வியாபாரத்தில் இஸ்லாமிய பண்புகளும் பண்பாடுகளும்

0 6,382

அப்துல் காலித் முஹம்மது மின்ஹாஜ் முப்தி (காஷிபி) 

மனித வாழ்வை நெறிப்­ப­டுத்தி வளப்­ப­டுத்­து­வதில் இறை மார்க்கம் புனித இஸ்லாம் சட்­டங்­க­ளோடு சரி நிக­ராக பண்­பு­க­ளையும், பண்­பா­டு­க­ளையும் இணைத்து வைத்­துள்­ளது. சட்­டங்­களை (அஹ்காம்) மாத்­திரம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதன் மூலம் ஒரு முஸ்லிம் பரி­பூ­ரண முஸ்­லி­மாகி விடு­வ­து­மில்லை. பண்­பா­டு­களை (அஹ்லாக்) மாத்­திரம் கைக்­கொள்­வதன் மூலம் ஒரு முஸ்லிம் முழு­மை­யான முஸ்­லி­மாகி விடு­வ­து­மில்லை. அஹ்­காமும் அக்­லாக்கும் ஒரு நாண­யத்தின் இரு பக்­கங்­களைப் போன்­ற­தாகும்.

வாழ்­வி­யலின் சகல அம்­சங்­க­ளையும் தழு­விய இறை­நெறி இஸ்லாம் வியா­பாரக் கொடுக்கல் வாங்­க­லையும் செம்­மையாய் நெறிப்­ப­டுத்­தி­யுள்­ளது. வாங்­கு­பவர், விற்­பவர், பொருள், கிரயம், விற்­ப­தாக அல்­லது வாங்­கு­வ­தாகத் தெரி­வித்தல், விற்­ப­தற்­கான அல்­லது வாங்­கு­வ­தற்­கான தெரி­விப்பை ஏற்­றுக்­கொள்ளல் என விப­ர­மாகப் பிரித்து ஒவ்­வொன்­றிலும் சட்­டங்­க­ளையும் பண்­பா­டு­க­ளையும் வகுத்­துள்­ளது. அவை முழு அளவில் பின்­பற்­றி­யொ­ழு­கப்­பட்ட நிலையில் நடந்­தேறும் வியா­பாரக் கொடுக்கல் வாங்­கலே இஸ்­லாத்தின் பார்­வையில் அங்க சம்­பூ­ர­ண­மான வியா­பாரக் கொடுக்கல் வாங்­க­லாகும்.

வியா­பாரக் கொடுக்கல் வாங்­கலை ஆளு­கின்ற சட்­டங்­களை ஓர­ள­வேனும் அறிந்து   வைத்­தி­ருக்­கின்ற நம்மில் பலர், அதன் பண்­புகள் பற்­றிய அறிவைப் பெறு­வதில் ஆர்வம் காட்ட முயல்­வது அரி­தாகும். இப்­பின்­ன­ணியில் இஸ்லாம் கூறும் வியா­பா­ரத்தின் பண்­புகள் சில­வற்றை எடுத்துக் காட்­டு­வ­தற்கு இக்­கட்­டு­ரையில் முயற்சி செய்­யப்­ப­டு­கின்­றது.

உண்மை

வியா­பாரி தனது பொருட்­களை விற்று இலாபம் பெற்று தனது வியா­பா­ரத்தை மேலும்  வளப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­கின்றான். இதற்­காக விற்­ப­னை­யின்­போது வாடிக்­கை­யா­ளரைக் கவர்ந்­தி­ழுக்கும் வண்ணம் அரு­மையாய் உப­ச­ரித்து அழ­காகப் பேசு­கின்றான். இயன்­ற­வரை தனது பொருட்­களை அவ­ருக்கு விற்று காசாக்கிக் கொள்­வதில் மிகுந்த அக்­கறை செலுத்­து­கின்றான். இத்­த­ரு­ணத்தில் வியா­பாரி உண்­மையாய் நடந்­து­கொள்­வது அவ­சி­யத்­திலும் அவ­சி­ய­மாகும். வியா­பாரப் பொருள் பற்றி முற்­றிலும் உண்­மை­யான வர்­ண­னையை அவர் வாடிக்­கை­யா­ள­ருக்கு வழங்க வேண்டும். பொய் அறவே கலந்­து­விடக் கூடாது.  முழுக்க முழுக்க அல்­லாஹ்வைப் பயந்த நிலையில் வியா­பாரம் நடை­பெற வேண்டும். உண்­மைக்குப் புறம்­பான எதுவும் வியா­பா­ரத்தின் போது அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

