லசந்த படுகொலைக்கு பத்தாண்டுகள்: கொலையாளிகள் எங்கே?

0 784

சண்டே லீடர் ஆங்­கிலப் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரி­ய­ர், லசந்த விக்­கி­ர­ம­துங்க கொலை செய்­யப்­பட்டு இன்­றுடன் பத்­தாண்­டுகள் ஆகின்­றன.

ஆனால் அவ­ரது கொலைக்கு உடந்­தை­யானோர் தண்­டிக்­கப்­ப­டு­வது எப்­படிப் போனாலும் இது­வ­ரையும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. இந்த இலட்­ச­ணத்­தி­லேயே ஒரு தசாப்த காலம் உருண்­டோ­டி­விட்­டது.

2009 ஆம் ஆண்டு ஜன­வரி எட்டாம் திகதி வியா­ழக்­கி­ழமை காலை வேளை அத்­தி­டிய சந்­தியில் வைத்து இனந்­தெ­ரி­யா­தோரின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி அவர் ஸ்தலத்­தி­லேயே கொல்­லப்­பட்டார்.

அப்­போது உள்­நாட்டுப் போரின் இறுதிக் கட்­ட­மாக இருந்­தது. மஹிந்த ராஜபக் ஷவின் முத­லா­வது ஆட்­சிக்­கா­லத்தின் இறுதிக் கட்­ட­மா­கவும் இருந்­தது. இக்­காலம் நாட்டில் கொலை கலா­சாரம் தலை­வி­ரித்­தாடிக் கொண்­டி­ருந்­தது. குறிப்­பாக ஊட­கங்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் அடக்­கி­யொ­டுக்­கப்­படும் கலா­சா­ரமே அப்­போது நில­வி­யது. ஆட்­சி­யா­ளரை விமர்­சிப்போர் நாட்டுத் தலை­வ­ருக்கு எதி­ராக செயல்­ப­டுவோர், பல சவால்­க­ளுக்கும் மத்­தி­யி­லேயே பணி­யாற்ற வேண்­டிய நிலைக்­குத்­தள்­ளப்­பட்­டிருந்தனர். வெள்­ளைவேன் கடத்தல் கலா­சா­ரமும் உச்ச கட்­டத்­தி­லேயே இருந்­தது. கடத்திக் காணா­ம­லாக்­கப்­படல், கொலை செய்­யப்­படல் என்று மனித உயிர்கள் மலி­னப்­ப­டுத்­தப்­பட்டு மனிதம் புனிதம் கெட்டுப் போயி­ருந்­தது. இதற்கு ஊட­க­வி­ய­லா­ளர்­களும் விதி­வி­லக்­கல்ல.

இந்­தக்­கால கட்­டத்­தி­லேயே தான் பத்­தி­ரி­கை­யாளர் லசந்­தவின் உயி­ருக்கும் உலை­வைக்­கப்­பட்­டது.

ஆசி­ரி­யர்கள் மாண­வர்­களை சீராக வழி நடத்­து­வது போன்றே பத்­தி­ரி­கை­யா­ளரும் சமூ­கத்­தையும் நாட்­டையும் நல்­வ­ழிப்­ப­டுத்­து­வதில் அர்ப்­ப­ணிப்புச் செய்­ப­வர்­க­ளாவர். அத­னா­லேயே அவர்­க­ளது பத­வியும் பத்­தி­ரிகை ஆசி­ரியர் என்­ற­ழைக்­கப்­ப­டு­கி­றது.

லசந்த விக்­கி­ர­ம­துங்க துணிச்­ச­லுடன் பேனா பிடிக்கும் ஓர் ஊட­க­வி­ய­லா­ள­ராவார். நாட்டின் அவ­லங்­களை, அப்­ப­டியே தொட்­டுக்­காட்­டு­வ­தி­லேயே பத்­தி­ரிகைத் துறையில் தன்­னையே அர்ப்­ப­ணிப்புச் செய்து வந்­த­வ­ராவார். குறிப்­பாக நாட்டுத் தலை­வர்கள், அர­சி­யல்­வா­தி­களின் அடா­வ­டித்­த­னங்­களை விமர்­சிப்­ப­திலும் ஊழல்களை அல்லும் பகலும் உன்­னிப்­பாக அவ­தா­னித்து அச்சு வாக­ன­மேற்­று­வதில் கச்­சி­த­மாக காரி­ய­மாற்றி வந்­த­வ­ராவார். இவரின் இத்­து­ணிச்­சலே இவ­ரது உயி­ருக்கு வினை­யாக அமைந்­தது என்று எடை­போடும் நிலைக்கே இவ­ரது கொலை அமைந்­துள்­ளது என்றால் மிகை­யா­காது.

