கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இத்தாய்த் திருநாட்டின் அரசியல் அலங்கோலங்களுக்கும், பொதுநிர்வாகச் சீர்கேடுகளுக்கும், பொருளாதாரப் பிணிகளுக்கும், கலாச்சார மோதல்களுக்கும், இன ஒற்றுமையின்மைக்கும் அடிப்படைக் காரணமாகச் சிங்கள பௌத்த பேரினவாதச் சித்தாந்தமே என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இச் சித்தாந்தமே இலங்கை அரசியற் சுதந்திரம் அடைந்த நாட்தொட்டு இன்றுவரை இந்த மணித்திருநாட்டைச் சீர்குலைத்து வந்துள்ளது. அந்தச் சீர்குலைவின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகவே 2022ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை நிலவும் பொருளாதார வங்குரோத்து நிலைமை என்பதை எனது ஆங்கிலக் கட்டுரைகளில் தொடர்ந்து விலியுறுத்தி வந்துள்ளேன். சர்வதேச நாணய நிதி பதினேழாவது முறையாக இலங்கையின் பொருளாதாரச் சீர்குலைவை நிவர்த்திசெய்ய அழைக்கப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கோத்தாபய ராஜபக்ச நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டு அவருடைய ஜனாதிபதிப் பதவியும் பறிபோனபின்னர் ரணில் விக்கிரமசிங்ஹ மட்டுமல்ல வேறு எவரேனும் அப்பதவிக்கு வந்திருந்தாலும் நாட்டின் பொருளாதாரம் அன்றிருந்த நிலையில் சர்வதேச நாணய நிதியிடம் சரணடைவதன்றி வேறுவழி யாருக்கும் இருக்கவில்லை. ஆகவே ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் எதையும் ஆச்சரிப்படக்கூடியவாறு சாதிக்கவில்லை. அதனால் அவரை நாட்டைக்காத்த தலைவர் என அவரது அடிவருடிகள் இன்று கொண்டாடுவது ஓர் அபரிமிதமான புழுகு என்றே கருதப்படல் வேண்டும். அதைப்பற்றி மேலும் விரிவாக ஆராயாமல் இக்கட்டுரை மேற்கூறிய சித்தாந்தத்தினை அடிப்படையாகக் கொண்டு சிறுபான்மை இனங்களிடையே இன்று தோன்றியுள்ள ஒரு விசித்திரமான முரண்பாட்டைப்பற்றி அலச விரும்புகிறது.
பெரும்பான்மை இனத்தின் விழிப்பு
2022ல் காலிமுகத்திடலில் வளர்ந்துவரும் இளம் சந்ததியினரால் உருவாகிய அரகலயப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அப்போராட்டத்தின் பிரதான கோரிக்கை “அமைப்பை மாற்று” என்பதாகும். அது என்ன அமைப்பு என்பதை அவர்கள் அன்று விபரிக்கவில்லை. ஆனால் அந்த மாற்றத்தைக் கொண்டுவர அன்றும் இன்றும் ஆட்சியிலிருக்கும் நாடாளுமன்றப் பிரதிநிதிகளால் முடியாது என்பதை அவர்களது இரண்டாவது கோஷமான “225 வேண்டாம்” வெளிப்படுத்திற்று. ஆகவே அமைப்பு மாற வேண்டுமானால் ஆட்சிமாற வேண்டும் என்பதே அவர்களின் முடிவு. எனினும் அந்தப் போராட்டம் ஒரு தனிப்பட்ட தலைமையின்கீழோ அல்லது ஒரு கட்சியின் வழியாகவோ உருவாகாமல் சாதி மத இனபேதமற்று சர்வமக்களின் கூட்டான ஒரு கொந்தளிப்பாக வெடித்தமையால் அவர்களிடம் எந்தத் திட்டங்களோ பிரகடனங்களோ அப்போது இருக்கவில்லை. ஆனால் அப்போராட்டக் கோரிக்கையின் அந்தரங்கச் செய்தியை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல இலங்கையின் அரசியல் அவதானிகளும் ஏன் வெளிநாட்டுத் தூதரகங்களும்கூட நிச்சயம் அறிந்திருந்தனர். எனவேதான் உலக அரங்கிலும் அரகலாய புகழாரம் சூடிக்கொண்டது.
