வில்பத்து வனாந்தரமும் புத்தளம் – யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பாதையும்

0 1,507
  • எஸ்.எம். அன்ஸார்

இலங்­கையில் வில்­பத்து, யால, சிங்­க­ரா­ஜ­வனம் போன்ற வனங்கள் காணப்­ப­டு­கின்­றன. தேசிய பூங்கா என அழைக்­கப்­படும் வில்­பத்­துவின் 131667 ஹெக்­டயர் பரப்­ப­ள­வை­யு­டைய நிலம் பிரித்­தா­னிய அர­சினால் 25.02.1938ஆம் ஆண்டு விலங்­குகள் சர­ணா­ல­ய­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன் யாழ்ப்­பா­ணத்தின் வட­ப­கு­திக்குச் செல்லும் பிர­தான போக்­கு­வ­ரத்துப் பாதை­யாக இருந்­தது. அப்­போது அவ்­வீதி புத்­தளம்– யாழ்ப்­பாணம் வீதி என்றே அழைக்­கப்­பட்டு வந்­தது. பின்னர் புத்­தளம் –மன்னார் வீதி என அழைக்­கப்­பட்டு வரு­கி­றது.

கரை­யோர போக்­கு­வ­ரத்து வீதி­யாக இருந்த அவ்­வீதி மூடப்­பட்­டதன் பின், வடக்­கிற்கும் தெற்­கிற்கும் இடை­யி­லான இணைப்பும் பிணைப்பும் துண்­டிக்­கப்­பட்­டது. பாரம்­ப­ரிய கரை­யோர வீதி­யான அது மூடப்­பட்­டதன் பின், வட­ப­குதி மக்கள் தென்­ப­கு­திக்கும், தென்­ப­குதி மக்கள் வட­ப­கு­திக்கும் இல­கு­வாகப் பய­ணிப்­பது தடைப்­பட்­டதன் கார­ண­மாக, இரு­ப­குதி மக்­க­ளுக்­கு­மான உற­வுகள் பாதிக்­கப்­பட்­டன.

வட பகு­தியின் முக்­கிய நக­ரங்­க­ளான யாழ்ப்­பாணம், மன்னார் போன்ற மாவட்­டங்­களில் வசித்த மக்கள் தங்­க­ளது பல்­வேறு தேவை­களின் நிமித்தம் புத்­தளம், கொழும்பு, காலி போன்ற தென் பகுதி நக­ரங்­க­ளுக்கு மத­வாச்சி, அனு­ரா­த­புரம் போன்ற நக­ரங்­களைச் சுற்­றியே  செல்ல வேண்­டி­யேற்­பட்­டது. புத்­தளம் – மன்னார் வீதிக்­கூ­டாக மன்­னாரைச் சென்­ற­டையும் தூரம் 120கி.மீ. ஆக இருக்கும் அதே­வேளை, புத்­தளம், அனு­ரா­த­புரம், மத­வாச்­சி­யூ­டாக மன்­னாரைச் சென்­ற­டையும் தூரம் 190கி.மீ. ஆகும். யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வவு­னியா, அனு­ரா­த­புரம் ஊடாகப் புத்­த­ளத்­தை­ய­டையும் தூரம் 275கி.மீ. ஆக இருக்கும் அதே­வேளை, யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து பூந­கரி, உயி­லங்­குளம், இல­வங்­குளம் ஊடாக புத்­த­ளத்தை அடையும் தூரம் 215கி.மீ ஆகும்.

பிரித்­தா­னிய அரசின் வில்­பத்து பிர­க­ட­னத்­துக்கு முன் கொழும்­பையும், யாழ்ப்­பா­ணத்­தையும் இணைக்கும் பிர­தான வீதி­யாக புத்­த­ளத்­தி­லி­ருந்து இல­வங்­குளம், மறிச்­சுக்­கட்டி, சிலா­வத்­துறை, அரிப்பு, நானாட்டான், உயி­லங்­குளம், விடத்­தல்­தீவு, பூந­கரி வழி­யாக யாழ்­நகர் செல்லும் வீதியே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது.

