இஸ்ரேலியர்கள் மாலைதீவுக்குள் நுழை­ய தடைவிதித்­ததன் பின்­ன­ணி

0 151

எம்.ஐ.அப்துல் நஸார்

தொடர் தாக்­கு­தல்­க­ளையும் பட்­டினி நிலை­யி­னையும் எதிர்­கொண்­டு­வரும் காஸா மக்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகையில் இந்து சமுத்­தி­ரத்தின் தீவுக்­கூட்ட நாடான மாலை­தீவு இத் தடை­யினை விதித்­துள்­ளது.

காஸாவில் நடை­பெற்­று­வரும் போர் முஸ்லிம் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் மாலை­தீவில் பொது­மக்கள் மத்­தியில் கடு­மை­யான கோபத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­த­னை­ய­டுத்து, வெள்ளை மணல் கடற்­க­ரைகள் மற்றும் சொகுசு ஓய்வு விடு­தி­க­ளுக்கு பெயர் பெற்ற இந்து சமுத்­தி­ரத்தின் தீவுக்­கூட்ட நாடான மாலை­தீவு இஸ்­ரே­லி­யர்கள் தனது நாட்டுக்குள் வருவதைத் தடைசெய்துள்ளது.

ஜனாதிபதி மொஹமட் முய்சு ‘இஸ்ரேலிய கடவுச்சீட்டினை கொண்டிருப்பவர்களை நாட்டுக்குள் நுழைவதைத் தடை செய்யத் தீர்மானித்துள்ளார்’ என அவரது அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார், எனினும் புதிய சட்டம் எப்போது அமுலுக்கு வரும் என்ற விபரங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.

முய்சு, ‘பலஸ்­தீ­னத்­துக்கு ஆத­ர­வுடன் மாலை­தீவு’ என்ற தேசிய நிதி திரட்டும் பிரச்­சா­ரத்­தையும் அறி­வித்­துள்ளார். கடந்த வருடம் சுமார் 11,000 இஸ்­ரே­லி­யர்கள் மாலை­தீ­வுக்கு விஜயம் செய்­தனர், இது மொத்த சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கையில் 0.6 சதவீதமாகும்.

இந்த வரு­டத்தின் முதல் நான்கு மாதங்­களில் மாலை­தீ­விற்கு வருகை தந்த இஸ்­ரே­லி­யர்­களின் எண்­ணிக்கை 528 ஆகக் குறைந்­துள்­ளது, இது கடந்த வருடம் இதே காலத்­துடன் ஒப்­பி­டு­கையில் 88 சத­வீத வீழ்ச்சியாகும்.

காஸா போருக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக இஸ்ரேலியர்கள் நாட்டுக்குள் வருவதைத் தடை செய்யுமாறு மாலைதீவின் எதிர்க்கட்சிகளும் அரசாங்க கூட்டணியினரும் முய்சு மீது அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் நடந்துவரும் மோதலில் குறைந்­தது 36,439 பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர் மற்றும் 82,627 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

1990 களின் முற்­ப­கு­தியில் இஸ்­ரே­லிய சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்­கான முந்­தைய தடையை மாலை­தீவு நீக்­கி­ய­தோடு 2010 இல் இஸ்­ரே­லு­ட­னான உற­வு­களை சீர்­செய்யும் நகர்­வு­களை மேற்­கொண்­டது. எனினும், பெப்­ர­வரி 2012 இல் ஜனா­தி­பதி முக­மது நஷீத் பதவி கவிழ்க்­கப்­பட்­டதைத் தொடர்ந்து உற­வு­களை சீர்­செய்யும் முயற்­சிகள் கைவி­டப்­பட்­டன.

இந்த நிலையில், இஸ்ரேல் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சின் ஊடகப் பேச்­சாளர், தற்­போது மாலை­தீவில் உள்ள இஸ்­ரே­லி­யர்­களை வெளி­யே­று­மாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

‘மாலை­தீவில் தங்­கி­யி­ருக்கும் இஸ்­ரே­லிய மக்­க­ளுக்கு, வெளி­யே­று­வது தொடர்பில் கருத்தில் கொள்ள பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது, ஏனெனில் அவர்கள் ஏதேனும் கார­ணத்­திற்­காக துன்­பத்தில் சிக்கிக்கொண்டால், எங்களுக்கு உதவுவது கடினம்.’

