முஸ்லிம் சமூகத்தை நோக்கி தலை தூக்கும் ஊடக பயங்கரவாதம்

0 690

எம்.சீ.ரஸ்மின்

ஞாயிறு தாக்­குதல் பொது­மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் அதிர்ச்­சி­யூட்டும் சம்­ப­வ­மா­கவே அமைந்­தி­ருந்­தது. இதே­நி­லைதான் ஊட­கங்­க­ளுக்கும். இந்­நி­லையில் ஊட­கங்கள் பயங்­க­வாதத் தாக்­கு­த­லையும் அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளையும் நேர்த்­தி­யாக அறிக்­கை­யி­டுதல் என்­பது இயல்பில் சிர­ம­மான விட­யமே.

பொது­வான பார்­வையில், இலங்­கையில் ஊடகச் சுதந்­திரம் முழு­மை­யாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஊடகத் தொழில்­வாண்மை மற்றும் முகா­மைத்­துவம் என்­பன சிறி­ய­ளவே வளர்ச்சி கண்­டுள்­ளன. தமது உள்­ள­டக்கம் மற்றும் அதன் தார்­மீகம் தொடர்பில் வாக­ச­கர்­க­ளுக்கோ சட்­டத்­திற்கே பொறுப்­புக்­கூற வேண்­டிய தேவையும் ஊட­கங்­க­ளுக்கு இல்லை. ஊடகக் கொள்­கை­யாக்கம் கடந்த மூன்று தசாப்­தங்­க­ளாக பாரிய மாற்­றங்கள் எத­னையும் சந்­திக்­க­வில்லை. இணைய ஊட­கங்­களின் ஆதிக்கம் உல­க­ளா­விய ரீதியல் அதிகம் வளச்­சி­ய­டைந்து வரும் நிலையில் “ கிசு கிசு” அறிக்­கைகள் சிங்­கள ஊட­கங்­களை அதிகம் பாதித்­துள்­ளன. அந்­த­ரங்­கத்தை (Privacy) அறிக்­கை­யி­டு­வது பற்­றிய சட்­டங்கள் நாட்டில் போதி­ய­ன­வாக இல்லை. அதி­க­மான ஊடக உரிமை சில­ரது கரங்­களில் மட்­டுமே தங்­கி­யுள்­ளன. ஆய்­வு­க­ளின்­படி, பெரும்­பா­லான ஊட­கங்கள் நட்­டத்தில் இயங்­கு­கின்­றன. சில ஊட­கங்கள் நட்டம் ஈட்­டு­வ­தையே இலக்­காகக் கொண்­டுள்­ளன. வர்த்க மற்றும் அர­சியல் சக்­தி­களே ஊட­கங்­களின் உள்­ள­டக்­கங்­களை தீர்­மா­னிக்­கின்­றன. சில ஊட­கங்கள் மாத்­திரம் ஊடக வியா­பா­ரத்தை சரி­வரச் செய்து இலா­ப­மீட்­டு­கின்­றன. இத்­த­கைய பின்­ன­ணியில், இலங்கை ஊட­கங்கள் நேர்த்­தி­யான அறிக்­கை­யி­டலை எதிர்­பார்ப்­பது சாத்­தி­ய­மற்ற ஒன்­றாகும்.

இவ்­வா­றி­ருக்க, ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர், ஏற்­க­னவே முஸ்லிம் சமூ­கத்தை குறி­வைத்து மொது­வாகத் தலை­தூக்கி வந்த ஊடகப் பயங்­க­ர­வாதம் அடுத்த கட்­டத்தை நோக்கி நகர்­வதை தெளி­வாகக் காண முடி­கின்­றது. இது தமிழ், முஸ்லிம் மக்கள் மத்­தியில் மாத்­தி­ர­மன்றி, நடு­நி­லை­யாக சிந்­திக்­கின்ற சிங்­க­ள­வர்கள் மத்­தி­யிலும் அதிக அவ­தா­னத்தைப் பெற்று வரு­கின்­றது. இவ்­வா­றான பின்­பு­லத்தில், இலங்கை தொலைக்­காட்சி ஊட­கங்கள் அண்­மைய பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லையும் அதனைத் தொடர்ந்த தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளையும் அறிக்­கை­யிடும் முறை பற்­றியும் அதனை முஸ்லிம் சமூ­கமும் “முஸ்லிம் தலை­வர்­களும்” எவ்­வாறு எதிர்­கொள்ள வேண்டும் என்­பது பற்­றியும் பேச வேண­்டி­யது கட்­டா­ய­மாகும்.