கி.பி.1412 – 1467 வரை­யி­லான காலப்­ப­கு­தியில் ஆட்சி செய்த கோட்டை மன்னன் 6ஆம் பராக்­கி­ர­ம­பா­குவின் படை மன்­னா­ரையும், யாழ்ப்­பா­ணத்­தையும் தனது கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வரு­வ­தற்­காக, வளர்ப்பு மகன் சபுமல் குமார ( செம்­ப­கப்­பெ­ருமாள் ) தலை­மையில் மேற்­கு­றிப்­பிட்ட பாதை வழியே தனது சேனையை அனுப்பி வெற்றி வாகை சூடி­யதை வர­லா­று­களில் காணலாம். கி.பி. 1505இல் இலங்­கையின் தென்­ப­குதிக் கரை­யோ­ரங்­களைக் கைப்­பற்­றிய போர்த்­துக்­கீசர், அக்­கால கட்­டத்தில் இலங்­கையின் வர்த்­தகத் துறையை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்த முஸ்­லிம்கள் மீது கொடு­மைகள் புரிந்­தனர். இதைக் கேள்­வி­யுற்ற யாழ்ப்­பாண முஸ்­லிம்கள் காதர் வாலாவின் தலை­மையில் படை திரண்டு யாழி­லி­ருந்து தெற்கு நோக்­கிய தமது பய­ணத்தை பூந­கரி, விடத்­தல்­தீவு, முருங்கன் வழி­யாக சிலா­வத்­துறை வந்த சமயம், போர்த்­துக்­கீசப் படை தெற்­கி­லி­ருந்து புத்­தளம், இல­வங்­குளம், மறிச்­சுக்­கட்டி வழி­யாக சிலா­வத்­துறை அடைந்த சமயம், இரு படை­யி­னரும் சிலா­வத்­து­றையில் மோதிக்­கொண்­டனர்.

அந்த இரு நிகழ்­வு­களும் 500 வரு­டங்­க­ளுக்கும் மேலாக வடக்­கி­னதும் தெற்­கி­னதும் பிர­தான போக்­கு­வ­ரத்துப் பாதை­யாக அப்­பா­தையே இருந்­துள்­ளது என்­ப­தற்­கான ஆணித்­த­ர­மான சான்­று­க­ளாகும். அத்­துடன் புத்­தளம் மக்­களின் குடி­யி­ருப்புப் பிர­சேங்­களில் ஒன்­றான புத்­தளம் – இல­வங்­குளம் வீதியில் நூறு வரு­டங்­க­ளுக்கு முன் வசித்த மக்­களின் காணி உறுதிப் பத்­தி­ரங்­களில் யாழ்ப்­பாண வீதி என குறிக்­கப்­பட்­ட­தையும் அவ­தா­னிக்­கலாம்.

இல­வங்­குளம் கலா­வா­வி­யி­லி­ருந்து மோத­ரகம் ஆறு வரை­யி­லான வில்­பத்துப் பகுதி விலங்­கு­களின் சர­ணா­ல­ய­மாக ஆகு­வ­தற்கு முன், பொற்­ச­ம­வெளி(Golden Plain)எனவும் பொற்­றா­னி­யத்தின் பூமி(Land Of The Golden Grain)  எனவும் அழைக்­கப்­ப­டு­வ­தற்­கான பிர­தான காரணம் நீர்த்­தேக்­கங்­களும், குளங்­களும், வில்­லு­களும் நீரால் நிறைந்து தானி­யங்­களை உற்­பத்தி செய்யும் வள­மிக்க இட­மாகக் காணப்­பட்­ட­தே­யாகும். இல­வங்­குளம், பொன்­ப­ரப்பி, குதி­ரை­மலை, பூக்­குளம், மறிச்­சுக்­கட்டி, சிலா­வத்­துறை, மாதோட்டம் போன்ற இடங்கள் நெற்­றா­னி­யத்­தாலும், கடலில் பெறப்­பட்ட முத்­துக்­க­ளாலும் பெரும் புகழ் பெற்­றி­ருந்­தன. ‘பட்­டினப் பாலை ’யிலே வரும் தென் கடல் முத்தும், ஈழத்­து­ணவும் என்னும் வரிகள் மன்னார் சிலா­வத்­துறைக் கட­லிலே பெறப்­பட்ட முத்­துக்­க­ளையும், பொற்­றா­னி­யத்தின் பூமியில் பெறப்­பட்ட நெற்­றா­னி­யங்­களும் தமி­ழகத் துறை­மு­கத்தை அடைந்­ததைக் குறிப்­ப­ன­வாகும்.