அல்ஜீரியா, பங்களாதேஷ், புருனே, ஈரான், ஈராக், குவைத், லெபனான், லிபியா, பாகிஸ்தான், சவூதி அரேபியா, சிரியா மற்றும் யெமன் ஆகிய நாடுகளுக்குள் நுழைய இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளின் நுழைவுத் தடைகள் தொடர்பில் பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் எக்ஸ் தளத்தில் இட்ட பதிவில், ‘நாங்கள் நன்றாக இருக்கிறோம்,’ இதுபோன்ற நிலைமைகள் காஸாவில் நடந்துகொண்டிருக்கும் போர் தொடங்குவதற்கு முன்பும் இருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

மாலை­தீவு அதிபர் முக­மது முய்­சுவின் அலு­வ­லகம் ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யிட்ட தக­வ­லின்­படி, இஸ்­ரே­லிய பாஸ்போர்ட் வைத்­தி­ருப்­ப­வர்கள் நாட்­டிற்குள் நுழை­வதைத் தடுக்கும் வகையில் சட்­டங்­களை மாற்ற அமைச்­ச­ரவை முடிவு செய்­துள்­ள­தாக தெரி­வித்­தது. அமைச்­ச­ரவை பரிந்­து­ரையின் பேரில் அதிபர் முய்சு இந்த முடிவை எடுத்­துள்ளார்.

இந்த செயல்­மு­றையை மேற்­பார்­வை­யிட துணைக் குழு­வொன்றை அமைக்­கவும் தீர்­மா­னித்­துள்­ள­தாக அதிபர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது. இந்த முடிவு குறித்து அந்­நாட்டு உள்­துறை அமைச்சர் அலி இஹ்­சானும் அறி­வித்தல் ஒன்றை வெளி­யிட்டார்.

உள்­துறை அமைச்சர் அலி இஹ்­சா­னுடன், இஸ்­லா­மிய அமைச்சர், அட்­டர்னி ஜெனரல், பொரு­ளா­தார அமைச்சர், சுற்­று­லாத்­துறை அமைச்சர் மற்றும் வெளி­யு­றவு அமைச்சர் ஆகி­யோரும் இந்த துணைக்­கு­ழுவில் இடம்­பெ­று­வார்கள் என அவர் தெரி­வித்­துள்ளார்.

இஸ்­ரே­லிய குடி­மக்­க­ளுக்கு தடை விதிப்­பது மட்­டு­மின்றி, பலஸ்­தீனம் தொடர்­பான முக்­கிய முடி­வு­க­ளையும் மாலை­தீவு எடுத்­துள்­ளது.

பலஸ்­தீன மக்­க­ளுக்­காக
எடுக்­கப்­பட்ட முடிவு
மாலை­தீவு அதிபர் அலு­வ­லகம் வெளி­யிட்ட தக­வ­லின்­படி, அதிபர் முக­மது முய்சு பலஸ்­தீ­னர்­களின் தேவை­களை மதிப்­பிடும் ஒரு சிறப்பு தூது­வரை நிய­மிப்பார், மேலும் பலஸ்­தீன மக்­க­ளுக்­காக நிதி திரட்­டு­வ­தற்­கான பிர­சா­ரத்­தையும் தொடங்­குவார்.

இந்த நிதி இடம்­பெ­யர்ந்த பலஸ்­தீ­னர்­க­ளுக்கு உதவும் வகையில் பயன்­ப­டுத்­தப்­படும். இது தவிர பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எந்­தெந்த பகு­தி­களில் உத­விகள் தேவை, என்ன மாதி­ரி­யான உத­விகள் தேவை என்­பது குறித்தும் இந்த தூதுவர் மாலை­தீவு அதி­ப­ருக்கு ஆலோ­சனை வழங்­குவார்.

