குறைந்த தீமையை ஆதரிக்க வேண்டிய நிலை

0 710

இலங்­கையின் அர­சியல் களம் நாளுக்கு நாள் சூடாகிக் கொண்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதித் தேர்தல், போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் குறித்த கதை­களும், விமர்­ச­னங்­க­ளும்தான் இலங்­கையின் அர­சி­யலில் பேசு பொரு­ளா­கி­யுள்­ளது. இதே வேளை டிசம்பர் 07ஆம் திகதி ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை தேர்தல் திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ள­தென்று தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. ஆயினும், ஜனா­தி­பதித் தேர்­தல்தான் முதலில் நடை­பெறும் என்று சொல்­லு­வ­தற்­கில்லை என்று தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார். ஆதலால், ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கும் வாய்ப்­புக்கள் உள்­ளன. ஆயினும், அர­சியல் கட்­சிகள் ஜனா­தி­பதித் தேர்­தலை எதிர்­கொள்­வ­தி­லேயே கவனம் செலுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதித் தேர்­தலை எந்­த­வொரு தேசியக் கட்­சி­யி­னாலும் தனித்து நின்று வெல்ல முடி­யா­தென்­ப­தனை தேசிய கட்­சிகள் உணர்ந்­துள்­ளன. இத­னால்தான், சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­க­ளின்றி ஜனா­தி­பதித் தேர்­தலை வெற்­றி­கொள்ள முடி­யு­மென்று வாய்க்கும், மூளைக்கும் தொடர்­பின்றி கருத்­துக்­களை வெளி­யிட்­ட­வர்கள் கூட சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ரவை வேண்­டி­யுள்­ளார்கள். தாங்கள் அவ்­வாறு தெரி­விக்­க­வில்லை என்றும் கூறிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஜனா­தி­பதித் தேர்­தலைப் பொறுத்­த­வரை சிறு­பான்­மை­யி­னர்தான் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கப் போகின்­றார்கள். அதனால், சிறு­பான்­மை­யி­னரும், அவர்கள் சார்ந்த கட்­சி­களும் எடுக்கும் தீர்­மானம் முக்­கி­ய­மாகும். 

ஜனா­தி­ப­தியின் கடமை

ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­ற­வ­ருக்கு பல கட­மைகள் உள்­ளன. அவற்றுள் நாட்டு மக்­களை சம­மாக நடத்த வேண்டும் என்­பது முக்­கி­ய­மாகும். நாட்டின் தலை­வர்கள் எல்­லோரும் இந்­நாட்டின் பிர­ஜைகள் என்று நடந்து கொள்­ளாது, பௌத்த சிங்­கள மக்­களின் தலை­வ­ரா­கவும், அவர்­களின் நலன்­களை பேணு­கின்ற ஒரு­வ­ரா­க­வுமே நடந்து வந்­துள்­ளார்கள். இத­னால்தான் இலங்­கையில் இனப் பிரச்­சி­னையும், முரண்­பா­டு­களும் ஏற்­பட்­டன. பொது­வாக இலங்­கையை ஆட்சி செய்த எல்லா ஜனா­தி­ப­தி­களும் இவ்­வா­றுதான் செயற்­பட்­டுள்­ளார்கள்.