மோத­ரகம் ஆற்­றி­லி­ருந்து மகா­ஓயா வரை­யான 157கி.மீ. தூரம் கொண்ட வடக்குத் தெற்­கான புத்­தளம் மாவட்ட எல்­லையின் வில்­பத்து வனாந்­த­ரத்­தினுள் பூக்­குளம், பளுக்­காத்­துறை போன்ற மீன்­பிடிக் கிரா­மங்­களில் இன்றும் மக்கள் வசித்து வரு­கின்­றனர். பூக்­குளம் கிரா­மத்­திற்குத் தனி­யான கிராம உத்­தி­யோ­கத்தர், பாட­சாலை, மத வழி­பாட்­டுத்­தலம், கடைகள் போன்­ற­னவும் இருப்­பதைக் காணலாம்.

கத்­தோ­லிக்­கரின் முக்­கிய வழி­பாட்டுத் தலமான பள்­ளங்­கண்டல் புனித அந்­தோ­னியார் ஆல­யமும் இவ்­வில்­பத்து வனாந்­த­ரத்­தி­னுள்ளே அமைந்­தி­ருப்­பதும் வரு­டந்­தோறும் நடை­பெறும் திரு­விழா, பூசை போன்­ற­ன­வற்றில் கலந்து கொள்­வ­தற்­காக, வடக்கு மற்றும் தெற்கில் இருந்து ஏரா­ள­மான கத்­தோ­லிக்கர் செல்­வதும் வாடிக்­கை­யான ஒன்று.

வில்­பத்து, விலங்­கு­களின் சர­ணா­ல­ய­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­பாக, 1926ஆம் ஆண்டு கொழும்பு – புத்­தளம் புகை­யி­ரதப் பாதை அமைக்­கப்­பட்டு, புகை­யி­ர­தமும் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டது. நட்­டத்தின் கார­ண­மாக அச்­சேவை சிலாபம் வரை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. பின்னர் 1967 ஆம் ஆண்டு புத்­த­ளத்தில் சீமெந்து தொழிற்­சாலை ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன், சுண்­ணக்­கற்­களை ஏற்றி வரு­வ­தற்­காக அறு­வக்­காடு வரை புகை­யி­ர­தப்­பாதை புதி­தாக அமைக்­கப்­பட்­டது. சிலா­பத்­தி­லி­ருந்து புத்­தளம் வரை­யான புகை­யி­ரதப் பாதை சீர­மைக்­கப்­பட்டு பய­ணிகள் போக்­கு­வ­ரத்தும் மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஆயினும் பெரும் இலாபம் ஈட்டும்  நிலையில் அது இருக்­க­வில்லை.

1980 ஆம் ஆண்டு அப்­போ­தைய போக்­கு­வ­ரத்து அமைச்சர் எம்.எச்.முஹம்­மதின் ஆலோ­ச­னையின் பேரில் கொழும்பு – புத்­தளம் புகை­யி­ரத சேவையை தலை­மன்னார் வரை விஸ்­த­ரிப்­ப­தற்கு ஆய்­வுகள் மேற்­கொள்­வ­தற்­காக, இலங்கை புகை­யி­ரத இலா­காவைச் சேர்ந்தோர் சிலா­வத்­துறை மருத்­து­வ­ம­னையின் முன்னால் உள்ள தென்­னந்­தோப்­பிலே கூடாரம் அமைத்து இல­வங்­குளம், மறிச்­சுக்­கட்டி, சிலா­வத்­துறை ஊடாக, புகை­யி­ரதப் பாதை அமைப்­ப­தற்­கான ஆய்­வு­களை மேற்­கொண்­டனர். வடக்கில் ஏற்­பட்ட அமை­தி­யின்மை கார­ண­மாக அம்­மு­யற்சி கைவி­டப்­பட்­டது.