முன்­னேற்­ற­க­ர­மான அறிக்­கை­யிடல்

தொலைக்­காட்சி ஊட­கங்கள் பல அர­சாங்கம், பாது­காப்புப் பிரி­வினர் மற்றும் பொது­மக்கள் ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து முக்­கி­ய­மான தக­வல்­களைப் பெற்றுக் கொடுத்­தன. சில அடிப்­ப­டை­யான ஊடக ஒழுக்­க­நெ­றி­க­ளையும் பின்­பற்ற முயன்­றன. பிர­தான பயங்­க­ர­வா­தி­யாகக் கரு­தப்­படும் சஹ்­ரானின் குழந்­தையின் முகத்தை பெரும்­பா­லான ஊட­கங்கள் மறைத்­தன. மற்றும் சில ஊட­கங்கள் அவ்­வாறு செய்­ய­வில்லை. சஹ்­ரானின் குழு­வி­ன­ரது வன்­முறைக் கலந்­து­ரை­யாடல் ஒன்றை சில ஊட­கங்கள் ஒளி­ப­ரப்­ப­வில்லை. சிலர் அதில் இடம்­பெற்ற உரை­யா­டலை தவிர்த்துக் கொண்­டனர். சில ஊட­கங்கள் உணர்ச்­சியை அதிகம் தூண்­டக்­கூ­டிய சில காட்­சி­களை மங்­க­லாகக் காட்­டின. தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து உள­வ­ளப்­ப­டுத்­த­லுக்­கான உரை­யாடல் நிகழ்ச்­சி­களை சில தொலைக்­காட்சி நிறு­வ­னங்கள் ஒளி­ப­ரப்­பின. வழமை நிலையை ஏற்­ப­டுத்தும் விதத்தில் விழிப்­பு­ணர்­வூட்டும் கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சி­களும் இடம்­பெற்­றன. எவ்­வா­றா­யினும் பயங்­க­ர­வாதத் தாக்­குதல் தொடர்­பான தொலைக்­காட்சி ஊட­கங்­களின் ஒட்­டு­மொத்த அறிக்­கை­யி­ட­லுடன் ஒப்­பிடும் போது, மேற்­கு­றிப்­பிட்ட சில முன்­னேற்­ற­க­ர­மான கூறுகள் எந்­த­வ­கை­யிலும் முக்­கி­யத்­துவம் பெற­வில்லை.

பொது­வான பார்வை

தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்று இன்­று­வரை தொலைக்­காட்சி ஊட­கங்கள் தமது பிர­தான பணி என்ன என்­பதை அறிந்து கொள்­வதில் குழம்பிப் போயுள்­ளன. ஊட­கங்­களின் பிர­தான பணி என்­பது ஒரு­வ­கையில் அக­வ­யப்­பட்ட (subjective) விட­யம்தான். எனினும், முரண்­பாடு ஒன்றின் “திரைக்குப் பின்­னா­லுள்ள”, “மறைந்­தி­ருக்­கின்ற” இயங்கு சக்தி என்ன? முரண்­பாட்­டுக்குப் பின்­னா­லுள்ள ஊக்­கிகள் எவை? முரண்­பாட்டில் அக்­கறை கொண்ட தரப்­பினர் யார்? என்­பதை அறிந்து அறிக்­கை­யி­டலை மேற்­கொள்­வது ஊட­கங்­களின் பிர­தான பணி­யாகும்.

