பால்மாவில் கலப்படமில்லை

சுகாதார அமைச்சு அறிவிப்பு

0 783

இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில்  கலப்­ப­டங்கள் இல்லை எனவும் பாது­காப்­பா­னதும் பொது­மக்கள் நுகர்­வுக்கு அவை ஏற்­றது எனவும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இலங்கை கட்­ட­ளைகள் நிறு­வனம்,  மாதி­ரி­களை கைத்­தொழில் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தி­னூ­டாக ஆய்­வ­கத்தில் பகுப்­பாய்வு  செய்து பால்­மாவில் வேறு வகை­யான  கொழுப்பு மற்றும் எண்ணெய் எதுவும்  கலப்­படம் செய்யப் பட­வில்லை  என உறு­தி­ய­ளித்­துள்­ளது   என சுகா­தார அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மா­வுடன் பன்றிக் கொழுப்பு மற்றும் மரக்­கறி எண்ணெய் கலக்­கப்­ப­டு­வ­தாக கடந்த வாரம் பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டு அது பாரிய குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் சுகா­தார அமைச்சு இந்த அறி­விப்­பினை விடுத்­துள்­ளது.

அந்த அறி­விப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தா­வது,1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்­டத்தின் பிர­காரம் இறக்­கு­மதி செய்­யப்­படும் உணவு  சம்­பந்­த­மான நட­வ­டிக்­கை­க­ளுக்­கான உணவு  அதி­கா­ரி­யாக  சுங்கத் திணைக்­க­ளத்தின்  பணிப்­பாளர் நாயகம் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இறக்­கு­மதி செய்­யப்­படும் உண­வு­களின் தரம், குணம் மற்றும் பாது­காப்பு சம்­பந்­த­மாக பரி­சீ­லனை செய்து அவை சர்­வ­தேச தரத்­திற்கும் இலங்கை கட்­ட­ளைகள் நிறு­வ­னத்தின் தரத்­திற்கும் அமை­வாக உள்­ள­னவா என உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு சுகா­தார அமைச்சின் இறக்­கு­மதி உணவு  பரி­சோ­தனைப் பிரிவின் உணவு  மற்றும் மருந்து பரி­சோ­தகர், கால்­நடை உற்­பத்தி, சுகா­தார திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்கள், கம­நல திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் இலங்கை கட்­ட­ளைகள் நிறு­வ­னத்தின் தர நிர்­ணய உத்­தி­யோ­கத்­தர்கள் முக்­கிய பணி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இலங்கை கட்­ட­ளைகள் நிறு­வ­னத்தின் இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களின் தரத்­தினை பரி­சோ­திக்கும் வேலைத்­திட்­டத்தில் பால்­மாவும்  கட்­டா­ய­மாக உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­துடன் அது :731:2018 ஆம் இலக்க தர­நிர்­ண­யத்­திற்கு உள்­ள­னவா எனவும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. கப்­ப­லி­லி­ருந்து இறக்­கு­வ­தற்கு முன்­ப­தான தர மதிப்­பீடு பால்மா கப்­பலில் கொண்­டு­வரும் போது அதற்­கான பகுப்­பாய்வு  அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டுதல்  வேண்டும். இவ்­வ­றிக்கை சர்­வ­தே­சத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முறைப்­படி பகுப்­பாய்வு  செய்யும்  ஆய்வு கூடத்­தினால் வழங்­கப்­பட்­டுள்­ளது என பால்மா ஏற்­று­மதி செய்யும்  நாடு உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருத்­தலும் வேண்டும்.

பொது­வான தர நிர்­ணய பகுப்­பாய்வு அறிக்கை  நுண்­ணுயிர் பகுப்­பாய்வு  அறிக்கை மற்றும் பால்­மா­வுடன் வேறு ஏதேனும் கொழுப்பு அல்­லது எண்ணெய் கலக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை கண்­ட­றி­யும் உயர்  தரத்­திற்கு பால் கொழுப்பு உள்­ளதா என அறி­வ­தற்கும்  பகுப்­பாய்வு  அறிக்கை என்­பன மிக முக்­கி­ய­மா­ன­தாகும். இலங்­கைக்கு ஏற்­று­மதி செய்­யப்­படும் அனைத்து பால் தொகு­தி­களும் மனித நுகர்­வுக்கு உகந்­தது என்ற சுகா­தாரச் சான்­றிதழ் ஏற்­று­மதி செய்யும் நாட்டின் அர­சாங்­கத்தின் உணவு அதி­கா­ரியால் வழங்­கப்­பட வேண்டும். அத்­துடன்  இச் சுகா­தாரச் சான்­றி­தழில் குறித்த பால்மா தொகு­தியில் ‘பால் கொழுப்பு தவிர்ந்த வேறு எந்த வகை­யான கொழுப்போ எண்­ணெய்யோ அடங்­க­வில்லை’ என்றும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருத்­தலும் வேண்டும்.

