சஹ்ரானின் துப்பாக்கி குண்டுக்குப் பலியாகாத மாவனெல்லையின் செயல் வீரன் தஸ்லீம்

0 854
  • சிங்களத்தில்: கே.வீ. பண்டார – மாவனெல்லை
  • தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்ட சஹ்ரான் குழு­வி­னரின் முத­லா­வது துப்­பாக்கி குண்­டுக்கு இலக்­கா­னவர் முஹம்­மது ராஸிக் முஹம்­மது தஸ்லீம் என்­ப­வர்தான். 37 வய­து­டைய இவர் மாவ­னெல்லை தனா­க­மையைச் சேர்ந்­தவர். தலையில் புகுந்த துப்­பாக்கி குண்­டினால் பாதிக்­கப்­பட்ட இவர் தற்­போது உடல்­தேறி வரு­கிறார். இந்­நி­லையில் ‘மவ்­பிம’ வார இதழ் இவரை நேர்­கண்டு எழு­திய தக­வல்கள் தமி­ழாக்கம் செய்து தரப்­ப­டு­கி­றது.

 

மத கருத்­து­வாதம் ஒன்றை முன்­வைத்து இஸ்­லா­மிய மக்கள் மத்­தியில் உரு­வான தீவி­ர­வாதக் குழு­வினர் மாவ­னெல்­லையைச் சூழ­வுள்ள இடங்­களில் நிறு­வப்­பட்­டி­ருந்த புத்தர் சிலை­களைச் சிதைப்­பதன் ஊடாக தம் வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­தனர். இதன் விளை­வாக அப்­ப­கு­தி­யெங்கும் இன முறு­க­லுக்­கான சூழல் உரு­வாகிக் கொண்­டி­ருந்­தது. இந்­நி­லையில் இக்­குற்றச் செயலில் ஈடு­ப­டுவோர் இனங்­கா­ணப்­பட்டு குறு­கிய காலத்­தி­லேயே அவர்கள் கைது செய்­யப்­பட்­டனர். இந்த விட­யத்தில் தன்­னையே அர்ப்­ப­ணிப்­புச்­செய்து செயற்­பட்ட முன்­னணி முஸ்லிம் வீர­ராகத் திகழ்­ப­வர்தான் தஸ்லீம்.

எங்­க­ளுக்குள் இருந்து இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் இவர்கள் மிகவும் பாவ­காரக் குழு­வி­ன­ராவர். தீவி­ர­வாத சிந்­த­னை­யுள்ள இவர்கள் இஸ்­லா­மி­யர்கள் அல்லர் என்று தஸ்லீம் பாது­காப்புத் தரப்­பி­டமும் மற்றும் அர­சி­யல்­வா­திகள், அய­லக சிங்­க­ளவர் களி­டமும் எடுத்­து­ரைத்தார்.

இந்த நாச­காரக் கும்­பலை ஒழித்­துக்­கட்­டு­வதில் தஸ்லீம் விடா முயற்­சி­யோடு ஈடு­பட்டு வந்தார். அதனால் புத்­தளம் வனாத்­த­வில்­லு­வி­லுள்ள தீவி­ர­வா­தி­களின் பயிற்சி முகாம் உள்­ளிட்ட வெடி­பொ­ருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்­களைக் கண்­டு­பி­டிப்­பதில் பாது­காப்புத் தரப்­புக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி நான்கு நாட்கள் அர்ப்­ப­ணிப்புச் செய்­துள்ளார்.

இஸ்­லாத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி தீவி­ர­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­வோ­ருக்கு எதி­ராக இயங்கும் தஸ்லீம் தீவி­ர­வா­தி­க­ளுக்குப் பெரும் தடைக் கல்­லா­கவே காணப்­பட்டார். இதனால் தீவி­ர­வாதத் தலை­வரின் பணிப்­பு­ரைக்­க­மைய அக்­கு­ழுவைச் சேர்ந்த ஒரு­வரின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு கடந்த மார்ச் 9 ஆம் திகதி அதி­காலை தஸ்­லீமின் தலை இலக்­கா­னது.

