விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும்

அனைவருக்கும் ஒரே சட்டம். இந்தப் பிரசாரம் யாரை இலக்கு வைக்கிறது?

0 915

சட்டம் சட்­ட­மாக இருக்­க­மு­டி­யாது. அது நிலைத்த நீதியின் அடிப்­படைக் கோட்­பா­டு­களை மீறிச் செயற்­ப­டும்­போது

-Lydia Maria Child

சட்­டத்தின் ஆட்சி, ஜன­நா­யக விழு­மி­யங்­களில் முதன்­மை­யா­னவை. அதன் அடிப்­ப­டையில் தான் சட்­டத்தின் முன் அனை­வரும் சம­மா­ன­வர்கள் என்ற இன்­னொரு விழு­மியம் பெறப்­ப­டு­கின்­றது. வாய்ப்­புக்­கே­டாக பெரும்­பா­லான ஜன­நா­யக நாடு­களில் இந்த விழு­மியம் வெறும் கோட்­பா­டா­கவே உள்­ளது. சமூக ஒப்­பந்தக் கோட்­பாட்­டின்­படி ஒரு நாட்டின் அனைத்துப் பிர­ஜை­களும் அரசின் அனைத்து சட்­டங்­க­ளையும் ஏற்றுப் பின்­பற்­று­வது இன்­றி­ய­மை­யா­தது. பண்­பட்ட நாக­ரி­க­ம­டைந்த சமூ­க­மொன்றில் இதுதான் பிரஜைத் தன்மை (Citizenship) எனப்­ப­டு­கின்­றது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்­திய சர்­வ­தேச ஒழுங்கில் சட்ட ஆட்­சிக்கு (Rule of Law) இன்­னொரு பக்கம் உள்­ளது. ஐ.நா. வும் அதன் கிளை நிறு­வ­னங்­களும் அவற்றின் கோட்­பா­டு­களும் பன்­மைத்­து­வத்­தினை (Pluralism) அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. சட்­டத்தின் ஆட்சி பல்­வேறு சமூ­கங்­களின் தனிப்­பட்ட கலா­சார, பண்­பாட்டு, சமய அடை­யா­ளத்தை (Identify) அங்­கீ­க­ரிக்கும் வகை­யி­லேயே தேச அர­சு­களின் எல்­லைக்­குட்­பட்ட சட்­டங்கள் வகுக்­கப்­பட வேண்டும். இதுவே சர்­வ­தேச மரபு.

இன,மொழி, சமய, கலா­சார, பிராந்­திய, தனித்­து­வங்­களைக் கொண்ட எந்­த­வொரு சமூகக் குழு­மத்­தி­னதும் அடை­யா­ளங்­களைச் சிதைத்து ஒரு நாட்டில் கணித ரீதியில் எண்­ணிக்­கையில் அதி­க­மாக உள்­ள­வர்கள் எத்­த­கைய திணிப்­பையும் மேற்­கொள்ள முடி­யாது என்­ப­துதான் இதன் மறு அர்த்­த­மாகும்.

அனை­வ­ருக்கும் ஒரே சட்டம்

4/21 ற்குப் பிந்­திய விவா­தங்­களில் “அனை­வ­ருக்கும் ஒரே சட்டம்” என்ற பிர­சாரம் முன்பை விட மிகக் கறா­ரான தொனியில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. மதத் தீவி­ர­வாதக் குழுக்கள் மட்­டு­மின்றி சில அர­சி­யல்­வா­தி­களும் இந்த இன­வாதப் பிர­சா­ரத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அமைச்சர் வஜிர அபே­வர்த்­தன உள்­ளிட்டு சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிரி ஜய­சே­கர வரை பலரும் இதே கருத்தைக் கூறி வரு­கின்­றனர். பயங்­க­ர­வா­த­மற்ற எதிர்­கால இலங்­கையை உரு­வாக்கும் சுதந்­திரக் கட்­சியின் முன்­மொ­ழி­வு­களில் ஒன்­றா­கவும் இந்தக் கோஷம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. கண்­டியில் நடந்த பொது­ப­ல­சே­னாவின் ஒன்­று­கூ­ட­லிலும் இந்தக் கோரிக்கை மிகக் காட்­ட­மாக வைக்­கப்­பட்­டது.