மஹிந்­த­ரா­ஜபக் ஷவின் ஆட்­சி­யிலும், மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஆட்­சி­யிலும் பௌத்த இன­வா­தி­க­ளினால் முஸ்­லிம்கள் அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­க­ளினால் வெற்­றியை தீர்­மா­னித்துக் கொண்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு வித்­தி­யா­ச­மான ஜனா­தி­ப­தி­யாக இருப்பார். சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சி­னை­களை தீர்ப்பார் பாது­காப்பார் என்­றெல்லாம் நம்பி வாக்­க­ளித்­தார்கள். அவர் வெற்றி பெற்­றதும் பாரா­ளு­மன்­றத்தில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை குறைக்கக் கூடிய 19ஆவது திருத்தச் சட்­டத்தை கொண்டு வரு­வ­தற்கும் ஆத­ரவு வழங்­கினார். இதன் மூல­மாக மைத்­தி­ரி­பால சிறி­சேன வித்­தி­யா­ச­மா­னவர். எல்லா இனங்­க­ளையும் சம­மாக நடத்­துவார் என்ற நம்­பிக்கை மேலும் அதி­க­ரித்தது. என்­றாலும், பின்­நாட்­களில் அவரின் நட­வ­டிக்­கைகள் சிறு­பான்­மை­யி­னரின் நம்­பிக்­கைக்கு மாற்­ற­மா­கவே இருந்­தன. தானும் இதற்கு முன்னர் இருந்த ஜனா­தி­ப­தி­களைப் போன்­றவர் என்று காட்­டினார். இவ­ரது ஆட்சிக் காலத்தில் ஏற்­பட்ட அர­சியல் குழப்­பங்கள் அதி­க­மாகும். இதனால் நாட்டின் பொரு­ளா­தாரம் கீழ் நிலையை அடைந்­தது.
ஆதலால், நாட்டை சிறப்­பாக வழி­ந­டத்தக் கூடி­ய­வ­ரா­கவும், சிறு­பான்­மை­யினர் என்ற பாகு­பாடு காட்­டாது எல்­லோரும் இந்­நாட்டின் பிர­ஜைகள். நான் அவர்­களின் தலைவன் என்று பொறுப்­புடன் நடந்து, தனது நடத்­தைகள் மூல­மாக நாட்டில் அமை­தி­யையும், அர­சியல் உறு­திப்­பாட்­டையும், சர்­வ­தே­சத்தின் ஆத­ர­வையும் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு­வ­ரையே ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்ய வேண்டும்.

கோத்­தா­பய ராஜபக் ஷ

எந்த அர­சியல் கட்­சியில் யார் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவார் என்ற கேள்­விகள் இருந்­தாலும், பொது­ஜன முன்­ன­ணியின் (மொட்டு) வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜபக் ஷவின் பெயர்தான் அறி­விக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­ட­தனைப் போன்று நடந்­துள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும், பொது­ஜன முன்­ன­ணிக்கும் இடையே உடன்­ப­டிக்­கைகள் ஏற்­பட்டு மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பெயர் அறி­விக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டன. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மிகுந்த நம்­பிக்­கையில் இருந்தார். ஆனால், அவரின் எண்ணம் கைகூ­ட­வில்லை. அவர் ஏமாந்­துள்ளார்.

மஹிந்த ராஜபக் ஷ தனது சகோ­தரர் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­வித்­த­வுடன், கோத்­தா­பய குறித்து பல குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். குறிப்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்துக் கொண்­டி­ருக்­கின்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவிராஜ், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான சிவராம், லசந்த விக்­கி­ர­ம­துங்க மற்றும் விளை­யாட்டு வீரர் தாஜுதீன் படு­கொலை, எக்­ன­லி­கொ­டவை கடத்தி காணா­ம­லாக்­கி­யமை, ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயர் மற்றும் பத்­தி­ரிகை ஆசி­ரியர் உப்­பாலி தென்­ன­கோனை தாக்­கி­யமை, சிரச மற்றும் உதயன் ஆகிய ஊடக நிறு­வ­னங்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை, குடிப்­ப­தற்குத் தூயநீர் கோரிய ரத்­து­பஸ்­வெல மக்கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­யமை, வெலிக்­கடை சிறைக் கைதி­களை கொலை செய்­தமை, வெள்ளை வேன் கொண்டு ஆட்­களை கடத்­தி­யமை, முன்னாள் பிர­தம நீதி­ய­ர­சரை பதவி விலக்­கி­யமை என்­பன ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட மிகக் கொடூ­ர­மா­னதும் பார­தூ­ர­மா­ன­து­மான குற்றச் செயல்­க­ளாகும். இதற்­காக பொது­ஜன முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான கோத்­தா­பய ராஜபக் ஷ நாட்டு மக்­க­ளிடம் மன்­னிப்புக் கோர வேண்­டு­மென்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