தலையின் பின்­புறம் புகுந்த சன்னம் முன்­பக்க நெற்­றியின் மேல்­ப­கு­தியால் வெளி­வந்­துள்­ளது. உட­ன­டி­யாக மாவ­னெல்லை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போதும் காயம் மிகவும் பார­தூ­ர­மாக இருந்­ததால் கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்­துச்­செல்­லப்­பட்டார்.

இச் சம்­பவம் குறித்து தஸ்­லீமின் 28 வய­து­டைய மனைவி முஹம்­மது சாஹித் பாத்­திமா ஜன்னத் கூறி­ய­தா­வது;

தஸ்லீம் எனது கணவர். கடந்த மார்ச் 9 ஆம் திகதி காலை 4.30 மணிக்கே துப்­பாக்கிச் சூடு நிகழ்ந்­தது. நானும் கண­வரும் அவ­ரது தாயும் எனது மூன்று பிள்­ளை­க­ளுமே அப்­போது வீட்­டி­லி­ருந்தோம். எமது அறையின் கட்­டிலில் ஜன்­ன­ல­ருகே எனது கணவர் உறங்கிக் கொண்­டி­ருந்தார். அப்­போது மின்­சாரக் கோளாறு ஏற்­பட்­டது போன்­ற­தொரு சத்தம் கேட்­டது. கைத்­தொ­லை­பே­சியின் சாஜர் வெடித்­ததோ என்று எண்­ணினேன். அது என்ன சத்தம் என்று அருகே இருந்த கண­வ­னிடம் வின­வினேன். அவ­ரி­ட­மி­ருந்து பதி­லில்லை. அப்­போது வெடி­ம­ருந்தின் நொடி என் நாசியைத் துளைத்­தது. கண­வனை உற்று நோக்­கினேன். அவ­ரது தலை­யி­லி­ருந்து இரத்தம் பீறிட்டு வரு­வதை அவ­தா­னித்தேன். அவர் மயக்­க­முற்று கட்­டி­லி­லி­ருந்து விழப்­போ­வதை உணர்ந்தேன். அவர் இறந்து விட்­ட­தா­கவே நினைத்தேன். உடனே கட்­டிலில் அவரைப் பாது­காப்­பாகக் கிடத்­தி­விட்டு வீட்டின் பின்­பக்­க­மாகப் போய்ப்­பார்த்தேன். மூடப்­பட்­டி­ருந்த பின் கதவின் ஒரு பாதி திறந்­தி­ருக்கக் கண்டேன். வெளியே சென்று எனது மதி­னியைக் கூவி அழைதேன். அப்­போது பின் பக்­க­மா­க­வி­ருந்து இருவர் ஓடு­வதை இரு­ளுக்குள் மத்­தியில் நோட்­ட­மிட்டேன். எமது பின் கதவின் உடைந்த தாழ்ப்­பாவைப் பயன்­ப­டுத்­தியே துப்­பாக்­கி­தா­ரிகள் வந்­தி­ருப்­பதை உணர்ந்து கொண்டேன்.

இலக்கம் டீ 36/2, தனா­கம, மாவ­னெல்லை என்ற விலா­சத்தில் வசிக்கும் மொஹமட் ராஸிக் மொஹமட் தஸ்லீம் ஒரு வர்த்­தகர். பாத்­திமா ஜன்னத் என்­ப­வரை மண­மு­டித்து இத்­தம்­ப­திக்கு மூன்று ஆண் குழந்­தைகள். இவர்கள் 9, 6, 1 ½ வய­து­டை­ய­வர்கள்.