“அனை­வ­ருக்கும் ஒரே சட்டம்”என்ற வாதம் பல்­வேறு கோணங்­களில் நோக்­கப்­பட வேண்­டி­ய­தாகும். காரணம் அதற்குள் சில சுய முரண்­பாடும் மங்­க­லான பக்­கங்­களும் உள்­ளன. நமது நாட்­டின் அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் தாய் சட்­ட­மாக உள்ள நிலையில் அதை­யொட்­டி­ய­தா­கவே பொருண்மைச் சிவில் சட்­டங்கள் (Substantive Civil Law) நடை­மு­றையில் உள்­ளன. வணிகச் சட்டம் (Commercial Law), சொத்துச் சட்டம் (Property Law), காணி, போக்­கு­வ­ரத்து, சுற்றுச் சூழல், பணக் கொடுக்கல் வாங்கல் (Financial Transaction ), குற்­ற­வியல், குடும்ப­வியல் மற்றும் இன்ன பிற சட்­டங்கள் உள்­ளன. இவற்றில் குடும்ப விவ­காரம் தவிர ஏனைய அனைத்து சட்­டங்­களும் இந்­நாட்டில் வாழும் அனைத்து மக்­க­ளுக்கும் பொது­வ­ானவை. அனைத்து பிர­ஜை­களும் கட்­டாயம் பின்­பற்ற வேண்­டி­யவை. இதில் இன, மத, கலா­சார வேறு­பா­டுகள் எதுவும் இல்லை. இந்­நி­லையில் “அனை­வ­ருக்கும் ஒரே சட்டம்” என்று கூச்சல் போடு­ப­வர்கள் வைக்கும் இலக்கு என்ன? எனும் கேள்வி தவிர்க்க முடி­யா­தது.

முஸ்­லிம்கள் குறித்து 2012 ற்குப் பின்னர் மதத் தீவி­ர­வாதக் குழுக்­க­ளாலும் சில அர­சியல் இன­வா­தி­க­ளாலும் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் போலிப் பிர­சா­ரங்கள் பல. முஸ்லிம் சனத்­தொகை அதி­க­ரிப்பு, ஹலால் விவ­காரம் ஊடாக முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யி­னரின் பணத்தை சூறை­யா­டு­கின்­றனர். அள­வுக்கு அதி­க­மாகப் பள்­ளி­வா­சல்­களை நிர்­மா­ணிக்­கின்­றனர். மத்­ரஸாக் கல்வி முறையில் தீவி­ர­வாதம் ஊட்­டப்­ப­டு­கின்­றது. மற்றும் இன்ன பிற. இவற்றின் தொடர்ச்­சியால் வந்த ஒன்­றுதான் முஸ்­லிம்­க­ளுக்கு இந்­நாட்டில் அனைத்து விவ­கா­ரங்­க­ளிலும் பிரத்­தி­யே­க­மான சட்­டமும் நீதி­மன்­றங்­களும் இருக்­கின்­றன. அதை ஒழிக்க வேண்டும் என்ற பிர­சா­ர­மாகும்.

“அனை­வ­ருக்கும் ஒரே சட்டம்” என்­பதை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என விவரம் தெரி­யாமல் உளறிக் கொட்டும் இன­வா­திகள் ஏதோ முஸ்­லிம்­க­ளுக்கு இந் நாட்டில் வேறொரு தனிச் சட்டம் (Distictive Law) இருப்­ப­தான ஒரு பூச்­சாண்­டியைக் காண்­பிக்­கின்­றனர். ஏலவே பய­மூட்­டப்­பட்­டுள்ள சிங்­கள சிவில் சமூ­கத்தை மென்­மேலும் கிளர்ந்­தெழச் செய்ய இந்த பூதத்தைக் கையில் எடுக்­கின்­றனர்.