அல்­லாஹ்வை அஞ்சி நேர்­மை­யான முறையில் உண்­மை­யுடன் வியா­பா­ரத்தில் ஈடு­படும் வர்த்­த­கர்­களை சிலா­கித்தும், மாற்­ற­மாக நடப்­ப­வர்­களை எச்­ச­ரித்தும் நபி­ய­வர்­களின் வாக்­கி­யங்கள் வந்­துள்­ளன. பின்­வரும் ஹதீஸ் இவ்­வி­ட­யத்தில் கவ­னத்­திற்­கு­ரி­ய­தாகும்:

“நிச்­ச­ய­மாக வியா­பா­ரிகள் மறுமை நாளில் பாவி­க­ளாக எழுப்­பப்­ப­டுவர். அல்­லாஹ்வைப் பயந்து நல்ல முறையில் உண்­மை­யுடன் நடந்து கொண்­டோரைத் தவிர.” (அறி­விப்­பவர்: ரிபாஅஹ் இப்னு ராபிஃ ரழி­யல்­லாஹு அன்ஹு, நூல்: முஸ்­தத்ரக் அல்-­ஹாகிம்)

எனவே, உண்­மையைக் கடைப்­பி­டிப்­பது   ஏனைய சந்­தர்ப்­பங்­களில் போலவே விற்­றலின் போதும் ஒரு முக்­கிய பண்­பாக விதந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

நம்­பிக்கை

ஒரு முஸ்லிம் நம்­பிக்­கையின் பிர­தி­பிம்­ப­மாக இருப்பான். ஏமாற்றல் அவ­னுக்கு வெறுப்­பிலும் வெறுப்­பாக இருக்கும். சொல், செயல் எல்­லா­வற்­றிலும் நம்­பிக்கை அவ­சியம் தேவை­யென இஸ்லாம் வற்­பு­றுத்தி நிற்­கின்­றது. அல்­லாஹு தஆலா தனது தூதர்­க­ளிடம் கட்­டா­யப்­ப­டுத்­திய பண்­பு­களுள் ஒன்று நம்­பிக்கை. நம்­பிக்­கை­யாக நடப்­ப­வனை எல்­லோரும் நம்­புவர், அவ­னுடன் நம்­பிக்­கை­யுடன் பழ­குவர், உற­வா­டுவர்.

வியா­பா­ரத்தில் நம்­பிக்கை இன்­றி­ய­மை­யா­தது. அதன் அனைத்து அம்­சங்­க­ளிலும் நம்­பிக்கை அவ­சியம். நம்­பிக்­கை­யான வர்த்­த­கரின் வர்த்­தகம் பெயர், புக­ழுடன் நிலைத்து நிற்கும். சந்­தையில் அதற்­குள்ள நன்­ம­திப்பு வாடிக்­கை­யா­ளர்­களை அதனை நோக்கி இழுத்­த­ழைத்துச் செல்லும்.

நம்­பிக்­கை­யான வியா­பாரி பற்றி புகழ்ந்து பேசி­னார்கள் அல்­லாஹ்வின் தூதர் ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்.

“உண்­மை­யான நம்­பிக்­கை­யான வியா­பாரி நபி­மார்கள், உண்­மை­யா­ளர்கள், ஷஹீத்­க­ளுடன் இருப்பார்.” (அறி­விப்­பவர்: அபூ சஈத் ரழி­யல்­லாஹு அன்ஹு, நூல்: ஸுனன் அல்-­திர்­மிதி)

ஏமாற்றி வியா­பாரம் செய்­வது முற்­றிலும் தடுக்­கப்­பட்­டது. ஒன்­றி­ருக்க வேறொன்றைக் கூறி, ஒன்றைக் காட்டி மற்­றொன்றைக் கொடுத்து வியா­பாரம் பண்­ணு­வது ஏமாற்று வியா­பா­ர­மாகும்.