தஸ்­லீமின் 62 வய­து­டைய தாய் மொஹமட் சரீப் உம்­மு­லய்மா உம்மா வழிந்­தோடும் கண்­ணீரைத் துடைத்­துக்­கொண்டு கூறி­ய­தா­வது;

எனது மகன் 9 ஆம் தரத்­தில் படித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது எமது குடும்பம் சமுர்த்தி நிதி உதவி பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அப்­போது இப்­ப­கு­தியில் எம்மை விடவும் வறிய மக்கள் இருக்­கி­றார்கள். எமது சமுர்த்தி நிதியை அவர்கள் பெறும் வாய்ப்­பாக நாம் திரும்­பிக்­கொ­டுத்து விடுவோம் என்று கூறி அதற்­கான கடிதம் ஒன்­றையும் எனது மகன் எழு­திக்­கொ­டுத்து சமுர்த்­தி­யி­லி­ருந்து விடு­வித்துக் கொண்டார். அதற்­கீ­டாக பாட­சா­லை­யி­லி­ருந்து வந்து மாலையில் எமது உற­வினர் ஒரு­வரின் கடையில் அமர்ந்து குடும்ப செலவைச் சமா­ளித்து வந்தார். பள்ளிப் பரு­வத்­தி­லி­ருந்தே நல்ல பிள்­ளை­யா­கவே வளர்ந்து வந்தார். நண்­பர்­க­ளுக்கும் உதவி வந்தார்.

எம்மைச் சூழ சிங்­களக் கிரா­மங்கள் உள்­ளன. அதனால் சிங்­கள மக்­க­ளுடன் எமது மகன் மிகவும் அன்­னி­யோன்­ய­மாகப் பழகி வந்தார். அவர்­களின் பண்­டிகை நாட்­களில் மட்­டு­மல்­லாது இதர நாட்­க­ளிலும் அவர்­க­ளது இல்­லங்­க­ளுக்குச் சென்று நல்­லி­ணக்­கத்­துடன் நடந்து கொள்வார்.

சிங்­கள அயல் வீடு­களில் மரணம் சம்­ப­வித்தால் அவ்­வீ­டு­க­ளுக்கு உணவு சமைத்துக் கொடுக்­கும்­படி மகன் என்னைக் கேட்பார். அவ்­வாறு நடந்து கொள்வோம். இவ்­வாறு குண­வி­யல்­புள்ள மகன் பாட­சாலைக் கல்­வியை விட்ட பின்னர் ஊர் இளை­ஞர்­க­ளுடன் இணைந்து சமூக சேவை­களில் ஈடு­பட்டார் என்று அவ­ரது தாய் கூறினார்.

தஸ்­லீமின் மனைவி பாத்­திமா மீண்டும் கூறி­ய­தா­வது;

எனது கண­வரால் சுய­நி­னை­வோடு கதைக்க முடி­யு­மான போதிலும் அவ­ரது இடது  பக்க மண்­டை­யூ­டாக குண்டு துளைத்­துள்­ளதால் அவ­ரது வலது பக்க உடற்­ப­கு­தியே செய­லி­ழந்­துள்­ளது. அதுவும் கூடிய சீக்­கிரம் சீராகும் என்று டாக்­டர்கள் பரிந்­து­ரைக்­கி­றார்கள்.

முன்னர் சிகிச்சை பெற்­று­வந்த வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து தற்­போது பிறி­தொரு மருத்­து­வ­ம­னைக்கு மாற்றம் செய்­துள்­ளனர். காரணம் அவ­ரது உள­வியல் நிலையைச் சீராக்­கவும் நரம்­பியல் தொடர்­பான சிகிச்­சை­களை வழங்­க­வுமே. இந்த வைத்­திய விடு­தியில் சிகிச்­சைகள் நடக்­கின்­றன. அவ­ரது அன்­றாட பணி­களைச் செய்­வ­தற்கு எமது குடும்ப உறுப்­பினர் ஒருவர் அருகே அமர்த்­தப்­பட்­டுள்ளார். அத்­துடன் இவ­ரது பாது­காப்­புக்­காக இரு பொலி­ஸாரும் கட­மையில் உள்­ளனர்.