‘மாலை­தீவு மக்கள் பலஸ்­தீ­னத்­துக்கு ஆத­ர­வாக நிற்­கி­றார்கள்’ என்று பெய­ரி­டப்­பட்ட தேசிய அணி­வ­குப்பை நடத்­தவும் மாலை­தீவு அமைச்­ச­ரவை முடிவு செய்­துள்­ளது. மேலும், பலஸ்­தீன விவ­காரம் தொடர்­பாக இஸ்­லா­மிய நாடு­க­ளுடன் சந்­திப்பை ஏற்­பாடு செய்து, முன்­மொ­ழிவை வெளி­யி­டவும் மாலை­தீவு திட்­ட­மிட்­டுள்­ளது.

இஸ்­ரே­லிய பிர­ஜைகள் மாலை­தீ­வுக்குள் நுழையத் தடை விதிக்கும் இந்த முடிவை அர­சாங்கம் எடுப்­ப­தற்­கான அழுத்­தத்தை எதிர்க்­கட்சித் தலை­வரே வழங்­கி­யி­ருந்தார். பிர­தான எதிர்க்­கட்­சி­யான மாலை­தீவு ஜன­நா­யகக் கட்­சியின் (எம்.டி.பி) தலை­வ­ரான மைக்கேல் அக­மது நசீம், இஸ்­ரே­லிய பிர­ஜைகள் நாட்­டுக்குள் நுழை­வதைத் தடை செய்யும் வகையில் குடி­வ­ரவுச் சட்­டத்தில் திருத்­தத்தை கடந்த வாரம் அறி­மு­கப்­ப­டுத்தி இருந்தார். மாலை­தீவில் புதிய பாரா­ளு­மன்றம் கடந்த வாரம் பொறுப்­பேற்­றது.

மாலை­தீவில் சமீ­பத்தில் நடை­பெற்ற தேர்­தலில், பிர­தான ஆளும் கட்­சி­யான மக்கள் தேசிய காங்­கிரஸ் (PNC) 93 தொகு­தி­களில் 75 இடங்­களில் வெற்றி பெற்று, நாடா­ளு­மன்­றத்தில் அமோக பெரும்­பான்­மையை பெற்­றது.

இத­னி­டையே தலை­நகர் மாலே நகரில், காஸாவில் இஸ்­ரே­லிய தாக்­கு­தல்­க­ளுக்கு எதி­ராக பொது மக்கள் பல மாதங்­க­ளாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னன. மேலும் இஸ்­ரே­லிய பிர­ஜைகள் நாட்­டிற்குள் நுழை­வதைத் தடை செய்யும் சட்­டத்தை கொண்டு வரு­மாறு கோரிக்கை விடுத்தும் வந்­தனர்.

இஸ்­ரேலின் எதிர்­வினை என்ன?
இஸ்­ரே­லிய பாஸ்போர்ட் வைத்­தி­ருப்­ப­வர்கள் மாலை­தீ­வுக்குள் நுழை­வதைத் தடுக்கும் மாலை­தீவின் முடிவைத் தொடர்ந்து இஸ்­ரேலும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது.

மாலை­தீ­வுக்கு பயணம் செய்­வதை தவிர்க்­கு­மாறு இஸ்ரேல் மக்­க­ளுக்கு அந்­நாட்டு வெளி­யு­றவு அமைச்­சகம் அறி­வு­றுத்­தி­யுள்­ள­தாக இஸ்ரேல் வெளி­யு­றவு அமைச்­சக செய்தி தொடர்­பாளர் ஓரன் மார்­மோர்ஸ்டீன் தெரி­வித்­துள்ளார்.
இஸ்­ரே­லிய பாஸ்போர்ட் வைத்­தி­ருக்கும் நபர்­க­ளுக்கும் வெளி­யு­றவு அமைச்­சகம் இந்த ஆலோ­ச­னையை வழங்­கி­யுள்­ளது.