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இங்கு நடை­மு­றையில் இருப்­பது முஸ்லிம் தனியார் சட்­டமே (Muslim Personal Law) ஒழிய முஸ்லிம் தனிச் சட்டம் (Separate Law for Muslims) அல்ல. இந்த உண்­மையை சிங்­கள சிவில் சமூ­கத்­திற்கு எடுத்­து­ரைக்க வேண்­டி­யது சமூக நிறு­வ­னங்­களின் பொறுப்­பாகும்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தை நீக்­கு­வதுதான் அனை­வ­ருக்கும் ஒரே சட்டம்
என்­பதன் அடி­நா­தமா?

2012 தம்­புள்ளைப் பள்­ளி­வாசல் சம்­ப­வத்­திற்குப் பின்னர் எகிறி எழுந்த முஸ்லிம் விரோதப் பிர­சா­ரங்­களில் முஸ்லிம் தனியார் சட்­டமும், காதி நீதி­மன்­றங்­களும் முக்­கி­ய­மா­னவை. அவற்றை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என 2014 இல் தலை­காட்டிய பொது­ப­ல­சேனா கர்ச்­சித்து வரு­வதை நாம் அறிவோம். முதலில் தனியார் சட்டம் என்றால் என்­ன­வென்­பதை ஞான­சாரர் புரிந்து கொள்ள வேண்டும். அதன் நீண்ட வர­லாற்­றையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏலவே நாம் குறிப்­பிட்ட அனைத்து சட்­டங்­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்கு நாட்டின் பொதுச் சட்­டத்­தி­லி­ருந்து முற்­றிலும் வேறான, தனித்த பிரத்­தி­யே­க­மா­ன­தொரு சட்டம் இங்கு நடை­மு­றையில் உள்­ளது என்றும் அதற்கு தனி­யான நீதி­மன்­றங்கள் உள்­ளது என்றும் ஞான­சாரர் ஒரு பிர­சா­ரத்தை பெரும்­பான்மை மக்­க­ளி­டையே கொண்டு செல்­கிறார். இந்தப் பொய்ப் பிர­சாரம் மிக ஆபத்­தா­னது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சிங்­க­ள­வர்­களைக் கிளர்ந்­தெழச் செய்யும் அர­சியல் உள்­நோக்கம் கொண்­டது.

இந்த வெறுப்புப் பிர­சா­ரத்­தினால் பெரும்­பான்­மை­யினர் முஸ்­லிம்­களை வெறுப்புக் கண்­கொண்டு பார்க்கும் ஒரு கொதிப்­பான சூழலை உரு­வாக்க பல­சேனா முயல்­கி­றது. தெரண, ஹிரு, சுவர்­ண­வா­ஹினி போன்ற அலை­வ­ரி­சைகள், நெத் எப்.எம். போன்ற வானொ­லி­களும் மேலும் சில அச்சு ஊட­கங்­களும் இந்தப் பொய்ப் பிர­சா­ரத்தை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து கொதிப்­பான சூழ­லுக்கு (Boiling Situation) களம் அமைக்­கின்­றன. 4/21 ற்குப் பின்னர் இந்தப் பிர­சாரத் தீ எகிறி வீசு­கின்­றது.

வட­மா­காண தமிழ் சமூ­கத்­திற்கு தேச வழமைச் சட்டம் இருப்­பது போல கண்டி சிங்­க­ள­வர்­க­ளுக்கு கண்­டிய சட்டம் உள்­ளது போல, அமுல்­ப­டுத்­தப்­ப­டா­விட்­டாலும் முக்­குவர் சாதிக்கு முக்­குவர் சட்டம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­பது போல் முஸ்­லிம்­க­ளுக்கு தனியார் சட்டம் இருக்­கி­றதே ஒழிய தனிச் சட்டம் என்று எதுவும் கிடை­யாது. விவாகம், விவா­க­ரத்து, வாரி­சு­ரிமை, பொதுச் சொத்து ஆகிய 4 விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கி­யதே முஸ்லிம் தனியார் சட்டம். தேச வழமை, கண்டி, முக்­குவர் சட்டம் என்­ப­ன­வற்­றிலும் அதே உள்­ள­டக்கம் ஏனைய விவ­கா­ரங்கள் அனைத்­திலும் இலங்கை முஸ்­லிம்கள் நாட்­டி­லுள்ள பொது­வான சிவில் சட்­டங்­க­ளையே பின்­பற்­று­கின்­றனர். அதில் யாருக்கும் ஐயம் இருக்க வேண்­டி­ய­தில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான கல்விச் சட்­டமோ, குற்­ற­வியல் சட்­டமோ, காணிச் சட்­டமோ, வீதிப் போக்­கு­வ­ரத்துச் சட்­டமோ இல்லை.

