14 ஆண்டுகளாகியும் கையளிக்கப்படாமல் காடு பற்றிக்கிடக்கும் வீடமைப்புத் திட்டம்

0 903

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 14 ஆண்டுகள் கழிந்தும் இவ் அனர்த்தத்தின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக சவூதி அரசாங்கத்தின் நிதி மூலம் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் இதுவரை தமக்கு வழங்கப்படாமல் உள்ளதென பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சுனாமிப் பேரலையின் கோரத் தாண்டவத்தினால் அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான வீடுகள் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்தன. சிலரது உயிர்கள் கடலலையால் காவு கொள்ளப்பட்டன. இப்பெருந்துயரத்திலிருந்து மீண்டெழுந்த மக்கள் முதலில் தேடியது தாம் குடியிருக்கத் தேவையான உறைவிடத்தினையே.

முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரஃபின் முயற்சியின் பயனாக சவூதி அரேயிய நாட்டின் ஸகாத் நிதியினைக் கொண்டு சுனாமி பேரனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று மக்களுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆலிம் நகர் கிராமத்திற்கு அண்மையில் அமைந்துள்ள நுரைச்சோலைப் பிரதேசத்தில் சுமார் 60 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதான நவீன வீடமைப்புத் திட்டமொன்று உருவாக்கப்படடது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் திகதி இவ்வீடமைப்பு நிர்மாணத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன்பிரகாரம் சுமார் 550 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதியினைக் கொண்டு நவீன முறையில் 500 வீடுகள் இங்கு நிர்மாணிக்கப்பட்டன. சில காரணங்களின் அடிப்படையில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 12 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை இவ்வீடுகள் உரியவர்களுக்கு வழங்கப்படாமலிருப்பது மிகுந்து வேதனையளிக்கின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வீடுகளை கையளிக்கும் விடயத்தில் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கிற்கமைவாக அதன் தீர்ப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின் பிரகாரம் இவ்வீடுகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பகிர்ந்தளிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே இவ்வீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதில் தாமதநிலை ஏற்பட்டது.

இக்கிராமத்தில் மகளிர் பாடசாலை, ஆண்கள் பாடசாலை, நவீன வைத்தியசாலை, பாரிய மண்டபத்துடனான சனசமூக நிலையம், பள்ளிவாசல், பஸ்தரிப்பு நிலையங்கள், விளையாட்டு மைதானம், நவீன சந்தைக் கட்டடங்கள் மற்றும் நவீன ஒய்வறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளும் பொது நிறுவனங்களுக்கான கட்டடங்களும் விலங்கு மற்றும் பறவைகள் போன்றவற்றின் வாழிடமாக மாறி வருகின்றன. இக்கட்டடங்களில் பெருந்தொகையான நிதி கொண்டு பொருத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானவை சேதமடைந்தும் காணப்படுகின்றன.

பற்றைக் காடுகளால் மூடப்பட்டு விஷ ஜந்துக்களின் உறைவிடமாகவும் மாறியுள்ள இவ்வீடமைப்புத் திட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறதென பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல்வேறு இன்னல்களுடன் உறவினர்களின் இல்லங்களிலும், இன உறவுகளின் வீடுகளிலும் கடந்த 14 வருடங்களாக தற்காலிகமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு துரித கதியில் இவ்வீடுகள் திருத்தியமைக்கப்பட்டு கையளிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.