மேலும் பிர­தேச சபை தலை­வ­ரொ­ரு­வரால் பெண் ஒருவர் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டமை, வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­யொ­ருவர் பிர­தேச சபைத் தலைவர் ஒரு­வரால் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டமை, பரம்­பரை பரம்­ப­ரை­யாக ஒரே இடத்தில் வாழும் சேரிக் குடி­யி­ருப்­பா­ளர்­களைப் பல­வந்­த­மாக அவர்­களின் வாழ்­வி­டங்­களில் இருந்து வெளி­யேற்­றி­யமை போன்ற சம்­ப­வங்கள் தொடர்பில் பொது­ஜன முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் மன்­னிப்பு கோரு­வாரா? என்றும் பிர­தமர் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

ரணால ஜல்­தர பிர­தே­சத்தில் ‘கிறீன் வெலி ரெசி­டென்சி’ எனும் நடுத்­தர வர்க்­கத்­தி­ன­ருக்­கு­ரிய வீட­மைப்புத் திட்­டத்தை திறந்து வைத்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­படி கேள்­வியை எழுப்­பி­யுள்ளார். வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவின் அழைப்பின் பேரி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வை­ப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இவ்­வாறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தாலும் 2015ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­களில் உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­ன­தாக மேற்­படி குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தது. அவற்­றிக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்போம் என்று தெரி­வித்­தார்கள். ஒரு சில ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ர­ணை­களும் நடை­பெற்­றன. அத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­களை புரிந்­த­வர்கள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­களை பாது­காத்துக் கொள்ளும் நட­வ­டிக்­கை­களை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்­டது. குறிப்­பாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க மஹிந்த ராஜபக் ஷ சகோ­த­ரர்கள் தொடர்­பாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு எதி­ராக நீதி­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு பதி­லாக அவர்கள் மூல­மாக எவ்­வாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை உடைக்­க­லா­மென்றே தந்­தி­ரங்­களைப் பண்­ணினார். ஆதில் வெற்­றியும் கண்டார். ஆனால், அவர் நினைத்­தது போன்று ஐக்­கிய தேசிய கட்­சிக்கு சிங்­கள மக்­க­ளிடம் அதிக செல்­வாக்கு ஏற்­ப­ட­வில்லை. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து பிரிந்­த­வர்­க­ளினால் உரு­வாக்­கப்­பட பொது­ஜன முன்­ன­ணிதான் சிங்­க­ள­வர்­களின் அதிக செல்­வாக்கைப் பெற்­றுள்­ளது.

மேற்­படி குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து ஆட்­சியை கைப்­பற்றிக் கொண்­ட­வர்கள், அக்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு எதி­ராக தகுந்த நட­வ­டிக்­கை­களை எடுக்­காது இருந்­து­விட்டு, இப்­போது அக்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு கோத்­தா­பய ராஜபக் ஷ மன்­னிப்புக் கேட்­பாரா என்று கேள்வி எழுப்­பு­வது நாட்டு மக்­களை ஏமாற்றும் ஒரு நட­வ­டிக்­கை­யாகும்.

இதே­வேளை, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் கோத்­தா­பய ராஜபக் ஷ பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்தார். ஆயினும், அவர் பாது­காப்பு அமைச்சர் போன்றே செயற்­பட்டார். சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக, குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முஸ்­லிம்­களின் மீது பௌத்த இன­வா­திகள் தாக்­கிய போது அதற்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. புலி­க­ளுடன் நடை­பெற்ற யுத்­தத்தில் இரா­ணுவம் வெற்றி பெறு­வ­தற்கு கோத்­தா­பய ராஜபக் ஷவும் ஒரு கார­ண­மென்று இன்று வரைக்கும் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இத்­த­கைய வலிமை கொண்ட அவரால் முஸ்­லிம்­க­ளையும், பள்­ளி­வா­சல்­க­ளையும் தாக்­கிய பௌத்த இன­வா­தி­களைக் கண்டு பிடிக்க முடி­ய­வில்லை என்று சொல்­வ­தனை விடவும், அவர்­களை கைது செய்­யாது இருந்­தார்கள் என்று சொல்­வதே பொருத்­த­மாக இருக்கும்.