மாலை­தீ­வுக்கு ஒவ்­வொரு ஆண்டும் கிட்­டத்­தட்ட 1 மில்­லியன் சுற்­றுலாப் பய­ணிகள் வரு­கி­றார்கள், அவர்­களில் சுமார் 15 ஆயிரம் பேர் இஸ்­ரேலைச் சேர்ந்­த­வர்கள். கடந்த ஆண்டு, சுமார் 11 ஆயிரம் இஸ்ரேல் பிர­ஜைகள் மாலை­தீ­வுக்கு வருகை தந்­துள்­ளனர். இது மாலை­தீவின் மொத்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்­கையில் 0.6 சத­வீதம் ஆகும்.

மாலை­தீவு மற்றும் இஸ்லாம் மதம்
மாலை­தீவு ஒரு இஸ்­லா­மிய நாடு. 1965 இல் பிரிட்­ட­னிடம் இருந்து மாலை­தீவு அர­சியல் ரீதி­யாக முற்­றிலும் சுதந்­தி­ர­ம­டைந்­தது. சுதந்­திரம் அடைந்த மூன்று ஆண்­டு­க­ளுக்குப் பிறகு, மாலை­தீவு ஒரு இஸ்­லா­மிய குடி­ய­ர­சா­னது.

சுதந்­திரம் பெற்­றதில் இருந்து, மாலை­தீவு மக்­களின் அர­சி­ய­லிலும், வாழ்­விலும் இஸ்லாம் முக்­கிய பங்­காற்­றி­யுள்­ளது. 2008 இல் மாலை­தீவில் அரச மத­மாக `இஸ்லாம்’ மாறி­யது.

மாலை­தீவில் நில உரி­மையும் குடி­யு­ரி­மையும் சுன்னி முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டுமே வழங்­கப்­ப­டு­கி­றது. மாலை­தீவின் அதிபர் மற்றும் அமைச்­சர்கள் சுன்னி முஸ்­லிம்­க­ளாக மட்­டுமே இருக்க வேண்டும் என்­பது அர­சி­ய­ல­மைப்பில் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

மாலை­தீவு சட்­டப்­படி, இஸ்­லாத்தை விமர்­சிப்­பது குற்­ற­மாக கரு­தப்­ப­டு­கி­றது. மாலை­தீவு உலகின் மிகச்­சி­றிய இஸ்­லா­மிய நாடு.

அதி­ப­ராக பத­வி­யேற்ற பிறகு முக­மது முய்சு முதல் வெளி­நாட்டுப் பய­ண­மாக துருக்­கிக்குச் சென்றார். முன்­ன­தாக, மாலை­தீவின் புதிய அதி­பரின் முதல் வெளி­நாட்டு பயணம் எப்­போதும் இந்­தி­யா­வாக தான் இருக்கும். ஆனால் முய்சு இந்த பாரம்­ப­ரி­யத்தை உடைத்­துள்ளார்.

துருக்கி ஒரு முஸ்லிம் பெரும்­பான்மை நாடு மற்றும் ஒட்­டோமான் சுல்­தா­ன­கத்தின் மர­பு­க­ளுடன் தொடர்­பு­டை­யது. எனவே இந்த பாரம்­ப­ரி­யத்தின் அடிப்­ப­டையில், துருக்­கிய அதிபர் ரெசெப் தையிப் எர்­டோகன் துருக்­கியை இஸ்­லா­மிய நாடு­களின் தலை­வ­ராக முன்­வைக்­கிறார்.

இஸ்­ரே­லுக்கு எதி­ரான வழக்கு
காஸாவில் நடந்த படு­கொ­லைகள் தொடர்­பாக சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் இஸ்­ரே­லுக்கு எதி­ராக றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்கா வழக்குத் தொடர்ந்­துள்ளது.

அந்த சமயத்தில், ​​காஸாவில் பலஸ்தீன மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு நீதிமன்றம் தற்காலிக தீர்ப்பை வழங்கியது.

ஒக்டோபர் 7 அன்று, இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஏறக்குறைய 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பணயக் கைதிகளாக காஸாவிற்கு பிடித்துச் சென்றனர். இதற்குப் பிறகு, இஸ்ரேல் காஸாவில் தன் தாக்குதலைத் தொடங்கியது, இதில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.