அந்தப் போராட்டத்தின் விளைவாகவேதான் இன்று பெரும்பான்மை இனமக்களிடையே அதாவது அவர்களின் இளஞ்சந்ததியினரிடையேயும் வெகுஜனங்களிடையேயும் ஒரு விழிப்புணர்வு தோன்றியுள்ளதை உணரக் கூடியதாக உள்ளது. அதாவது இனிமேலும் சிங்கள பௌத்த பேரினவாதச் சித்தாந்தம் சமூகத்தை ஆட்சி செய்யுமானால் மேலும் மோசமான விளைவுகளை நாடு எதிர்நோக்கும் என்பதையும் இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்து நிச்சயமாக கடைசி வங்குரோத்தாக இருக்கமாட்டாது என்பதையும் நாட்டில் இன சௌஜன்யம் என்பது வெறும் பகற்கனவாகவே இருக்கும் என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டனர். எனவேதான் இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டு, ஊழல் ஒழிக்கப்பட்டு, சட்டமும் நீதியும் சுதந்திரமாக இயங்கி சர்வமக்களும் சாதி, மொழி, இன, மத வேறுபாடின்றிச் சமமாகக் கணிக்கப்படும் ஆட்சியொன்றை நிறுவ என அரகலயப் போராட்டத்தின் மடியிலே உருவாகிய தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அவர்கள் அணிதிரளத் தொடங்கி உள்ளனர். இந்தச் சக்தியின் விரைவான எழுச்சி பல அரசியல் அவதானிகளையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயகாவை வெளிநாடுகளும் மதிப்புடன் வரவேற்கத் தொடங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இனத்தின் ஆதரவு அமோகமாக அத்தலைவனைச் சூழும் என்று துணிந்து கூறலாம். இந்த நிலையில் சிறுபான்மை இனங்களின் நிலைப்பாடு என்ன?
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பலிக்கடாக்கள்
கடந்த எழுபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக தமிழினமும் அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வளர்ச்சிக்குப் பலிக்கடாக்களாக மாற்றப்பட்டமையை வரலாறு மறக்காது. 1957ல் வெடித்த சிங்கள -தமிழ் இனக்கலவரம் வளர்ந்து வளர்ந்து ஈற்றில் ஒரு போரையே தோற்றுவித்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களையும் உடமைகளையும் பலிகொண்டமையையும் அதனால் இன்று உலகளாவிய புகலிடத் தமிழர் என்ற ஒரு சமூகம் உருவாக்கியுள்ளதையும் யார்தான் மறுப்பரோ? அந்தப் போராட்ட வெப்ப அனலிலே குளிர்காய்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் 2009க்குப் பின்னர் அதே பலிக்கடாக்களாக மாறியதை கேகாலை, அளுத்கம, அம்பாரை, திகன, மாவனெல்லை, புத்தளம், நீர்கொழும்பு, மினுவாங்கொடை போன்ற பல இடங்களில் வெடித்த சிங்கள முஸ்லிம் கலவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அந்த நிலை இன்னும் நீங்கவில்லை என்றுதான் கூறவேண்டும். ஆகவே சிங்கள பௌத்த பேரினவாதம் அரசியற் சித்தாந்தமாகத் தலைவிரித்தாடும்வரை ஜனநாயகத்துக்கோ இன ஒற்றுமைக்கோ ஏன் பொருளாதார மீட்சிக்கோ இலங்கையில் இடமில்லை என்பதை மேலும் வலியுறுத்த வேண்டுமா? அவ்வாறானால் அந்தப் பேரினவாதத்தை உதறித்தள்ளிவிட்டு இந்த நாட்டின் சகல பிரஜைகளும் சட்டத்தின்முன் சமன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் சமமான உரிமைகளும் கடமைகளும் உண்டு, எண்ணிக்கையின் அடிப்படையில் எந்த இனமோ மதமோ இந்த நாட்டை ஆள முடியாதென்ற தூய ஜனநாயக மரபிலான அரசு ஒன்றை நிறுவுவதற்கென ஒரு சக்தி எங்காவது வெளிப்படும்போது அதற்குப் பின்னால் அணிதிரள்வது இச்சிறுபான்மை இனங்களின் கடமை அல்லவா? ஆனால் இப்போது நடப்பதென்ன?
இனவாதத்தைப் பங்குபோடுவதா?
