­யங்­க­ளிலும், சுய வாசிப்பு, தேடல்­களை உறுதி செய்யும் வகை­யி­லான பல்­வேறு ஒப்­ப­டை­க­ளின்­பாலும் ஈடு­ப­டுத்­து­கின்­றன. மேலும், உயர்­கல்வி வாய்ப்­புக்­களைப் பெற நாடுவோர், ஆய்வு முன்­மொ­ழி­வு­களை சமர்ப்­பிக்க வேண்­டிய தேவை­களும் காணப்­ப­டு­கின்­றன. உயர்­கல்­வியில் ஈடு­படும் மாண­வர்கள், ஆய்வுக் கட்­டு­ரைகள் எழு­துதல், அவற்றை ஆய்வு மாநா­டு­க­ளுக்கு சமர்ப்­பித்தல், ஆய்வுச் சஞ்­சி­கை­க­ளுக்கு அவற்றை அனுப்பி வெளி­யிடல் போன்­ற­வற்றில் அதிகம் ஈடு­பட வேண்­டி­யுள்­ளது. இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில், அநேகர் தடு­மாறும், அதிகம் தவ­று­களை விடும் பகு­தி­யாக உசாத்­துணை பகுதி காணப்­ப­டு­கி­றது. இதனை கருத்திற் கொண்டு, இக்­கட்­டு­ரையில், உசாத்­து­ணை­யிடல் தொடர்­பான அடிப்­படை விட­யங்கள் விளக்கிக் கூறப்­ப­டு­கின்­றன.

மேற்கோள் காட்டல், உசாத்­துணை மற்றும் நூல்­வி­ப­ரப்­பட்­டியல் (Citation, Reference and Bibliography)

உசாத்­து­ணை­யிடல் தொடர்­பாக விரி­வாக நோக்க முதல், மேற்கோள் காட்டல் (Citation) உசாத்­துணை (Reference) மற்றும் நூற்­பட்­டியல் (Bibliography) ஆகி­யன பற்றி அறிந்து கொள்வோம். மேற்கோள் காட்டல், என்­ப­தனை ஆங்­கி­லத்தில் Citation என்­ற­ழைப்பர். Reference எனும் போது அது உசாத்­துணை எனவும் Bibliography என்­பது நூல்­வி­ப­ரப்­பட்­டியல் அல்­லது நூற்­றொகை என்றும் அழைக்­கப்­ப­டு­கின்­றன. கல்வி சார்ந்த ஆக்­கங்­களை குறிப்­பாக, கட்­டு­ரைகள், ஒப்­ப­டைகள், ஆய்வு முன்­மொ­ழி­வுகள், ஆய்வுக் கட்­டு­ரைகள், நூல்கள் போன்­ற­வற்றை எழுதும் போது, அவற்றில் நாம் எழுதும் அநேக கருத்­துக்கள், எமது வாசிப்பின் ஊட­கவோ, கேட்­பொலி, காணொலி­கள்­ ஆ­கி­ய­வற்றின் ஊடாகவோ பெற்­றுக்­கொண்ட அறிவு, தக­வல்கள், தர­வுகள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கிக் காணப்­படும். மட்­டு­மன்றி, எமது கருத்­துக்­க­ளுக்கு வலு சேர்க்கும் வகையில், எமது வாசிப்­பி­னூ­டான பல்­வேறு சான்­று­களை முன்வைக்க வேண்­டிய தேவை­களும் ஏற்­படும். எமது வாசிப்­பி­னூ­டாக பெற்­றுக்­கொண்ட பிற­ரது சிந்­த­னைகள், கருத்­துக்கள், தர­வுகள் ஆகி­ய­வற்றை எமது கட்­டு­ரை­களில் எழுதும் போது, அவற்றை எங்­கி­ருந்து வாசித்து, கேட்டு, பார்த்து அறிந்து கொண்­டோமோ அவற்றின் மூலங்­களை குறிப்­பிட்டுக் காட்­டு­வது முக்­கி­ய­மாகும். இன்றேல், பிறர் கருத்­து­களை நாம் நக­லாக்கம் செய்த குற்­றத்­துக்கு ஆளாகி விடுவோம். கல்வி சார்ந்த பல்­வேறு ஆக்­கங்­களில் இத்­த­கைய நக­லாக்க குற்­றத்தை தவிர்க்கும் பொருட்டு குறித்த கருத்­துக்­களை எழுதும் போது அதன் மூலத்­தினை (source) அதா­வது அக்­க­ருத்­துக்கு உரிய உண்­மை­யான ஆசி­ரியர் பெய­ரினை குறிப்­பிட்டுக் காட்­டு­வது மேற்கோள் காட்டல் எனப்­ப­டு­கின்­றது. இதனை ஆங்­கி­லத்தில் In-text citation என்று கூறுவர். இதில் சில வகைகள் காணப்­ப­டு­கின்­றன. பின்­வரும் உதா­ர­ணங்­கள் மூலம் இதனை விளங்கிக் கொள்­ளலாம்:

உதா­ரணம் 1: இன்­றைய காலத்தில் கல்வி சமூகப் பெயர்ச்­சிக்­கான முக்­கிய கரு­வி­யாக விளங்­கு­கி­றது (கரீம்தீன், 2016).
உதா­ரணம் 2: கரீம்தீன் (2016) என்­பவர் இன்­றைய காலத்தில் கல்வி சமூகப் பெயர்ச்­சிக்­கான முக்­கிய கரு­வி­யாக விளங்­கு­கி­றது எனக் கூறு­கிறார்.
உதா­ரணம் 3: இன்­றைய காலத்தில் கல்வி சமூகப் பெயர்ச்­சிக்­கான முக்­கிய கரு­வி­யாக விளங்­கு­கி­றது (1).
உதா­ரணம் 4: சமூகப் பெயர்ச்சி என்­பது கைத்­தொழில் சமூ­கத்தில் மிக விரை­வாக ஏற்­ப­டு­கின்­றது எனவும் இந்த சமூகப் பெயர்­ச்சி­யினை ஏற்­ப­டுத்தும் மிகப் பிர­தான கருவி கல்வி என்­பதும் மறுக்க முடி­யாத உண்­மை­யாகும் (கரீம்தீன், 2016, ப. 79).

மேற்­காட்­டப்­பட்ட உதா­ர­ணங்­களில், முதல் மூன்றும் நேர­டி­யற்ற மேற்கோள் காட்­டல்கள் ஆகும். நான்காம் உதா­ரணம், நேர­டி­யான மேற்கோள் காட்டல் ஆகும். மேற்கோள் காட்­டலில் நூலா­சி­ரியர் பெயரும் வரு­டமும் மட்­டுமே குறிப்­பி­டப்­படும். அல்­லது இலக்­கங்கள் இடப்­பட்டு, அதன் விரி­வான விவரம் கடை­சியில் உசாத்­து­ணையில் தரப்­படும். நேர­டி­யான மேற்­கோள்­களில் மாத்­திரம் நூலா­சி­ரியர் பெயரும் வரு­டமும், குறித்த மேற்கோள் காணப்­படும் பக்­கங்­களும் குறிப்­பி­டப்­படும். அதா­வது பிறர் கருத்தில் எந்த வித மாற்­ற­மு­மின்றி அப்­ப­டியே எழு­து­வ­தனை இது குறிக்­கி­றது. இதனை நாம் எடுத்­துக்­காட்டு (Quotation) எனக் கூறு­கிறோம்.