உணவுக் குவி­யலில் நனைந்த பகு­தியை அடி­யிலும் உலர்ந்த பகு­தியை மேலா­கவும் வைத்து விற்­றுக்­கொண்­டி­ருந்த மனி­தரை தடுத்து வழிப்­ப­டுத்தி, “எம்மை ஏமாற்­று­பவன் எம்மைச் சேர்ந்­த­வ­னல்லன்” என்று செப்­பி­னார்கள் நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (அறி­விப்­பவர்: அபூ ஹுரைரா ரழி­யல்­லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹ் இப்னி ஹிப்பான்)

முஸ்லிம் சமூகம் நம்­பிக்­கைக்­கு­ரிய சமூகம். அதன் ஒவ்வோர் அங்­கத்­த­வனும் நம்­பிக்­கை­யா­ள­னாக இருப்­பது கட்­டாயம். ஏமாற்றுப் பேர்­வ­ழிகள் முஸ்லிம் சமூ­கத்தில் சேர்ந்­தி­ருக்க அரு­க­தை­யற்றோர் என்­பதே ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்­க­ளது மேற்­படி கூற்றின் கருத்­தாகும். வியா­பா­ரத்தின் போது நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனைக் கூறி­யி­ருப்­பது இன்னும் கூர்ந்து அவ­தா­னிக்­கப்­பட வேண்டும். இத­னை­யெல்லாம் பார்க்­கும்­போது வியா­பா­ரத்தில் நம்­பிக்கை ஒரு முக்­கிய பண்­பென்­பது வெளிப்­ப­டை­யா­கின்­றது.

வாக்கை நிறை­வேற்­றுதல்

வியா­பா­ரத்தில் கொடுத்த வாக்கில் உறு­தி­யாக இருத்தல் இன்­றி­ய­மை­யா­தது. பலர் கட­னுக்குப் பொருளை வாங்­கி­விட்டு குறித்த நேரத்தில் கடனை அடைப்­ப­தாக வாக்­க­ளிப்­ப­தையும், மற்றும் சிலர் காசோலை வழங்­கு­வ­தையும் சந்­தை­க­ளிலும், வியா­பார நிலை­யங்­க­ளிலும் காண்­கிறோம். குறித்த தவணை வந்­ததும் கடன் கொடுத்­தவர் கடனை  அடைக்­காமல் கொடுத்த வாக்­கிற்கு மாறு செய்­வ­தையும், அவர்­க­ளது தொலை­பேசி அழைப்­புக்­களை துண்­டித்து விடு­வ­தையும், காசோலை வழங்­கி­யவர் வங்­கியில்   பணம்  செலுத்­தாமல் விடு­வது, மூடப்­பட்ட வங்கி கணக்­கு­களின் காசோ­லை­களை வழங்கி ஏமாற்­று­வது போன்ற நட­வ­டிக்­கைகள் மூலம் வாக்­கு­று­திகள் மீறப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கிறது.

ஆனால் உண்­மை­யான, நம்­பிக்­கை­யான வியா­பாரி வாக்­க­ளித்தால் மாறு செய்­ய­மாட்டான் என அருமை நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்­கள கூறு­கின்­றார்கள்.

வியா­பாரக் கொடுக்கல் வாங்­கலில்  வாக்­கு­று­தியை உரிய முறையில் நிறை­வேற்­று­வது அதி­முக்­கி­ய­மான பண்­பா­கு­மென்­பது இங்கு தெளி­வா­கின்­றது.

தாரா­ளத்­தன்மை

இஸ்லாம் தாரா­ளத்­தன்­மையின் மார்க்கம். தன்னைப் பின்­பற்­று­வோ­ரி­டமும் அது தாரா­ளத்­தன்­மையை வெகு­வாக எதிர்­பார்க்­கின்­றது. தாராள மனப்­பான்மை சட்ட எல்­லை­களைத் தாண்­டி­ய­தாகும். வியா­பா­ரத்தின் போதும் இவ்­வுன்­னத பண்பு கடைப்­பி­டிக்­கப்­பட வேண்டும். வியா­பாரி தாராள மனப்­பான்­மை­யுடன் நடந்­து­கொள்ள வேண்டும். வாடிக்­கை­யா­ளரும் தாரா­ளத்­தன்­மை­யுடன் நடந்­து­கொள்ள வேண்டும். பேரம் பேசு­வது, இலாபம் வைப்­பது, விற்­பது, கிர­யத்தைப் பெறு­வது, பொருளைக் கைய­ளிப்­பது, பொருளைக் கையேற்­பது போன்ற அனைத்து அம்­சங்­க­ளிலும் இரு­வரும் தாராள மன­துடன் ஒருவர் மற்­ற­வரின் நலன் பாதிக்­கப்­ப­டா­தி­ருப்­பதை உறு­தி­செய்யும் வகையில் நடந்­து­கொள்ள வேண்டும். விற்­பவர் தனது நலனில் மட்டும் அக்­கறை காட்டி இறு­கிய நெஞ்­சுடன் நடந்­து­கொள்ளக் கூடாது. வாங்­கு­ப­வரும் அவ்­வாறு நடந்­து­கொள்ளக் கூடாது. நெஞ்சு விரிந்த நிலையில் தாராள மன­துடன் வியா­பாரக் கொடுக்கல் வாங்­கலில் ஈடு­ப­டு­வோ­ருக்கு வல்­லவன் அல்­லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்­தித்­தார்கள் அருமை நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். “விற்­றாலும் வாங்­கி­னாலும் மீளக் கேட்­டாலும் தாரா­ளத்­தன்­மை­யுள்ள மனி­த­னுக்கு அல்லாஹ் அருள் புரி­வா­னாக!” (அறி­விப்­பவர்: ஜாபிர் ரழி­யல்­லாஹு அன்ஹு, நூல்: சஹீஹ் அல்-­பு­காரி)