விரைவில் தேர்தலொன்று வரப்போகின்றது. அது ஜனாதிபதித் தேர்தலாகவே அமையும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. எனினும் தேர்தல் நாளை அறிவிக்காமலே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். அவரது வெற்றிக்குச் சிறுபான்மை இனங்களின் ஆதரவு அவசியம் என்பதை அவர் உணர்ந்ததனால் ஏற்கனவே வடக்கிலும் கிழக்கிலும் மேடைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தமிழ் மக்களிடையே அவரையும் அவரை எதிர்க்கும் போட்டியாளர்களையும் எதிர்நோக்கும் ஒரு கேள்வி 13ஆம் திருத்தத்தை அமுலாக்குவீர்களா என்பதாகும். அனுர குமர திசநாயகாவைத்தவிர ஏனையவர்கள் ஆம் என்று தலை அசைப்பதுபோல் தெரிகிறது. திசநாயகா மட்டும் அவரது அரசு 13ஆம் திருத்தத்தையும் கடந்து சென்ற காலத்தை மறந்து வருங்காலத்தை நோக்கி ஒரு முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார். இதில் அடங்கியுள்ள ஓர் உண்மையை சிறுபான்மை இனங்கள் புரிந்துகொள்வது அவசியம்.
13ஆம் திருத்தம் இந்தியாவின் சிபார்சினால் உருவாகிய ஒரு சமரசம். அதனைப் பேரினவாதச் சித்தாந்தத்தின் ஓர் உப பிரிவாகவே கருத வேண்டும். பௌத்த சிங்களப் பேரினவாதத்தை ஏழு மாகாணங்களிலும் தமிழரின் இனவாதத்தை இரண்டு மாகாணங்களிலும் வளரவிடும் ஓர் இனவாதப் பங்கீட்டுத் தீர்வே அது. தமிழரின் இனவாதத்தின்கீழ் முஸ்லிம்கள் நிலை என்ன என்பதுபற்றி இந்தியா அன்று சிந்திக்காததில் ஆச்சரியமில்லை. ஆனால் 13ஆம் திருத்தத்துக்கான எதிர்ப்பு அப்போதிருந்தே கிழக்கிலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் ஆரம்பமாகி விட்டது. இன்று கல்முனையில் ஏற்பட்டுள்ள பிரதேச சபைப் பிரிவுபற்றிய தமிழர்- முஸ்லிம் முறுகல் அதற்கோர் எடுத்துக்காட்டு. ஆகவே 13ஆம் திருத்தத்தையும் கடந்து ஒரு முடிவுகாண வேண்டுமானால் இனவாதத்தையே முற்றாக அரசியலில் இருந்து ஒழிப்பதாகும். அதைத்தான் தேசிய மக்கள் சக்தி தன் கொள்கையாகக் கொண்டுள்ளமையை திசநாயகாவின் பிரச்சார உரைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆகவே 13ஆம் திருத்தம் அமுலாக்கப்படல் வேண்டும் என்று கோரும் தமிழ்த் தலைமைகள் இனவாதத்தில் தமக்கொரு பங்கு கேட்கின்றன.
முஸ்லிம் தலைமைகளின்
நிலைப்பாடு
முஸ்லிம்களின் அரசியல் வியாபார அரசியல். அந்த வியாபாரத்துக்குச் சிங்கள- தமிழ் இனவாதம் உறுதுணையாக அமைந்ததைத்தான் சுதந்திரத்துக்குப் பின்னுள்ள அவர்களின் அரசியல் வரலாறு கற்பிக்கின்றது. விடுதலைப் புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்களும் அழிவுகளும் ஒருவகையில் இந்த வியாபார அரசியலுக்கு எதிராக எழுந்தவொன்று என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 1990வரை முஸ்லிம் அரசியல்வாதிகள் தனித்தனியே இந்த வியாபாரத்தைச் சில்லறையாக மேற்கொள்ள 1990இன் பின்னர் தமக்கென ஒரு கட்சியை அமைத்துக்கொண்டு மொத்த வியாபாரத்தில் இறங்கியுள்ளனர். எந்தச் சிங்களத் தலைவன் ஆட்சி அமைக்கிறானோ அவனுக்குத் தாஜாபிடித்துக் காரியம் சாதிப்பதில் முஸ்லிம் தலைவர்கள் வல்லவர்கள். ஆனால் அவர்களின் சாதனைகளெல்லாம் தனிப்பட்ட சலுகைகளைப் பெறுவதேயன்றி சமூகம் செழிப்பதற்காக வென்றெடுத்த சாதனைகளல்ல. கட்சி இல்லாமலே சமூகத்துக்காக உழைத்த தலைவர்களை முஸ்லிம் சமூகமே மறந்துவிட்டது. அந்தச் சோக வரலாற்றை இங்கே விவரிக்க இக்கட்டுரை விரும்பவில்லை.