கல்வி சார்ந்த ஆக்­கங்­க­ளான கட்­டு­ரைகள், ஒப்­ப­டைகள், ஆய்வு முன்­மொ­ழி­வுகள், ஆய்வுக் கட்­டு­ரைகள், நூல்கள் போன்­ற­வற்றின் உட்­பந்­தி­களில் (In-text) மேற்கோள் காட்­டிய அனைத்­தி­னதும் முழு­மை­யான விவ­ரங்­களை அதா­வது, நூலா­சி­ரியர் பெயர், வரு­டத்­துடன், குறித்த ஆக்­கத்தின் பிர­சுர விட­யங்­களை முழு­மை­யாக, எமது கல்­விசார் ஆக்­கங்­களின் இறுதி பக்­கத்தில் பட்­டி­ய­லிட்டு காட்­டு­வ­தையே, உசாத்­துணை (Reference) எனப்­ப­டு­கி­றது. எனவே, உசாத்­துணை என்ற தலைப்பில் பட்­டியல் இடும் நூல்கள், கட்­டு­ரைகள் என்­ப­ன­வற்றின் உட்­ப­கு­தி­களில், மேற்கோள் இடப்­பட்­ட­தா­கவோ, எடுத்­துக்­காட்­டப்­பட்­ட­தா­கவோ இருத்தல் வேண்டும். மாறாக, எமது கல்­விசார் கட்­டு­ரை­களின் உட் பந்­தி­களில் மேற்கோள் காட்­டி­ய­வற்­றுடன், மேற்கோள் காட்­டாத நூல் விவ­ரங்­க­ளையும் இணைத்து வரும் பட்­டியல், நூல்­வி­ப­ரப்­பட்­டியல் அல்­லது நூற்­றொகை (Bibliography) என்­ற­ழைக்­கப்­படும். அதி­க­மான ஆய்வு மாண­வர்கள், இவ்­வே­று­பாட்­டினை புரிந்து கொள்­ளாமல் உசாத்­துணை பட்­டியல் கோரப்­படும் ஆய்வுக் கட்­டு­ரை­களில் நூல்­வி­ப­ரப்­பட்­டியல் அல்­லது நூற்­றொ­கை­யினை எழுதி விடு­கின்­றனர். ஆய்­வு­களில் ஈடு­ப­டுவோர், பல்­வேறு கட்­டு­ரை­களை எழு­துவோர், உசாத்­துணை மற்றும் நூல்­வி­ப­ரப்­பட்­டியல் ஆகி­ய­வற்­றி­லுள்ள இந்த வேறு­பாட்டை அறிந்து செயற்­ப­டு­வது முக்­கி­ய­மாகும்.

குறிப்­புரை நூல் விவரப் பட்­டியல் (Annotated Bibliography)

உசாத்­துணை மற்றும் நூல்­வி­ப­ரப்­பட்­டியல் தவிர குறிப்­புரை நூல் விவரப் பட்­டியல் (Annotated Bibliography) என்ற வகையும் பயன்­பாட்டில் உள்­ளது. இந்த குறிப்­புரை நூல் விவரப் பட்­டி­ய­லினை ஒரு தலைப்பின் கீழ் ஆழ­மான புரி­த­லையோ, வாசிப்­பி­னையோ உறுதி செய்யும் வகையில் பல உயர்­கற்கை நெறிகள் பயிற்­சி­யாக வழங்­கு­வ­துண்டு. ஆய்­வா­ளர்கள், இலக்­கிய மீளாய்வில் ஈடு­படும் போதும், குறிப்­புரை நூல் விவரப் பட்­டி­ய­லினை தயா­ரித்துக் கொள்­வ­துண்டு. இதில், நூல்­வி­ப­ரப்­பட்­டி­ய­லுக்கு (Bibliography) மேல­தி­க­மாக வாசிப்­புக்கு எடுத்துக் கொள்­ளப்­படும், ஒவ்­வொரு நூல், கட்­டு­ரைகள் பற்­றிய விவ­ரங்கள், சுருக்­க­மாக (Summary) தொகுக்­கப்­படும். இதன் மூலம், ஒவ்­வொரு நூல் அல்­லது, கட்­டுரை பற்­றிய சிறிய அறி­மு­கக்­கு­றிப்பு பெறப்­படும். இதில், குறிப்­பிட்ட நூல் அல்­லது கட்­டு­ரையின் முழு­மை­யான நூல் விவரப் பட்­டி­ய­லுடன் ஆசி­ரியர்களின் பின்­னணி, குறித்த பிர­சு­ரத்தின் நோக்­கமும் பரப்பும், அதன் மையக் கருத்­துக்கள், யாருக்­காக எழு­தப்­பட்­டது, நூலின் முறை­யியல், ஆசி­ரி­யரின் அணு­கு­முறை, பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மூலங்கள், மூலங்­களின் நம்­ப­கத்­தன்மை, வலி­மை­களும் பல­வீ­னங்­களும், ஏனைய கட்­டு­ரை­க­ளு­ட­னான ஒப்­பீடு, குறித்த பிர­சுரம் தொடர்­பான வாசிப்­பா­ளனின் தனிப்­பட்ட கருத்­துக்கள் ஆகி­ய­வற்­றினை உள்­ள­டக்­கிய ஓரு சுருக்க விமர்­சனப் பகு­தி­யாக இது விளங்கும்.