அதற்கு முன்­ன­தாக நடை­பெற்ற இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­க­ளினால் தமி­ழர்கள் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டார்கள். இது விட­யத்­திலும் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு தொடர்­புள்­ள­தாக தமிழ் அர­சி­யல்­வா­திகள் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனால், தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே கோத்­தா­பய ராஜபக் ஷ குறித்து அச்சம் இருக்­கின்­றது. இந்த அச்சம் இல்­லாமல் செய்­யப்­ப­டு­வ­தற்கு பொது ஜன முன்­னணி என்ன உபா­யத்தைக் கையாளப் போகின்­றது என்­ப­தி­லேயே சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ளும் வீதம் அமை­ய­வுள்­ளது.

இன்­றைய ஆட்சி

மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் மாத்­தி­ரம்தான் சிறு­பான்­மை­யினர் பாதிக்­கப்­பட்­டார்கள் என்று சொல்­லு­வ­தற்­கில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தை விடவும் இன்­றைய அர­சாங்­கத்தின் காலத்­தில்தான் குறிப்­பாக முஸ்­லிம்கள் அதிகம் பாதிக்­கப்­பட்­டார்கள்.

மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் பௌத்த இன­வா­தி­க­ளினால் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­ட­தனைப் போன்று இன்­றைய ஆட்­சி­யிலும் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. தாக்­கி­ய­வர்கள் இனங் கண்டு கைது செய்­யப்­ப­ட­வில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் ஹலால் விவ­காரப் பிரச்­சினை ஏற்­பட்­ட­தனைப் போன்று, முஸ்லிம் பெண்கள் தமது மத­வி­ழு­மி­யங்­க­ளுக்கு அமை­வாக முகத்தை மறைப்­ப­தற்கு இன்­றைய ஆட்­சியில் தடை ஏற்­பட்­டது. முஸ்­லிம்­களின் ஷரீஆ சட்­டத்தில் மாற்றம் செய்­யப்­பட வேண்டும் என்­பது தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டது. மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் களுத்­துறை மாவட்­டத்தில் பேரு­வளை, தர்­க­நகர், அளுத்­கம பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­களின் மீது பௌத்த இன­வா­திகள் குழுக்கள், குழுக்­களாக வந்து தாக்­கி­னார்கள். சொத்­துக்­கள் அழிக்­கப்­பட்­டன. உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டன.

இதே­போன்று இன்­றைய ஆட்­சியில் கிந்­தோட்டை, அம்­பாறை, திகன, கண்டி, குரு­நாகல், மினு­வாங்­கொடை, குளி­யாப்­பிட்டி, கினி­யம உட்­பட்ட பல இடங்­களில் முஸ்­லிம்­களை பௌத்த இன­வா­திகள் தாக்­கி­னார்கள். முஸ்­லிம்­களின் சொத்­துக்­க­ளுக்கு அழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­னார்கள். உயி­ரி­ழப்பும் ஏற்­பட்­டது. பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. இத்­தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்று ஒரு சிலர் கைது செய்­யப்­பட்­டாலும், அவர்­களை விரை­வாக விடு­த­லையும் செய்­தார்கள்.

ஆதலால், மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி மோச­மா­னது, இன்­றைய ஆட்சி நல்­லது என்று சொல்­லு­வ­தற்­கில்லை. யார் ஆட்சி செய்­தாலும், அவர் ஒரு பௌத்த சிங்­க­ள­வ­ரா­கவே இருப்பார். அவர் பௌத்த சிங்­கள மக்­களை சட்­டத்­திற்கு மாற்­ற­மா­க­வேனும் திருப்­திப்­ப­டுத்­துவார். சிறு­பான்­மை­யி­னரை சட்ட ரீதி­யாகக் கூட திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்கு நாட்டம் கொள்­ள­மாட்­டார்கள். தேர்தல் காலங்­களில் மாத்­தி­ரமே சிறு­பான்­மை­யி­னரைப் பற்றி பேசு­வார்கள். அருள்­பா­லிக்க வந்த தேவர்கள் போல் காட்டிக் கொள்­வார்கள். ஆட்­சியை பிடித்­ததும் அசு­ரர்­க­ளாக மாறி­வி­டு­வார்கள். ஆகவே, அவர் ஆட்­சிக்கு வந்தால் முஸ்­லிம்­க­ளுக்கு தீங்­குகள் ஏற்­படும், இவர் ஆட்­சிக்கு வந்தால் தீங்­குகள் ஏற்­ப­டா­தென்று சத்­தியம் செய்ய முடி­யாது. ஆனால், யார் ஆட்­சிக்கு வந்தால் தமிழ், முஸ்­லிம்­க­ளுக்கு குறைந்த அநி­யாயம் நடை­பெறும் என்றே பார்க்க வேண்­டி­ய­தொரு துர்ப்­பாக்­கி­யத்தில் சிறு­பான்­மை­யினர் உள்­ளனர்.

