மாவனெல்லை விவகாரம்: 7 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு

0 765

மாவனெல்லை பகுதியில்  புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும்  ஜனவரி 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா நேற்று உத்தரவிட்டார். கைதாகியுள்ள ஏழு சந்தேக நபர்களும் நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந் நிலையில் மாவனெல்லை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்த 7 பேரும் கண்டி – வெலம்பொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சிலை உடைப்புக்கள் மற்றும் குருணாகல் – பொத்துஹரையில் இடம்பெற்ற சிலை உடைப்புக்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் அவர்களை அவை தொடர்பிலும் கம்பளை மற்றும் பொல்கஹவல நீதிவான் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யவுள்ளதாக மாவனெல்லை நீதிவானுக்கு நேற்று அறிவித்துள்ளனர்.

இந்த திட்டமிட்ட சிலை உடைப்பு கும்பலின் பிரதான சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்ய பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் பொலிஸ் உளவுத்துறையின் உதவியுடன் தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறு தேடப்படும் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுகளையுடைய சகோதரர்களாவர்.

ஏற்கனவே கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் சிறை அதிகாரிகளால்  நேற்று மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.  இவர்கள் மாவனெல்லை  புத்தர் சிலை உடைப்புக்கு மேலதிகமாக  வெலம்பொட சிலை உடைப்பு மற்றும் பொதுஹர  இந்துக் கோயில் சிலைகளை உடைத்தமை உள்ளிட்ட சம்பவங்களுடனும் தொடர்புடையவர்கள் எனவும் அதற்காகவும் அவர்களை கம்பளை மற்றும் பொல்கஹவல நீதிவான் நீதிமன்றங்களில் ஆஜர் செய்ய வேண்டும் எனவும் பொலிசார் கோரியுள்ளனர். அதன்படி எதிர்வரும் 9 ஆம் திகதி  பொதுஹர சிலை உடைப்பு விவகாரத்தில் இவர்களை  பொல்கஹவல நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிலை உடைப்பு விவகாரத்தின் பிரதான விசாரணைகள்  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரணவீர, கேகாலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த சிறிவர்தன ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது.

இந் நிலையில் மாவனெல்லை சந்தேக நபர்கள் தொடர்பில் தற்போது மேலதிக விசாரணைகள் மாவனெல்லை பொலிஸாருக்கு மேலதிகமாக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமிக விக்ரமசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் கேகாலை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஓ.பி. அமரபந்து தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.