பெரும்­பா­லான தொலைக்­காட்சி ஊட­கங்கள் தேடுதல் நட­வ­டிக்­கை­களை நேரடி ஒளி­ப­ரப்புச் செய்­தன. இரா­ணு­வத்­த­ள­பதி மகேஷ் சேன­நா­யக்க குறிப்­பிட்­டது போன்று துப்­பாக்கி, கத்தி மற்­று­முண்­டான பொருட்­களை இரா­ணு­வத்­தினர் கைப்­பற்­றி­ய­போது அவற்றை ஒரு நாடகக் கதை­யாக ஒளி­ப­ரப்பி வந்­தன. “பந்­துக்குப் பந்து வர்­ணனை” போல தாக்­கு­தல்­க­ளையும் தேடு­தல்­க­ளையும் பர­ப­ரப்­பாக ஒளி­ப­ரப்பி பீதி, கோபம், வெறுப்பு, பதற்றம், சந்­தோசம், நிச்­ச­ய­மற்ற நிலை என்­ப­ன­வற்றை அள்­ளிக்­கொட்­டின.

தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளின்­போது இரா­ணு­வத்­தி­ன­ருடன் இணைந்து களத்தில் குதித்த பெரும்­பா­லான தொலைக்­காட்சி ஊட­கங்கள் மக்­களின் “தனிப்­பட்ட வாழ்க்­கையை” காட்­சிப்­ப­டுத்­து­வதில் எந்தத் தயக்­கமும் இல்­லாமல் நடந்து கொண்­டன. ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் சில முஸ்லிம் அமைச்­சர்கள் இது­பற்­றிய எதிர்ப்­பினை இரண்டு வாரங்­களின் பின்­னரே வெளி­யிட்­டனர். அப்­போது, ஊடகப் பயங்­க­ர­வாதம் என்­பது பாரிய அழிவை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. ஒட்­டு­மொத்த முஸ்­லிம்கள் தொடர்­பான மிகத் தவ­றான பார்­வையை தோற்­று­வித்து விட்­டன.

சந்­தேக நபர்கள் பற்­றிய செய்­திகள்

அநே­க­மான தொலைக்­காட்சி ஊட­கங்கள் சந்­தேக நபர்கள் கைதான ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவர்­களின் இனம், சமயம் அல்­லது மற்றும் அடை­யா­ளங்­க­ளையும் அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தின. பல சந்­தேக நபர்கள் குற்­ற­வா­ளி­க­ளா­கவும், பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும் காட்­டப்­பட்­டனர். பயங்­க­ர­வா­தி­க­ளாக அடை­யாளங் காணப்­பட்ட நபர்­களின் குடும்­பங்­களின் மீது பெரும்­பா­லான தமிழ், சிங்­கள தொலைக்­காட்­சி­களின் கவனம் அளவு தாண்­டி­ய­தாகக் காணப்­பட்­டது. பயங்­க­ர­வா­தி­களின் குடும்­பத்­தினர் “சந்­தே­கத்­திற்கு இட­மின்றி” ஐ.எஸ். ஆத­ர­வா­ளர்கள் என்­கின்ற உறு­திப்­பாடு பல அறிக்­கை­யி­டல்­களில் வெளி­வந்­தன. சந்­தேக நபர்­களை குற்­ற­வா­ளி­க­ளாக உறு­திப்­ப­டுத்திக் காட்­டு­வதில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்ட அத்­தனை ஊட­கங்­களும் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் நிர­ப­ரா­தி­க­ளாக வெளி­வரும் பட்­சத்தில் அதே அக்­க­றை­யு­டனும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் செய்தி வெளி­யிட வேண்டும். அவ்­வாறு செய்­தாலும் பொறுப்­பற்ற ஊடக அறிக்­கை­யி­டு­தலால் ஏற்­பட்ட களங்கம், அவ­மானம், அச்சம் என்­ப­ன­வற்றை ஊட­கங்கள் ஒரு­போதும் ஈடு­செய்ய முடி­யாது.