இக்­கு­றிப்­புரை நூல் விவரப் பட்­டியல் தயா­ரிக்கும் நோக்கம், பயன்­பாடு ஆகி­ய­வற்றைப் பொறுத்து இதில் மேலும் மூன்று வகைகள் உள்­ளன. அவை­யா­வன: சுருக்க குறிப்­புரை நூல் விவரப் பட்­டியல் (Summary annotations), மதிப்­பீட்டு குறிப்­புரை நூல் விவரப் பட்­டியல் (Evaluative annotations), சுருக்­க­மான மற்றும் மதிப்­பீட்டு வகைகள் இரண்டும் கலந்த குறிப்­புரை நூல் விவரப் பட்­டியல் என்­பனவே அவை­க­ளாகும். சுருக்க குறிப்­புரை நூல் விவரப் பட்­டி­யலில் குறிப்­பிட்ட பிர­சுர உள்­ள­டக்கம் பற்­றிய சுருக்கம், அதில் காணப்­படும் முனைப்­பான அம்­சங்கள், ஆசி­ரி­யரின் முறை­யியல், அணு­கு­முறை, என்­பன குறிப்­பி­டப்­பட்டு இருக்கும். சுருக்க குறிப்­புரை நூல் விவரப் பட்­டியல், விளக்க குறிப்­புரை நூல் விவரப் பட்­டியல் (Informative annotations) சுட்டும் குறிப்­புரை நூல் விவரப் பட்­டியல் (indicative annotations) என மேலும் இரண்டு உப பிரி­வு­களைக் கொண்­டுள்­ளது. விளக்க குறிப்­புரை நூல் விவரப் பட்­டியல் (Informative annotations) ஒரு பிர­சு­ரத்தின் நேர­டி­யான சுருக்­கத்தைக் கொண்­டி­ருக்கும். மாறாக சுட்டும் குறிப்­புரை நூல் விவரப் பட்­டியல், குறித்த மூலத்தின் அல்­லது பிர­சு­ரத்தில் இருந்து உண்­மை­யான தக­வலை தர­மாட்­டாது. குறித்த பிர­சுரம் அல்­லது மூலத்தில் எத்­த­கைய எழு­வி­னாக்கள் பிரச்­சி­னைகள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளன என ஒரு மேற்­போக்­கான விப­ரிப்­பையே கொண்­டி­ருக்கும்.

மதிப்­பீட்டு குறிப்­புரை நூல் விவரப் பட்­டியல், சுருக்க குறிப்­புரை நூல் விவரப் பட்­டி­யலில் உள்­ள­டக்கும் விட­யங்­களை கொண்­டி­ருப்­ப­துடன், விமர்­சன ரீதி­யான நோக்­கி­னையும் உள்­ள­டக்கி இருக்கும். அதா­வது குறித்த பிர­சு­ரத்தின் வலி­மைகள், பல­வீ­னங்கள், பயன்­ப­டு­தன்மை, தரம் போன்ற பல்­வேறு அம்­சங்­களில் கவனம் செலுத்­து­வ­தாக இருக்கும். அநே­க­மான குறிப்­புரை நூல் விவரப் பட்­டி­யல்கள் மேலே காட்­டப்­பட்ட இரண்டு வகை­க­ளி­னதும் கல­வை­யா­கவே காணப்­படும். இதுவே, மூன்­றா­வது வகை­யான குறிப்­புரை நூல் விவரப் பட்­டி­ய­லாக கருத்­திற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

