உயிர்த்தெழுந்த நாள் தாக்குதலும் சமய உணர்வுகளும்

0 856

இத்­தாக்­குதல் எதற்­காக, ஏன் இந்த நேரத்தில், ஏன் இந்த மக்கள் மீது எனப் பல கேள்­விகள் எழு­கின்­றன. இன்னும் கேள்­விகள் உள்­ளன. இவை விடை காணப்­பட வேண்­டிய கேள்­விகள்.

அது கிறிஸ்­தவ மக்­களின் புனித நாள். இயேசு உயிர்த்­தெ­ழுந்த நாள். எதிர்­பார்ப்­பு­களும், மகிழ்ச்­சியும் ஆன்­மிக உணர்­வு­களும் கிறிஸ்­தவ மக்­களை ஆட்­கொண்­டி­ருந்த நாள். இவ்­வ­ளவு பெரிய அவ­லமும் துய­ரமும் அந்த மக்­களைச் சூழும் ஒரு காலை நேர­மாக அன்­றைய பொழுது ஏன் விடிய வேண்டும்?
46 குழந்­தைகள் கொல்­லப்­பட்­டதை சரி­யென எந்த நீதி­மன்­றத்தில் வழக்­கா­டு­வது 300 க்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்டு 500 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டையக் கார­ண­மா­யி­ருந்த அந்தத் தூண்­டுதல் என்ன?

நியூ­ஸி­லாந்து கிறிஸ்ட் சேர்ச், பள்­ளி­வா­சலில் ஒரு நபர் பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மாக டசன் கணக்கில் தொழு­கையில் இருந்த முஸ்­லிம்­களைச் சுட்டுக் கொன்­ற­போது அந்தப் பாதகச் செயலை அந்த நாடும் ஏற்றுக் கொள்­ள­வில்லை. உல­கமும் ஏற்றுக் கொள்­ள­வில்லை. பொது­வாகக் கொலை­களை அதுவும் அமை­திக்கும் ஆன்­மி­கத்­து­மான கட­வுளின் கோயில்­களில் கொத்துக் கொத்­தாக மக்கள் கொலை செய்­யப்­ப­டு­வதை மானுட நேச­முள்ள எந்த மக்கள் கூட்­டமும் ஏற்கப் போவ­தில்லை.

பத்து வருட அமைதி இடை­வெ­ளிக்கு வைக்­கப்­பட்ட வேட்டுப் போல் இலங்கை மக்கள் அனை­வ­ரி­னதும் உள்­ளங்­க­ளையும் இச்­சம்­பவம் இடிபோல் தாக்கி உள்­ளது. முஸ்லிம் சமூகம் முற்­றாக மனம் உடைந்து போயுள்­ளது. எதிர்­பா­ராத பேர­திர்ச்­சியில் அவர்கள் உறைந்து போயுள்­ளனர். இது எதற்­காக? கார­ணங்கள் கருத்­துகள் எதையும் உட­ன­டி­யாகச் சொல்ல முடி­ய­வில்லை. ஆனால் பள்­ளி­க­ளுக்­குள்­ளேயோ பள்­ளி­க­ளுக்கு வெளி­யி­லேயோ அப்­பாவி மக்கள் மீது நிகழ்த்­தப்­படும் கொலைத் தாக்­கு­தல்­க­ளுக்குப் பயங்­க­ர­வாதம் என்று தான் பெயர். எப்­படி அதை மன்­னிப்­பது?

இன மோதலும் இரத்­தக்­க­ள­ரியும் நாட்டை நாச­மாக்கப் போகி­றது என்ற கரு மேகங்கள் சூழ்ந்த அந்தக் கணங்­க­ளையோ தினங்­க­ளையோ எப்­படி மறப்­பது? பாரிய குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்ட நீர்­கொ­ழும்பு, கொழும்பு கொச்­சிக்­கடை, மட்­டக்­க­ளப்புத் தேவா­ல­யங்­களின் சுற்­றா­டல்­களும் அண்­மித்த பஸார்­களும் பிர­தே­சங்­களும் முஸ்­லிம்கள் வாழும் அல்­லது நட­மாடும் இடங்கள்.

தாக்­குதல் கொடூ­ர­மா­னது, பெரி­யது. 11/9 அமெ­ரிக்க இரட்டைக் கோபுரத் தாக்­கு­த­லுக்குப் பின்னர் நடந்த 5 பெரிய தாக்­கு­தல்­களில் இதுவும் ஒன்று என்று உல­கச்­செய்தி நிறு­வ­னங்கள் வர்­ணித்­தன. உல­கத்தை உலுக்­கிய சம்­பவம் இது. இதற்­கான மீளத்­தாக்­குதல் எந்த இடத்­திலும் எந்த நிமி­டத்­திலும் நடந்­தி­ருக்­கலாம். ஆனால் அது அவ்­வாறு நடக்­க­வில்லை.