பற­வாதி அறிக்­கை­யிடல்

தமக்குக் கிடைக்கும் தக­வலை அல்­லது தாம் கண்­டதை எந்­த­வித உறு­திப்­ப­டுத்­தலும் இல்­லாமல் விழுந்­த­டித்­துக்­கொண்டு அவ­ச­ரத்தில்- முந்­திக்­கொண்டு செய்தி வழங்­கு­வ­தையே இது­கு­றிக்­கின்­றது. ஒரு பெண் சந்­தேக நபரின் பெய­ருடன் வேறு ஒரு­வ­ருக்கு சொந்­த­மான புகைப்­படம் காட்­டப்­ப­ட­டது, மிகப் பிர­ப­ல­மான ஆங்­கில நாளிதழ் ஒன்று தனது முன்­பக்க ‘கிசு­கி­சுவை’ அடுத்த நாளே திருப்பி, திருத்திக் கொண்­டது. சாய்ந்­த­ம­ரு­துவில் இடம்­பெற்ற தாக்­கு­தலில் 11 இரா­ணுவ அதி­கா­ரிகள் பலி­யா­ன­தாக ஒரு செய்தி வெளி­யா­னது. பின்னர் அதனை தவ­றான செய்தி என்று பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் மறு­த­லித்தார். அமைச்சர் தயா­சிரி ஜய­சே­கர NTJ க்கு சொந்­த­மான 400 பள்­ளி­வா­சல்­க­ளுக்கு முஸ்லிம் கலா­சார அமைச்சு அனு­மதி வழங்­கி­யி­ருப்­ப­தாக குறிப்­பிட்டார். பின்னர் அதுவும் மறு­த­லிக்­கப்­பட்­டது. இவை யாவும் ஊட­கங்கள் பற­வாதி நிலையை எடுத்துக் காட்­டு­கின்­றன.

பர­ப­ரப்புச் செய்தி

பர­ப­ரப்புச் செய்தி (Sensational News) என்­பது வெறு­மனே உணர்ச்­சியைத் தூண்டி நுகர்­வோரின் எண்­ணிக்­கையைப் பெருக்கி; வர்த்­தக விளம்­ப­ரத்தை உயர்த்தும் நோக்கில் செய்­தியை வழங்­கு­வ­தாகும். பல தொலைக்­காட்சி ஊட­கங்கள் தேவா­லய குண்­டு­வெ­டிப்பு தொடர்­பான தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களின் சீசீ­ரிவி காணொ­லி­களை ஓர் உணர்ச்­சி­யூட்டும் கதை­யாகக் காட்­டின. சிறிய கத்­திகள், மடிக்­க­ணி­னிகள், பொது­வாகக் காணக்­கி­டைக்கும் வாள்கள் என்­ப­ன­வற்­றையும் ஒரு­வித அதீத பர­ப­ரப்­புடன் காட்­டினர். கைப்­பற்­றப்­பட்ட ஆயு­தங்கள் என்­ன­வென்றே தெரி­யாமல் அவற்­றுக்கு அருகில் நின்­று­கொண்டு அவற்றை அருகில் எடுத்­துக்­காட்­டினர். வைத்­தி­ய­சா­லை­களில் அல்­ல­லுறும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளதும் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளதும் துய­ரப்­பட்ட முகங்­க­ளையும் கண்­ணீ­ரையும் மிக நெருங்­கிய காட்­சி­களில் வெளிப்­ப­டுத்­தினர். இத்­த­கைய பர­ப­ரப்புக் காட்­சி­களை இடை­வெளி நிரப்பும் செய்­தி­க­ளாக மறு­படி மறு­படி காட்­டப்­பட்­டன.

முஸ்­லிம்­களை நோக்கி நகரும்  ஊடகப் பயங்­க­ர­வாதம்

இத்­த­னைக்கும் மத்­தியில் மெது­வாகத் தலை­தூக்கும் ஊடகப் பயங்­க­ர­வாதம் முஸ்லிம் சமூ­கத்தை இலக்கு வைத்­தி­ருப்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரி­கின்­றது. பெரும்­பா­லான தொலைக்­காட்சி செய்­தி­களும் அறிக்­கை­யி­டலும் நடந்த தாக்­கு­த­லுக்­கான ஒட்­டு­மொத்தப் பொறுப்­பையும் முஸ்­லிம்­களின் தலையில் சுமத்த முயல்­கின்­றன. சில ஊட­கங்கள் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை இலக்­கு­வைத்து அவர்­களைப் பழி­தீர்க்க முற்­ப­டு­கின்­றன. கூற்­றுக்கள், நேர்­கா­ணல்கள் மற்றும் நிகழ்­வு­களில் முஸ்லிம் சமூ­கத்தை பழி சொல்­வ­தாக அமையும் காட்­சி­களைத் தெரிவு செய்து ஒளி­ப­ரப்­பு­கின்­றன. தாக்­கு­த­லுக்குப் பின்னால் இயங்கும் மேற்­கு­லக சக்­தி­களின் மூலோ­பா­யங்­களை அசட்டை செய்து பயங்­க­ர­வா­தத்தை ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் போஷித்து வைத்­தி­ருப்­ப­தாக பல ஊட­கங்கள் செய்தி வெளி­யி­டு­கின்­றன.