இவ­ரைப்­போன்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் பலர், கொலை செய்­யப்­பட்டும் காணா­ம­லாக்­கப்­பட்டும் உள்­ளமை சர்வ சாதா­ரண நிகழ்­வா­கி­யுள்­ளது. ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட இந்த வரி­சையில் பிர­பல்­ய­மா­ன­வர். இவரும் காணா­ம­லாக்­கப்­பட்டு பல வரு­டங்கள் கடந்து விட்­டன. ஆனால் இவர்கள் காணா­ம­லாக்­கப்­பட கார­ண­மானோர் இது வரையும் கண்­ட­றி­யப்­ப­டா­மைதான் சட்­டமும் ஒழுங்­கையும் வெட்கித் தலை­கு­னியச் செய்­துள்­ளது.

சவூதி அரே­பிய அரசை விமர்­சித்து எழு­திக்­கொண்­டி­ருந்த உறு­தி­மிக்க ஊட­க­வி­ய­லாளர் கசோக்­ஜியை நுட்­ப­மான யுக்­தி­களைக் கையாண்டு படு­கொலை செய்த பாவிகள் கூட தற்­போது கண்­ட­றி­யப்­பட்டு வழக்­குத்­தொ­ட­ரப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. இதன் முடிவும் தீர்ப்பும் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்­டி­யுள்­ளது.

இதே­போன்­றுதான் ஊட­க­வி­ய­லாளர் அல்­லா­விட்­டாலும் ரக்பி விளை­யாட்டு வீரர் வஸீம் தாஜு­தீனின் விபத்து மரணம் என்று அன்று கூறப்­பட்டது. பின்னர் படு­கொலை என்று நிரூ­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் கொலை சூத்­தி­ர­தாரி இன்னும் இனங்­கா­ணப்­ப­ட­வில்லை. இழு­ப­றி­யோடு வழக்கு விசா­ர­ணை­களும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. ஊட­க­வி­ய­லாளர் எக்­னெ­லி­கொட மற்றும் காணா­ம­லாக்­கப்­பட்­டோர் தொடர்பாக குற்றவாளிகள் இது­வரை கண்­ட­றி­யப்­ப­டா­விட்­டாலும் இது விட­ய­மாக கடற்­படை உயர் அதி­கா­ரிகள் சந்­தே­கத்தின் பேரில் தடுத்து நிறுத்­தப்­பட்டு வழக்கு விசா­ரணை தொடர்­கின்­றது. அதிலும் பல தலை­யீ­டுகள் கார­ண­மாக இழு­பறி நிலையே காணப்­ப­டு­கின்­றது. ஆனால் வழக்கு விசா­ரணை ஹோமா­கம நீதி­மன்­றத்தில் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­த­போது அதற்கும் இடை­யூறு விளை­விக்கும் விதத்தில் சிங்­கள பௌத்த கடும்­போக்கு வாதி­க­ள் நடந்து கொண்டனர். ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் நீதி­மன்ற வளா­கத்தில் நீதிமன்றை அவமதித்த குற்­றச்­சாட்டில் ஞான­சார தேரர் நீதியின் முன் நிறுத்­தப்­பட்டு தற்­போது சிறைத் தண்­டனை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கிறார். இதே­போன்று இதர கடத்தல், கொலை விட­யங்­க­ளிலும் நீதி நிலை­நாட்­டப்­ப­ட வேண்டும்.

