ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று பொது மன்னிப்பு வழங்கினால் சிங்கள மக்களுடன் இணைந்து முஸ்லிம்களும் மகிழ்ச்சியடைவார்கள்

அம்பாரை மாவட்ட முஸ்லிம் சமாதான பேரவையின் முன்னாள் தலைவர் ஹனீபா மதனி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிப்பு

0 685

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று பொது மன்னிப்பு வழங்குவீர்களாயின் சிங்கள மக்களுடன் முஸ்லிம் மக்களும் மட்டில்லா மகிழ்ச்சியடைவார்கள் என அம்பாரை மாவட்ட முஸ்லிம் சமாதான பேரவையின் முன்னாள் தலைவரும்  அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் முன்னாள் தலைவருமான  எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு :

இவ்வருடம் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நிகழவிருக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு முன் இந்த நாட்டின் பிரபல பௌத்த துறவிகளில் ஒருவரான  கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் விண்ணப்பங்களும், கோரிக்கைகளும் தங்களுக்கு வந்த வண்ணம் இருக்கின்றன என்பதனை ஊடகங்களுடாக அறிந்து அது தொடர்பாக நானும், இந்த நாட்டின் முஸ்லிம் சமூகமும் அவ்விடயம் தொடர்பாக கொண்டுள்ள எமது விருப்பத்தினையும், வேண்டுகோளையும் தங்களிடம்  சமர்ப்பிக்க விழைகின்றேன்.

கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டுக்காகப் பல தியாகங்களைச் செய்திருப்பதாகவும், போர் வீரர்களின் நல உரிமைக்காக முன் நின்றதாகவும், இனங்களின் மத்தியில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தப்பாடுபட்டதாகவும் அனேகரும் கூறுவது போன்று எல்லோராலும் அவர் அறியப்பட்டவர்.

மானிடப்பிறவிகள் எவராகினும் துறவிகள் உட்பட அனைவரும்  தவறுக்கும், மறதிக்கும் இடையில் படைக்கப்பட்டவர்கள். இந்தவகையிலேயே ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்த விடயத்தையும்  பார்க்க வேண்டும் என்பதே எமதும் அபிப்பிராயாமாகும்.

வேண்டுகோள் விடுக்கும் சகலரின் குரலுக்கும் தாங்கள் செவி மடுத்து கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வதன் மூலம் பௌத்த மக்களின் கௌரவத்துக்கும், பேரன்புக்கும் பாத்திரமாகி விடுவீர்கள். தங்களின் பொது மன்னிப்பால் மட்டுமே அவர் விடுதலையாகும் வாய்ப்பு தற்போது இருக்கின்றது. அதை நீங்கள் செய்வீர்களாயின் பௌத்த மக்கள் சதா காலமும் தங்களை நினைவுகூர்வார்கள். முஸ்லிம் சமூகமும் ஏனைய சமூகங்களுடன் இணைந்து இச்செயலால் மட்டில்லா மகிழ்ச்சியடையும் என்பதனையும் இத்தருணத்தில் உறுதிபடக்கூறுகிறேன். இதன்மூலம் உங்களின் பெருந்தன்மையையும், தங்களுக்கு பௌத்தத்தின் மீதுள்ள பற்றையும் முழு நாடுமே அறியக்கூடியதாகவிருக்கும்.

அண்மையில் நீங்கள்  “திரிபீடத்தை” உலக சொத்தாகப் பிரகடனப்படுத்தியதன்  ஞாபகார்த்தமாகவும் இதைச் செய்துகாட்ட வேண்டுமென வேண்டுகின்றேன். “எல்லா ஜீவராசிகளும் நலமே வாழ்வதாக” எனும் புத்த பிரானின் ஆசிப்படி பாதிக்கப்பட்டோருக்கு நியாயமான தீர்வை வழங்கும் தலைவராக நான் உங்களை காணுகின்றேன்.

அத்தோடு நீதிமன்றத்தின் சரியான தீர்ப்பின்றி சட்டச்சிக்கலுக்குள்ளாகி பல வருடங்காளாக சிறைகளில் ஏங்கித் தவித்து அழிவின் விழிம்பில் இருந்து கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கத்தோலிக்க திருச்சபைகளும், இந்துமத குருபீடங்களும், தமிழ்  அரசியல் தலைவர்களும் மற்றும் சிவில் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் பல தமிழ்க் குடும்பங்கள் அனாதைகளாகி அவலத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். பிள்ளைகள் அனாதைகளாகவும், குடும்பத் தலைவிகள் விதவைகளாகவும், குடும்பத்தவர்கள் நிரந்தர சோகத்திலும் மூழ்கிக்கிடக்கின்றனர். இது விடயத்திலும் உங்கள் கருணையையும் காருண்யத்தையும் வெளிக்காட்டுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஏற்கனவே பல தமிழ்க் கைதிகள் புனர்வாழ்வுத்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்டு விடுதலையாகியிருக்கின்றார்கள். இவ்வருட சுதந்திர தின விழாவுக்குள் இவர்களையும் தமது குடும்பத்தினரோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு இருக்க ஆவன செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இதற்கான தயாளமும், அதிகாரமும், தகுதியும் தங்களிடம் உண்டு என உறுதியாக நம்புகின்றோம்.

இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளின்றி கருமமாற்றும் உங்களிடமுள்ள உயர்ந்த குணத்தை வெளிக்காட்டுவதற்கு வரமாக கிடைத்திருக்கின்ற மிகச் சிறந்த சந்தர்ப்பம் இது என நான் திடமாக நம்புகின்றேன்.

இச்சந்தர்ப்பத்தில் இன்னுமொரு விடயத்தையும் உங்களிடம் நான் முன்வைக்காமல் இருக்க முடியாது.  2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையை சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கியபோது அக்கரைப்பற்று கடற்கரையோரங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் வீடுகள் இழக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இம் முஸ்லிம்களுக்காக அக்கரைப்பற்று பிரதேச சபையின் கீழுள்ள நுரைச்சோலை பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட 500வீடுகள் இதுவரை வழங்கப்படாமல் இருக்கின்றன.

இவ்வீடுகள் சஊதி அரேபிய நாட்டின் தர்ம நிதியின் ஊடாக முஸ்லிம்களுக்கென நிர்மாணிக்கப்பட்டன. கடந்த 10 வருடங்களாக பயனாளிகளிடம் வழங்கப்படாமல் தற்போது காடு வளர்ந்து  அழிந்துகொண்டு செல்கின்றன. அப்போது உயர் நீதிமன்ற பிரதம நீதியரசாராகவிருந்த சரத் என் சில்வா அவர்களினால் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பொன்றே சுனாமியால் உண்மையாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு இவ்வீடுகள் சென்றடைவதற்கு தடையாக அமைந்து கொண்டிருக்கின்றது.

மேற்குறித்த இத் தீர்ப்பானது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களையும்,  கடலோரங்களில் வாழ்ந்தவர்களையும், அங்கு குடியேறாது தடுக்கிறது. அதேநேரம் கடலையண்டி வாழாத சுனாமியின் மணத்தைக்கூட நுகராதவர்களுக்கு இவ்வீடுகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று சுட்டி நிற்கின்றது.

சிக்கலான அந்த தீர்ப்பையும் புறந்தள்ளி உண்மையாக பாதிக்கப்பட்ட கடலோரங்களில் வசித்துவந்த அந்த முஸ்லிம் மக்களுக்கு இவ்வீடுகள் கிடைப்பதற்குரிய ஆணையொன்றினையும் தாங்கள் வழங்குமாறு இச்சந்தர்ப்பத்தில் நியாயபூர்வமான மன உணர்வோடும், தயவோடும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேற்குறித்த தங்களின் தீர்மானத்தின் ஊடாக பௌத்த துறவி கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர் காலத்தில் இந்த நாட்டின்  சட்டத்தையும், ஒழுங்கினையும் நிலைநாட்டுவதற்கு முன்னுதாரண புருஷராக மாறவும்,  நீண்ட காலமாக விடுவிப்புச் செய்யப்படாமலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையான பின் அவர்கள் இந்த நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காது, தேசிய பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்குபவர்களாக  மாறுவதற்கும்,  நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தில் குடியேறப்போகும் முஸ்லிம்கள் கடந்த காலங்களில் தீகவாபியை அண்டி சிங்களவர் குடியிருக்காத போது அங்கு வாழ்ந்த முஸ்லிம் விவசாயிகள் விகாரைக்குரிய வயல் நிலங்களை வேளாண்மை செய்து திகவாபி பன்சலையின் பிரதம குருவுக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்து பணி செய்தமை, யுத்த காலத்தில் அவருக்கு தேவையான அத்தியாவசியமானவைகளை பொறுப்போடு வழங்கியமை  போன்று இவர்களும் பௌத்த தர்மத்தை நேசிக்கின்றவர்களாக, அதன் நற்பண்புகளை போற்றுகின்றவர்களாக மாறவும் சந்தர்ப்பம் ஏற்படும்.  அதற்கான “அற்புதக்கோல்” தற்போது உங்கள் கைவசம்.

யாவும் இனிதே நடைபெற்று கௌரவமான பிரஜைகள் இந்நாட்டில் பல்கிப்பெருகவும் தங்களைப்பற்றிய நல்லெண்ணங்கள் மக்கள் மத்தியில் மேலோங்கவும் நான் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.