வியா­பாரக் கொடுக்கல் வாங்­க­லின்­போது தாரா­ளத்­தன்­மை­யுடன் நடந்­து­கொள்­வது அலா­தி­யான முக்­கிய பண்­பா­கு­மென்­பது இங்கு தெளி­வா­கின்­றது.

சத்­தியம் செய்­வதைத் தவிர்ந்­து­கொள்ளல்

பொருட்­களை விற்றுப் பண­மாக்கும் பொருட்டு பகீ­ரதப் பிர­யத்­தனம் செய்ய வேண்­டிய சந்­தர்ப்­பங்கள் ஏற்­படும்.  வியா­பா­ர­மா­னது வர்த்­த­கர்­க­ளுக்கு மத்­தியில் பெரும் போட்­டிக்கு மத்­தியில் நில­வு­கின்­றது. எதனைச் சொல்­லி­யா­வது வாடிக்­கை­யா­ளரைத் திருப்­திப்­ப­டுத்தி பொருட்­களை அவர் தலையில் கட்டி பணத்தைப் பெற்றுக் கொள்­வதில்   முனைப்­புடன் செயற்­ப­டு­கின்ற வர்த்­த­கர்கள் சில  வேளை­களில் சத்­தியம் செய்யத் தவ­று­வ­து­மில்லை.

சத்­தியம் செய்தல் உண்­மைக்­காக இருந்­தாலும் சரியே தவிர்க்­கப்­பட வேண்­டி­ய­தாகும். குற்­றச்­சாட்­டுக்­களை மறுத்­து­ரைக்க வேண்­டிய கட்­டங்கள் போன்ற சந்­தர்ப்­பங்­களில் மாத்­திரம் அனு­ம­திக்­கப்­பட்ட சத்­தியம் செய்­தலை சாதா­ர­ண­மாக வியா­பாரக் கொடுக்கல் வாங்­கலின் போதெல்லாம் இஸ்லாம் அனு­ம­திக்­க­வில்லை. பொய் சத்­தியம் செய்­வது பெரும் பாவம் என்­ப­துடன் உண்­மைக்­காக சத்­தியம் செய்­வதும் விரும்­பத்­த­கா­த­தாகும்.

வியா­பார வேளையில் உண்­மையைப் பேசி நேர்­மை­யுடன் நடந்­து­கொள்­வது போது­மா­னது,   சத்­தியம் செய்தல் பரக்­கத்தை இல்­லா­தொ­ழித்து விடும். பின்­வரும் நபி மொழி இதற்கு சான்­றாகும்:

“சத்­தியம் சரக்கை விற்கச் செய்யும், பரக்­கத்தை ஒழிக்கச் செய்யும்.” (அறி­விப்­பவர்: அபூ ஹுரைரா ரழி­யல்­லாஹு அன்ஹு, நூற்கள்: சஹீஹ் அல்-­பு­காரி, சஹீஹ் முஸ்லிம்)

அதிலும் வியா­பா­ரத்தில் பொய் சத்­தியம் செய்­வது அல்­லாஹ்வின் தண்­ட­னைக்­கு­ரி­ய­தாகும். பின்­வரும் நாயக வாக்­கியம் இதனை உணர்த்­து­கின்­றது:

“மறுமை நாளில் மூவ­ருடன் அல்லாஹ் பேசவும் மாட்டான், அவர்­களைப் பார்க்­கவும் மாட்டான், அவர்­களைப் பரி­சுத்­தப்­ப­டுத்­தவும் மாட்டான். அவர்­க­ளுக்கு நோவினை தரும் வேத­னை­யுண்டு” என நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­னார்கள். “அவர்கள் தோல்­வி­ய­டைந்­தார்கள், நஷ்­ட­மடைந்­தார்கள். அல்­லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?” எனக் கேட்­டார்கள் அபூதர் ரழி­யல்­லாஹு அன்ஹு அவர்கள். “கரண்டைக் காலுக்குக் கீழ் ஆடை அணி­பவன், தான் செய்த உப­கா­ரத்தை சொல்­லிக்­காட்­டு­பவன், தனது சரக்கை பொய் சத்­தியம் செய்து விற்­பவன்” என நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­னார்கள். (அறி­விப்­பவர்: அபூதர் ரழி­யல்­லாஹு அன்ஹு, நூல்: சஹீஹ் முஸ்லிம்)

ஓர் உண்­மை­யான, இறை­யச்­ச­முள்ள வியா­பா­ரியின் உயர்ந்த பண்­பு­களுள் ஒன்­றாக சத்­தியம் செய்­தலைத் தவிர்ந்­தி­ருப்­பதைக் கூறலாம்.

நடந்து முடிந்த வியா­பாரக் கொடுக்கல் வாங்­கலை முறித்­துக்­கொள்ளல்:

விற்­ப­வரும் வாங்­கு­ப­வரும் வியா­பாரக் கொடுக்கல் வாங்­கலை முறித்­துக்­கொள்ளும் விருப்ப நிபந்­த­னை­யின்றி ஒரு வியா­பாரம் நடந்து முடிந்­தபின் வாங்­கி­யவர் பொருளை திருப்பிக் கொடுக்­கவோ, விற்­றவர் பொருளை திருப்பிக் கேட்­கவோ சட்ட ரீதி­யாக அனு­ம­தி­யில்லை. சில வேளை­களில் இவ்­வா­றான சந்­தர்ப்­பங்கள் ஏற்­ப­டு­வ­துண்டு. இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் இரு­வரும் மனம் ஒப்பி நடை­பெற்று முடிந்த வியா­பாரக் கொடுக்கல் வாங்­கலை முறித்­துக்­கொள்ள முன்­வ­ருதல் மற்­று­மொரு வியா­பாரப் பண்­பாகும்.

வாங்­கி­ய­வ­ருக்கு பொருள் வாங்கும் போதி­ருந்த மன­நிலை மாறி   அதனை மீண்டும் விற்­ற­வ­ருக்குத் திருப்பிக் கொடுக்க விரும்­பலாம். விற்­றவர் பெரு­ம­ன­துடன் அப்­பொ­ருளை மீளப் பெற்­றுக்­கொண்டு எடுத்­தி­ருந்த கிர­யத்தை அப்­ப­டியே திருப்­பிக்­கொ­டுத்து நல்ல பண்­புடன் நடந்­து­கொள்­கிறார். இது ஒரு வகை. சில­வேளை விற்­றவர் பொருளை வாங்­கி­ய­வ­ரிடம் சென்று தான் விற்ற பொருளை மீளக் கேட்­கிறார்.  வாங்­கி­ய­வரோ தாராள மன­துடன் கிர­யத்தை மீளப் பெற்­றுக்­கொண்டு பொருளை திருப்பிக் கொடுத்து நல்ல பண்­புடன் நடந்­து­கொள்­கின்றார். இது மற்­று­மொரு வகை.

இரு வகை­க­ளிலும் நல்ல பண்பு பளிச்­சி­டு­கின்­றது. இரு­வ­ருமே அல்­லாஹ்வின் மன்­னிப்­புக்­கு­ரி­ய­வர்கள்.

அல்­லாஹ்வின் தூதர் ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்­வாறு சொன்­னார்கள்:

“யார் ஒரு முஸ்­லி­முக்கு அவ­ரது வியா­பா­ரத்தை மன்­னிப்­பாரோ அல்லாஹ் அவரின் தவறை மன்­னிப்பான்.” (அறி­விப்­பவர்: அபூ ஹுரைரா ரழி­யல்­லாஹு அன்ஹு, நூல்: ஸுனன் அபீ தாவூத்)

கடனை எழுதிக் கொள்­வதும் அதற்கு சாட்சி வைப்­பதும்

உட­னடி கிரயக் கொடுப்­ப­னவு, பிந்­திய கிரயக் கொடுப்­ப­னவு ஆகிய இரண்டும் வியா­பா­ரத்தின் போது சக­ஜ­மா­ன­வை­யாகும். சம­கால சந்தை நிலை பெரும்­பாலும் கட­னுக்கு கொள்­வ­னவு செய்­வ­தா­கவே உள்­ளது. கடனைப் பொறுத்­த­மட்டில் அதனை எழு­திக்­கொள்­வதும் அதற்கு சாட்சி வைத்துக் கொள்­வதும்  உயர்ந்த பண்­பு­க­ளாக இஸ்லாம் எடுத்துக் காட்­டு­கின்­றது.

