ஹஜ் யாத்திரை 2019: 4460 பேர் பயணத்தை உறுதிசெய்துள்ளனர்

0 537

இலங்கைக்கு இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரித்து வழங்கப்பட்டுள்ள நிலையில் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு 4460 பேர் தங்கள் பயணத்தை உறுதி செய்துள்ளார்கள். மீளளிக்கப்படத்தக்க பதிவுக்கட்டணமான 25 ஆயிரம் ரூபா 4460 ஹஜ் விண்ணப்பதாரிகளினால் செலுத்தப்பட்டு பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; இவ்வருடம் சவூதியில் ஹஜ் போக்கு வரத்துக்கான கட்டணம், முஅல்லிம்  கட்டணம் போன்றன அதிகரிக்கப்பட்டுள்ளதாலும், 5 வீத வற் வரி அறவிடப்பட்டுள்ளதாலும், இவ்வருடம் ஹஜ் கட்டணம் கடந்த வருடத்தினை விடவும் சுமார் 75 ஆயிரம் ரூபா அதிகரிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. கடந்த வருடம் ஒரு சவூதி ரியாலின் பெறுமதி 42 ரூபாவாக இருந்தது. இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கத்தின் காரணமாக இன்று ஒரு சவூதி ரியாலுக்கு 50 ரூபா செலுத்தவேண்டியுள்ளது. இதனாலே ஹஜ் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வருடம் 3500 ஹஜ் பயணிகள் தெரிவு செய்யப்பட்டதன் பின்பு எஞ்சியிருக்கும் விண்ணப்பதாரிகள் விருப்பமென்றால் தாங்கள் வெலுத்தியுள்ள ஹஜ் கட்டணம் 25 ஆயிரம் ரூபாவை திணைக்களத்திடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ளலாம்.

14335 வரையிலான பதிவிலக்கங்களைக் கொண்ட விண்ணப்பதாரிகள் மீளளிக்கப்படத்தக்க பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்கள் பயணங்களை உறுதி செய்யும்படி திணைக்களத்தினால் வேண்டப்பட்டிருந்தனர். இவர்களிலே 4460 விண்ணப்பதாரிகள் தங்கள் பயணத்தை உறுதி செய்துள்ளனர்.

இதேவேளை, 2017 இல் ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்து இதுவரை தங்களது பயணத்தை உறுதிசெய்து கொள்ளாத 10000 பதிவிலக்கங்களுக்குட்பட்ட ஹஜ் விண்ணப்பதாரிகள்  விண்ணப்பங்கள் இரத்துச் செய்யப்படும்.

ஹஜ் பயணத்துக்கு மஹரம் துணையில்லாமல் விண்ணப்பித்துள்ள பெண்கள் தொடர்பில் தீர்மானமெடுப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பெண்களின் வயது முதிர்ச்சி என்பன கருத்திற்கொள்ளப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

ஹஜ் பயணங்களுக்கான வழிகாட்டல் வகுப்புக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் மாவட்ட ரீதியில் நடத்தப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.