திகன பிர­தே­சத்தைச் சேர்ந்த கண்டி பொலிஸ் நிலை­யத்தில் பணி­யாற்றும் பந்­துல என்ற சிங்­கள பொலிஸ் அதி­கா­ரி­யொ­ரு­வரே இப்­போது அவ­ரது கட­மை­க­ளுக்கு மத்­தியில் எனது கண­வரின் நிவா­ர­ணத்­திலும் பெரிதும் உதவி வரு­கிறார். தனது உடன் பிறப்­பைப்­போல நின்று உள­வி­யல் ரீதி­யாக நிவா­ரண உத­விகள் செய்து வரு­கிறார். அதற்­காக இப்­போதும் அவரை நினை­வு­கூர்ந்து எனது நன்­றியைத் தெரி­விக்­கிறேன். எனது கண­வ­ரைப் பார்க்­கச்­செல்லும் உற­வி­னர்­க­ளு­டனும் இப்­பொலிஸ் அதி­காரி மிகவும் அன்­புடன் கதைப்பார். அவ­ரது குடும்­பத்­தி­னரும் வைத்­திய விடு­திக்கு வந்து கண­வரின் சுகம் விசா­ரித்து ஆறுதல் கூறுவர். இத்­த­கை­யோ­ராலும் எனது கண­வ­ருக்கு சிகிச்சை வழங்கும் வைத்­தி­யர்­களின் அர்ப்­ப­ணிப்­பாலும் எனது கணவர் நன்கு தேறி வரு­கிறார். எனவே இவர்கள் அனை­வ­ருக்கும் புண்­ணியம் கிடைக்க பிரார்த்­திக்­கிறேன் என்றார் அவர் மனைவி.

அதன்­போது தஸ்­லீமின் தாய் மீண்டும் பேச ஆரம்­பித்தார்.

எனது மகன் பெரும்­பாலும் சிங்­கள ஏழைச் சிறார்­க­ளுக்கு உதவி வந்­துள்ளார். சிங்­கள சமயப் பாட­சா­லைக்கும் உத­வி­களைச் செய்­துள்ளார். அர­னா­யக்க சாம­ச­ர­கந்த மலை சரிந்து அனர்த்தம் ஏற்­பட்­ட­போது மலை­ய­டி­வா­ரத்­தி­லி­ருந்த தெபெத்­கம, வியன்­எ­ளிய விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியைச் சந்­தித்து அங்­குள்ள மக்­க­ளுக்கும் குறித்த விகா­ரைக்கும் பல வழிகளிலும் உதவியுள்ளார். முஸ்லிம் தன­வந்­தர்­களின் உத­வி­களைப் பெற்­றுக்­கொ­டுப்பதில் எனது மகன் அபரிமிதப் பங்களிப்புச் செய்­துள்ளார். இதே­போன்று சுனா­மியின் போதும் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் வெள்ள அனர்த்­தத்தின் போதும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பல நாட்கள் தங்கியிருந்து கொண்டு உதவிகள் புரி­வதில் பங்­க­ளித்­துள்ளார். மகனின் பொதுப்­ப­ணி­களால் அவ­ரது தாய் என்ற வகையில் மக்கள் என்­னையும் அன்­பு­டனும், மரி­யா­தை­யு­டனும் நோக்­கவே செய்­தனர். அவர் செய்த புண்­ணி­யங்­களால் தான் அவர் இந்­த­ள­வா­வது காப்­பாற்­றப்­பட்டு உயி­ருடன் இருக்­கிறார்.

முஸ்லிம் வாலிபர் குழு­வொன்று தவ­றாகச் செயற்­பட்­ட­போது அவர்­களை எதிர்த்து எனது மகன் செயற்­பட்டார். பொலிஸ், இரா­ணு­வத்­திற்குக் காட்­டிக்­கொ­டுத்து இவர்­களை ஒழித்­துக்­கட்ட வேண்டும் என்ற மகனின் பாதை ஆபத்­தா­ன­தென்று தெரிந்தும் நான் அதனைத் தடுத்து நிறுத்­த­வில்லை.