லசந்­தவின் கொலைக்கு சில மாதங்­க­ளுக்கு முன்னர் அதா­வது 2008 இறுதிப் பகு­தியில் கொழும்­பையும் அதனை அண்­டிய பகு­தி­க­ளிலும் வெள்ளை வேனில் வந்த குழுவால் கடத்தி காணா­ம­லாக்­கப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர்­க­ளது வழக்கும் தற்­போது பல தவ­ணை­க­ளாக விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. இதிலும் முன்­னைய பரி­பா­ல­னத்­தின்­போது கட­மை­யி­லி­ருந்த கடற்­படை உயர் அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்டு விசா­ரணை செய்து வரு­கின்­றனர். இதற்கும் கடும்­போக்கு பௌத்த குரு­மார்­களும், கூட்டு எதி­ர­ணி­யி­னரும் இடை­யூறு விளை­வித்துக் கொண்­டி­ருப்­பதை ஊட­கங்கள் வாயி­லாக அறி­கிறோம்.

எனவே அர­சி­யலும் சுய­நல சிந்­த­னையும் புகுந்து விளை­யாடிக் கொண்டு சட்­டமும் ஒழுங்கும் நிலை நாட்­டப்­ப­டு­வதில் பல புறத்­திலும் தடை­களை விளைவித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த வகை­யிலே லசந்­தவின் கொலை விட­ய­மாக இது­வரை நடந்­துள்ள பின்­ன­ணியை சற்று உற்று நோக்­குவோம்.

லசந்­தவின் கொலை அன்­றைய ஆட்­சிக்குப் பெரும் தலை­யி­டி­யா­கவே அமைந்­தது. அன்றும் கொலை­கா­ரர்­களைக் கண்­ட­றி­வ­தி­லேயே தட்டிக் கழிப்பும் மூடி மறைப்­புமே நடந்­தே­றி­ய­தே­யன்றி உருப்­ப­டி­யாக நடந்­தது ஒன்­று­மில்லை. பத்­தாண்­டுகள் கடக்கும் இன்றும் கூட நாடு அதே நிலை­யி­லே­யேதான் உள்­ளது.