முஸ்லிம் தனியார் சட்­டத்தை நீக்­கி­விட்டால் அனை­வ­ருக்கும் ஒரே சட்­ட­மா­கி­விடும் எனக் கோரு­வது ஆவேஷம் நிறைந்த ஒரு வாய்ச்­ச­வடால் மட்­டு­மல்ல, கடைந்­தெ­டுக்­கப்­பட்ட முட்­டாள்­த­னமும் ஆகும். காரணம் அனை­வ­ருக்கும் ஒரே சட்டம் என்றால் கண்­டியச் சட்டம், தேச வழமை, முக்­குவர் என அத்­தனை சட்­டங்­க­ளையும் இல்­லா­தொ­ழிக்க வேண்டும். அது சாத்­தி­ய­மே­யில்லை. இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்கு 300 ஆண்­டு­கால வர­லாறு உள்­ளது. முஸ்­லிம்கள் விவாக, விவா­க­ரத்து விவ­கா­ரங்­களை தமது சமய அடிப்­ப­டையில் கையாள்­வ­தற்கு ஒல்­லாந்­த­ரினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இந்தச் சட்டம் ஆங்­கி­லே­யரால் தொடர்ந்தும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு பல திருத்­தங்­க­ளோடு 1951 லிருந்து இலங்கை அர­சாங்­கத்­தினால் ஏற்­கப்­பட்டு நடை­மு­றையில் இருந்து வரு­வது.

முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்கும் பயங்­க­ர­வா­தத்­திற்கும் இடையில் என்ன தொடர்பு? தனியார் சட்­டத்தில் ஏதும் தீவி­ர­வாதம் உள்­ளதா? முஸ்­லிம்கள் தமது தனித்­து­வங்­களைப் பேணிப் பாது­காக்கும் நோக்­குடன் அவற்றைப் பின்­பற்­று­வதால் நாட்­டுக்கு ஒரு நஷ்­டமும் இல்லை. ஞான­சா­ர­ருக்கு எந்தக் கஷ்­டமும் இல்லை. எந்­த­வொரு சமூ­கத்­திற்கும் அதனால் அச்­சு­றுத்­தலோ பிரச்­சி­னையோ இல்லை. சிலர் தமது அந்­த­ரங்க உறுப்­புக்­களை அடிக்­கடி சொறி­வதால் சுகம் கொள்­வது போல முஸ்லிம் சமூ­கத்தின் உள்­வி­வ­கா­ரங்­களை தேசி­யத்­தோடு தொடர்­பான தனிப்­பட்ட விஷ­யங்­களை ஞான­சாரர் தொடர்ந்தும் சொறிந்து கொண்­டி­ருப்­பதன் உள்­நோக்கம் என்ன?

தோல்­வி­ய­டைந்து வரும் சட்­டத்தின் ஆட்சி

ஜன­நா­யகம் உயிர்ப்­புடன் இருப்­ப­தற்­கான ஒரே ஆதாரம் சட்­டத்தின் ஆட்­சிதான். ஓர் அரச இயந்­திரம் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் பொறுப்பைக் கொண்­டுள்­ளது. வாய்ப்­புக்­கே­டாக இலங்­கையில் சட்­டத்தின் ஆட்சி வீழ்ந்து வரு­கி­றது என்­பதை உறுதி செய்யும் உதா­ர­ணங்கள் பெருகி வரு­கின்­றன. கண்­டியில் ரத்ன தேரரும் காலியில் சில பிக்­கு­களும் கல்­மு­னையில் ஒரு பிக்­கு­வுடன் சில அர­சி­யல்­வா­தி­களும் ஈடு­பட்ட உண்­ணா­வி­ர­தங்­களும் கோரிக்­கை­களும் சட்­டத்தின் ஆட்­சியைக் கேள்­விக்­குள்­ளாக்­கு­கின்­றன.