தொலைக்­காட்சி ஊடக அறிக்­கை­யி­டல்­களை மிக நெருக்­க­மாக அவ­தா­னிக்­கும்­போது “முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த, முஸ்லிம் பள்­ளிக்கு அருகில், முஸ்லிம் ஜும்ஆ பள்­ளிக்கு அருகில், முஸ்லிம் நபர் ஒருவர், முஸ்லிம் கிரா­மத்தில்” போன்ற சொற்­க­ளுக்குச் சம­மான சிங்­களச் சொற்கள் அதிகம் பயன்­ப­டுத்­தப்­பட்டு ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் மீது வெறுப்­பையும், சந்­தே­கத்­தையும் ஏற்­ப­டுத்தி குறிப்­பாக, சிங்­களப் பெரும்­பான்மை மக்­களை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் தூண்­டி­விடும் செயலை ஊட­கங்கள் செய்து வரு­கின்­றன.

அமைச்சர் ரிசாட் பதி­யுதீன் கலந்­து­கொண்ட ஹிரு டீவியின் உரை­யாடல் நிகழ்ச்சி முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் எவ்­வாறு இலக்கு வைக்­கப்­ப­டு­கி­றார்கள் என்­ப­தற்கு சிறந்த உதா­ர­ண­மாகும். முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் “உங்­க­ளுக்கு வெட்­க­மில்­லையா?” என்று கேட்ட ஊட­க­வி­ய­லாளர் இதே கேள்­வியை பிர­த­ம­ரி­டமோ, ஜனா­தி­ப­தி­யி­டமோ அல்­லது இரா­ணுவத் தள­ப­தி­யி­டமோ கேட்­டி­ருக்க வேண்டும். அல்­லது அமைச்சர் ரிசாட் இதே­கேள்­வியை மேற்­சொன்­ன­வர்­க­ளிடம் கேட்­டு­விட்டு வாருங்கள் நான் பதில் சொல்­கின்றேன் எனச் சொல்­லி­யி­ருக்க வேண்டும்.

இதே­நேரம் கிரா­மங்­களில் கண்­டு­பி­டிக்­கப்­படும் வாள்கள் தொடர்பில் சிங்­கள ஊட­கங்­களின் கவனம் திரும்­பி­யுள்­ளது. அதி­க­ள­வி­லான வாள்கள் ஏன் பள்­ளி­வா­சல்­களில் அல்­லது பள்­ளி­வா­ச­லைச்­சூழ மற்றும் முஸ்லிம் கிரா­மங்­களில் காணக்­கி­டக்­கின்­றன என்­பதை விளங்­கப்­ப­டுத்தச் சென்று முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் சிவில் சமூக முன்­னெ­டுப்­பு­க­ளிலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்­றி­யுள்­ளார்கள்.

அமைச்சர் ஹலீம் ஊட­கங்­க­ளுக்கு வழங்­கிய அசட்டைத் தன­மான பதில் சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. என்.எம். அமீன் தெரி­வித்த கருத்து முழு­மை­யாக திரி­புப்­ப­டுத்­தப்­பட்டு ஊட­கங்­களில் பர­ப­ரப்­பாக பேசப்­பட்­டன. ஜனா­தி­ப­திக்கு எமது பெண்­களின் உடைகள் தொடர்­பான சட்­டங்­க­ளையும் நிபந்­த­னை­க­ளையும் முன்­வைக்க முடி­யாது என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை உறுப்­பினர் சொன்ன கருத்­துக்­களை சில சிங்­கள ஊட­கங்கள் தூக்­கிப்­பி­டிக்க முற்­பட்­டன.