2009 ஜன­வரி 8 ஆம் திகதி காலையில் லசந்­த­வுடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்ட ஐந்து இலக்­கங்கள் கண்­ட­றி­யப்­பட்­டன. அவற்றை பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு பரி­சீ­லனை செய்­தது. அதன் மூலம் ஜேசு­தாசன் என்­ப­வ­ரது அடை­யாள அட்டை இலக்­கத்தில் பெறப்­பட்ட தொலை­பேசி இலக்கம் என தெரி­ய­வந்­தது. ஜேசு­தாஸன் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­போது இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவில் கட­மை­யாற்றும் பிய­வங்ஸ என்­ப­வரே தனது ஆள் அடை­யாள அட்­டையைப் பிர­யோ­கித்து மேற்­படி தொலை­பேசி அட்டை பெறப்­பட்­ட­தாக வாக்கு மூலம் அளித்­துள்ளார். அப்­போது மரு­தானை திரிப்­போலி வர்த்­தக சந்­தையில் அமைந்­துள்ள விசேட புல­னாய்வுப் பிரிவில் கட­மை­யாற்­று­பவர் பிய­வங்ஸ என்­பதும் தெரி­ய­வந்­தது. இந்­நி­லையில் ஏற்­க­னவே சந்­தே­கத்தின் பேரில் சிறைச்­சா­லையில் தடுத்து வைத்­தி­ருந்த ஜேசு­தாஸன் 2012 ஆம் ஆண்டு சிறைக் கூடத்­தி­லேயே மர­ண­ம­டைந்­தி­ருந்தார். அது­வ­ரை­யிலும் பிய­வங்ஸ என்­ப­வ­ரி­ட­மி­ருந்து சம்­பந்­தப்­பட்ட விசா­ரணைக் குழு எத்­த­கைய வாக்கு மூலத்­தையும் எடுத்­தி­ருக்­க­வில்லை.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் போது லசந்த விக்­கி­ர­ம­துங்க, வஸீம் தாஜுதீன் உள்­ளிட்ட கொலைகள் மற்றும் முன்னைய ஆட்­சியின் ஊழல் மோசடி, தில்­லு­முல்­லுகள் யாவும் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டுவர் என்றே தேர்தல் பிர­சா­ர­ம் அமைந்­தது. அதன் விளை­வாக 2015 ஜன­வரி 8 ஆம் திகதி ஆட்சி கைமா­றி­யது. பின்னர் மேற்­படி விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டன. ஆனால் பல­த­ரப்­பட்ட தலை­யீ­டு­களால் இவற்­றுக்கும் இடை­யூறு ஏற்­பட்டு இழு­ப­றியே நில­வி­யது. நாட்டைக் காப்­பாற்­றியோர் தண்­டிக்­கப்­படக் கூடாது என்ற கோசம் ஒரு புறம். இரா­ணுவப் பாது­காப்­புத்­து­றை­யினர் காப்­பாற்­றப்­ப­ட­வேண்டும் என்ற வாதம் மறு­புறம். இவை விசா­ரணை முன்­னெ­டுப்­புக்­களை பிசு­பி­சுக்­கவே செய்­தன. யார் செய்­தாலும் குற்றம் குற்­றமே! குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும் என்ற தாரக மந்­தி­ரத்­திலும் அடி விழவே செய்­தது. நீதி பெட்டிப் பாம்­பாக்­கப்­பட்டு அர­சியல் இலா­பமும் சுய­ந­ல­முமே மேலோங்­கி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் லசந்­தவின் வழக்கும் 2016 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் மேற்­படி வழக்கை விசா­ரணை செய்து கொண்டு வந்த பயங்­க­ர­வாத விசா­ர­ணைக்­கு­ழு­வுக்கு இந்த வழக்கை குற்­ற­வியல் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­திடம் (CID) ஒப்­ப­டைக்­கும்­படி  நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. இத்­தி­ணைக்­களம் பிய­வங்­ஸ­விடம் விசா­ர­ணையை மேற்­கொள்ள முயன்­ற­போது, இரா­ணு­வத்­துறை அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்க மறுத்­தது. நீதி­மன்­றத்தால் பல தட­வைகள் இது விட­ய­மாக கட்­டளை பிறப்­பித்­ததால், ஒரே­யொரு சந்­தர்ப்­பத்தில் பிய­வங்ஸ அதுவும் இரா­ணுவ உயர் அதி­கா­ரி­க­ளு­டனே தான் விசா­ர­ணைக்கு முகம் கொடுத்தார். இந்­நி­லையில் கொலை குறித்து  பல­மான சாட்­சிகள் இல்­லை­யென்று இவ்­வ­ழக்கு பல­வீ­னப்­பட்டுப் போன நிலையில், 2016 செப்­டெம்பர் 27 ஆம் திகதி லசந்­தவின் பூத­வுடல் நீதிமன்ற ஆணைக்கமைய மீண்டும் தோண்­டி­யெ­டுக்­கப்­பட்டு, பரி­சீ­லனை செய்­யப்­பட்­டது. அதன் போது டாக்டர் மொஹான் சில்­வா­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு அறிக்கை மற்றும் மரண விசாரணை அறிக்கையும் அரச பகுப்பாய்வு அறிக்கையும் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதாக உள்ளமையும் தெரிய வந்தது.

எது எவ்வாறாக அமைந்த போதிலும் கொலையாளி கண்டறியப்படாத ஒரு கொலையாகவே இத்தீர்ப்பும் அமைந்தது.

அதனால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரரும் விடுவிக்கப்பட்டார். இதில் இராணுவத்தைக் காப்பாற்றும் உயர்மட்ட தலையீடும் பக்கபலமாக அமைந்தது.

அப்போது ஆட்சியிலிருந்த பாதுகாப்புச் செயலாளரிடமோ, இராணுவத் தளபதியிடமோ இக்கொலை குறித்த எத்தகைய விசாரணைகளும் முன்னெடுக்கப்படாது வெறும் சம்பிரதாய நடவடிக்கைகளே மேற்கொண்டு யாவும் மூடி மறைக்கப்பட்டமையே கண்ட பலனாகும்.

இன்று லசந்தவின் பத்தாவது  நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே இக்கொலை தொடர்பாக  எதுவும் கையாலாகாத நிலையில் ஆண்டுகள் தோறும் ஜனவரி 8 ஆம் திகதி இவரது நினைவு தினம் மட்டுமே அனுஷ்டிக்கப்படுகிறது. லசந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என இன்றைய நாளில் பிரார்த்திப்போம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.