ஜன­நா­யக ரீதியில் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஒரு பாரா­ளு­மன்ற அமைச்­சரை பத­வி­நீக்கம் செய்­வ­தற்கு ஒரு ஜன­நா­யக வழி­முறை நாட்டில் உள்­ளது. அதற்­கென சட்ட ஒழுங்கும் நீதி­மன்றப் படி­மு­றை­களும் இருக்­கின்­றன. அர­சாங்கம், நீதித்­துறை, சட்ட ஒழுங்கு முக­வர்கள் என்­றெல்லாம் இருக்­கின்­றனர். வெறும் விமர்­ச­னமோ அவ­தா­னமோ ஊகமோ பொய்க் குற்­றச்­சாட்டோ ஒரு­வரைப் பதவி நீக்­கு­வ­தற்­கான அல்­லது ஒருவர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான ஆதா­ரங்­க­ளாக முடி­யாது. இந்­நி­லையில் ஒரு தேரர் ஓர் அர­சியல் கோரிக்­கையை முன்­னி­றுத்தி உண்­ணா­வி­ரதம் இருந்தால் அந்தக் கோரிக்கை நிறை­வேற்­றப்­படும் என்ற ஒரு கேவ­ல­மான அர­சியல் சூழல் உரு­வானால் சட்­டத்தின் ஆட்சி என்­பதன் அர்த்தம் என்ன?

இலங்கை ஒரு ஜன­நா­யக சோஷ­லிஸக் குடி­ய­ரசு என்­கிறோம். ஆனால் உண்­ணா­வி­ர­தங்­களும் மத­கு­ருக்­களின் ஆவேஷ அடா­வ­டித்­த­னங்­களும் இன்­னொரு சமூ­கத்­திற்கு எதி­ரான வெறுப்புக் குற்­றங்­களும் (Hate Crimes) சட்­டத்தின் ஆட்­சியைக் கேலிக் கூத்­தாக்­கு­கின்­றனர். அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் பெரும் தொகை­யானோர் ஒன்று கூடு­வ­தற்கு பொலி­ஸாரின் அனு­மதி பெற வேண்டும். ஆனால் அவ­ச­ர­கால சட்ட விதி­களை மீறி கண்­டியில் மத­கு­ருக்கள் பெரும் இன­வெறி மாநாட்டை நடத்­தினர். சட்­டத்தின் ஆட்சி ஏன் இங்கு பிர­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை.

நாட்டில் ஒரு மக்கள் ஆணையைப் பெற்ற ஜன­நா­யக அரசும் சட்­டங்­களை அமு­லாக்கும் முக­வர்­களும் (Law Enforcing Agencies) இருக்­கின்ற நிலையில் தடி எடுத்­த­வ­னெல்லாம் தண்­டல்­காரர் என்­பதைப் போல அர­சி­யல்­வா­தி­களும் மத­வா­தி­களும் செயல்­பட முனை­வது ஜன­நா­யக விரோ­த­மாகும். முஸ்­லிம்கள் இதைத்தான் உண்ண வேண்டும், இதைத்தான் படிக்க வேண்டும், இஸ்­லாத்தின் இந்தப் பிரி­வைத்தான் பின்­பற்ற வேண்டும், அபா­யாவைக் கழற்ற வேண்டும், பயான்­களைப் பதிவு செய்ய வேண்டும், அறபுப் பதா­தை­களை நீக்க வேண்டும், மத்­ர­ஸாக்­களை மூட வேண்டும், முஸ்­லிம்­களின் வாழ்­வியல் இந்த நாட்டில் இப்­ப­டித்தான் இருக்க வேண்டும் என்­றெல்லாம் கோடு கிழிக்கும் அதி­காரம் இன்­றைய தேச அரச முறையில் எந்­த­வொரு அர­சாங்­கத்­திற்கும் கிடை­யாது. அர­சாங்­கத்­திற்கே இல்­லாத இந்த அதி­காரம் ஞான­சார போன்ற, ரத்ன தேரர் போன்ற ஒற்றை மனி­தர்­க­ளுக்கு எங்­கி­ருந்து வரு­கின்­றது? முஸ்­லிம்கள் இவ்­விவ­கா­ரங்­களை சட்ட ரீதி­யான முறை­யில அணுக வேண்­டிய தேவை உள்­ளது.