உலக வணிக நிறு­வன உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் ஏற்­று­மதி செய்யும் நாட்டின் அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­படும் சுகா­தார சான்­றி­தழை இறக்­கு­மதி செய்யும் நாடு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இலங்­கையின் இறக்­கு­மதி கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கைகள் சுகா­தார அமைச்சின் கீழ் இயங்கும் இறக்­கு­மதி உண­வுப்­ப­ரி­சோ­தனை பிரி­வி­லுள்ள உணவு  மற்றும் மருந்து பரி­சோ­த­கர்­க­ளுக்கு பால்மா இறக்­கு­மதி சம்­பந்­த­மான ஆவ­ணங்கள் சுங்க அதி­கா­ரி­க­ளினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டதும் உரிய ஆவ­ணங்­களை அவ­தா­ன­மாக பரி­சோ­தனை செய்­வ­துடன் எல்லா பால்மா தொகு­தி­களும் அணு கதிர்­வீச்சு சோத­னைக்­காக அணு­சக்தி அதி­கார சபைக்கு அனுப்­பப்­பட்டு உறு­திப்­ப­டுத்­தப்­படும். அத்­துடன்  04 பால்மா தொகு­தி­க­ளுக்கு 01 தொகுதி தெரிவு செய்­யப்­பட்டு  அத்­தொ­கு­தியின் மாதி­ரிகள் கொழுப்பு பகுப்­பாய்­விற்கும்  நுண்­ணங்கி பகுப்­பாய்­விற்கும்  சுகா­தார அமைச்சின் உணவு  ஆய்­வு­கூ­டத்­திற்கும் அனுப்பி உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. அத்­துடன்   பகுப்­பாய்­வுக்­காக கைத்­தொழில் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­திற்கு  அனுப்­பப்­பட்டு உறுதி செய்­யப்­ப­டு­கின்­றது.

கண்­கா­ணிப்பு மாதி­ரிகள் பரி­சோ­தனை பால்­மாவில் வேறு வித­மான கொழுப்பு அல்­லது எண்ணெய் வகைகள் சேர்க்­கப்­பட்டு கலப்­படம் செய்­யப்­பட்­டுள்­ளதா என அறிய மாதி­ரிகள் பெறப்­பட்டு சுகா­தார அமைச்சின் உணவு  ஆய்­வ­கத்­தினால் பகுப்­பாய்வு  செய்­யப்­பட்டு திருப்­தி­க­ர­மா­னது என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. 2019 ஆம் ஆண்டும் 5 மாதி­ரிகள் பெறப்­பட்டு இதற்­கான ஆய்­வ­றிக்­கையும் பெற்றுக் கொள்ள ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இலங்கை கட்­ட­ளைகள் நிறு­வ­னமும்  மாதி­ரி­களை கைத்­தொழில் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தி­னூ­டாக ஆய்­வ­கத்தில் பகுப்­பாய்வு  செய்து பால்­மாவில் வேறு வகை­யான கொழுப்பு மற்றும் எண்ணெய் எதுவும்  கலப்­படம் செய்­யப்­ப­ட­வில்லை என உறு­தி­ய­ளித்­துள்­ளது.

மேற்­கு­றிப்­பிட்ட ஏற்­று­மதி செய்யப்படும் நாட்டினால் சமர்ப்பிக்கப்படும் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தின் பகுப்பாய்வு  அறிக்கை அந்நாட்டின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழ்  இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் அறிக்கை  அணுசக்தி அதிகாரசபை  கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்  மற்றும் சுகாதார அமைச்சின் உணவு  ஆய்வகத்தின் அறிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வேறு வகையான கொழுப்பு மற்றும் எண்ணெய்களினால் கலப்படம் செய்யப்படாத பால்மா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.