வியா­பாரக் கடன்­க­ளிலும் இப்­பண்­புகள் அமைய வேண்டும். மறதி, தடு­மாற்றம்  போன்ற பல­வீ­னங்கள்  கடன் கொடுத்­த­வ­ருக்கும் ஏற்­ப­டலாம், கடன் எடுத்­த­வ­ருக்கும் ஏற்­ப­டலாம். கடன் நிமித்தம் பிறந்த பிரச்­சி­னைகள் பூதா­க­ர­மாகி இமா­லயப் பிரச்­சி­னை­க­ளாக விஸ்­வ­ரூ­ப­மெ­டுத்து கொலை­யிலும் தற்­கொ­லை­யிலும் முடிந்­துள்ள நிகழ்­வுகள் ஏராளம் ஏராளம்.

பிரச்­சி­னைகள் எழு­வ­தற்கு முன்­னரே அவற்­றுக்­கான தீர்­வு­களைக் காட்­டி­யுள்ள  மார்க்கம் இஸ்­லா­மாகும். வெள்ளம் வருமுன் அணை­கட்ட வேண்டும். கடன் கொடுக்கும் சந்­தர்ப்­பத்தில் கொடுப்­ப­வரின் பெயர், பெறு­ப­வரின் பெயர், கடன் தொகை, கொடுக்­கப்­படும் இடம், காலம், மீளக் கொடுக்­கப்­பட வேண்­டிய காலம், முறை போன்ற விப­ரங்கள் தெளி­வாக ஒரு பத்­தி­ரத்தில் எழு­தப்­பட்டு அதில் கொடுப்­ப­வரும் பெறு­ப­வரும் கையொப்­ப­மிட்டு உறு­திப்­ப­டுத்தி, அதனை உறு­திப்­ப­டுத்தும் பொருட்டு இரு சாட்­சிகள் ஒப்­ப­மிட்டு நேர்த்­தி­யான ஆவ­ண­மொன்­றாக அதனைப் பாது­காத்து வைக்கும் சிறந்த பண்பாடு எப்பொழுதும் கடைப்பிடிக்கப்பட வேண்டியதாகும். வியாபாரக் கடன்கள் இதற்கு விதிவிலக்கல்ல. கடன் பற்றிய சட்டதிட்டங்கள், பண்பாடுகள் குறித்து பேசும் வசனமே அல்-குர்ஆனின் மிக நீண்ட வசனமாகும். (2 : 282)

சதக்கா

வியாபாரத்தின் போது நடைபெறுகின்ற பாவங்கள், தவறுகளுக்கு சதக்கா பிராயச்சித்தமாக அமைகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“வியாபாரிகளே! திண்ணமாக ஷைத்தானும் பாவமும் வியாபாரத்தில் சமுகமளிக்கின்றன. எனவே உங்கள் வியாபாரத்தை சதக்காவுடன் கலந்து விடுங்கள்.” (அறிவிப்பவர்: கைஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: ஸுனன் அல்-திர்மிதீ)

சதக்கா வியாபாரத்தின் ஓர் உபரி அங்கமாக அமைந்து வியாபாரிக்கு பிராயச்சித்தமாக, ஏழை எளியோருக்கு உதவியாக இருப்பது இங்கு கண்கூடு. இதுவும் வியாபாரிகளிடம்  இருக்க  வேண்டிய ஒரு சிறந்த பண்பாகும். மொத்தத்தில் நமது வியாபார முயற்சிகள் இஸ்லாமிய சட்டங்களைப் பேணி நல்ல பண்புகளைக் கைக்கொண்டதாக அமையுமாயின் அல்லாஹ்வின் கிருபையால் பிற மதத்தவரும் நம்மைப் பற்றி நல்லெண்ணம் கொள்வர், நாம் பின்பற்றி வாழ்கின்ற புனித இஸ்லாத்தை நோக்கி கவரப்படுவர். ஆகவே நாமும் வியாபாரத்தில் இஸ்லாமிய பண்புகளையும், பண்பாடுகளையும் கடைப்பிடித்து நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத்களுடன் இருக்கும் பாக்கியத்தை அடைய முயற்சிப்போம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.