4/21இற்கு பின்னர்

4/21இற்கு பின்னர் முஸ்­லிம்­களின் மீது பல நெருக்­க­டிகள் ஏற்­பட்­டன. அதில் ஒன்­றுதான் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்க முடி­யா­தென்ற தடை­யாகும். பயங்­க­ர­வா­தத்­திற்கும், உடைக்கும் சம்­பந்­த­முண்டு என்ற புதிய கண்டு பிடிப்பு இலங்­கையில் நடை­பெற்­றுள்­ளது. பயங்­க­ர­வா­திகள் பல உடை­களில் உலாவிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால், அந்த உடையை அணி­கின்­ற­வர்கள் எல்­லோரும் பயங்­க­ர­வா­தி­க­ளல்லர். ஒரு குற்­ற­வாளி தப்­பித்துக் கொண்­டாலும், சுத்த­வாளி ஒருவர் தண்­டிக்­கப்­படக் கூடா­தென்ற சட்­டத்­துடன் தொடர்­பு­டைய வார்த்தை இலங்­கைக்கு பொருத்­த­மற்­ற­தா­கவே இருக்­கின்­றது. 4/21 தாக்­கு­த­லுக்குப் பின்னர் அப்­பா­வி­களே அதிகம் பாதிக்­கப்­பட்­டார்கள்.
அர­சாங்­கத்தின் பாது­காப்பு ஏற்­பாட்டில் ஏற்­பட்ட ஓட்­டைதான் 4/21 தாக்­கு­த­லுக்கு கார­ண­மாகும். ஆயினும், இந்தத் தாக்­கு­த­லுக்கு பின்னர் ஆயு­தங்­களை தேடிக் கண்டு பிடிக்கும் நட­வ­டிக்­கைகள் இரா­ணு­வத்­தி­னரால் எடுக்­கப்­பட்­டன. கத்தி, வாள் போன்­ற­வைகள் கைப்­பற்­றப்­பட்டு பெரும் பயங்­க­ர­வாத ஆயு­தங்கள் போன்று காட்­டி­னார்கள். ஆனால், இத்­த­கைய தேடுதல் வேட்டை சிங்­கள மக்­களின் வீடு­களில் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பது மிகப் பெரிய பார­பட்ச நட­வ­டிக்­கை­யாகும். குளி­யாப்­பிட்டி, கினி­யம போன்ற இடங்­களில் கத்தி, வாள், இரும்புக் கம்­பி­களைப் பயன்­ப­டுத்­தியே முஸ்­லிம்­களை தாக்­கி­னார்கள். சிங்­க­ள­வர்­களின் வீடு­களும் இரா­ணு­வத்­தி­னரால் சோதனை செய்­யப்­பட்­டி­ருந்தால் கத்தி, வாள், இரும்புக் கம்­பி­களைப் பயன்­ப­டுத்தி தாக்­கி­யி­ருக்க மாட்­டார்கள்.