இத்­தாக்­கு­தல்­களின் பின்­ன­ணிகள், உள்­நாட்டு, வெளி­நாட்டு சக்­தி­களின் தொடர்­புகள், இன – சமய மோதல்கள், அவற்றின் தாக்­கங்கள் பற்றி பெரிய விவா­த­மொன்­றினை நாம் செய்­ய­மு­டியும். உட­னடித் தேவை நாடு இரத்த ஆறாக மாறு­வதைத் தடுப்­ப­துதான். மீண்டும் அப்­பாவி மக்கள் மீது கொலைத் தாக்­குதல் நடத்­து­வதை நிறுத்­து­வ­துதான்.

ஆரோக்­கி­ய­மான அமை­தி­யான உணர்­வு­களை மக்­க­ளிடம் எப்­படிக் கொண்டு செல்­வது என்­பது மனி­தா­பி­மா­ன­முள்ள மக்கள் மீது சுமத்­தப்­பட்ட கட­மை­யா­கி­யது. இரத்­தத்தை இரத்­தத்­தினால் அல்ல இரத்­தத்தை அன்­பினால் வெல்வோம் என்ற பாதை தெரிந்­தெ­டுக்­கப்­பட்­டது. மனச்­சாட்சி உள்­ள­வர்­களும் இறைவன் மீது அன்பு கொண்­ட­வர்­களும் இப்­ப­டித்தான் சிந்­தித்­தார்கள்.
வரட்டு வியாக்­கி­யா­னங்கள், மனித நேயத்தை மறுக்கும் சமய விளக்­கங்கள், குறு­கிய அர­சியல், இன­வாத இலா­பங்கள் என்­ப­வற்றைத் தாண்டி அன்­பையும் சமா­தா­னத்­தையும் மன்­னிப்­பிற்­கான இறை­வ­ழி­காட்­ட­லையும் மக்கள் மத்­தியில் கொண்டு செல்­லக்­கூ­டிய ஒரு தலை­மைத்­து­வத்தை மக்கள் எதிர்­பார்த்­தனர்.

இது ஒரு குழப்­ப­நிலை தனது மக்­களின் அழி­வி­லி­ருந்து அன்பைப் பிர­க­டனம் செய்ய வேண்டும். அது நிகழ்ந்­தது. பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை பேசினார். தனது மக்­களின் அழு குர­லுக்கும் ஆவே­சத்­துக்கும் ஆண்­டகை அடி­ப­ணிந்­தி­ருக்க முடியும். ஆனால் அவர் வேறு வித­மாகப் பேசினார். மனி­த­னா­கவும் உண்­மை­யான கிறிஸ்­த­வ­னா­கவும் அவர் பேசினார்.

மனித நேயத்­தையும் கிறிஸ்­தவ சம­யத்தின் மன்­னிக்கும் உணர்­வு­க­ளையும் அவர் பேசினார். இரத்­தத்­திற்கு இரத்தம் என்ற சாமான்ய சிந்­த­னை­களை அவர் கடந்து சென்றார். ஆத்­தி­ரத்தை அன்­பாக மாற்றும் செய்­தி­களை அவர் பேசினார். தேவனின் சட்­டங்­களில் பரந்­து­கி­டக்கும் மன்­னிப்பின் சாரத்தை கிறிஸ்­தவ மக்­க­ளுக்கு நினை­வூட்­டினார். ஒரு கிறிஸ்­த­வ­னாக உங்­களை நிலை நாட்­டுங்கள் என்று வேண்­டுகோள் விடுத்தார். அவ­ரது கோரிக்­கைகள் வீண் போக­வில்லை. கடைசி கிறிஸ்­த­வர்­வரை அவர் பேச்சு ஊடு­ரு­வி­யது.
மற்­ற­வர்­களை நேசிக்­கு­மாறும் பழி­வாங்கும் உணர்வைக் கைவி­டு­மாறும் பேசினார். மன்­னிப்­ப­துதான் கிறிஸ்­துவின் பாதை என்­பதைப் பல­முறை வலி­யு­றுத்­தினார். இயே­சு­வுக்கு முற்­பட்ட சம­யங்­களில் பகை­வரை வெறுக்க வேண்டும் என்ற கட்­ட­ளைகள் வெளிப்­ப­டை­யாகப் பேசப்­பட்­டி­ருந்­தன. பழைய ஏற்­பாட்­டிலும் இவ்­வகைக் கருத்­துக்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

“அய­லவர்” (அடுத்­தி­ருப்­பவர்) என்ற சொல் வேறு­பா­டுகள் இன்றி எல்லா மனி­த­ரையும் குறிப்­ப­துதான் என்ற புரிதல் முன்னர் இருக்­க­வில்லை. குடும்ப கோத்ர உணர்­வு­க­ளுக்குள் மக்கள் புதைக்­கப்­பட்­டி­ருந்­தனர். அது ஒரு குழு உணர்வு. சகோ­தர அன்பு என்ற வட்­டத்­திற்குள் பகை­வ­னுக்கு இட­மில்லை என்று வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருந்­தது.

