ஊடகவியளாலர்களுக்கு  நீதியை நிலைநாட்டுக

பொலிஸ் ஆணைக்குழுவிடம்  8 ஊடக அமைப்புகள் கோரிக்கை; ஐ.நா. அலுவலத்திலும் மகஜர் கையளிப்பு

0 532

“ஊடகவியலாளர்கள் படுகொலை – கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை – தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகள் அரசியல் அழுத்தம் காரணமாக முடங்கியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.  அவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படவில்லை. எனவே, இந்த விடயத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலையிட்டு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.” இவ்வாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் 8  ஊடக அமைப்புகள் நேற்று  கூட்டாகக் கோரிக்கை விடுத்தன.

ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம், சமூக வலைத்தள ஊடக செயற்பாட்டாளர்கள், ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் ஆகிய 8 ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

தேசிய  பொலிஸ் ஆணைக்குழுவின் சார்பில் அதன் தலைவர் சட்டத்தரணி பி.எச். மனதுங்க, செயலாளர் டி.எம்.எஸ். திஸாநாயக்க உட்பட மூவர் கலந்துகொண்டனர். இதன்போது ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடந்தகாலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த அடக்குமுறைகளைப் பட்டியலிட்டுக் காட்டிப் பேசிய ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். “இலங்கையில் ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் பல்வேறு வழிகளிலும் சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன; தாக்குதல் நடத்தப்பட்டன. ஏதேனும் ஒரு விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டால் அதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த விடயத்தை நீதிமன்றம் கொண்டுசெல்ல வேண்டும். ஆனால்,  ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பான ஒருசில முறைப்பாடுகளைத் தவிர ஏனையவை இன்னும் நீதிமன்றத்திடம் கொண்டு செல்லப்படவில்லை.

ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகள்கூட இன்னும் ஆரம்பமாகவில்லை. அரசியல் தலையீடே இதற்குப்  பிரதான காரணமாகும். நீதிமன்ற விசாரணையிலுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள்கூட ஸ்தம்பிதமடைந்துள்ளன. ரூபவாஹினிக்குள் புகுந்து முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தாக்குதல் நடத்தினார். அது தொடர்பான சாட்சியங்கள் இருக்கின்றன. அதேபோல், அம்பாந்தோட்டையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி  ஊடகவியலாளரைத் தாக்கினார். அது தொடர்பான வீடியோவும் இருக்கின்றது. ஆனால், அவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படவில்லை. மாறாக பதவி உயர்வே வழங்கப்பட்டுள்ளது. பிரகீத் எக்னெலிகொட கடத்தலுடன் தொடர்புடைய படை அதிகாரி ஒருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அந்தக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  ஊடகவியலாளர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தாம் வழங்கிய வாக்குறுதிகளை இன்று மறந்து செயற்படுகின்றனர்.

எனவேதான், இன்று பொலிஸ் ஆணைக்குழுவிடம் வந்தோம். குறைந்தபட்சம் ஊடகவியலாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டு விபரங்களை முழுமையாக வெளியிடுவதற்கு பொலிஸ் ஆணைக்குழு தலையிட வேண்டும்.  பொலிஸ் விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட வேண்டும்” என்று  ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், மகஜரொன்றையும் பொலிஸ் ஆணைக்குழுவிடம் அவர்கள் கையளித்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர், பொலிஸ்மா அதிபரிடம் விபரம் கோரப்படும். தகவல்களைக் கேட்டறிந்த பின்னர் அடுத்தகட்ட சந்திப்புக்கு அழைக்கின்றேன் என்றார். இதையடுத்து 8 ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கும் சென்று அங்கு நின்ற அதிகாரியிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.