15.5.1985 காலை 7.25 மணிக்கு அனு­ரா­த­புரம் மாந­கரின் மத்­திய பகுதி, புலி­களின் திடீர்த் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னதால், நகரம் அல்­லோல கல்­லோ­லப்­பட்­டது. மரண ஓலங்­களும் கூக்­கு­ர­லு­மாக மக்கள் சித­றுண்டு ஓடினர். கொல்­லப்­பட்டும் நூற்றுக்கணக்­கானோர் படு­கா­யப்­பட்டும் இருந்­தனர். புத்­தளம் – இல­வங்­குளம் இரவு நேர தரிப்பு பஸ் வண்­டியை அதி­காலை வேளையில் கடத்­திய புலிகள், புத்­தளம், நொச்­சி­யா­கம ஊடாக அனு­ரா­த­பு­ரத்தை அடைந்து அத்­தாக்­கு­தலை மேற்­கொண்­டனர். அதன் பின்னர் இல­வங்­கு­ளத்தில் பாரிய இரா­ணுவ முகாம் அமைக்­கப்­பட்­ட­தோடு, வடக்­கிற்கு விரை­வாக இரா­ணு­வத்தைக் கொண்டு செல்­வ­தற்கு வச­தி­யாக அப்­போ­தைய தேசிய பந்­தோ­பஸ்து அமைச்சர் லலித் அத்­து­லத்­மு­த­லியின் ஆலோ­ச­னையின் பேரில், 1986ஆம் ஆண்டு இல­வங்­கு­ளத்­தி­லி­ருந்து மறிச்­சுக்­கட்டி வரை 100 அடி அக­லத்தில் காடுகள் வெட்­டப்­பட்டு கிரவல் பாதை அமைக்­கப்­பட்­டது. இரா­ணுவத் தேவைக்­காக மாத்­திரம் அப்­பாதை பாவிக்­கப்­பட்­ட­தா­யினும் மறிச்­சுக்­கட்­டிப்­ப­கு­தியில் உள்ளோர் மாட்டு வண்டி, உழவு இயந்­திரம் போன்­ற­வற்றில் புத்­தளம் வரு­வ­தற்கும் போவ­தற்கும் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இலங்­கையில் நெடுஞ்­சா­லைகள் மற்றும் பெரு­வீ­திகள் அமைக்­கப்­பட்­ட­போது, அவைகள் வனங்­களை ஊட­றுத்தே சென்­றன. பதுளை – அம்­பாந்­தோட்டை வீதி, கண்டி – மகி­யங்­கனை வீதி, மகி­யங்­கனை – அம்­பாறை வீதி, மகி­யங்­கனை – மொன­றா­கலை வீதி, பொலன்­ன­றுவை – மகி­யங்­கனை வீதி, பொலன்­ன­றுவை – மட்­டக்­க­ளப்பு வீதி, ஹப­ரண – பொலன்­ன­றுவை வீதி, புத்­தளம் – அனு­ரா­த­புர வீதி, மத­வாச்சி – மன்னார் வீதி, வவு­னியா – ஹொர­வப்­பொத்­தான வீதி, மாங்­குளம் – முல்­லைத்­தீவு வீதி போன்ற பிர­தான வீதிகள் அவற்­றிற்குச் சிறந்த உதா­ர­ணங்­க­ளாகும். தற்­போது காடு­களின் வீதம் வெகு­வாகக் குறைந்­தி­ருப்­பதால், அன்று காடு­களின் ஊடே அமைக்­கப்­பட்ட வீதிகள், இன்று காடு­களின் ஊடாகச் செல்லும் வீதி­க­ளாகத் தென்­ப­டு­வ­தில்லை.

புத்­தளம்–மன்னார் வீதி, மக்கள் போக்­கு­வ­ரத்­திற்­காகத் திறக்­கப்­பட வேண்டும் என்னும் கோரிக்கை மிக நீண்ட கால­மாக அர­சுக்கு விடுக்­கப்­பட்டே வந்­தது. இதன் ஓர் அங்­க­மா­கவே வடக்கில் இடம்­பெ­யர்ந்த மக்­களை மீளக்­கு­டி­ய­மர்த்தும் ‘வடக்கின் வசந்தம் ’ என்னும் திட்­டத்தை 30.4.2009 அன்று சிலா­வத்­து­றையில் ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றிய, வடக்கு மீள்­கு­டி­யேற்ற செய­லணித் தலைவர் பசில் ராஜ­பக் ஷ எம்.பி. வடக்­கையும் தெற்­கையும் இணைக்கும் பிர­தான நக­ராக எதிர்­கா­லத்தில் சிலா­வத்­து­றைதான் திக­ழப்­போ­கி­றது என்று கூறி­யதன் மூலம், புத்­தளம் -– யாழ்ப்­பாணம் வீதி எதிர் காலத்தில் நவீன வீதி­யாகச் செப்­ப­னி­டப்­பட்டு பய­ணிகள் போக்­கு­வ­ரத்துப் பாதை­யாக திறக்­கப்­படும் என்­ப­தற்கு ஒரு முன்­ன­றி­விப்­பா­கவே கரு­தப்­பட்­டது.