உனக்­க­டுத்­த­வனை (மற்­ற­வர்­களை) நேசித்து உன் சத்­து­ருவைப் பகை­யாளி என்று சொல்­லப்­பட்­டி­ருப்­பதைக் கேள்­விப்­பட்­டி­ருப்­பீர்கள் ( மத்­தேயு 5: 43) என்று இயேசு இதைச் சுட்­டிக்­காட்­டு­கிறார். பழைய வியாக்­கி­யா­னங்கள் இன்று பொருத்­த­மற்­றது என்­பது தான் அவர் போதனை. தொடர்ந்து அவர் கூறு­கிறார்;
உங்­களை வெறுப்­போ­ருக்கு நன்மை செய்­யுங்கள், உங்­களைச் சபிப்­போ­ருக்கு ஆசி கூறுங்கள், உங்­களை இகழ்ந்து பேசு­வோ­ருக்­காக இறை­வ­னிடம் வேண்­டுங்கள் (லூக்கா 6: 27, 28) என்ற ஒரு மனி­த­ரையும் ஒதுக்­கி­வி­டாமல் அனை­வ­ரையும் உள்­ள­டக்கும் சக்தி மிக்க கருத்து இது. அனைத்து மக்­க­ளையும் சகோ­த­ரர்­க­ளாக, சகோ­த­ரி­க­ளாக எடுத்துக் கொள்­ளுங்கள் ஆசீர்­வ­திக்­கப்­ப­டு­வீர்கள் என்­பது தான் கிறிஸ்­துவின் புதிய போதனை அது குழு உணர்­வுக்கு அப்­பாற்­பட்­டது.

21 ஆம் திகதி, உயிர்த்­தெ­ழுந்த தினத் தாக்­கு­தலின் சூடு தணி­யு­முன்னர் கிறிஸ்­தவ தலை­மைத்­து­வமும் கிறிஸ்­தவ மக்­களும் இந்த வேத சத்­தி­யங்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து சமா­தா­னத்தை நிலை நிறுத்­து­மாறு வேண்­டுகோள் விடுத்­தனர். பள்­ளி­வா­சலில் தொழு­கைக்­கா­கக்­கூ­டிய மக்கள் மீது வெறியன் ஒரு­வனால் நிகழ்த்­தப்­பட்ட தாக்­கு­தலை நியூ­ஸி­லாந்து நாடும் அதன் பிர­த­மரும் நிரா­க­ரித்த வேளை­யிலும் இதே சிந்­தனை உணர்வு தான் மேலோங்கி இருந்­ததை உலகம் கண்­டது. முஸ்லிம் உலகம் அவர்­க­ளுக்கு நன்றி கூறி­யது. மனிதம் சாக­வில்லை என்று கவி­ஞர்கள் பாட்­டி­சைத்­தனர். அந்தக் கதை முடியும் முன்னர் தான் இந்தத் தாக்­கு­த­ல் நடந்­தது. சம­யங்கள் சமா­தா­னத்­திற்­கா­கவா? அழி­விற்­கா­கவா? என்ற கேள்­விக்குள் மக்கள் மூழ்கி உள்­ளனர்.

நியூ­ஸி­லாந்து நாடு நடந்து கொண்­டதும், இலங்­கையில் கிறிஸ்­தவ தலை­மைகள் நடந்து கொண்­டதும் மனித நேயத்தின் ஓயாத குர­லுக்கு சாட்­சி­ய­மின்றி வேறென்ன?

கிறிஸ்­தவத் தலை­மை­க­ளுடன் முஸ்லிம் சமயத் தலை­மைகள் ஏற்­ப­டுத்திக் கொண்ட உறவு அனை­வ­ரி­னதும் கவ­னத்தை ஈர்த்­தது. மனி­த­நேயம் பகிர்ந்து கொள்­ளப்­பட்ட சிறந்த சந்­தர்ப்­பங்கள் அவை. ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் ரிஸ்வி முஃப்­தியின் கொள்­ளுப்­பிட்டி வெள்­ளிக்­கி­ழமை சமயப் பிர­சங்கம் கிறிஸ்­தவ மக்­களின் பொறு­மைக்கும் கிறிஸ்­தவத் தலை­மை­களின் அர்ப்­ப­ணிப்­பிற்கும் நன்றி கூறு­வ­தாக அமைந்­தி­ருந்­ததை நாம் நினை­வு­ப­டுத்­தா­தி­ருக்க முடி­யாது.