தஸ்­லீமின் ஆப்த நண்­ப­னா­க­வி­ருந்த மும்தாஸ் நண்­பனின் பண்­புகள் குறித்து விப­ரிக்­கையில், தஸ்­லீமின் ஆலோ­ச­னை­களின் படியே நாம் செயற்­பட்டோம். சமூகப் பணி அவ­ரது உடன் பிறந்த குண­மா­க­வே­யி­ருந்­தது. அவ­ரிடம் சிறி­ய­ரக லொறி­யொன்­றி­ருந்­தது. அது பெரும்­பாலும் சமூகப் பணி­க­ளுக்கே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. மர­ணித்­தோரின் பூத­வு­டல்­களை எடுத்­துச்­செல்­வதில் அவ்­வண்டி பெரிதும் பயன்­பட்­டுள்­ளது. இது­வரை சுமார் 100 இற்கும் மேற்­பட்ட பூத­வு­டல்கள் தேவை­யான இடங்­க­ளுக்கு எடுத்துச் செல்­வதில் இவ்­வண்­டியின் சேவை சமூ­கத்­திற்கு ஊன்று கோலாக அமைந்­துள்­ளது. இன, மதம், பாரா­மலே சேவைகள் இடம்­பெற்­றன.

தனா­க­மையைச் சூழ­வுள்ள பகுதி சிங்­கள, முஸ்லிம் வாலி­பர்­களின் மதுப்­பா­வ­னையை விடு­விப்­ப­திலும் தஸ்லீம் அளப்­ப­ரிய அர்ப்­ப­ணிப்புச் செய்­துள்ளார். இவர்­களைத் திசை திருப்ப விளை­யாட்டு மைதானம் ஒன்றை அமைப்­ப­திலும் இவர் அரும்­பாடு பட்­டுள்ளார். இவற்­றுக்குப் புறம்­பாக எத்­த­கைய அனர்த்­தங்­களில் சிக்­கிய உயிர்­க­ளையும் தன்­னு­யிரைத் துச்­ச­­மாக மதித்துக் காப்­பாற்­று­வ­திலும் பின் நிற்­க­மாட்டார்.

பள்­ளியின் நிர்­வாக சபைச் செய­லாளர், முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் இணைப்புச் செய­லாளர் போன்ற பத­வி­களை அலங்­க­ரித்த நிலையில், அவ­ருக்கு வழங்­கப்­பட்ட உத்­தி­யோ­க­பூர்வ வாக­னத்­தையும் சொந்தத் தேவைக்கும் பயன்­ப­டுத்­த­மாட்டார். அதில் ஊருக்கும் பயணிக்கமாட்டார். அப்படிப்பட்ட பண்பாளர்.

அரசியலில் இறங்கி சமூக சேவையில் முழு மூச்சாக ஈடுபடவும் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். தனது பழைய எளிமையான வீட்டிலே தான் வசித்து வருகிறார். இவரின் பாதிப்பால் இவரது குடும்பம் இன்று அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகள் பலரும் இவர் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். வியன் எலிய விகாராதிபதி தஸ்லீமைப் பார்க்கச் சென்று பிரித் நூல் கட்டி சமய கிரியைகளைச் செய்துள்ளார். பிரதேச பௌத்த மக்கள் தஸ்லீமுக்கு சுகம்வேண்டி விகாரையில் போதிபூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இப்படிப் பல சமய வழிபாடுகள் கூட தஸ்லீமுக்காக இடம்பெற்றுள்ளன.

தனாகமையைச் சேர்ந்த தயானந்த, இந்திரானி உள்ளிட்ட சிங்கள பௌத்தர்கள் பலரும் தஸ்லீமின் நற்பண்புகள் குறித்தே கருத்துக் கூறியுள்ளனர். தஸ்லீம் முஸ்லிம்களை விட பௌத்தர்களுக்கே பேருதவி செய்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளனர். தஸ்லீமின் பணிகள் குணவியல்புகள் எழுதி முடிக்க இயலாது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.