உசாத்­து­ணை­யிடல் பாணிகள் (Referencing Styles)

உசாத்­து­ணை­யி­டலில் ஓர் ஒழுங்­கு­மு­றை­யினை பின்­பற்றும் பொருட்டு பல்­வேறு அமைப்­புக்கள் உசாத்­து­ணை­யி­டலில் சில நிய­மங்­களை உரு­வாக்கி பின்­பற்றி வரு­கின்­றன. அதா­வது, பிற­ரது சிந்­த­னைகள், அபிப்­பி­ரா­யங்கள், கரு­மங்கள் ஆகி­ய­வற்றை குறிப்­பிட்­ட­தொரு வழியில் எவ்­வாறு ஒப்­புக்­கொள்­வது என்­ப­தற்­கான ஒழுங்கு விதி­மு­றை­களை ஏற்­ப­டுத்தி உள்­ளனர். இத­னையே, உசாத்­து­ணை­யிடல் பாணி (Referencing style) என்பர். பல்­வேறு கல்­விசார் நிறு­வ­னங்கள், பல்­க­லைக்­க­ழ­கங்கள் தமது நிறு­வனம் அல்­லது அமைப்பு சார்ந்த வெளி­யீ­டு­களில் ஓர் சீர்­தன்­மை­யினை பரா­ம­ரித்தல், பிற நிறு­வன வெளி­யீ­டு­களில் இருந்து தமது தனித்­து­வத்தை வேறு­ப­டுத்தி காட்­டுதல், என்ற நோக்­கங்­களில் உசாத்­து­ணை­யிடல் பாணி­களை உரு­வாக்கி நடை­முறைப் படுத்­து­கின்­றன. இரசாயன­வியல், பொறி­யியல், பொரு­ளியல், வான­வியல், உள­வியல், சமூக விஞ்­ஞானம், தாவ­ர­வியல் என துறை வாரி­யாக நூற்­றுக்­க­ணக்­கான உசாத்­து­ணை­யிடல் பாணிகள் காணப்­ப­டு­கின்­றன. பொது­வாக, ஆங்­கில மொழி மூல ஆய்வு இலக்­கி­யங்­களை கருத்திற் கொண்டே இத்­த­கைய உசாத்­து­ணை­யிடல் பாணிகள் மேலைத்­தேய நாடு­களில் உரு­வாக்கம் பெற்­றன. காலப்­போக்கில், சுதே­சிய மொழி­களில் வளர்ந்து வரும் ஆய்வு சார் பரப்­புக்­களில், ஆங்­கில மொழி­யி­லான ஆய்வு இலக்­கி­யங்கள் பெற்ற முக்­கி­யத்­துவம் கார­ண­மாக, மேலைத்­தேய உசாத்­து­ணை­யிடல் பாணி­களும் கீழைத்­தேய ஆய்வு இலக்­கி­யங்­களில் ஊடு­ரு­வி­யுள்­ளன. இவற்றில் மிகப் பிர­சித்­த­மான சில பின்­வரும் அட்­ட­வ­ணையில் காட்­டப்­பட்­டுள்­ளன.

அட்­ட­வணை 1:


பிர­சித்­த­மான சில உசாத்­து­ணை­யிடல் வகைகள்

ACS (American Chemical Society) என்ற அமெ­ரிக்க இர­சா­ய­ன­வியல் சங்­கத்தின் உசாத்­து­ணை­யிடல் வகை. இர­சா­ய­ன­வியல் மற்றும் அதோடு இணைந்த துறை­களில் அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.
• AGLC (Australian Guide to Legal Citation). இந்த வகை உசாத்­து­ணை­யிடல் வகை, சட்டத் துறையில் அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.
• AMA (American Medical Association): இது மருத்­துவ துறையில் அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது
• AMJ (Academy of Management style) முகா­மைத்­துவ துறை­களில் அதிகம் பயன்­ப­டுத்­தப்­படும் ஒரு உசாத்­து­ணை­யிடல் முறை­யாகும்
• APA (American Psychological Association): உள­வி­யலில் பயன்­ப­டுத்­தப்­படும் ஓர் உசாத்­து­ணை­யிடல் முறை­யாக உள்ள போதிலும், ஏனைய பல துறை­க­ளிலும், குறிப்­பாக சமூக விஞ்­ஞானத் துறை­களில் இது அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இதனால் இது ஏனை­ய­வற்றை விடவும் சற்று பிர­பல்­ய­மா­னது.
• Harvard—இது ஒரு பொது­வான முறை­யாகும். ஏனைய உசாத்­து­ணை­யிடல் முறைகள் போன்று இதற்கு உத்­தி­யோ­க­பூர்வ வழி­காட்டல் கையே­டுகள் கிடைக்கப் பெறு­வ­தில்லை. ஆயினும் இந்த முறையில் சில மாற்­றங்­களை செய்து சில நிறு­வ­னங்கள் ஹாவர்ட் என்ற பெய­ருடன் தமது பெயர்­க­ளையும், இணைத்து வழி­காட்டல் கையே­டு­களை வழங்­கு­வ­துண்டு. உதா­ரணம்: UQ Harvard Style (குயின்ஸ்­லாந்து பல்­க­லைக்­க­ழக ஹாவர்ட் முறை). கட்­டுரைப் பந்­தி­களில் மேற்கோள் காட்டும் போது ஆசி­ரியர் பெயர் மற்றும் வரு­டத்தை குறிப்­பிட்டால் அது ஹாவர்ட் முறை என்று அழைக்­கப்­ப­டு­வ­துண்டு. இதுவே APA போன்ற ஏனைய உசாத்­து­ணை­யி­டல்­மு­றை­க­ளுக்கு அடிப்­ப­டி­யாக அமைந்­துள்­ளது.
• IEEE (Institute of Electrical and Electronics Engineers): உலக பிர­சித்தி பெற்ற மின்­சார, இலத்­தி­ர­னியல் பொறி­யி­ய­லாளர் நிறு­வனம் (IEEE) வெளி­யிட்­டுள்ள உசாத்­து­ணை­யிடல் முறை­யாகும். இது பொறி­யியல், கணினி விஞ்­ஞானம் போன்ற துறை­களில் அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.
• MLA (Modern Language Association of America): நவீன மொழிகள் தொடர்­பான சம்­மே­ளத்­தினால் மொழித்­துறை சார்ந்த துறை­களில் பயன்­ப­டுத்­த­வென வெளி­யிட்­டுள்ள உசாத்­து­ணை­யிடல் முறையே. இது­வாகும்..
• Vancouver: ஹாவர்ட் முறை போன்று இதுவும் ஒரு பொது­வான உசாத்­து­ணை­யிடல் முறை ஆகும். எனினும் இது அதி­க­மாக சுகா­தார விஞ்­ஞான துறை­களில் பயன்­பாட்டில் உள்­ளது.

எந்த உசாத்­துணை முறை­யினைப் பயன்­ப­டுத்­து­வது?

பல்­வேறு உசாத்­து­ணை­யி­டல்­மு­றை­களைப் பற்றி வாசிக்கும் உங்­க­ளுக்கு இவற்றில் எதனை பயன்­ப­டுத்த வேண்டும் என்ற வினா எழு­வது இயல்­பா­னதே. பின்­வரும் சந்­தர்ப்­பங்­களில் இந்த வினா உங்­களில் எழக் கூடும்:

· ஒரு நிறு­வ­னத்தில், பல்­க­லைக்­க­ழ­கத்தில் உயர்­கல்­விக்­காக ஆய்வு முன்­மொ­ழிவை அனுப்ப வேண்­டிய தேவை உரு­வாகும் போது,
· ஓர் ஆய்வுச் சஞ்­சி­கைக்­காக ஆய்வுக் கட்­டு­ரை­களைத் தயா­ரிக்கும் போது,
· ஒரு ஆய்வு மாநாட்­டிற்­காக ஆய்வுக் கட்­டு­ரை­களைத் தயா­ரிக்கும் போது,
· பட்ட படிப்­புக்­க­ளுக்­காக ஆய்வு அறிக்­கை­களை தயா­ரிக்கும் போது.
மேலே கூறிய சந்­தர்ப்­பங்­களின் போது சம்­பந்­தப்­பட்ட நிறு­வனம், பல்­க­லைக்­க­ழகம் எந்த உசாத்­து­ணை­யிடல் முறை­யினை பின்­பற்ற வேண்டும் என்ற வழி­காட்டல் குறிப்­புக்­களை நிச்­சயம் வழங்கி இருப்­பார்கள். அதனை பின்­பற்றி ஆக்­கங்­களை தயா­ரிக்க முடியும். குறிப்­பிட்ட வழி­காட்­டல்­களை கவ­னத்தில் கொள்­ளாமல் அனுப்­பப்­படும் ஆக்­கங்கள் அதி­க­மான வேளை­களில் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­துண்டு.

உசாத்­துணை பாணி­களும் நவீன தொழிநுட்­பமும்

தகவல் தொழிநுட்பம் வளர்ச்­சி­ய­டை­யாத காலங்­களில், பல்­வேறு கல்­விசார் ஆக்­கங்­களை எழுதும் போது, உசாத்­து­ணை­யிடல் முறை­யினை கைக­ளினால் செய்ய வேண்டி இருந்­தது. தகவல் தொழி­நுட்பம் மிக வேக­மாக வளர்ச்சி பெற்ற இக்­கா­ல­கட்­டத்தில் உசாத்­து­ணை­யிடல் முறை­களை மேற்­கோள்­ள­வென பல புதிய நுட்­பங்கள் கிடைக்கப் பெறு­கின்­றன.

பல்­வேறு மென்­பொ­ருட்கள் பல காணப்படுகின்றன. இவற்றுள் RefWorks, Zotero, EndNote, Mendeley மற்றும் CiteULike போன்றன மிகப் பிரபல்யம் பெற்ற உசாத்துணையிடல் மென்பொருள்கள் ஆகும். இவற்றுள் RefWorks, EndNote என்பன விலை கொடுத்து வாங்க வேண்டிய மென்பொருள்கள் ஆகும். ஏனையவை, இலவச திறந்த மென்பொருள்கள் ஆகும். இவைமாத்திரமன்றி தற்போது இதற்கென பல்வேறு செயலிகளும் பாவனைக்கு வந்துள்ளன. Easy Harvard Referencing, APA Referencing style, Easy APA Referencing, Citation Maker, Mandely, Reference Generator எனப் பல்வேறு வகையான செயலிகள் பாவனையில் உள்ளன. ஸ்மார்ட்போன்களைக் கொண்டு இவற்றை தரவிறக்கம் செய்து எமக்கு தேவையான வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். எமது கணினிகளில் உள்ள Microsoft Word யிலும் இது தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

ஆய்வுகளில், உயர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பல்வேறு வகையான படைப்புக்களை உருவாக்க வேண்டி இருக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களில், தமது வாசிப்பினூடாக பெற்றுக் கொண்ட வற்றை மேற்கோள் காட்டல், எடுத்துக்காட்டல் செய்வதனூடாக பிறர் கருத்துக்கள், கருமங்களை உரிய முறையில் ஒப்புக் கொள்ள வேண்டிய முறைமை பற்றியே, இங்கு எடுத்து நோக்கப்பட்டது. கடந்த காலங்களை விட, உசாத்துணையிடல் முறைமைகளில் நவீன தொழில்நுட்பங்களின் பிரயோகங்கள் அதிகரித்து வருவதானால், இதில் இருந்து வந்த சிரமங்கள் பல குறைந்துவருகின்றன.
ஆய்வில் கரிசனை கட்டுவோர், உயர் கற்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் இந்த முறைமைகளை நன்கு அறிந்து செயற்படுவது முக்கியமாகும்.

– கலா­நிதி. எப்.எம்.நவாஸ்தீன்
சிரேஸ்ட விரி­வு­ரை­யாளர் 
கல்விப் பீடம், இலங்கை திறந்த 
பல்­க­லைக்­க­ழகம், நாவல

Leave A Reply

Your email address will not be published.