உட­னடித் தேவை­யாக இருந்­தது மனி­த­நேய உற­வு­கள்தான். முஸ்­லிம்கள் அதை செய்யத் தயா­ராக இருந்­தார்கள். இரத்த தானம் செய்­த­தோடு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத­வு­வ­தற்கும் முஸ்­லிம்கள் முயற்­சி­களை மேற்­கொண்­ட­தா­கவும் அறிய முடிந்­தது ஆறு­த­ல­ளிக்கும் செய்­தி­யாகும். இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­யது யார் என்­பது ஊர்­ஜிதமாவ­தற்கு முன்­ன­தா­கவே நாங்கள் ஒரு குழு­வினர் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்­களை அவ­ரது கொழும்பு வாசஸ்­த­லத்தில் சந்­திக்கச் சென்­ற­தாக மற்­றொரு சமயத் தலைவர் யூசுப் முப்தி “வெளிச்சம்” தொலைக்­காட்சி உரை­யாடல் நிகழ்ச்­சியில் கூறினார். கிறிஸ்­தவ தலை­மை­க­ளு­டனும் மக்­க­ளு­டனும் முஸ்­லிம்கள் தொடர்ந்து நல்­லு­றவைப் பகிர்ந்து கொண்­டனர்.

முஸ்லிம் புத்தி ஜீவி­களும் கல்­வி­மான்­களும் தாம­த­மின்றித் தமது அனு­தா­பங்­க­ளையும் கண்­ட­னங்­க­ளையும் வெளி­யிட்­டனர். மனித உணர்­வு­களோ இஸ்லாம் சம­யமோ இத்­தாக்­கு­தலை அங்­கீ­க­ரிக்கப் போவ­தில்லை என்றும் சக மனி­தர்­க­ளுக்கும் மனுக்­கு­லத்­திற்கும் சமா­தா­னத்தை வழங்­கு­மாறு போதிக்கும் இஸ்லாம் சமயம் இக்­கொ­லை­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­க­ளையே கொண்­ட­தாக இருப்­ப­தா­கவும் தமது அறிக்­கை­களில் பதிவு செய்­தனர்.
“The Religion of Islam” (1950) என்ற புகழ்­பெற்ற நூலில் அதன் ஆசி­ரியர் முஹம்­மது அலி “இஸ்லாம்” என்ற சொல்­லிற்குப் பின்­வரும் விளக்­கத்தை வழங்­கு­கிறார். இஸ்லாம் என்றால் சமா­தா­னத்தில் நுழை­வது என்று பொருள். இறை­வ­னு­டனும் (சக) மனி­தர்­க­ளு­டனும் சமா­தா­னத்தை உரு­வாக்கிக் கொள்­ப­வர்தான் உண்மை முஸ்லிம். மனி­த­ருக்கு தீமை­க­ளையும் அநி­யா­யங்­க­ளையும் செய்­யா­தி­ருப்­பது மட்­டு­மல்ல நன்­மை­க­ளையும் நல்­ல­தையும் (மற்ற) மனி­தர்­க­ளுக்குச் செய்­தாக வேண்டும். மனிதனுடன் சமாதானம் என்பதன் பொருள் அதுதான். குர் ஆனின் 1:112 ஆவது வசனத்தையும் அவர் இதற்கு ஆதாரமாகக் கூறுகிறார். “அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிகின்றவர்கள் யார் என்றால் மற்றவர்களுக்கு யார் நன்மை செய்கின்றார்களோ அவர்கள்தான்” அந்த இறைவசனத்திற்கு அவர் தரும் கருத்து இது.

அவர் மட்டுமல்ல இஸ்லாம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தேடும் எந்த அறிஞரும் இஸ்லாம் என்பதன் வேறு சொல் “சமாதானம்” என்பதையே பிரதிபலிப்பதாகக் கூறுகின்றனர். இஸ்லாம் மதத்தின் பெயரிலேயே சமாதானம் என்ற கருத்தும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கட்டளையும் ஒன்றிணைந்திருப்பது இஸ்லாம் மதத்தின் உண்மையான அடிப்படையையும் இலக்கையும் உறுதி செய்கின்றன.

மற்றவர்களுடன் சமாதானத்தைப் பகிர்ந்து கொள்வதும் மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாதிருப்பதும் என்ற உயர்ந்த மானிட இலட்சியங்களே இங்கு அடித்தளமாக அமைந்துள்ளன. இவை தான் சமயங்களின் உண்மையான அடித்தளங்கள் சமாதானத்துக்கான வழிகாட்டல்கள்.

பேராசிரியர்
எம்.எஸ்.எம்.அனஸ்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.