சட்­டத்தின் முன் அனை­வரும் சம­மா­ன­வர்கள்

சட்­டத்தின் முன் அனை­வரும் சம­மா­ன­வர்கள் என்­பது தான் சட்ட ஆட்­சியின் அடித்­த­ள­மாகும். ‘நாட்டில் அனை­வ­ருக்கும் ஒரே சட்டம்’ எனக் கோஷம் எழுப்­புவோர் இந்த அர்த்­தத்தில் அக்­கோ­ஷத்தை எழுப்­பு­வார்­க­ளாயின் அதனை முஸ்­லிம்கள் மிகுந்த மரி­யா­தை­யுடன் வர­வேற்பர். துர­திஷ்­ட­மாக சட்டம் பாகு­பா­டா­கவே பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. பெரும்­பான்மை என வரும்­போது ஒரு மாதி­ரி­யா­கவும் முஸ்­லிம்கள் என்று வரும்­போது வேறொரு மாதி­ரி­யா­கவும் சட்டம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. சட்­டத்தில் முஸ்­லிம்கள் மிக மோச­மான பாகு­பாட்­டு­டனும் துவே­ஷ­மா­கவும் நடத்­தப்­ப­டு­கின்­றனர்.

4/21 க்கும் பிந்­திய இரா­ணு­வத்­தி­னரின் சோதனை நட­வ­டிக்­கைகள், பாது­காப்புக் கெடு­பி­டிகள் தான்­தோன்­றித்­த­ன­மான கைதுகள், தடுத்து வைப்­புகள், விசா­ர­ணைகள் சட்டம் எவ்­வ­ளவு தூரம் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­கின்­றன என்­ப­தற்கு உதா­ர­ணங்கள் உள்­ளன. எடுத்­துக்­காட்­டாக சந்­தே­கத்­திற்­கி­ட­மான வழி­களில் பணம் சம்­பா­தித்­துள்­ளாரா என்று வைத்­தியர் ஷாபி மீது விசா­ர­ணைகள் ஆரம்­பித்­துள்­ள­தாக பொலிஸார் கூறு­கின்­றனர். ஆனால் ஷாபியை விட மிகப் பெரிய ஊழல் பெருச்­சா­ளி­களும் நாட்டைத் தின்று சுற்­றி­யுள்ள கடலில் கைக­ழு­விய பெரும் பெரும் பண மோச­டிக்­காரர்­களும் அர­சியல் களத்தில் ஒய்­யா­ர­மாக உலா வரு­கின்­றனர். அவர்கள் மீது சட்டம் பாய­வில்­லையா?

திகன கல­வ­ரத்திலும் குருநாகல் இன­வெ­றி­யாட்­டத்­திலும் நேர­டி­யாகப் பங்கு கொண்ட அமித்வீரசிங்க கைது செய்­யப்­பட்டு ஒரு சில தினங்­க­ளி­லேயே விடு­த­லை­யானான். ஆனால் அற்ப சொற்ப கார­ணங்­க­ளுக்­கா­கவும் இரா­ணு­வத்­தி­னரின் தவ­றான புரி­தல்­க­ளாலும் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பல அப்­பாவி முஸ்­லிம்கள் இது­வரை விடு­தலை செய்­யப்­ப­ட­வில்லை. மே மாதம் தல­தா­ மா­ளிகைப் பக்கம் சென்ற இரு முஸ்லிம் இளை­ஞர்கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் முன்­னி­லையில் இரா­ணு­வமும் பொலி­ஸாரும் பார்த்­தி­ருக்க கடு­மை­யாகத் தாக்­கப்­பட்டு இரத்தம் ஓட்டப்பட்டனர்.

புனித ரம­ழானில் முஸ்­லிம்­களின் ஆன்­மா­வாகக் கரு­தப்­படும் பள்­ளி­வாசல்­களின் நடுப்­ப­கு­திக்குள் ஊடு­ரு­விய காடையர் கூட்டம் அங்­கி­ருந்த குர்ஆன் பிர­தி­களை நடுப்­பள்­ளிக்­குள்­ளேயே எரித்துச் சாம்­ப­லாக்கி புனித இடங்­க­ளை­யெல்லாம் நொறுக்கித் தகர்த்­தனர்.

