மாவனெல்லை: தேடப்படும் சகோதரர்களின் கணக்கிற்கு இலட்சக்கணக்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது

விசாரணைகளில் அம்பலம் என்கிறது பொலிஸ்

1 1,517

மாவனெல்லை மற்றும் அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமையுடன் தொடர்புடைய, பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சகோதரர்கள் இருவரதும் வங்கிக் கணக்குகளுக்கு இடைக்கிடை இலட்சக்கணக்கான ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனியார் வங்கியொன்றிலுள்ள குறிப்பிட்ட கணக்கு பற்றி விபரங்களை அறிந்து கொள்வதற்காக நீதிமன்றிலிருந்து உத்தரவைப் பெற்றுக்கொண்டு அந்த உத்தரவினை குறிப்பிட்ட தனியார் வங்கிக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமறைவாகியுள்ள குறிப்பிட்ட இரு சகோதரர்களும் தனியார் வங்கியிலிருந்து தமது வங்கிக்கணக்கில் பணப்பரிமாற்றம் செய்துள்ள ரிசீட் பத்திரங்கள் அண்மையில் அவர்களது தந்தையின் வீட்டை சோதனையிட்டபோது வெடிபொருட்களுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு இடைக்கிடை மூன்று இலட்சத்துக்கும் 5 இலட்சம் ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகை கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸாரின் சோதனையிலிருந்து தெரியவந்துள்ளது. சகோதரர்கள் இருவரதும் வங்கிக் கணக்குகளுக்கு இவ்வாறு பணம் வைப்பிலிட்டோர் யார் என்பதைக் கண்டறிவதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வங்கியில் பணம் பரிமாற்றம் செய்ததற்கான 5 ரசீதுகள் பொலிஸாரால் மாவனெல்லை வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து எயார் ரைபல் 4 கொள்வனவு செய்ததற்கான ரசீதொன்றும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4 ரைபல்கள் ஒரு எயார் ரைபல் மாவனெல்லை வீட்டிலிருந்தும் மற்றொன்று வனாத்தவில்லு தென்னந்தோப்பு வீட்டிலிருந்தும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு எயார் ரைபல்கள் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார் அவர்களிருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெடிபொருட்கள் உட்பட மேலும் பல பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட இரு சகோதரர்களினதும் தந்தையின் மாவனெல்லை வீட்டிலிருந்து அங்கு நடாத்தப்பட்ட வகுப்புகளில் கலந்து கொண்டவர்களாக கருதப்படும் 30 பேரின் பெயர் விபரங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்வதற்காக மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-Vidivelli

1 Comment
 1. Fasmi says

  இஸ்லாத்தை வித்து பொலப்பு நடத்தும் ஊடகங்கள் மற்றும் அரசியல் வாதிகள்…
  ..
  முஸ்லீம்களை தீவிரவாதத்திற்கு தள்ளுவதற்காகவும், ஷிஆக்களின் உதவியுடன் அரசியல் பொலப்பு நடத்தும் அரசியல்வாதிகளும் சேர்ந்து அவர்களது நாடகத்தை அரங்கேட்டுவதற்காக வேண்டியும் ..
  6 வருடத்துக்கு முன் சம்பிக்க ரணவக்க இஸ்லாத்துக்கு எதிராக எழுதப்பட்ட நூலை உண்மைப்படுத்தும் வகையிலும், ஆங்காங்கே வைத்து விட்டு ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் ஃ இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து ஃ அவர் எழுதிய நூலுக்கு உயிர் கொடுத்து கொண்டு இருக்கிறான் இது தான் உண்மை ஃ

  ஒவ்வொருவரும் மூமீனாக சிந்திப்போம் அப்போ புரியும்…

Leave A Reply

Your email address will not be published.