இவற்றில் சரி, பிழை ஒரு­பு­ற­மி­ருக்க, முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களோ, சமூக செயற்­பாட்­டா­ளர்­களோ அல்­லது சமயத் தலை­வர்­களோ பெரும்­பா­லான தொலைக்­காட்சி ஊட­கங்­களை பீடித்­துள்ள உள­வியல் பீதியை அதிகம் கவ­னத்தில் எடுக்க வேண்­டி­யுள்­ளது. தவ­றா­ன­வற்றை மாத்­தி­ரமே தேடித்­தி­ரியும் ஊட­கங்­க­ளுக்கு முன்னால் அவ­தா­ன­மாக வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்­தா­விட்டால் அது இறு­தியில் முஸ்லிம் சமூ­கத்தைப் பாதிப்­ப­தா­கவே அமையும். இந்­த­நி­லையில் பின்­வரும் விட­யங்கள் சாதா­ர­ண­மா­ன­வை­யாக இருந்­தாலும் அவற்றில் அக்­கறை கொள்­வது கட்­டா­ய­மாகும்.

ஊட­க­வி­ய­லா­ளர்கள் எத்­த­கைய கேள்­வி­களை கேட்­கலாம் என்­பது பற்­றிய முன்­ன­றி­வுடன் செயற்­பட்டு, அவற்­றுக்­கான தர்க்க ரீதி­யான பதில்­களை ஒழுங்­கு­ப­டுத்திக் கொண்டு ஊட­கங்­களைச் சந்­திக்க வேண்டும். குறிப்­பாக சமயத் தலை­வர்கள் உப­தேசம் செய்யும் கள­மாக ஊடகச் சந்­திப்­புக்­களை எதிர்­கொள்ள முடி­யாது. ஊட சந்திப்புகளுக்குச் செல்லும் சகலரும் தமக்கான பேசு குறிப்புகளை (Talking Points) எழுதி, சரிபார்த்து, உரியவர்களிடம் கொடுத்து கருத்துகளைப் பெற்றுக், கிரகித்து திருத்தமாக வெளிப்படுத்துவது கட்டாயமாகும். ஊடகசந்திப்புகளை அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தையும் இருப்பையும் தக்கவைத்துக் கொள்ளும் களமாக எடுத்துக் கொள்ள முடியாது.

முஸ்லிம் கவுன்சில் அல்லது வேறும் சிவில் அமைப்பு இத்தகைய அவசரகால நிலையல் முஸ்லிம் தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஊடகங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய முறைபற்றி வழிகாட்டல் தொகுப்பு என்றை வெளியிடுவதும் அதுபற்றி உரியவர்களுக்கு அறிவுறுத்துவதும் பொருத்தமாகும்.

“நாம் தவறு செய்துவிட்டோம்” என வெறுமனே கூனிக்குறுக வேண்டிய அல்லது அழுது புலம்ப வேண்டிய தேவையில்லை. இந்த நாட்டில் முஸ்லிம்கள் ஏன் இவ்வாறு வாழ்கின்றார்கள் என்பது வெறுமனே முஸ்லிம்களின் விருப்பத்தினால் மாத்திரம் ஏற்பட்ட ஒன்றல்ல என்பது உணரப்பட வேண்டும்.
அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த மணித்தியாலங்களை செலவழித்த சிங்கள, தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் கடந்த சில நாட்களாக முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையை அறிக்கையிடவில்லை. மாறாக சட்டத்தைக் கையில் எடுக்கும் சில சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு அநீயிழைக்கப்பட்டதாகவே செய்திகள் வெளிவருகின்றன. இந்த இடத்தின் ஊடகக் கண்காணிப்பு மற்றும் ஊடக உள்ளடக்கம் தொடர்பிலான ஆவணப்படுத்தல் பொறிமுறை ஒன்றின் தேவையும் உள்ளது.

(கட்டுரையின் உள்ளடக்கம் கட்டுரையாசிரியரின் தனிப்பட கருத்துக்களையே குறித்து நிற்கின்றது)

Leave A Reply

Your email address will not be published.