எந்­த­வொரு குற்­ற­வா­ளியும் சட்­டத்தின் முன்­நி­றுத்­தப்­பட்டு முறை­யாகத் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை. இந்­நாட்டில் சட்­டத்தின் முன் அனை­வரும் சமமா? என்ற ஆவே­ஷ­மான கேள்­வியை இது எழுப்­பு­கின்­றது.

தர்மச் சக்­கரம் ஆடையில் பொறிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக ஒரு அப்­பாவி முஸ்லிம் பெண் கைது செய்­யப்­பட்டு தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்டார். ஆனால் 1915 ஆம் ஆண்­டி­லி­ருந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­களில் பல நூற்­றுக்­க­ணக்­கான பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. அதன் சூத்­தி­ர­தா­ரி­க­ளுக்கு எந்த தண்­ட­னையும் வழங்­கப்­ப­ட­வில்லை.

இந்தக் கோணத்­தி­லி­ருந்து ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற பிர­சா­ரத்தை முன்­வைப்­பார்­க­ளாயின் அதற்கு முஸ்­லிம்கள் முழு ஆத­ரவு வழங்­கு­வார்கள். அதை விடுத்து முஸ்லிம் விரோத பகை­யு­ணர்­வையும் முஸ்­லிம்கள் குறித்த பயத்­தையும் சிங்­க­ள­வர்கள் மத்­தியில் விதைத்து இனக்­க­ல­வ­ரங்­களைத் தூண்டும் நோக்­கி­லான இத்­த­கைய பொய்ப் பிர­சா­ரங்­களை முஸ்­லிம்கள் அறிவுபூர்­வ­மாக எதிர்­கொள்ள வேண்டும். மத, கலா­சார சுதந்­திரம் மூச்­சுக்­காற்­றுக்கு ஒப்­பா­னது என்ற அடிப்­படை உண்­மையை முஸ்­லிம்கள் புரிந்து கொண்டு கவ­ன­மாகச் செயற்­பட வேண்டும்.

முஸ்­லிம்கள் விடும் தவ­றுகள்

முஸ்­லிம்கள் செறி­வாக வாழும் சில பிர­தே­சங்­களில் இளை­ஞர்கள் சிலர் போக்குவரத்து ஒழுங்குகளை மீறிச் செயற்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகி இருந்தன. கல்முனை, காத்தான்குடி, பேருவளை, திஹாரி, அக்குரணை போன்ற பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டை போக்குவரத்து பொலிஸார் பலமுறை முன்வைத்துள்ளனர். இது குறித்த சில வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி சிங்கள சமூகத்தின் கடும் விமர்சனங்களை எழுப்பியது. கலவரங்களைத் தூண்ட விளையும் விஷம சக்திகளுக்கு இது வாய்க்கு அவலாகியது.

சமீபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித பேருவளையில் இவ்விடயம் குறித்து முஸ்லிம் மக்களோடு தான் கலந்துரையாடிய பின்னர் தற்போது தலைக்கவசம் அணிந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இன்னும் சில இடங்களில் முஸ்லிம்கள் இத்தகைய வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை தொடர்ந்தும் மீறி வருவது கண்கூடு. நான் வசிக்கும் திஹாரியில் இதனை ஒவ்வொரு நாளும் நான் காண்கிறேன்.

கடத்தல், இலஞ்சம் வழங்கல், தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருத்தல், தலைக்கவசம் அணியாதிருத்தல், நிறுவனங்களைப் பதிவு செய்யாதிருத்தல், நிதிக்கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படைத் தன்மையுடன் கையாளாதிருத்தல் போன்ற சில விடயங்களில் நாட்டின் சட்டங்களை மதித்துச் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை கவனிப்புக்குரியது. இவை முஸ்லிம்கள் தரப்பில் இடம்பெறும் பாரதூரமான தவறுகளாகும். இதை முஸ்லிம்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கான பரந்துபட்ட விழிப்பூட்டல் நிகழ்ச்சிகள் உள்ளக ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கலாநிதி றவுப் செய்ன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.