கிழக்கிலே ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ அவர்கள் அண்மையில் திக்விஜயம் செய்தபோது ஒரு முஸ்லிம் பிரபலம் அவருடைய ஜனாதிபதி ஆட்சி இறைவனின் அருட்கொடை எனப் புகழ்ந்தார். இன்னொரு பிரபலம் அவரே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்க அல்லாஹ்வையே நேரடியாக இறைஞ்சினார். இந்த ஞானசூனியங்களுக்கு நாட்டின் அடிப்படைப் பிரச்சினை என்ன என்பதைப் பற்றியோ அதனால் ஏற்பட்ட சீரழிவுகள் எவை என்பன பற்றியோ எந்த அறிவும் இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டின் அரசியல்- பொருளாதார -சமூக அமைப்பு பேரினவாதச் சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்திருக்க அந்த அடிப்படையை உடைத்தெறிந்தாலன்றி இந்த நாட்டுக்கு விடிவுகாலம் பிறக்காதென்பதை இந்தப் பிரபலங்கள் உணருமா? அந்த உண்மையை வளர்ந்துவரும் இளஞ் சந்ததியொன்று பெரும்பான்மை இனத்திடையே உணர்ந்ததனாலேதான் அரகலயப் போராட்டம் அன்று வெடித்தது. ஆனால் அந்தப் போராட்டத்தை முறியடித்து ஜனாதிபதியாகிய விக்கிரமசிங்ஹவுக்கு அந்த அடிப்படையை உடைத்தெறியத் துணிவில்லை. இந்த நிலையில் அவர் இனங்களிடையே சமரசம் வேண்டும் என்று கூறித்திரிவது சிறுபான்மை இனங்களின் வாக்குப் பெட்டிகளைக் கவர எடுக்கும் பிரயத்தனமே. அதற்கு உறுதுணையாக செயற்படுகின்றவர்களே முஸ்லிம் அரசியல் வியாபாரிகள். இந்த ஆஷாடபூதிகளை தலைவர்களாகக் கொண்டால் முஸ்லிம் சமூகம் என்றுமே பேரினவாதத்தின் பலிக்கடாக்கள்தான்.
விசித்திர முரண்பாடு
இந்த நாட்டின் தற்போதைய சீரழிவுகளை மொத்தமாக நீக்குவதற்கு ஒரே பரிகாரம் சிங்கள பௌத்த பேரினவாதச் சித்தாந்தத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் பொருளாதார சமூக அமைப்புகளை அகற்றுவதே என்ற புரட்சிகரமான சிந்தனையை பெரும்பான்மை இனத்திடையே விதைத்துள்ளார்கள் இளந்தலைமுறை அரகலயப் போராளிகள். அவர்களுக்கு முதலில் நன்றிகூற வேண்டும். அந்த விதைப்பில் வளர்ந்துள்ள தேசிய மக்கள் சக்தி அச்சிந்தனைக்கு அரசியல் வடிவம் கொடுக்கக் களத்தில் குதித்துள்ளது. அந்தக் கட்சியின் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகிக்கொண்டு வருவதை பலரும் அறிந்துள்ளனர். இந்த நிலையில் பேரினவாதத்துக்குப் பலிக்கடாக்களாகி பல இழப்புகளை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிறுபான்மை இனங்கள் அக்கட்சியின் பின்னால் அணிதிரளாமல் பேரினவாதத்தில் பங்கு கேட்டுத் தமிழரும் அரசியல் வியாபாரம் செய்வதற்கு பேரினவாதமே சிறந்தது என்று கருதி முஸ்லிம் தலைமைகள் பேரினவாதிகளின் பின்னால் சுற்றுவதும் அவர்களுக்குப் புகழாரம் சூடுவதும் ஒரு விசித்திரமான முரண்பாடாகத் தோன்றவில்லையா?
பெரும்பான்மை இனமே விழித்தெழுந்து இனவாதப் போர்வையை கிழித்தெறியும்போது சிறுபான்மை இனங்கள் அந்தப் போர்வைக்குள்ளேயே இன்னும் துயில்வதை எவ்வாறு சரிகாண்பதோ?- Vidivelli