பலஸ்தீன பிரஜையை கொன்றவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்

ஐ.நா. தூதுவர் தெரிவிப்பு

0 622

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் பலஸ்தீன நபர் கொல்லப்பட்டமை அதிர்ச்சியளிப்பதோடு ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளதென என மத்திய கிழக்கிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நிக்லோய் மிலண்டனோவ் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகளின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும், இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை நீதியின்முன் நிறுத்துமாறும் அவர் இஸ்ரேலிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

ரமல்லாஹ்வுக்கு வடகிழக்கே அமைந்துள்ள அல்-முக்ஹைர் கிராமத்தில் குடியேற்றவாசிகளும் இஸ்ரேலியப் படையினரும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர். ஹம்தி நஸ்ஸான் என அடையாளம் காணப்பட்ட 38 வயதான நபர் முதுகுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை தெரிவித்தனர்.

இதன்போது குறைந்தது 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது. நஸ்ஸானின் ஜனாஸாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அல்-முக்ஹைர் கிராமத்தில் குழுமினர்

இஸ்ரேலிய இராணுவத்தினர் ஜனாஸாவில் கலந்துகொள்ளச் செல்பவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் கிராமத்திற்குச் செல்லும் பாதைக்கும் பிரதான நெடுஞ்சாலைக்கும் இடையே தற்காலிகத் தடைகளை போட்டிருந்தனர். இதன்போது ஏற்பட்ட மோதலின்போது இரு பதின்மவயது பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டனர்.

நஸ்ஸான், தனது மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் விட்டு மரணித்துள்ளார். அவரது மூத்த பிள்ளைக்கு 10 வயது, கடைசிப் பிள்ளைக்கு ஒரு வயது மாத்திரமேயாகும்.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன ஆள்புலப் பிரதேசங்களான கிழக்கு ஜெரூசலம், மேற்குக்கரை மற்றும் காஸா பிரதேசங்களில் 600,000 தொடக்கம் 750,000 பேர் வரையான இஸ்ரேலியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பலஸ்தீன மண்ணில் அமைக்கப்பட்டுள்ள யூதர்களுக்கு மட்டுமான சட்டவிரோதக் குடியேற்றங்களில் வசித்து வருகின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.