ஞானசார தேரரின் பணியை தொடர ஜனாதிபதி அனுமதிக்க வேண்டும்

பொதுபல சேனா , சிங்கள ராவய, ராவண பலய  கூட்டாக கோரிக்கை

0 584

நாட்டில் காணப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதம், விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த அச்சுறுத்தல்கள், கிறிஸ்தவ மதத்திற்கு ஏனைய மதத்தவர்கள் மதமாற்றம் செய்யப்படல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் குரல்கொடுத்து, அவற்றுக்குத் தீர்வுகாணும் நோக்கில் செயற்பட்டுவந்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி, அவரை தொடர்ந்தும் நாட்டிற்காக செயற்பட அனுமதிக்க வேண்டுமென சிங்கள ராவய, ராவண பலய மற்றும் சிங்களே அமைப்புக்கள் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி சிங்கள ராவய, ராவண பலய மற்றும் சிங்களே ஆகிய அமைப்புக்கள் இணைந்து நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது. அங்கு மேலும் கூறப்பட்டதாவது,

ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்  கூறுகையில்,

நாட்டில் காணப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதம், விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த அச்சுறுத்தல்கள், கிறிஸ்தவ மதத்திற்கு ஏனைய மதத்தவர்கள் மதமாற்றம் செய்யப்படல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுத்து, அவற்றுக்கு தீர்வுகாணும் நோக்கிலேயே ஞானசார தேரர் செயற்பட்டு வந்தார். அத்தகைய ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி, அவரை தொடர்ந்தும் நாட்டிற்காக செயற்பட அனுமதிக்க வேண்டும்.

சிங்களே அமைப்பின் பொதுச்செயலாளர் மடில்லே பஞ்ஞாலோக தேரர் குறிப்பிடுகையில்,

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதில் ஜனாதிபதிக்கு எவ்வித சிக்கல்களும் இருக்காது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். முன்னர் ஞானசாரருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த அசாத் சாலி தற்போது ஞானசாரரை விடுவிக்க வேண்டுமெனக் கோருகின்றார். எனவே கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வதனால் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இல்லாமற்போகும் என அச்சமடையத் தேவையில்லை. அதேபோன்று தமிழ் தேசிய கருத்துக்களை முன்வைக்கின்ற சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்றோர்கூட ஞானசார தேரரை விடுதலை செய்யக்கூடாது என்ற அடிப்படையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. எனவே அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதில் ஜனாதிபதிக்கு எவ்வித சிக்கல்களும் இருக்காது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.