பெரும்­பாலும் எதி­ர­ணி­யி­லுள்ள சிங்­கள அர­சி­யல்­வா­தி­களும், பௌத்த இன­வாத தேரர்­களும் நாட்டில் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் ஏற்­பட்­டுள்­ளது என்றும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் இருக்­கின்­றார்கள் என்றும், பயங்­க­ர­வா­தத்தை மத்­ர­ஸாக்கள் வளர்க்­கின்­றன. அவற்றை தடை செய்ய வேண்டும். அரபு மொழி தடை செய்­யப்­பட வேண்டும் என்­றெல்லாம் அர­சி­யல்­வா­தி­களும், பௌத்த இன­வாத பிக்­கு­களும் பேசத் தொடங்­கி­னார்கள். முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளுக்கும், இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்­திற்கும் தொடர்­புள்­ள­தென்று தெரி­வித்­தார்கள். பாரா­ளு­மன்­றத்தில் அமைச்சர் றிசாட் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வந்­தார்கள். அத்­து­ர­லிய ரதன தேரர் அமைச்சர் றிசாட் பதி­யுதீன், கிழக்கு மாகாண ஆளு­ந­ராக இருந்த ஹிஸ்­புல்லாஹ், மேல்­மா­காண ஆளு­ந­ராக இருந்த அஸாத்­சாலி ஆகி­யோர்கள் தங்­களின் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்ய வேண்­டு­மென்று சாகும் வரை உண்­ணா­வி­ரதம் இருந்தார். முஸ்­லிம்­களை மீண்டும் பௌத்த இன­வா­திகள் தாக்­கி­வி­டு­வார்­களோ என்று அஞ்சி முஸ்லிம் ஆளு­நர்­களும், அமைச்­சர்­களும் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­தார்கள்.

இவை இன்­றைய ஆட்­சி­யில்தான் நடை­பெற்­றது. என்­றாலும், 4/21 தாக்­குதல் மூல­மாக எதிர் அணி­யி­னரே இலாபம் அடைந்து கொள்­வ­தற்கு முற்­ப­டு­கின்­றார்கள். இதனால், இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­ற­வர்கள் மீது முஸ்­லிம்கள் சந்­தேகம் கொள்­கின்­றார்கள். இவர்கள் கூட்டு எதி­ர­ணியில் உள்­ளார்கள். இவர்­களின் ஆட்சி வந்தால் யாது செய்­வார்­களோ என்று முஸ்­லிம்கள் கரு­து­வதும், அச்சம் கொள்­வதும் நியா­ய­மா­ன­தாகும்.

இதேவேளை, நாட்டின் ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் நாட்டிலிருந்து இஸ்லாமிய பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வேன் என்று கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். 4/21 தாக்குதலுடன் சம்பந்தபட்டவர்களை முழுமையாக கைது செய்து விட்டோம் என்று பாதுகாப்பு தரப்பினர் அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இஸ்லாமிய பயங்கரவாத்தை முற்றாக ஒழிப்பேன் என்று கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளமை பௌத்த இனவாதிகளை திருப்திப்படுத்தவும், பயங்கரவாதத்தை என்னால்தான் அழிக்க முடியும் என்று சொல்லி அரசியல் இலாபம் ஈட்டிக் கொள்வதற்கு விளைகின்றார் எனலாம். ஆனால், இவரது இந்த கதைக்குப் பின்னால் மிகப் பெரிய ஆபத்திருக்கின்றது.

ஐ.தே.கவுக்குள் இழுபறி

இதே வேளை, ஐக்கிய தேசிய கட்சி இன்னும் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால், யார் வேட்பாளர் என்பதில் அக்கட்சிக்குள் முரண்பாடுகளும், இழுபறிகளும் ஏற்பட்டுள்ளன. கோத்தாபய ராஜபக் ஷவை தோற்கடிப்பதற்கு சஜித் பிரேமதாஸவே பொருத்தமென்று அக்கட்சிக்குள் குரல் கொடுக்கின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதேவேளை, சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க இன்னும் கொண்டிருக்கவில்லை. இவரது விடாப்பிடியை தளர்த்தாது போனால், ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகளும், பிளவுகளும் ஏற்படலாம். இந்நிலை ஐக்கிய தேசிய கட்சியை மிக மோசமான பின்னடைவுக்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. ஆதலால், ரணில் விக்கிரமசிங்க தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் நிலைமைகள் இருக்கின்றன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் தமது சமூகத்திற்கு குறைந்த தீங்கை செய்கின்றவரை அடையாளப்படுத்த வேண்டிய துர்ப்பாக்கியத்தில் இருக்கின்றன.

எஸ்.றிபான்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.