ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு  அளித்தால் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம்

0 597

ஞானசார தேரரை விடுதலை செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்தை அவமதிக்கக் கூடாது என தெரிவித்த அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல், அவ்வாறெனில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிய போது, சுதந்திர தினத்தன்று அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்ததாக பொதுபலசேன தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஞானசார தேரர் என்பவர் நாட்டின் அமைதிக்கு நேரடியாகப் பங்கம் விளைவித்து இனவாதத்தை தூண்டும் ஒரு நபராவார். அத்தோடு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அவரை சுதந்திர தினத்தன்று விடுதலை செய்வது சுதந்திர தினத்தை அவமதிக்கும் செயலாகும்.

மேலும் கடந்த காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். எனினும் அதில் எதனையுமே நிறைவேற்றாது ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் ஏற்படுத்தப்பட்டு இந்த வருடத்துடன் 40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அதனை கொண்டாடும் முகமாகவா ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குகின்றார் என்பதே எமது கேள்வியாகும். தமிழ் இளைஞர்கள் பலரையும், தமிழ் மக்களது சுதந்திரத்தையும் எதிர்காலத்தையும் சிறையில் அடைத்துவிட்டு அவரை விடுதலை செய்வதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

கடந்த 40 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலமாகவே தமிழ் இளைஞர்கள் பலர் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதனாலேயே அவர்களை அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்துகின்றோம். தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டால் இவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அத்தோடு ஞானசார தேரரையும் நாம் ஒரு பயங்கரவாதியாகவே கருதுகின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.