மீள்­கு­டி­யேற்றம் மற்றும் அனர்த்த நிவா­ரண சேவைகள் அமைச்­ச­ராக இருந்த ரிஷாட் பதி­யுதீன் 11.10.2009 ஆம் நாள் முசலிப் பாட­சா­லையில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் உரை­யாற்­றி­ய­போது, புத்­தளம் – மன்னார் பாதை விரைவில் திறக்­கப்­ப­டு­மெ­னவும், சீன அர­சாங்­கத்தின் ஆயிரம் கோடி ரூபாய் நிதி உத­வியில் புத்­தளம் – மன்னார் வீதி இல­வங்­குளம், மறிச்­சுக்­கட்டி, சிலா­வத்­துறை, அரிப்பு, வங்­காலை, மன்னார், பூந­கரி, சங்­குப்­பிட்டி வழி­யாக நாவற்­குழி வரை காபட் வீதி­யாக அபி­வி­ருத்தி செய்­யப்­படும் எனக் கூறினார்.

26.12.2009 அன்று கற்­பிட்டி ஆலங்­கு­டாவில் நடை­பெற்ற அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் வட­மா­காண மாநாட்டில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ, புத்­தளம் – மன்னார் வீதி வரும் ஜன­வரி மாதம் மக்கள் போக்­கு­வ­ரத்­திற்­காகத் திறக்­கப்­படும் எனக்­கூ­றி­ய­தற்கு இணங்க, 24.01.2010ஆம் நாள் ஜனா­தி­ப­தியின் புதல்வர் நாமல் ராஜ­ப­க்ஷ­வினால் திறந்து வைக்­கப்­பட்­டது.

வடக்கைத் தெற்­குடன் இணைக்கும் கரை­யோரப் பாதை­யாக ஆவ­தற்­காக நீண்ட கால­மாக கட்­டப்­ப­டா­தி­ருந்த சங்­குப்­பிட்டி மற்றும் அரிப்புப் பாலங்கள் ஜப்­பா­னிய அரசின் நன்­கொ­டையில் கட்­டப்­பட்­டன. இவை நவீன காபட் பாதை வரு­வ­தற்­காகக் கட்­டியம் கூறிய போதிலும், நாவற்­கு­ழியில் இருந்து மறிச்­சுக்­கட்டி வரையும், இல­வங்­கு­ளத்­தி­லி­ருந்து புத்­தளம் வரையும் காபட் பாதையும் மறிச்­சுக்­கட்­டி­யி­லி­ருந்து இல­வங்­குளம் வரை­யான பாதை குன்றும் குழியும் மிக்க போக்­கு­வ­ரத்­துக்குக் கடி­ன­மான மண் பாதை­யு­மாகக் காட்­சி­ய­ளிக்­கின்­றன. வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளமும் சில சமூக ஆர்­வ­லர்­களும் நீதி­மன்­றத்தில் தொடர்ந்­துள்ள வழக்­கினால் 37கி.மீ. தூரம் வரை­யி­லான பாதை புன­ர­மைக்­கப்­ப­டாமல் இருக்­கின்­றது.

வனஜீவராசிகளுக்கு எதுவித இடையூறுகளும் ஏற்படாதவாறு உலகில் ஏராளமான நாடுகளில் வனத்தை ஊடறுத்துச் செல்லும் வீதிகள் மேம்பாலம் அமைத்தும், சுரங்கம் அமைத்தும்  உருவாக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் மலைகளைக் குடைந்து பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். அனுராதபுரம், புத்தளம், மன்னார் ஆகிய பிரதேசங்கள் முக்கோண சுற்றுலா திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருமானம் பெறும் வகையில் இலவங்குளத்திலிருந்து மறிச்சுக்கட்டி வரையான 37கி.மீ. தூரத்திற்கு மேம்பாலம் அமைப்பதன் மூலம் சுற்றுலாக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதோடு, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ‘உறவுப்பாலம் ’ ஒன்றுக்கான நல்லெண்ணமாகவும் அது மிளிரும். அப்பாலத்தில் பயணிக்கும் வாகனங்களுக்குக் கட்டணம் அறவிடுவதன் மூலம் இடப்பட்ட முதலீட்டை விரைவாக மீளப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

எனவே புத்தளம் – மன்னார் வீதி வடக்கின் யாழ்ப்பாணத்திற்கும் தெற்கின் ஹம்பாந்தோட்டைக்குமான கரையோர விரைவு வீதியாக அபிவிருத்தி செய்யப்படும்போது காலம், நேரம், பணம் போன்ற விரயம் மிகுதிப்படுவதோடு பொருளாதாரமும் மேம்படும். மேலும் வடக்குத் தெற்கின் வர்த்தகம் மற்றும் கலை, கலாசாரப் பண்பாடுகளும் வளர்ச்சியடையும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.